Published:Updated:

உடல்களைப் பதப்படுத்தும் நடைமுறை என்ன ?

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் இரண்டு பேரின் உடல்கள் மட்டுமே பிரேதப் பரிசோதனை

உடல்களைப் பதப்படுத்தும் நடைமுறை என்ன ?
உடல்களைப் பதப்படுத்தும் நடைமுறை என்ன ?

மிழகத்தில் இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை `பேன் ஸ்டெர்லைட்' (Ban Sterlite). ஆனால், இரு தினங்களுக்கு முன்புவரை அதை உரத்த குரலில், உளமறியச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நிலை இந்தியாவையே பதறவைத்திருக்கிறது. காவல்துறையினர் அவர்கள் மேல் நவீனத் துப்பாக்கிக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது. 13 பேர் பலி... படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஏராளமான அப்பாவிகள்... இயல்பு வாழ்வைப் பறிகொடுத்துவிட்ட தூத்துக்குடி மக்கள்... கடையடைப்பு தொடங்கி தமிழகமெங்கும் பற்றிக்கொண்டிருக்கும் போராட்டங்கள்..! இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைக்கூட நடத்த முடியாத நிலை..!  

``உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பங்கள் கதறுகின்றன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டம் அமைதியாகத்தான் தொடங்கியது. வழக்கமாகப் போராட்டங்கள் தொடங்கி, அன்றே முடிந்துவிடும். ஆனால், அன்றைய போராட்டம் போர்க்களமானது. 11 பேரின் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டன. ஏராளமானோர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்று, மருத்துவமனை முன் நடந்த போராட்டத்தில் மேலும் ஒருவர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார். மருத்துவமனையிலிருந்த மேலும் ஒருவரும் இறந்திருக்கிறார்.  தூத்துக்குடி மரணங்களுக்கு நியாயம் கேட்டு, மறியல், முற்றுகை, கண்டனம் என எதிர்ப்பு அலை வலுவாகிக்கொண்டேயிருக்கிறது. இன்னொரு பக்கம் அரசு தன் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லிவருகிறது.

இந்த நிலையில்தான் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யும் பணி நேற்று (23-05-2018) தொடங்கியது. பத்துப் பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், நான்கு பேர் கொண்ட நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில், பிரேதப் பரிசோதனையைத் தொடங்கினார்கள். பிரேதப் பரிசோதனை வீடியோவில் பதிவுசெய்யப்பட்டது. இரண்டு பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், `மத்தியக் குழுவினர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். அதுவரை உடலைப் பதப்படுத்தி வைக்க வேண்டும்’’ என அதிரடியாக, சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதன் காரணமாக, போஸ்ட்மார்ட்டம் செய்வது நிறுத்திவைக்கப்பட்டது.

`இறந்தவரின் உடலை ஏன் பதப்படுத்த வேண்டும்... எப்படிப் பதப்படுத்துகிறார்கள்... அதை எத்தனை நாள்களுக்கு வைத்திருக்க முடியும்?’ - தேனி அரசு பொதுமருத்துமனை உடற்கூறியல் துறைத் தலைவர் எழில் விளக்குகிறார்...

``உடலைப் பதப்படுத்த எம்பாமிங் (Embalming) முறையைப் பயன்படுத்துகிறோம். ஒருவர் இறந்ததும் உடலிலுள்ள ரத்தம் உறைந்து போகும். அதை வெளியேற்றிவிட்டு, ரத்த நாளங்கள் வழியாக சில வேதிப்பொருள்களைச் செலுத்துவோம். இறந்த உடலின் ரத்தக்குழாய்களின் மூலம் செலுத்தப்படும் ரசாயனக் கலவையே `எம்பாமிங் திரவம்’ என அழைக்கப்படுகிறது.

உடலில் ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கும். அது முழுவதையும் வெளியேற்றுவோம். பிறகு, ஃபார்மலின் (Formalin) ரசாயனக் கலவை ஒரு லிட்டரையும், ஆல்கஹால் (Alcohol), கிளிசரால் (Glycerol), தைமால் உப்புகள் (Thymol crystals), சோடியம் குளோரைடு ஆகியவற்றையும் எடுத்து, நான்கு லிட்டர் வடி நீருடன் (Distilled water) சேர்த்து எடுத்துக்கொள்வோம். இதை ரத்தம் வெளியேற்றப்பட்ட சடலத்துக்குள் செலுத்துவோம். இதுதான் உடலை அழுகாமல் பாதுகாக்கும்.

உயிரிழந்தோரின் உடலை ஓரிரு நாள்கள் மட்டுமே குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கலாம். நீண்ட நாள்கள் வைத்திருக்க வேண்டுமென்றால், ஃபார்மலின் திரவத் தொட்டியில் வைத்துப் பாதுகாக்க முடியும். இப்படிச் செய்யும் பிரேதத்தில் சில மாறுதல்கள் வரும். முகம் கறுப்பாவது, உடலில் சுருக்கம் போன்றவை ஏற்படும். எம்பாமிங் திரவத்தைச் சரியான அளவில் கலக்கினால், இப்படி ஏற்படுவதைக் கூடுமானவரைத் தடுத்துவிடலாம். மற்றபடி உடல் உறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தேவையான சமயத்தில் பிரேதத்தை எடுத்து, ஆய்வு செய்யலாம்.

விபத்து, போராட்டம், கொலை செய்யப்படுதல் போன்றவற்றின் காரணமாக உயிரிழந்தோரின் உடலைப் பதப்படுத்த வேண்டுமென்றால், அவர்களைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டால் ஒரு ரத்தக்குழாய் வழியாக எம்பாமிங் திரவத்தைச் செலுத்த முடியாது. எனவே, ஆங்காங்கே இருக்கிற ரத்தக்குழாய்கள் மூலமாகச் செலுத்திவிட்டால் உடல் அழுகாமலிருக்கும்” என்கிறார் எழில்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் இரண்டு பேரின் உடல்கள் மட்டுமே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த உடல்கள் மருத்துவமனையிலேயே இருக்கின்றன. `உறவினர்கள் உடலை கேட்பதாக’க் கூறி, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நிராகரித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.