Published:Updated:

துரோகமிழைத்தது காங்கிரஸா, தி.மு.க-வா? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 14

துரோகமிழைத்தது காங்கிரஸா, தி.மு.க-வா? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 14
துரோகமிழைத்தது காங்கிரஸா, தி.மு.க-வா? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 14

காவிரி நதிநீர் குறித்த தீர்ப்புக்கான கோரிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் நீடித்தவேளையில், மறுபுறம் கர்நாடக அரசியலில் காங்கிரஸின் எதிர்காலத்தைக் கணிக்க ஆரம்பித்தார் பிரதமர் இந்திரா காந்தி.

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

இந்திரா காந்தியின் வாக்குறுதி!

``காவிரிப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண மத்திய அரசு உதவத் தயார்” என்று அறிவிப்புச்செய்த பிரதமர் இந்திரா காந்தி, மூன்று மாநில (கர்நாடகம், தமிழகம், கேரளம்) முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தச் சமயத்தில், தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து வாக்குறுதி ஒன்றை அளித்தார். “காவிரி விவகாரத்தில், மத்திய அரசு இன்னும் ஆறு மாதங்களில் நடுநிலையான தீர்ப்பு ஒன்றை உருவாக்க உதவி செய்யும். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இப்போதுள்ள அளவைக் காட்டிலும் மிகையாக நீரைத் தேக்கிவைத்தோ, பயன்படுத்தியோ சிக்கலை மேலும் கடுமையாக்க வேண்டாம். காவிரியை முன்வைத்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவதும், அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பதும் சிரமமாக இருக்கும். ஆகவே, அந்த வழக்கைத் தாங்கள் திரும்பப் பெற வேண்டும். அதன்பிறகு, பிரச்னையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” என்றார். இதை, அப்போது வெவ்வேறு காலகட்டங்களில் பொதுப்பணித் துறை அமைச்சர்களாக இருந்த ப.உ.சண்முகம், சாதிக் பாட்ஷா ஆகிய இருவரும் உறுதிசெய்துள்ளனர். 

திரும்பப் பெறப்பட்டது வழக்கு!

பிரதமர் இந்திரா காந்தியின் வாக்குறுதியை நம்பி, அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம் கலந்து பேசினார். அதன்பிறகு அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. அப்படித் திரும்பப் பெறும் நேரத்தில்கூட, மீண்டும் வழக்குப்போட வழி வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 1972-ம் ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பிலும், தஞ்சை விவசாயிகள் சார்பிலும் தாக்கல் செய்திருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால்தான், காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண வழியில்லாமல் போனது எனப் பலராலும் மு.கருணாநிதி மீதும், அவருடைய கட்சி மீதும் இன்றுவரை  விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது. 

காங்கிரஸே காரணம்!

உண்மையில், தி.மு.க. மீது இப்படி ஒரு விமர்சனம் வைக்கப்பட்டாலும், அதற்கு முழுக்க முழுக்கக் காங்கிரஸே காரணம்; அத்துடன், காவிரியில் தண்ணீர் வராததற்கு அந்த ஆட்சியே முக்கியக் காரணம் என்கிறார், நாத்திகம் ராமசாமி. இதுகுறித்து அவர், "1967-ம் ஆண்டுவரை நாடு முழுவதும் ஏகபோகமாக மத்தியிலும் - மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வரவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல் சட்டப்படி சம அந்தஸ்துள்ள இரு மாநில அரசுகளுக்கிடையே நதிநீர்ப் பிரச்னையில் தாவா ஏற்படும்போது, நாடு முழுவதற்கும் பொதுவாக உள்ள ஒரு மத்திய அரசு, தேசிய நலனுடன் 'அனைத்து மக்களும் இந்த நாட்டு மக்கள்' என்றரீதியில், அவர்கள் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அப்படிப்பட்ட அரசாக இல்லாததால், தனது குறுகிய அரசியல் நலனுக்காக, அந்தக்கட்சி பல காலகட்டங்களில் எடுத்த முடிவுகளால்தான் மக்கள் அவதிக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இன்று தமிழகப் பாசன உரிமைகள் பாதிக்கப்படுவதற்குக் காரணம், கர்நாடகம் அல்ல, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இப்படியேபோனால், இதற்குத் தீர்வு உண்டா, இல்லையா? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்வரை காவிரிப் பிரச்னை தீருமா, தீராதா என்று கூற முடியாது” என்றார் அவர். மேலும், “மத்திய அரசு ஒரு தேசிய நலன் இல்லாத ஆட்சி” என்றும், “பிரச்னைகளைக் காலம் கடத்தும் போக்கைக் கடைப்பிடிப்பது மத்திய அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸ் பற்றி அந்தச் சமயத்தில் விமர்சனம் செய்ததையும் நாத்திகம் ராமசாமி சுட்டிக்காட்டினார்.

பழைய காங்கிரஸோ, புதிய காங்கிரஸோ கர்நாடகத்திலுள்ள காங்கிரஸ்காரர்கள், 1960-களில் தொடங்கி இன்றுவரை 'காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்' என்ற கொள்கையை விதைத்ததன் மூலம் தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும், சங்கங்களும், அமைப்புகளும் அந்தக் கொள்கையை உறுதிப்படுத்தும்வகையில், `தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தர மாட்டோம்' என்பதைத் தாரக மந்திரமாக்கிவிட்டார்கள். மேலும், அவ்வப்போது காவிரிப் பிரச்னை தமிழகத்தில் தப்பித் தவறித் தலைதூக்கினால் தவறாமல் காங்கிரஸ்காரர்கள், குறுக்குசால் ஓட்டுவார்கள். தமிழக மக்களைத் திசைதிருப்பும்  முயற்சியில் இறங்குவார்கள். இத்துணைக்கும் உறுதுணையாக, தமிழகத்துக்குத் துரோகத்தைத் தொடர்ந்து இழைத்து வருபவர்கள் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள்தான். தமிழகத்தில் காவிரிப் பிரச்னை முற்றும்போதெல்லாம் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் வழிகாட்டுதலோடும், உதவியோடும் காவிரி பற்றிய உரிமையுணர்வைத் தடுக்க எண்ணற்றத் தடைகளைப் போடுவார்கள் என்ற விமர்சனமும் தமிழகக் காங்கிரஸ் மீது வைக்கப்படுகிறது.

இதைவைத்துப் பார்க்கும்போது 'காவிரிக்கு அதிக அளவில் துரோகமிழைத்தது காங்கிரஸே' என்று நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளையில், தி.மு.க. மீது வைக்கும் விமர்சனத்தையும் புறந்தள்ளிவிட முடியாது. 

- காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு