Published:Updated:

என் ஊர்!

அன்று கொண்டவம்... இன்று ஜெயலலிதா நகர்!

##~##

1994-ம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் 'திசை எட்டும்’ காலாண்டிதழின் ஆசிரியருமான குறிஞ்சிவேலன், தன் ஊரான குறிஞ்சிப்பாடி பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 'நான் சிறுவனாக இருந்தபோது காலையில் என் தந்தையுடன் வயலுக்குச் செல்வது வழக்கம். அங்கு ஒரு பொதுக் கிணறு இருக்கும். 200 அடி நீளமும் 80 அடி அகலமும் 15 அடி ஆழமும்கொண்ட மிகப் பெரிய கிணறு. ஆண்டில் 10 மாதங்கள் வரை வற்றாத, பளிங்கு நீர் அதில் நிரம்பித் தளும்பும். அந்தக் கிணற்றில்தான் என் தந்தை எனக்கு நீச்சல் பழக்கிக் கொடுத்தார். இந்தக் கிணறு ஊருக்கு மேற்கே என்றால் கிழக்கே கல்லுக்குழி வாய்க்கால் என்று ஒன்று இருந்தது. இந்த வாய்க்காலின் குறுக்கே 20 அடி ஆழம்கொண்ட கொண்டவம் (நீர்த்தேக்கம்) ஒன்று கட்டி மழைக் காலங்களில் நீரைத் தேக்கிவைப்பார்கள். கரை எல்லாம் களிமண் சேறு. சிறுவர்களாகிய நாங்கள் அங்கு சென்றதும் செய்யும் முதல் வேலை, களிமண் சேற்றை உடல் முழுக்கப் பூசிக்கொள்வதுதான். அந்த சேறு உலரும் வரையில் வெயிலில் படுத்து இருந்துவிட்டு, கொண்டவத்தில் குதித்து விளையாடுவோம். அந்தக் கொண்டவம் இருந்த இடம்தான் இன்று ஜெயலலிதா நகர் ஆகிவிட்டது!

என் ஊர்!

நடுநாட்டில் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய நகரங்களுக்கு நடுநாயகமாக, ஏறக்குறைய சமதூரத்தில் சுமார் 30 கி.மீ. அமைந்துள்ள இன்றைய குறிஞ்சிப்பாடி மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு குப்பம், விழப்பள்ளம், மீனாட்சிப் பேட்டை, எல்லப்பன்பேட்டை, குறிஞ்சிப் பாடி என ஐந்து பகுதிகளை உள்ளடக்கிய ஊராக இருந்தது. இந்த ஐந்து ஊர்களுக்கும் பொதுவான பெயராக குறிஞ்சிப்பாடி எனச் சூட்டி மகிழ்ந்தவர் வள்ளல்பெருமான் காலத்தில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள். நான் பிறந்த பகுதியான மீனாட்சிப்பேட்டையைப் பருந்துப் பார்வையில் பார்த்தால் ஏணியைப் போல் தோற்றம் அளிக்கும். இரு பக்கங்களிலும் நீண்ட நெடிய இரு பாட்டை வீதிகள். ஒரு பாட்டை சென்னையை நோக்கிச் செல்லும் சாலையாகவும் இன்னொரு  பாட்டை, தெருவாகவும் இருக்கின் றன. இந்த இரு பாட்டைகளுக்கும் இடையில் ஒரே அளவில் ஒன்பது தெருக்கள்.

குறிஞ்சிப்பாடி கைத்தறி லுங்கிக்கு அன்றும் இன்றும் இந்தியா மட்டுமல்லாமல் கடல் கடந்த நாடுகளிலும் நல்ல பெயர். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே தறி நெய்யக் கற்றுக்கொண்டு, விடுமுறை நாட்களில் லுங்கி நெய்வேன். ஒவ்வொரு கோடை விடுமுறை காலத்திலும் 50 ரூபாய் வரையில் சேகரித்து, என் வயதுப் பிள்ளைகளுடன் ரயிலேறி கடலூர் சென்று இரண்டு மூன்று சினிமா பார்த்துவிட்டு மறு நாள் காலையில் மறு வருடத்துக்குத் தேவையான புத்தகங்களும் ஒரு ஜோடி செருப்பும் வாங்கிக்கொண்டு வருவோம். காரணம், அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் புத்தகங்கள் விற்கும் கடை இல்லை.

என் ஊர்!

அப்போது எல்லாம் டென்ட் சினிமாதான். பகலில் சுருண்டு கிடக்கும் டென்ட்டை மாலையில் விரித்தால் சினிமா திரை தயார். தினசரி இரண்டு ஷோக்கள்தான். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் வெளியான படங்கள்தான் காட்சிக்கு  வரும். அதன் பின்பு கீற்றுக் கொட்டகை வந்தது. ஒரு தியேட்டர் என்பது இரண்டாகி மூன்றாகி நான்காயிற்று. புதிய படங்களும் வந்தன. எல்லாமும் 30 வருடங்களில் முடிந்துவிட்டன. தோசையைத் திருப்பிப் போடுவதுபோல் இப்போது தியேட்டர்கள் நான்கில் இருந்து மூன்றாகி, இரண்டாகி, இன்று ஒன்றாகிவிட்டது. என் பள்ளிப் பருவ நாட்களில் பல போராட்டங்களில் நான் கலந்துகொண்டது உண்டு. அவற்றில் இரண்டு போராட்டங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. ஒன்று, மொழி வழி மாநிலப் பிரிவினை. மற்றொன்று, இந்தி எதிர்ப்புப் போராட்டம். இரண்டிலும் போலீஸாரிடம் அடிபடாமல் ஓடித் தப்பித்தாலும் முந்திரிக் காடுகளில் பதுங்கி என் சக மாணவர்களுடன் பல நாட்கள் பட்டினி கிடந்தது உண்டு.

வரலாறு, மொழி உணர்வு என பாரம்பரியம் கொண்ட ஊர் தான் குறிஞ்சிப்பாடி!''

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு