Published:Updated:

காலில் விழு... கருத்து சொல்லு!

காலில் விழு... கருத்து சொல்லு!

##~##

ழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருப்பது அண்ணா ஹஜாரே பாணி. ஆனால், அதற்காக ஊரார் காலில் விழுவது ராமகிருஷ்ண சாஸ்திரியின் பாணி!

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் உள்ள கணக்கன்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாஸ்திரி, கடந்த ஏழு வருடங்களாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் காலில் விழுந்து 'லஞ்சம், வன்முறை, சாதி வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார். இதற்காகச் 'சத்யாக்கிரஹ இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திஉள்ள சாஸ்திரி, ''இந்தியாவில் பல மாநிலங்களில் என் இயக்கத்துக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்!'' என்று பெருமிதப்படுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நான் சென்னையில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தபோது சக மாணவர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள சாதிப் பிரச்னைகள், வன்முறை, லஞ்சம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்வார்கள். இது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. தொடர்ந்து காந்தி, புத்தர், விவேகானந்தரின் கருத்துக்களைப் படித்தபோது வன்முறை இல்லாத வழிமுறை மூலமாக சாதிக் கொடுமைகள், லஞ்சம் இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது நான் திட்டமிட்ட உத்திதான் இந்தக் காலில் விழும் பாணி!

காலில் விழு... கருத்து சொல்லு!

முதன்முதலாக எங்கள் மாவட்டத்தில் கல்லேரி கிராமத்தில்தான் காலில் விழுந்து 'சாதி, வன்முறை, லஞ்சம் வேண்டாம்’ என்று சொல்ல ஆரம்பித்தேன். சாதிய வேறுபாடுகள் நிலவிய அந்தக் கிராமத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் கவுன்சிலர்களாக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சாதிக்கு எதிராகப் பேசும்போது எல்லாக் கிராமங்களிலுமே எதிர்ப்புகள் வரும். சமயங்களில் துரத்தி அடிப்பார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்று அடி, உதைகளைத் தாங்கிக் காலில் விழுவேன். ஒரு கட்டத்தில் அவர்கள் மனம் மாறி, 'எழுந்திரு தம்பி’ என்பார்கள். அதுதான் என் கருத்துக்கும் முயற்சிக்கும் கிடைக்கும் முதல் வெற்றி.

என் பிரசாரத்தால் தீவிரமாக சாதியைக் கடைப்பிடித்து வந்த சில கிராமங்களில் இப்போது நிலைமை சற்று தேவலாம். ஆதிக்கச் சாதிக்காரர்கள் வருகிறார்கள் என்றால், தாழ்த்தப் பட்டவர்கள் எதிரில் வரவே பயப்பட்ட கிராமங் களில்கூட இப்போது கலப்புத் திருமணங்கள் சகஜமாகி உள்ளன. சாதிக்கு அடுத்தபடியாக ஊழல், லஞ்சம் இதற்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கினேன். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று அங்கு உள்ள மக்கள் காலில் விழுந்து, 'லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்காதீர்கள்’  என்று வேண்டுகோள் விடுப்பேன்.

காலில் விழு... கருத்து சொல்லு!

வட மாநிலங்களில் இந்த முயற்சிக்கு ஏகமான வரவேற்பு.  மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப்பிரதேசம் எனப் பல மாநிலங்களுக் குச் சென்றுள்ளேன். அங்கு இருக்கும் எங்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என் கருத்துகளை மொழிபெயர்த்துச் சொல்வார்கள். 'லஞ்சம் வேண்டாம்’ என்பதற்கு  கிராம மக்களிடம் ஏக வரவேற்பு. வன்முறை வேண்டாம் என்பதற்கு பெண்களிடம் அபரிமித வரவேற்பு. ஆனால், சாதி என்று வரும்போது மட்டும்தான் எல்லா இடங்களிலும் என்னை எதிர்ப்பார்கள். பிறகு, விடாப்பிடியாக நின்று, நானும் என் இயக்கத் தைச் சேர்ந்தவர்களும் கருத்துக்களைச் சொல்«வாம்.

கிராமங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு இருக்கும்போது, சில பெண்கள் அவர்களின் பிள்ளைகளை எங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.  இந்த இயக்கத்தை நடத்த நாங்கள் எந்த அரசியல்வாதிகளிடமோ, செல்வந்தர்களிடமோ பணம் வாங்குவதுஇல்லை. அப்படி எதுவும் வாங்கினால் எங்களது நோக்கமே அடிபட்டுவிடும். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரத்தில் நடத்தும் செங்கல் சூளை மூலம் வரும் வருமானத்தையே இயக்கச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்தியா வல்லரசு நாடாக ஆவதில் நிச்சயம் எங்கள் இயக்கத்தின் பங்கும் இருக்கும்!'' என்கிறார் ராமகிருஷ்ண சாஸ்திரி.

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்