Published:Updated:

``இந்த ஆட்சியால் ஏற்பட்ட ஸ்டெர்லைட் கறையைக் கழுவ முடியாது"- யுகபாரதி 

``இந்த ஆட்சியால் ஏற்பட்ட ஸ்டெர்லைட் கறையைக் கழுவ முடியாது"- யுகபாரதி 
``இந்த ஆட்சியால் ஏற்பட்ட ஸ்டெர்லைட் கறையைக் கழுவ முடியாது"- யுகபாரதி 

``இந்த மாதிரியான பாடல்கள் அமைக்க வேண்டும் என்பது எங்களின் நீண்டகால கனவு. பாரதிதாசன் வரிகளை இடையிடையே இதில் பயன்படுத்தியிருக்கிறோம். 'தமிழர் இன அடையாள மீட்பு' என்பதுதான் இதன் மையக்கருத்து. அதனால்தான் கடைசியில் பெரியாரை வீடியோவில் காட்டியிருக்கிறோம். இதையெல்லாம் சினிமா பாடலில் காட்ட முடியாது. அதற்குதான் சுயாதீன பாடல்கள் என்ற ஓர் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்." என்று கூறும் கவிஞர் யுகபாரதியிடம் பேசினேன். இசையமைப்பாளர் இமானின் இசையில் 'வீரத் தமிழன்' என்ற பாடலுக்கு வரிகள் எழுதியிருக்கிறார். மேலும், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராகவும் குரலெழுப்பி வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

``வீரத் தமிழன்' என்ற சுயாதீனப் பாடலை தற்போது வெளியிடுவதற்கான காரணம் என்ன?"

``சுயாதீனப் பாடல்கள் தமிழில் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. கட்சி மேடையில் பாடுவதற்காகவும் தெருக்களில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அமைக்கப்படும் பாடல்களுக்கு வரவேற்பு மிக அதிகம். ஆனால், அவை `சினிமா பின்புறத்திலிருந்து வெளிவரவில்லை' என்ற காரணத்துக்காக மிகக் குறைந்த அளவு மக்களையே சென்றடைகிறது. ஊடகங்களிலும் அவற்றை சரிவர ஊக்குவிப்பதில்லை. `சோனி மியூசிக் நிறுவனம்' இந்த மாதிரியான சமூக விஷயங்களில் அதிக ஈடுபாடுடன் செயல்படுகிறது. `இந்தப் பாடல் எந்த மாதிரியான விஷயங்களைப் பேச வேண்டும்' என்பதை சோனி நிறுவனத்துடன் கலந்துரையாடி தீர்மானித்தோம். அப்போதுதான் தமிழர்களைப் பற்றியும்,  தமிழ் அடையாளத்தைப் பற்றியும் பாடல் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் இந்த 'வீரத் தமிழன்' பாடல்." 

``மண் சார்ந்த விஷயங்களைவிட மேற்கத்தியக் கலாசாரம் இங்கே ஆதிக்கம் செலுத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``உலகமயமாக்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் ஒரே குடைக்குள் செயல்படத் துவங்கிவிட்டது. அதனால், இதுபோன்ற மேற்கத்தியக் கலாசாரத்தை நாம் தட்டிக் கழிக்கவும் இயலாது, அதே சமயம் ஊக்குவிக்கவும் இயலாது. 'மாற்றம்' என்பது ஒரு ஊசல் குண்டைப் போன்றது. மேற்கத்தியக் கலாசாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நாம், இன்று தமிழ் பரம்பர்யத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம். அதிக மக்கள் மேற்கத்திய கலாசாரத்தை விரும்புவதால், சந்தைக்கு ஏற்ற சாமான்களைத் தயாரிப்பது முக்கியம்தான். இது குறித்த அறிவுரைகள், ஆலோசனைகள் கூறுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஒருவேளை நாம் இதைத் தவிர்த்தோம் என்றால் நம்மை 'பிற்போக்குவாதி' என்று நினைத்து விடுவார்கள். கவிதைகளைக்கூட இன்றைய மொழிப் பிரயோகங்களுக்கு உட்பட்டு எழுதினால் மட்டுமே, அது மக்களைச் சென்றடையும். காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதேபோல் நம்  அடையாளங்களையும் விட்டுவிடக் கூடாது. உதாரணமாக, பழைமையான தோல் கருவிகள் கொண்டு யாரும் தற்போது இசையமைப்பதில்லை. எனவே, வெஸ்டர்ன் கருவிகளைக் கொண்டு நம் நாட்டுப் பாடல்களை எப்படி மேம்படுத்த முடியும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறன்."

`` `யுக பாரதி' எனும் பெயர் எதனால்?"

``25 வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர்கள் ஓர் புனைப் பெயரை வைத்துக்கொண்டால் வெற்றி அடைந்து விடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. கவிதைக்கு மறுபெயர் 'பாரதி'. அவர்தான் அக்காலத்தில் ரஷ்யப் புரட்சி பற்றி எழுதிய ஒரே கவிஞன். அப்போது அவர், `ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி' என்று எழுதியிருப்பார். 'யுகப் புரட்சி' என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய குடும்பம் இடது சாரி குடும்பம் என்பதனால் 'யுக பாரதி' என்ற பெயரை வைத்துக்கொண்டேன். 

``பாரதியாரின் கவிதைகளை பொதுவுடைமை ஆக்கியதால், அவற்றை சில குறும்படங்களிலோ அல்லது திரைப்படங்களிலோ தேவையில்லாத இடங்களில் உபயோகிப்பதைப் பார்க்கும்போது உங்களது மனநிலை எப்படி இருக்கிறது?" 

``ஒரு படைப்பின் ஆதாரச் சுருதி என்பது அந்தப் படைப்பை வெவ்வேறு இடங்களில் உபயோகிக்கும்போதுதான் வெளிப்படும். பாரதியை எந்த அளவுக்கு நாம் உள்வாங்கியிருக்கிறோம், எந்த அளவுக்கு அவரது எழுத்துகள் நமக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்துதான் அவரது வரிகள் பிற படைப்புகளில் புகுத்தப்படுகிறது. அவர் நீக்கமற நிறைந்து நிற்கும் கவிஞன். பாமர மக்களில் இருந்து, கற்றுத் தேர்ந்த அறிவாளி வரை அனைவரும் உபயோகிக்கக்கூடிய 'பொதுத்தன்மை' என்பது பாரதியாரின் கவிதைகளில் இருக்கிறது 

`நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?' என்று காதல் தோல்வியைப் பற்றி எழுதிய பாரதியின் வரிகளில் நரகக் கொடுமை எப்படியிருக்கும் என்பதை உணரலாம். இப்படி ஒரு கொடுமையான சூழ்நிலையைக் கூட தனது அழகியலால் வெளிப்படுத்தும் வரிகள் பாரதியினுடையது." 

``ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களின் எழுத்து ஆற்றல் மேம்படுவதற்காக பயணப்படுவது, பிடித்த இடத்தில் அதிக நேரம் செலவிழிப்பது, இசைக் கேட்பது போன்றவற்றைப் பின்பற்றுவார்கள். அப்படி நீங்கள் எவற்றையெல்லாம் பின்பற்றுவீர்கள்?"

`` `படைப்பு' என்பது உங்களது மூளையால் உந்தித் தள்ளப்பட்ட ஒரு உணர்வுதான். அதை எங்கு வேண்டுமானாலும் எழுதலாம். நானும் இசையமைப்பாளர் இமானும் சேர்ந்து இதுவரை 300 பாடல்களுக்கு மெட்டமைத்திருப்போம். அத்தனை பாடல்களுமே அவரது ஒலிப்பதிவு கூடத்திலிருந்து எழுதப்பட்டதுதான். அங்கு பாடகர்கள், டீக்கடை பையன் என்று பல பேர் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் எங்களது பாடல்களின் ஓர் அங்கமாக இருப்பார்கள். உங்களுக்கு எழுத வேண்டும் என்று ஒரு மனநிலை உருவாகும், அது நம்மை ஒரு இடத்தில் இருக்க விடாது செய்யும். அப்படி தன்னையே உந்தித் தள்ளும்போது எழுதப்படும் எழுத்துகள்தாம் அதிக வலிமையுடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்கு ஒரு இடமோ, காலமோ, சூழலோ பொறுப்பாகாது. இன்னும் சொல்லப்போனால் எழுத்து எனும் தீப்பொறியை பெரிதாக்குவதற்கு காகிதம்கூட தேவைப்படாது." 

``யுகபாரதி- பிரபுசாலமன்- இமான் கூட்டணி பற்றி சில வரிகள்..."

``நட்பு, அன்பு, அக்கறை மற்றும் மரியாதை கலந்ததுதான் எங்கள் கூட்டணி. இமான் மெட்டமைத்தால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை பிரபு சாலமனுக்கு இருக்கிறது. அதற்கு வரிகள் நான் எழுதும்போது, எதாவது திருத்தங்கள் இருந்தால், அதை அவர்கள் இருவரும் தெரிவிப்பார்கள். இப்படியாக எங்களுக்குள் கருத்து சுதந்திரம் இருக்கிறது. தவற்றைப் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்குள் தயக்கம் இருக்காது. மேலும், பாட்டின் வழியே கதை சொல்வதற்காக இடத்தை சாலமன் பாடலாசிரியருக்குக் கொடுப்பார். கதை, வசனம், படப்பிடிப்பு இடம் என்று அத்தனையையும் எங்களுக்கு விரிவாகத் தெரியப்படுத்துவார். அந்த உண்மையான வெளிப்பாடுதான் எங்களின் வெற்றிக்குக் காரணம். 

மேலும், `மண் சார்ந்த இசை' மீது இமானுக்கு எப்போதும் ஒரு கனவு உண்டு. குறைந்தபட்சமாவது அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். வார்த்தைகள் கடுமையில்லாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் இமான் விரும்புவார்." 

``ஸ்டெர்லைட் போராட்டத் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக சென்னையில் நடந்த கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டீர்கள். இந்த வன்கொடுமை குறித்து நீங்கள் கூறவருவது என்ன?"

 13 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. நமக்குத் தெரிந்தத் தகவலின் படி 13 பேர், ஆனால், இன்னும் எத்தனை பேரை இந்த அரசு கொலை செய்திருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் போராடுவதற்குக்கூட உரிமையில்லை என்று நினைக்கும்போது அவமானமாக உள்ளது. அவர்கள் மக்களைச் சுடவில்லை. விலங்குகளைப் போல் வேட்டையாடியிருக்கிறார்கள். இது இந்த ஆட்சிக்கு நேர்ந்திருக்கும் மிகப்பிரிய களங்கம். இந்தக் கறையை எந்தக் காரணம் காட்டியும் அவர்களால் கழுவ முடியாது. வேடிக்கையான சமூகமாக மாறிவருகிறது தமிழகம். இந்த மனிதஉரிமை மீறலை நியாயப்படுத்தும் சமூகமும் இங்கு இருக்கத்தான் செய்கிறது. கொடும் அரக்கனின் ஆட்சியில் நாம் இருக்கிறோம். நியூட்ரினோ, காவிரி, ஸ்டெர்லைட் இப்படி தமிழகத்தில் வெறும் பிரச்னைகள் மட்டும்தான் இருக்கிறது." என்று வருத்தத்துடன் முடித்தார் யுகபாரதி.