Election bannerElection banner
Published:Updated:

"கன்யகா டாக்கீஸ்... எது புனிதம், எது கேவலம்? படத்தில் பதில் இல்லை. நீங்கள் தேடிக் கண்டடையலாம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 12

"கன்யகா டாக்கீஸ்... எது புனிதம், எது கேவலம்? படத்தில் பதில் இல்லை. நீங்கள் தேடிக் கண்டடையலாம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 12
"கன்யகா டாக்கீஸ்... எது புனிதம், எது கேவலம்? படத்தில் பதில் இல்லை. நீங்கள் தேடிக் கண்டடையலாம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 12

'மலையாள கிளாசிக்' தொடர் - பகுதி 12. இந்த அத்தியாத்தில், 'கன்யகா டாக்கீஸ்' என்ற திரைப்படம் குறித்து ஆழமாக விவரித்து எழுதப்பட்டிருக்கிறது.

ஷகிலா இன்ன பிறர் நடித்த சாப்ட் போர்ன் படங்கள் ஒரு காலத்தில் பிரமாண்டமான வெகுஜனப் படங்களுடனே மல்லுக்கு நின்று வசூல் அள்ளியது. கேரள சினிமாவினுள் நடந்த அந்த அரசியலுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், வயிற்றுப் பசியைப் போலவே சனங்களைத் துரத்துகிற வல்லமை காமத்துக்கு இருக்கிறது என்பதும், பல காரணங்களால் பாலியல் வறட்சி ஒரு சாபக்கேடாக உயர்ந்து வருகிறது என்பதும் கண்கூடு.

அன்றாடம் புரண்டு வருகிற செய்திப் பிரவாகங்களில் நாம் தித்திப்புடன் சப்பு கொட்டுகிற தீமைகள் யாவும் காமத்தின் மறுசுழற்சிதான். எல்லாம் இருந்தாலும், காமத்தைப் புறக்கடை பக்கம் ஒளித்து வைத்துவிட்டு, வரவேற்பறையில் உட்கார்ந்து அதைக் காறித் துப்புகிற நமது இரட்டை வாழ்வு நம்மை மேலும் நெருக்கடிகளுக்குள் தள்ளியவாறு இருக்கிறது. கன்யகா டாக்கீஸ் முடிந்து போகிற ஒரு பிட்டுப் பட தியேட்டரைப் பற்றிய படம். அதேநேரம், அது அந்த கிராமத்தைப் பற்றிய, ஊரை உலகை மனிதர்களைப் பற்றிய படம்.

குய்யாலி என்று அந்த கிராமத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. பனி மேகங்கள் வந்து மூடும் மலைக் கிராமம். ஒரு டீ எஸ்டேட் இருந்து அதை மூடி விட்டிருக்கிறார்கள். அதனால், மக்களின் வாழ்வு சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. வறுமையும் தரித்திரமும் இருக்கின்றன. கிராமத்தில் பெரும்பான்மை கிறிஸ்துவ மதத்தினர்தான். பாவ புண்ணியங்களை நம்பக்கூடிய அந்த ஊரின் ஒரு கடைக்கோடியில் கன்யகா டாக்கீஸ் இருக்கிறது. அந்தியில் கொஞ்சம் பேர் தனியாகவும் மற்றவருடனும் அமைதியாகவும் முணுமுணுத்தவாறும் காத்திருந்து டிக்கெட் வாங்கிப் படம் பார்த்து, அமைதியாகக் கலைந்து போகின்றனர்.

நடுத்தர வயசு ஆட்களும், கிழவர்களும் வந்துபோகிற அந்த இடத்தில் நிலவுகிற இயலாமையைக் கொண்டு வந்தது, இப்படத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு. டாக்கீஸ் ஓனர் யாக்கூப். சினிமா எங்கோ ஆகாயத்தின் வழியாக மக்கள் பார்க்கிற இடத்துக்கு வந்து சேருகிற காலத்தில் புரொஜக்டர் வைத்துப் படம் ஓட்டிக்கொண்டிருக்கிறார். பையன்கள் இணையம் வழியாய் எவ்வளவோ சாத்தியங்களை அடைகின்றனர். இந்தமாதிரி காலத்தில் அவர் ஒவ்வொரு வார லாப நஷ்டக் கணக்குகளில் மூச்சைப் பிடித்துக்கொண்டு வீட்டில் உள்ள நகைகளையெல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மகள் ஓடிப்போனதற்கும், வீட்டில் வெறுமை சூழ்ந்ததற்கும் தனது புருஷன் செய்கிற பாவப் பணிகளே காரணம் என்று நம்புகிற அவருடைய மனைவி, அவரைத் தொடவும்கூட விடுவதில்லை. அவருக்குத் துணையாய் பெருமூச்சுவிட இரண்டு உதவியாளர்கள் இருக்கிறார்கள்.

இரவானால் முதலாளியுடன்  கொஞ்சம் குடித்துக்கொண்டு பேசுகிறார்கள். வாழ்க்கை ஒரு பழக்கமாகப் படிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்... பதினைந்து வருடம், அந்த டாக்கீஸ் அவர்களுடைய வாழ்வாகவே மாறிவிட்டது. இவர்களுடைய கதை ஒரு பக்கமென்றால், ஆன்சி என்கிற முதிர்பெண்ணின் கதையும் இதனுடன் வருகிறது. ஆன்சியின் அப்பா வாட்டசாட்டமான ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்திருக்கிறார். ஊரையே அடித்துப்போடுகிற பலம் கொண்ட அவருக்கு பூஞ்சையாய் ஒரு மனைவி இருந்து, அவள் அவரை ஆண்டு கொண்டிருந்ததை ஊரே வியந்தவாறு இருந்திருக்கிறது. தெய்வத்துக்கு அசூயை வந்தால் என்ன செய்வது.

மனைவி போனபிறகு அவர் ஒடிந்துவிட்டார். பக்கவாதம் வந்து ஊர்ந்து நடக்கிற நிலை. மகளான ஆன்சிதான் இப்போது அவரைப் பார்த்துக்கொண்டு வருமானமாகவும் இருக்கிறாள். ஹவுஸ் நர்ஸ் வேலை உருவாக்குகிற இயந்திரத்தனத்திலிருந்து விடுதலையடைய அவள் சிறிய ஒரு கனவை வைத்திருந்தாள். அது, சினிமாவில் நடிப்பது! புரோக்கரிடம் போட்டோ கொடுத்து அவனுடன் சென்று ஆட்களைப் பார்த்தால் அவளை டவல் கட்டிக்கொண்டு குளிக்கச் சொல்கிறார்கள். அதுதான் அவள் நடிக்கிற முதல் காட்சி. படத்தில் முகம் வராது.

டைட்டிலுக்கு அப்புறம் கதை துவங்கும்போது, யாக்கூப் - டாக்கீஸை ஒரு சர்ச்சுக்கு எழுதி வைத்துவிட்டு குய்யாலியை விட்டு வெளியேற ஒரு பேருந்தில் ஏறுகிறார். அந்தப் பேருந்துகளில் ஊரார் பலரும் இருக்கின்றனர். அதே பேருந்தில் ஆன்சி இருக்கிறாள். அவளும் இந்த ஊரை விட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். இருவருக்கும் நடந்தது என்ன என்றுதான் கதை துவங்கியிருந்தது.

யாக்கூப்புக்கு நஷ்டம் மீது நஷ்டம். முதல் பெண் ஓடிப்போனதையே விழுங்க முடியாமல் இருந்தபோது, இரண்டாவது பெண்ணும் ஓடிப்போகிறாள். அவருடைய மனைவி சாபமிடுவதுபோலக் கதறி அவரை உலுக்கியதோடு அது முடியவில்லை. அவளது மனநிலை ஆட்டம் கண்டு அவரை விட்டு ஒதுங்கிப்போகிறாள். ஓடிப்போன மகள் நிர்வாணமாய் குளத்தில் மிதக்கிறாள். எல்லாம் காமம் காட்டி ஊரை இழுத்த பாவம்தானோ?!. தெய்வம் நின்று கொல்கிறதோ?! யாக்கூப் தனது டாக்கீஸை தெய்வத்தின் சர்ச்சுக்கே அர்ப்பணிப்பாய் எழுதிக் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறியிருக்கிறார்.

ஆன்சியும் அப்படித்தான். சினிமாவை விட்டு விலகலாம் என்று நகரும்போது, யாராவது நம்பிக்கையூட்டுகிறார்கள். பின்னால் அது துரோகமாகத்தான் இருக்கிறது. நீலப்பட குழுவினரிடமே சிக்கித் தப்பிக்கிறாள். ஒரு நடனக் குழுவில் இணைந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அதன் தலைமைப் பெண்ணிடம் கெஞ்சிக் கொஞ்சம் ஆசுவாசம் அடைகிற நேரத்தில், நள்ளிரவில் வீட்டின் எதிரே பையன்கள் வந்து கூச்சல் போடுகிறார்கள். அவள் நடித்த பிட்டை அவர்கள் பார்த்திருக்கக் கூடும். மெல்ல ஊர் கூடப் போகிறது. அப்பா ஜஸ்ட் லைக் தட் என்கிற மாதிரி வெறுத்துவிட்டுச் சென்று படுக்கிறார். ஆன்சி டாக்கீஸில் இருந்து சர்ச்சாய் மாறின அந்த இடத்தில் பாதரைக் கண்டு பேசி எங்களுக்கெல்லாம் வாழ்க்கை கிடையாதா என்றுமேகூட கேட்டுவிட்டு இனி இந்த ஊருக்கு நான் வரமாட்டேன் என்று கிளம்பியிருந்தாள். அப்படிதான், அவள் சென்றதும் அவளது அப்பா இறந்து போனார். அவள் எங்கே போனாள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆன்சி நியாயம் கேட்ட அந்த பாதர் டாக்கீஸ் சர்ச் ஆனதும் அங்கே ஊழியம் செய்வதற்கு வந்தவர். இளைஞர். மதப் பற்றுள்ளவர். விசுவாசி. ஊரைவிட்டு ஒதுங்கிக் காடும் மலையுமான ஊர் அவரை சோர்ந்து போகச் செய்யவில்லை. தன்னம்பிக்கை இருக்கிற அவரை வேறு ஒன்று சூழ்கிறது. ஏதேதோ சப்தங்களைக் கேட்கிறார். கவனித்துப் பார்த்தால், காதில் துல்லியமாகக் கேட்கிறது. பெண்களின் குரல்கள், ஆண்களின் குரலும். அவை சரசம் செய்கின்றன, அழைப்பு விடுக்கின்றன, அபயம் கேட்கின்றன, ஆபாசமான பாடல்களைக்கூட பாடுகின்றன. ஒரு வைதீகன், ஒரு பிரம்மச்சாரி கேட்கக் கூடாதவை அனைத்தையும் அவர் கேட்கிறார்.

பாதிக்கப்படுகிறார். வேலைகளில் குழப்பம் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கூட போதுமானவராக இல்லை. உடல் நலமே பாதிக்கிறது. இறுதியாக அவர் விசாரித்துக் கொண்டிருந்த யாக்கூப் வந்து சேர்கிறார். இருவருமாக டாக்கீஸ் பொருள்கள் கொஞ்சம் கிடந்து பூட்டி வைத்திருந்த அறையைத் திறக்கிறார்கள். காட்சிகள் வெடிக்கின்றன. சினிமாக்களின் குரல்கள் அவை. மக்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த மலின சினிமாக்களின் குரல்கள். பாதருக்குக் கிடைத்த தரிசனத்தில் ஆன்சியும்கூட குளித்தாள். உடல்கள், குரல்கள், காமம்.

படத்தின் முடிவுக் காட்சியில் பாதர் இடிந்த கோட்டை ஒன்றில் நடந்து அதன் சிதிலங்களைப் பார்க்கிறார்.

அது நமது கருத்துகளின் தோல்வியாய் இருக்கலாம்.

ஒருவேளை இந்த படத்தில் செக்ஸ் படங்கள் செய்கிற ஊழியத்தைத்தான் இப்போது சர்ச் வேறு ஒரு மாதிரி செய்து கொண்டிருக்கிறதோ?

எது புனிதம்? எது கேவலம்?

படத்தில் பதில் கிடையாது. ஒருவேளை நமக்கு அவகாசம் இருப்பின் தேடிக் கண்டடையலாம்.

நான் படம் வெளிவருவதற்கு முன்னால் கேரளத் திரைப்பட விழாவில் பார்த்தேன். பிரமிப்பாயிருந்தது. அதற்கு அடுத்த வருடம் எங்களுடைய ஷீபா அறிமுகம் செய்து, ஷாஜி குமாரை சந்தித்தேன். இந்தக் கதையை சிறுகதையாக எழுதியவர். நான் ஆஹோ ஓஹோ என்று அலட்டிக்கொள்ள அவர் குட்டியாய் ஒரு புன்னகை செய்ததாக நினைவு. அவர் இப்போது பல பெரிய படங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார் என்று ஷீபா சொன்னார். நல்லது. கன்யகா டாக்கீஸ் அதன் திரைக்கதையாலும் நின்ற படம். கூட இருவர் எழுதியிருக்கிறார்கள். யாக்கூப் ஒரு கட்டத்தில் ஒருத்தரிடம் நரகத்துக்குப் போகிறேன் என்று பொருமிவிட்டு பேருந்தை விட்டு இறங்கும்போது, அங்கே சேகுவாரா பேனர் ஒன்று பிரேமில் தெரியும். கதவு அடைக்கப்படுகிறது. ஆன்சியின் பக்கத்தில் இருக்கிறவள், ஆன்சியிடம் கேட்கிறாள்.

``எங்கிருந்து வருகிறாய்?"

``கொஞ்சம் தூரத்தில் இருந்து!"

``எங்கே போகிறாய்?"

``கொஞ்சம் தூரத்துக்கு!"

``போகிற இடத்துக்குப் பெயரில்லையா? அங்கேதான் உன் புருஷன் இருக்கிறானா? அவன் என்ன வேலை செய்கிறான்?"

``கொரில்லா யுத்தம்!"

``அவன் பேரென்ன?"

``சே குவாரா!"

அந்த அம்மாவுக்கு எதுவோ தப்பு என்று தெரிகிறது. ஒரு திருப்தியில்லை. சற்று ஆத்திரத்துடன் கேட்கிறாள்.

``அந்த ஊரின் பெயர் என்ன சொன்னாய்?"

``பொலிவியா!"

இந்த டைப் காட்சிகள் பலவற்றைச் சொல்ல முடியும்.  

அப்புறம் இப்படி ஒரு பனிவிழும் மலைக் கிராமத்தை எந்தப் படத்திலாவது முழுமையாகப் பார்த்திருக்கிறேனா என்பது சந்தேகம். எவ்வளவு துல்லியம்? எத்தனை ஆன்ம பலம்? எப்படிப்பட்ட நிதானம்? படத்தில் தவறவே விடக்கூடாதது டைட்டில் தருணம். படம் முடிந்த பிறகு மறுபடி ஒருமுறை பார்க்கலாம். அந்த டைட்டிலில் மாட்டு வண்டி நகர முதல் தடவையாய் டாக்கீஸ் காட்டப்படுகிற அந்த ஷாட்டில் இல்லாத துயர் இல்லை. ஒளிப்பதிவாளர், ஷெனாட் ஜலால் (shehnad Jalaal). மிகவும் பொறுப்பெடுத்துச் செய்திருக்கிறார் என்று சொல்வது சரி. இசை போதுமான அளவுக்குக் கச்சிதமாய் இருந்தது. கதை சொல்வதில் எடிட்டரும் செவ்வனே பங்காற்றியிருக்கிறார்.

பாதராக முரளி கோபி. அவருக்கு நடிப்பு சொல்லித் தர வேண்டியதில்லை. எவ்வளவோ தருணங்கள் படத்தில் அவருக்காக இருந்தன. முன்பே சொன்ன மாதிரி alenciar ley lopaz தற்போதைய மலையாள சினிமாவின் மிக முக்கியமான நடிகர். பேசுகிற திறன் கொண்டது அவருடைய முகம். யாக்கூப்பாக வளைய வந்தார். ஆன்சியாக லீனா. கொந்தளிக்கிற முகபாவம் கொண்டவர். மிகவும் தனித்தன்மை வாய்ந்த குரல். எந்த பாத்திரத்திலும் ஆழத்தின் ஆழத்தை நமக்குக் காட்டி விடுவார். ஒரு விதத்தில் லீனாவைப் போன்றவர்களுக்கு மலையாள சினிமா தனி இடத்தை வைத்திருக்கிறது. பெண்களின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுவந்து, வெற்றி கொண்டதற்குப் பல்நோக்குத் திறன்களைக் கண்டறிந்து கொள்கிற நுட்பம் காரணம். நாயகன் நாயகிகளுக்கு அப்பால் கொஞ்சம் பொம்மைகளை நிறுத்தி மறையச் செய்வதில் நல்ல சினிமா எப்படிச் சாத்தியம்?

இயக்குநர் மனோஜ்.

யார் எழுதினாலும், யார் எடுத்தாலும் இது அவருடைய மனசில் இருந்த சினிமா என்பது தெளிவு. முழுக்கவே இயக்குநரின் படம். ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு ஐடியாவைக் கொண்டிருக்கிறது என்பதைப் படம் நெடுகப் பார்த்தவாறு இருக்கலாம். தியேட்டர் இருக்கிற அந்த லொக்கேஷனில்கூட ஒரு கதை செயல்படுவது விளையாட்டே அல்ல. அப்புறம் இவ்வளவு அரிதான ஒரு விஷயத்தைத் தேர்வு செய்தது. காமத்தைப் பற்றி பேசுகிற இந்தப் படத்தில் யாராவது ஒரு பெண் கண்ணடிக்கக் கூட இல்லை. ஒருநாள் மலையாள சினிமா எழுதப்படுமெனில், இதோ நான் எழுதுவது போல் அவரை எழுதுவார்கள்.

முதலில் ஷகீலாவில் துவங்கினேன். அவர் பிட்டுப் படங்களில் நடித்தது ஒரு சேவை. அவரிடம் குணச்சித்திரம் காட்டுவதாகக் கொண்டுவந்து செய்ததெல்லாம் ஆபாசம்.

எது உங்களுக்குப் பிடிக்கிறது?

நாம் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து இந்தப் படம் நமக்குப் பிடிக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு