Published:Updated:

“இது மோடி திட்டம்... பணத்தை போட்டு போட்டு எடுப்போம்!” - அதிர வைத்த வங்கி நிர்வாகம்!

“இது மோடி திட்டம்... பணத்தை போட்டு போட்டு எடுப்போம்!” - அதிர வைத்த வங்கி நிர்வாகம்!
“இது மோடி திட்டம்... பணத்தை போட்டு போட்டு எடுப்போம்!” - அதிர வைத்த வங்கி நிர்வாகம்!

அந்த பணம் எங்கிருந்து வந்தது? எதற்காக வந்து? எங்கே போனது? என்ற கேள்வியோடு  வங்கிப்படி ஏறியவர்களை ‘இது மோடி திட்டம். இந்த திட்டத்தில்  பணத்தை போட்டு போட்டு எடுப்போம்! என்று அதிர்ச்சி பதில் கொடுத்து விரட்டியிருக்கிறது அந்த வங்கி நிர்வாகம். 

கோவையில் சுயஉதவிக் குழுவினரின் வங்கிக் கணக்கில் அவர்களுக்கே தெரியாமல் பல லட்சங்கள் போடப்பட்டு பரிவர்த்தனை நடத்தப்பட்டிருக்கும் தகவல் தெரிந்து மிரண்டு போய் இருக்கிறார்கள் அந்தக் குழுவினர். கோவை நீலாம்பூர் பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களின் வங்கிக் கணக்கில்தான் இந்த லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளன. "அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? எதற்காக தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் எப்படிப் போனது?" என்ற கேள்வியோடு வங்கிப் படியேறியவர்களை, "இது மோடி திட்டம். இந்த திட்டத்தில் பணத்தைப் போட்டு எடுப்போம்!" என்று அதிர்ச்சி பதில் கொடுத்து விரட்டியிருக்கிறது சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம்.

கோயம்புத்தூரை அடுத்துள்ள நீலாம்பூரில் செயல்பட்டு வரும் கனரா வங்கிக் கிளை மீதுதான் இந்தப் பகீர் புகார். நீலாம்பூரில் செயல்பட்டு வரும் 60-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் கணக்கு இந்த வங்கியில் இருக்கிறது. ஒவ்வொரு குழுவிற்கும் அவர்களின் தகுதிக்கேற்ப கடன் வழங்கி, அந்தக் கடனை வங்கி வசூலித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாடிக்கையாளர்களாக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடந்த சில மாத காலமாக சிக்கல். 'பிரிண்டர் ரிப்பேர், ஆள் இல்லை' என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி பாஸ் புக்கில் எண்ட்ரி போட மறுத்திருக்கிறார்கள். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இது உறுத்தலாக இருந்தாலும் பெரிதாக சந்தேகம் வரவில்லை. சம்பந்தமே இல்லாமல் தங்கள் கணக்கிலிருந்து ரூ. 1,000, ரூ. 1,500 என்று பிடித்தம் செய்யப்பட்ட தகவல் குறுஞ்செய்தியாக வரவே, ஏதோ தவறு நடப்பது சுய உதவிக் குழுவினரிடையே எழுந்துள்ளது. சுய உதவிக்குழுவின் தலைவி ஒருவர், இன்னொரு குழுவின் தலைவியிடம் இந்தத் தகவலை பரிமாற, அவர்களுடைய கணக்கிலும் அதுபோன்று நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள். வங்கியின் குட்டு உடைந்துவிட்டது. ரிசர்வ் வங்கிவரைக்கும் புகார் பறந்த சூழலில் ‘உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட வட்டியைக் கொடுத்து விடுகிறோம்; பிரச்னை வேண்டாம்’ என்று கூலாகச் சொல்லி இருக்கிறது வங்கி நிர்வாகம்.

இதுதொடர்பாக  அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி செல்வியிடம் பேசினோம். “நாங்க பதினைஞ்சு வருஷத்துக்கும் மேல அந்த பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கோம். எவ்வளவு லோன் வாங்கினாலும் கரெட்டா கட்டிருவோம். தையல் தொழில், மாவு விக்கிறதுன்னு குழுவில் உள்ள எல்லோரும் சின்னச்சின்ன வேலைகள் செய்யுறோம். குழு மூலம் வாங்குகிற கடன்தான் குடும்பத்தைக் கொஞ்சம் தாங்கிப் பிடிக்குது. அதனால, குழுவை நாங்க பக்காவா நடத்திட்டு வர்றோம். கடந்த ஆறு மாசமாவே எங்களுடைய பாஸ்புக்கை எண்ட்ரி போடாம பேங்க்ல தட்டிக் கழிச்சுட்டிருந்தாங்க. வழக்கமா பிடிக்கிறதைவிட வட்டி கொஞ்சம் அதிகமாச்சு. சண்டைபோட்டு பாஸ்புக் எண்ட்ரி போட்டோம். எங்களோட அக்கவுண்ட்ல 20 லட்சம் ரூபாய் ட்ரான்ஸ்செக்‌ஷன் ஆகியிருக்கு.  அதைப் பார்த்ததுமே அதிர்ச்சியாகிட்டேன். கடன் (OD) அக்கவுண்ட்ல 20 லட்சம், சேமிப்பு (SB) அக்கவுண்ட்ல 20 லட்சம் கிரெடிட் ஆகி டெபிட் ஆகியிருக்கு. என்ன என்று கேட்கப்போனா, யாரும் சரியான பதில் சொல்ல மறுத்துட்டாங்க. மேனேஜர் ராதா மேடத்துகிட்ட விடாம கேட்டதுக்கு அப்புறம், ‘அதெல்லாம் கண்டுக்காதீங்க. இது  பேங்க் அட்ஜஸ்ட்மெண்ட். உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைன்னு' சொன்னாங்க. எங்களுக்கு தூக்கி வாரிப்போட்ருச்சு. ‘நாங்க மாசம் 400 ரூபாய் சேமிப்புத் தொகை கட்டுற சாதாரண ஆளுங்க. எங்க அக்கவுண்ட்ல எங்களுக்கே தெரியாம இவ்ளோ பணம் வந்து போயிருக்கு. அந்த பணத்துக்கு எங்களை வட்டி கட்ட வெச்சிருக்கீங்க. நாளைக்கு ஏதாச்சும் ஒரு பிரச்னை ஆகி வருமான வரித்துறை கேள்வி வந்தால், நாங்க என்னென்னு பதில் சொல்லுவோம்.? ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. 

நம்ம குழு அக்கவுண்ட்ல மட்டும்தான், இந்த கோல்மால் நடந்துருக்கா இல்லை வேற குழுவுக்கும் இந்தப் பிரச்னை இருக்கான்னு விசாரிச்சு, எல்லா பாஸ் புக்கையும் எண்ட்ரி போட்டு பார்த்தப்பதான் தெரிஞ்சது, ஒவ்வொரு குழுவுடைய அக்கவுண்டுக்கும் 5 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை போடப்பட்டு, மீண்டும் எடுக்கப்பட்டிருக்குன்னு. விவரம் தெரியாத சிலர்கிட்ட, 'இது மோடி திட்டம் அப்படித்தான் பணத்தைப் போட்டு போட்டு எடுப்போம்னு' சொல்லியிருக்காங்க. 

இன்னொருத்தங்ககிட்ட புகார் கடிதம் எழுதிக்கொடுக்கச் சொல்லி வாங்கியிருக்காங்க. ரெண்டுநாள் கழிச்சுபோய் கேட்டதுக்கு, 'உன் லெட்டரை கிழிச்சுப் போட்டாச்சு. இஷ்டம்னா கடன் வாங்கு, இல்லன்னா போயிட்டே இருனு' எகத்தாளமா பேசியிருக்காங்க. இவங்க ஏதோ தப்பு பண்றாங்க. அத அனுமதிக்கக் கூடாதுன்னு முடிவெடுத்து, எங்கள் பகுதி சமூக ஆர்வலர் ராமமூர்த்திக்கிட்ட விவரத்தைச் சொன்னோம். அவர்தான் இப்போ இந்தப் பிரச்னையில் எங்களுக்காக போராடிக்கிட்டு இருக்கார். ரிசர்வ் பேங்க் வரைக்கும் புகார் அனுப்பியிருக்கோம். 'எங்க அனுமதி இல்லாம எப்படி எங்க அக்கவுண்ட்ல பணம் வந்துச்சு? எதுக்காக வந்துச்சுன்னு தெரிஞ்சே ஆகணும். அதுதொடர்பா வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் கொடுக்கணும்னு' கேட்டோம். 'வங்கியால் புடிக்கப்பட்ட வட்டியைத் திரும்பத் தர்றோம். பிரச்னை பண்ணாம போயிருங்கனு' சொல்றாங்க. அப்படி கொடுத்துட்டா செஞ்ச தப்பு இல்லைன்னு ஆகிருமா? இது மிகப்பெரிய மோசடி உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்! தப்பு செஞ்சவங்களுக்குத் தண்டனை கொடுத்தே ஆகணும்" என்கிறார் அழுத்தமான குரலில்.

இந்தப் பிரச்னை தொடர்பாகப் போராடிவரும் சமூக ஆர்வலர் ராமமூர்த்தியிடம் பேசினோம், “வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆகும்போதும், டெபிட் ஆகும்போதும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் வரும். ஆனால், இவ்வளவு தொகை பரிமாற்றம் நடந்தது தொடர்பாக யாருடைய செல்ஃபோன் எண்ணுக்கும் மெசேஜ் வரவில்லை. ஆனால், இவர்கள் கட்டும், எடுக்கும் பணம் தொடர்பான மெசேஜ் மட்டும் வந்திருக்கிறது. திட்டமிட்டு அந்தப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மெசேஜை ப்ளாக் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லை, தமிழில் கோணல்மானலாகக் கையெழுத்துப் போடுபவர்களின் அக்கவுண்ட்களில் பெரிய தொகையும், ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுபவர்களின் அக்கவுண்டில் சிறிய தொகையும் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதைவைத்தே இவர்கள் எவ்வளவு நேக்காக விளையாடி இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். குழுவுக்கு பணம் கட்டப்போற படிக்காத பெண்களுடைய கையெழுத்து கொஞ்சம் மாறி இருந்தாலும் 'போய் கையெழுத்தை கரெக்டா வாங்கிக்கிட்டு வான்னு' திருப்பி அனுப்புறவங்க, இப்போ எப்படி இந்த அநியாயத்தை செஞ்சாங்க. 

மகளிர் சுய உதவிக்குழுக்களுடைய அக்கவுண்ட்ல இவ்வளவு பணத்தை அவங்க அனுமதி இல்லாம போடுறதுக்கு அவங்களுக்கு அனுமதி கொடுத்தது யாரு? இது ஃபோர்ஜரி இல்லையா... எல்லாரும் பேங்க்ல சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கச் சொன்னது இதுமாதிரி ஏமாத்துறதுக்குதானா? இதை நாங்க சும்மா விடப்போறது இல்லை. முறையான விளக்கம் கொடுக்கலைன்னா, நாங்க இந்தப் பகுதி மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து வங்கிமேலாளர் ராதாவிடம் விளக்கம் கேட்டோம், “வேறு யாருடைய அக்கவுண்ட்ல இருந்தும் அவங்களுக்கு பணத்தைப் போடல அவங்களுடைய கடன் அக்கவுண்ட்ல இருந்து சேமிப்புக் கணக்கிற்குத்தான் மாற்றியிருக்கிறோம். இயர் எண்டிங்ல எங்களுக்கு உள்ள ப்ரஷரால அப்படிச் செஞ்சோம். அதை அவங்ககிட்ட சொல்லாம செஞ்சது எங்க தப்புதான். அந்த ட்ரான்ஸ்சேக்‌ஷனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட வட்டியை அவங்களுக்கு கொடுக்குறோம்னு சொல்லிட்டோம் மத்தபடி இதுல வேற எந்த பிரச்னையும் இல்லை" என்று முடித்துக்கொண்டார்.

இது பேங்கா... இல்லை போங்கா..?

அடுத்த கட்டுரைக்கு