Published:Updated:

இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது? எப்படி மீண்டும் திறக்கப்பட்டது? #Recap

தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது வாயில் கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது.

இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது? எப்படி மீண்டும் திறக்கப்பட்டது? #Recap
இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது? எப்படி மீண்டும் திறக்கப்பட்டது? #Recap

மொத்தம் 13 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது. 

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டபோதே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து மக்களும் போராட்டத்தில் இறங்கினர். சில கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக 2 வருடங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், மரம் நடுதல் என ஸ்டெர்லைட் மக்களைக் கவரத் தொடங்கியது. மேலும், அப்போது நிகழ்ந்த சாதிச் சண்டை எனப் பல காரணங்களால் போராட்டம் நீர்த்துப் போனது. 

1996-ம் ஆண்டு மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டு இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகின. இதனால் அருகில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. வழக்கம் போல மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருபடி மேலே போய் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

1998 அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நாக்பூரைச் சேர்ந்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்ற `நீரி' ( National Environmental Engineering Research Institute ) அமைப்பு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ``ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. சுற்றுப்புறக் கிராமங்களில் நிலத்தடி நீரில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் உடலுக்குப் பெரிய ஆபத்து இருக்கிறது" எனத் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த அறிக்கையில் உள்ள பிழைகளைத் திருத்திவிட்டோம் என்று சொல்லி உயர் தீமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது, ஸ்டெர்லைட் நிர்வாகம். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ``ஆலை இரண்டு மாதங்கள் இயங்கட்டும். அதன் பின்னர் `நீரி' அமைப்பு ஸ்டெர்லைட்டில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தீர்ப்பளிக்க, மீண்டும் திறக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. 

முதல் அறிக்கையில் காட்டமாகப் பதிவு செய்திருந்த நீரி அமைப்பு, இரண்டாவது ஆய்வின் அறிக்கையில் நீர்த்துப்போன தகவல்களைத் தந்தது. மாறிப்போய் இருந்தது. இதனால் தொடர்ந்து இயங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது வேதாந்தா நிறுவனத்துக்கு உற்சாகத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேதனையையும் கொடுத்தது. இங்குதான் தனது முதல் தடையை உடைத்து மீண்டும் இயங்கியது ஆலை. 

இதற்கிடையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 2010 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்றதும் ஆலை நிர்வாகம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் `உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கும்படியாக இல்லை. நூறுகோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து மீண்டும் ஆலையை இயக்கலாம்" எனத் தீர்ப்பளித்தது. 
இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி வைகோ சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், 2013 ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். 2012 செப்டம்பர் 28-ல் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் 2013-ம் ஆண்டு நடந்த பெரும் விபத்து காரணமாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினார். 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலையைத் திறக்க முடியவில்லை. அதற்காகத் தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் சார்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டாலும், அவ்வழக்கை டெல்லி பசுமைத் தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றியது தென்னிந்திய தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். வழக்கம்போல, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையைத் திறக்க டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். 

20 ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது, ஸ்டெர்லைட் நிர்வாகம். இதை எதிர்க்கும் வகையில் 22.05.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கி, ஸ்டெர்லைட்டை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் `ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்குத் தடை' விதித்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர், அனில் அகர்வால் `ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்போம்' என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு நடந்த பின்னர், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விடமாட்டோம் என உறுதி காட்டுகிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர். ஆனால், இப்போது தமிழக அரசு அரசாணை மூலமாகச் சொல்லியிருக்கும் ஸ்டெர்லைட் மூடலை நிச்சயமாக அந்நிறுவனம் உடைக்க முயலும்; வரலாறும் அதைத்தான் சொல்கிறது.