Published:Updated:

`நிபா’ வைரஸ்... கேரளாவுக்கு இப்போ டூர் போவது சரியா?#Nipah

`நிபா’ வைரஸ்... கேரளாவுக்கு இப்போ டூர் போவது சரியா?#Nipah
`நிபா’ வைரஸ்... கேரளாவுக்கு இப்போ டூர் போவது சரியா?#Nipah

கேரளாவின் கோழிக்கோட்டில் இதுவரை 10 பேர், `நிபா’ வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 25 பேர் `நிபா’ தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகக் கிலி கிளப்புகிறார்கள். கேரளாவில், ‘டாப்-10 நோய்கள்’ என்று 10 நோய்களை வரிசைப்படுத்துவார்கள். இப்போது நிபாதான் அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இது ஏன் முதல் வரிசையில் இருக்கிறது என்றால், நிபா தாக்கிய நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த நர்ஸ் ஒருவரும் இறந்து போயிருக்கிறார் என்றால், நிபாவின் கொடூரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

வழக்கம்போல், விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நிபாவுக்கு மூலகாரணிகள் - பழம் தின்னி வௌவால்கள். நம் ஊர் பன்றிக் காய்ச்சல்போல், இது பன்றிகள் மூலமும் பரவும். 1999-ல் சிங்கப்பூர், மலேசியாவில் பன்றி விவசாயிகள்தான் முதன் முறையாக இந்த நிபாவால் தாக்கப்பட்டார்கள். அப்போது 300-க்கும் மேற்பட்டோர் நிபாவால் உயிரிழந்தார்கள். இதைத் தொடர்ந்து, வணிகம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கிழக்காசிய நாடுகளில் லட்சக்கணக்கில் பன்றிகளைக் கொன்று குவித்தார்கள்.

காய்ச்சல், தலைவலி, அயர்வு, வாந்தி போன்றவைதான் இதன் முக்கிய அறிகுறிகள். 12 நாள்கள் இவை தொடரும். அப்புறம்.. மயக்கம். மூளை பாதிக்கப்பட்டு பிறகு மரணம்தான்.

டூர் போலாமா?

எல்லாம் ஓகே! 2001-ல் இந்தியாவில் ஏற்கெனவே `நிபா’ பரவியிருந்தாலும், கேரளாவைத்தான் இப்போது உலுக்கிக் கொண்டிருக்கிறது. சம்மருக்கு பாதிப் பேர் கடவுளின் தேசம் கேரளாவுக்குத்தான் டூர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும், ‘பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது புளியம்பட்டி’ என்பதுபோல், சிலர் ‘காலிகட் போயிட்டு அப்படியே மூணாறு, வயநாடு’ என்று அடுக்குவார்கள். ஏனென்றால், கோழிக்கோடு கேரளாவின் அழகிய நகரங்களில் முக்கிய நகரம். இப்போதைக்கு கேரளாவுக்கு டூர் அடிப்பது சரியாக இருக்குமா?

‘என்னது ‘பிரேமம்’ மலையாளப் படமா என்று வியப்பதுபோல், ‘மூணார் கேரளாவிலா இருக்கு’ என்று மூணாறுக்குப் போய்விட்டு வந்த சிலருக்கே சந்தேகம் இருக்கும். காரணம், அங்கே முழுக்க முழுக்க தமிழ்தான். மூணாறுதான் கேரளாவின் முக்கியமான டூரிஸ்ட் அட்ராக்ஷன். கோழிக்கோட்டில் இறக்குமதியானாலும், நிபா இன்னும் மூணாறுக்கு வரவில்லை என்கிறார்கள். மூணாறுக்குச் சுற்றுலா வந்த வெளியூர்க்காரர்கள் சிலருக்கு, நிபா பற்றித் தெரிந்திருக்கவே இல்லை. ‘‘இங்கே எந்தப் பாதிப்பும் இல்லைங்க... ஆனா, இப்போ மூணாறில் ஹில்ஸ் ஏறும்போது செக்கிங் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க... தமிழர்கள், மற்ற வெளியூர்க்காரர்களா இருந்தா அனுமதி உடனே கிடைச்சிடும். மலையாளிகள், அதுவும் கோழிக்கோட்டில் இருந்து வர்றவங்ககிட்ட மட்டும் கொஞ்சம் செக்கிங் இருக்கும். அவ்வளவுதான்!’’ என்றார் தமிழ் பேசத் தெரிந்த மூணாறைச் சேர்ந்த கைடு ஒருவர்.

வயநாட்டிலும் இதே செக்கிங்தான். கேரள அரசுக்குச் சின்னதாக ஒரு பயம் இருந்தாலும், கேரளாவின் முக்கிய வருமானமே டூரிஸ்ட்தான். அதனால், கெடுபிடிகளை அதிகமாக்கவில்லை. ‘‘தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட எண்கள் என்றால், உடனடி அனுமதி கிடைத்துவிடுகிறது. கேரள ரிஜிஸ்ட்ரேஷன் எண்கள் என்றால், நிறுத்தி விசாரித்துவிட்டுத்தான் அனுப்புகிறார்கள். கோழிக்கோடாக இருந்தால் மட்டும் சின்ன விசாரிப்பு. அவ்வளவுதான். மற்றபடி உள்ளே அனுமதி இல்லாமல் இல்லை!’’ என்றார்.

பரம்பிக்குளம் - கேரள டூரிஸத்துக்கு வருமானத்தை அள்ளித்தரும் முக்கியமான எக்கோ டூரிஸத்தில் ஒன்று. இதற்கு தமிழ்நாட்டின் சேத்துமடை செக்போஸ்ட் வழியாகத்தான் உள்ளே நுழைய வேண்டும். இங்கே எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பரம்பிக்குளம் செக்போஸ்ட்டில் கெடுபிடிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால்... அப்படியெல்லாம் இல்லை. ‘‘யார் வேண்டுமானாலும் எப்போ வேணாலும் இங்கே வந்து போகலாம். நேத்துகூட காலிகட்ல இருந்து ஒரு ஃபேமிலி வந்து பரம்பிக்குளம்ல ரூம் போட்டுருக்காங்க...’’ என்றார் பரம்பிக்குளம் செக்போஸ்ட் ரிசப்ஷனிஸ்ட் சுரேஷ். இத்தனைக்கும் கேரளாவிலேயே பரம்பிக்குளத்தில்தான் விலங்குகள்... அதுவும் காட்டுப் பன்றிகள் அதிகம்.

அப்படியென்றால், கோழிக்கோட்டில் நிலைமை எப்படி இருக்கிறது? பஸ் நிலையம், ரயில் நிலையம், சினிமா தியேட்டர் எல்லாம் இயல்பாகவே இயங்குகிறது. எந்த இடத்திலும் பீதி இல்லை; பரபரப்பு இல்லை. மாஸ்க் மூடிக் கொண்டுகூடத் திரியவில்லை. மருத்துவமனைகளில் மட்டும் கொஞ்சம் அவேர்னெஸ் இருக்கிறது. ‘‘எனக்குச் சொந்த ஊர் காலிகட்தான். நேத்துதான் கொச்சின் வந்தேன். என்னை எந்த இடத்திலும் செக் பண்ணலை. திரும்பவும் இரண்டு நாள் கழிச்சு கோழிக்கோடு போறேன்.’’ என்றார் கோழிக்கோட்டைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் அமல்தம்பி.

அதேபோல் கேரளாவின் முக்கிய இடங்களான திருவனந்தபுரம், கோவளம் பீச், கோட்டயம், ஆலப்புழா என்று எந்த இடத்திலும் பரபரப்பு இல்லை. கொஞ்சம் விழிப்பு உணர்வு வந்திருக்கிறது. யாரும் நிபா பயத்தில் மருத்துவமனைகளுக்கோ, சிகிச்சையோ எடுக்க வேண்டாம் என்பதுதான் அவர்களின் வேண்டுகோள்.

மற்றபடி கேரளாவுக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து போகலாம் என்கிறது கேரள டூரிஸம். ஃபாரஸ்ட் டூரிஸத்தைப் பொறுத்தவரை, அவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் முக்கியமாகக் கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் - யாரும் காடுகளில் விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ உணவளிக்க வேண்டாம். கீழே கிடக்கும் பழங்களையோ, கிழங்குகளையோ, காய்களையோ எடுத்துச் சாப்பிட வேண்டாம். பிளாஸ்டிக் தடாவோடு இப்போது பழங்கள் தடாவும் சேர்ந்துள்ளது. அவ்வளவுதான்.

நம்பிப் போங்க; நிபா இல்லாம வாங்க!