Published:Updated:

ராமாயண ரெஃபரன்ஸ் முதல் ஸ்டெர்லைட் பிரச்னை வரை - 'காலா' பேசும் அரசியல்!

ராமாயண ரெஃபரன்ஸ் முதல் ஸ்டெர்லைட் பிரச்னை வரை - 'காலா' பேசும் அரசியல்!
ராமாயண ரெஃபரன்ஸ் முதல் ஸ்டெர்லைட் பிரச்னை வரை - 'காலா' பேசும் அரசியல்!

ராமாயண ரெஃபரன்ஸ் முதல் ஸ்டெர்லைட் பிரச்னை வரை - 'காலா' பேசும் அரசியல்!

மெரினா புரட்சியிலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் மக்கள் கையிலெடுத்த ஆயுதம் அறப்போராட்டம்! போராட்டத்தைக் கலவரமாக மாற்றுவதையே வழக்கமாக வைத்துள்ளன மத்திய - மாநில அரசுகள். ரஜினி பேசுவது வேண்டுமானால், ஆன்மிக அரசியலாக இருக்கலாம். ஆனால், காலாவின் டீஸரில் உள்ள குறியீடுகள் இதற்கு அப்பாற்பட்டவை. மும்பை, அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்கள், புரட்சி, தலைமைக்கான தேவை ஆகியவற்றை எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கிறது காலா ட்ரெய்லர். காலா ட்ரெய்லர் பேசிய சில அரசியல் குறியீடுகள் இதோ...

'நகரத்தின் அழகுக்காக விரட்டப்படும் உழைக்கும் மக்கள்!'

’குடிசைப்பகுதில இருக்கிற அழுக்க, இந்த வறுமைய, இந்த இருள பிரகாசமா மாத்தப் போறேன்’ என்ற நானா படேகரின் பேச்சோடு தொடங்குகிறது காலா ட்ரெய்லர். ஏற்கெனவே ‘காலா’ டீசரிலும் அவர் இதே கருத்தை வெளிப்படுத்தியிருப்பார். டீஸரில் வரும் ஒரு ஷாட்டில், அவர் அமர்ந்திருக்கும் மிகப்பெரிய கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டு, அதில் ‘Pure Mumbai’ என்று எழுதப்பட்டிருக்கும். ஆக நானா படேகருக்கு காலா வாழும் பகுதியை ‘தூய்மை’ என்ற பெயரில், அபகரிக்கும் நோக்கம் இருப்பது தெளிவாகிறது. டீஸர், ட்ரெய்லர் இரண்டிலும் பல ஷாட்களில் குடிசைப் பகுதிகள் எரிக்கப்படுவது காட்டப்படுகின்றன. சென்னையின் பல குடிசைப்பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. அவை எரிந்த சில நாள்களிலேயே, அரசு ‘தீ விபத்துகளைத் தடுக்கிறோம்’ என்று மக்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்திருக்கிறது. இந்தத் தீ விபத்துகள் இயற்கையாக நடப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே!

கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் ஏறத்தாழ 53,700 குடியிருப்புகள் அரசால் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் குறைந்தபட்சம் 2.5 லட்ச மக்கள் இடம்பெயர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு அரசுகள் பெரும்பாலும் சொல்லும் காரணங்கள் ’அழகான நகரங்களை உருவாக்குகிறோம்’ என்பதும், ‘குடிசை இல்லாத நகரங்கள் அமைக்கிறோம்’ என்பதும்தான். 

சென்னையில் 1983-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் என்ற பெயரில் மீனவர்கள் துரத்தப்பட்டனர்.  எதிர்த்துப் போராடியதற்காக பல மீனவர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தற்போது கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்துக்காக வெளியிடப்பட்டிருக்கும் வரைவு நகலில், மீனவர்களுக்கான இடங்களையே குறிக்காமல் வெளியிட்டுள்ளது  தமிழக அரசு. 

கடந்த ஆண்டில் மட்டும் இருபது இடங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி மக்கள் வெளியேற்றப்பட்டனர். நகரத்துக்கு வெளியே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நகரத்தின் மொத்த உழைப்பையும் சுமக்கும் மக்களை, அழகு, நகரத்தின் கட்டமைப்பு வசதி, பேரிடர் மேலாண்மை முதலான காரணங்களைக் காட்டி ‘உதிரிகளாக’ வெளியேற்றும் கொடுமையைப் பற்றி ‘காலா’ பேசும் என்பது நிச்சயம்! 

’ராமாயண ரெஃபரன்ஸ்!’ 

டீஸர் வெளிவந்த போதிருந்தே, ‘கற்றவை பற்றவை’ பாடல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பாடல் வெளியானபோது, அதன் முதல் வரியே, ‘ஒத்த தல ராவணா’ எனத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், ஸ்டில்ஸிலும் ரஜினியின் மேசை மேல் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ புத்தகம் இடம்பெற்றிருந்தது. ட்ரெய்லரில் நானா படேகரின் பேத்தி அவரிடம், ‘ஹூ இஸ் காலா, தாதா?’ எனக் கேட்க, அவரும் ‘ராவண்’ என்றே பதிலளிப்பார்.  மேலும் ட்ரெய்லரின் தொடக்கத்தில் நானா படேகர் பேசிக்கொண்டிருக்கும் மேடையின் பின்புறம், ‘தண்டகாரன்யா நகர்’ எனவும், ’மனு ரியல்டி’ எனவும், ‘HM ஆர்கிடெக்சர்’ எனவும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் ‘மனு ரியல்டி’ என்பது இந்துக்களின் ‘புனித’ நூலான மனுதர்மத்தைக் குறிப்பது என எடுத்துக்கொள்ளலாம்.’தண்டகாரன்யா’ என்பதற்கு சம்ஸ்கிருதத்தில், ‘தண்டனையின் காடு’ என்ற பொருள் உண்டு. அயோத்தியை விட்டு வெளியேறிய ராமன்  சீதையோடு தண்டகாரன்ய காடுகளுக்குச் சென்றார் எனவும்,  தண்டகாரன்ய காடுகள் அசுரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன எனவும் ராமாயணம் கூறுகிறது. 

’தண்டகாரன்ய நகரும் ஸ்டெர்லைட் ஆலையும்!’

’காலா’ ட்ரெய்லர் வெளிவந்தவுடன் நெட்டிசன்கள் பலரும் அதை ஸ்டெர்லைட் போராட்டத்துடன் இணைத்து மீம்ஸ்களை உருவாக்கியிருந்தனர்.  ‘காலா’ ட்ரெய்லருக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. தற்போதைய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களின் எல்லையில் பரந்து கிடக்கும் காடுகள் ‘தண்டகாரன்ய காடுகள்’ என அழைக்கப்படுகின்றன. இந்தக் காடுகளில் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பல ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் விளைவாக ‘தண்டகாரன்ய’ பகுதிகளில், மாவோயிஸ்ட் இயக்கங்களில் பழங்குடி இளைஞர்கள் இணைந்து அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு, பழங்குடி மக்களிடையே ஒரு பிரிவை ஏற்படுத்தி, ‘சால்வா ஜுடும்’ என்ற அரசு ஆதரவுப் பழங்குடி இளைஞர் படையை உருவாக்கியது. ‘சால்வா ஜுடும்’ அமைப்பு ’பச்சை வேட்டை’ என்ற பெயரில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் கண்டிக்கப்பட்டு, அந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

இதே தண்டகாரன்ய காடுகள், ஒடிஸா மாநிலத்தில் உள்ள நியமகிரி மலையில் அமைந்துள்ளன. அப்பகுதியில் வாழும் பழங்குடியினர்  இந்த மலையை  கடவுளாக வழிபடுகின்றனர். இந்த மலையிலிருந்து ‘பாக்ஸைட்’ என்ற கனிமம் வெட்டியெடுக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாக்ஸைட் கனிமத்தை வெட்டியெடுக்கும் நிறுவனம் வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது. ஸ்டெர்லைட் நிறுவனமும் வேதாந்தாவுடையது. அதன் உரிமையாளர் அனில் அகர்வால். 

'மும்பை - மராட்டியர்கள் - சிவ சேனா!'

'காலா’ ட்ரெய்லரில் நானா படேகர் அரசியல்வாதியாக நடிப்பது அனைவரும் அறிந்தது. மும்பை போன்ற நகரத்தில் அதிகார பலம் மிக்க அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால், அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் ‘சிவசேனா’ போன்ற கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ‘தூய்மை இந்தியா’ போன்ற ஆசையை வெளிப்படுத்துவதால், பி.ஜே.பி-யைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். ‘வேங்கையன் மவன்’ ஷாட்டின் பின்னணியில் நானா படேகர் படங்களுடன் விநாயகர் சதுர்த்தி கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 1992-ல் மும்பையில் நடந்த கலவரங்களுக்குப் பிறகு, அதை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், 'கலவரங்களைத் தூண்டியது சிவ சேனா' எனக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

தன் பேத்தியிடம் நானா படேகர் பேசும் காட்சியில், வலது பக்கம் ஒரு படம் தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் இருக்கும் இடம் மும்பையில் இருக்கும் ‘ஹுதாத்மா சவுக்’. ’மராட்டியம் பேசுபவர்களுக்கு தனி மாநிலமாக மஹாராஷ்ட்ரா பிரிக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையோடு 1955-ம் ஆண்டு போராட்டம் நடத்திய சம்யுக்த மஹாராஷ்ட்ரா அமைப்பைச் சேர்ந்த 105 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக இந்தப் பகுதி, ‘தியாகிகள் நினைவிடம்’ என அழைக்கப்படுகிறது. ‘சம்யுக்த மஹாராஷ்ட்ர’ அமைப்பின் தாக்கத்திலிருந்து பால்தாக்கரே சிவ சேனா அமைப்பை உருவாக்கினார்.  

சிவ சேனா 1970-களில் ’மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்தது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சிவ சேனாவால் தாக்கப்பட்டனர். மும்பையின் மிகப்பெரிய பகுதியான தாராவியில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தார்கள். சிவ சேனா தொண்டர்களால், தமிழர்கள் பலர் தாக்கப்பட்டனர். மண்ணின் மைந்தன் - வெளியிலிருந்து வந்தவன் என்ற ஃபார்முலாவை ‘கபாலி’ திரைப்படத்திலும் காட்டியிருந்தார் இயக்குநர் பா. இரஞ்சித். இதிலும் அது இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ட்ரெய்லர் அதிகப்படுத்தியுள்ளது. 

‘தலைவர்கள் பற்றிய குறியீடுகள்!’

இயக்குநர் பா. இரஞ்சித்தின் முந்தைய திரைப்படங்களைப் போலவே, ’காலா’விலும் சில தலைவர்களையும் ஆளுமைகளையும் பார்க்க முடிந்தது.  யூடியூபில் வெளியிடப்பட்ட லிரிக் வீடியோக்களில் அம்பேத்கர் படங்களும், வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. ’நீட்’ தேர்வுகளை எதிர்த்து உயிரிழந்த அனிதாவின் படம் ‘தெரு விளக்கு’ பாடலில் இடம்பெற்றிருந்தது. டீஸரின் இறுதியில் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடும் வங்காரி மாத்தாயின் படம் இருந்தது. ரஜினியின் அறைச் சுவரில், காணப்படும் ஸ்டில்ஸ்களில் கார்ல் மார்க்ஸ் படமும்  மாட்டப்பட்டிருக்கும்.

தற்போது வந்திருக்கும் ட்ரெய்லரில் ரஜினி மக்களிடம் பேசும்போது, பின்னணியில் இருக்கும் சுவரில் புத்தர், அம்பேத்கர், ஜோதிராவ் பூலே ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ’நிலம் உனக்கு அதிகாரம்; நிலம் எங்களுக்கு வாழ்க்கை!’ என ரஜினி ட்ரெய்லரின் இறுதியில் சொல்வதாகட்டும், பாடல்கள் ‘நிலம், நீர் எங்கள் உரிமை’ என்பதாகட்டும், ‘காலா’ நில உரிமையைப் பற்றிப் பேசப் போகிறது என்பது உறுதி. இதே முழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன் வைத்துப் போராடியவர்  தாதாசாகேப் கெய்க்வாட். அவர், ‘நில உரிமை மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை தரும்’ என்று கூறி, அதன்படி போராடினார். ரஜினியை அதிகம் கவனிக்கும் அரசு, காலாவில் ரஜினி பேசும் அரசியலையும் கவனித்தால், இந்த மக்கள் கேட்கும் 'வாழ்க்கை' இவர்களுக்கு கிடைக்கும்!

அடுத்த கட்டுரைக்கு