Published:Updated:

வீட்டுப்பாடத்துக்குத் தடை... இனியேனும் குழந்தைகளின் சிறகுகள் விரியுமா? ஓர் அலசல்!

வீட்டுப்பாடத்துக்குத் தடை... இனியேனும் குழந்தைகளின் சிறகுகள் விரியுமா? ஓர் அலசல்!
வீட்டுப்பாடத்துக்குத் தடை... இனியேனும் குழந்தைகளின் சிறகுகள் விரியுமா? ஓர் அலசல்!

"இன்னிக்கு என்ன ஹோம் வொர்க் கொடுத்திருக்காங்க?" என்பதுதான் பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் குழந்தையிடம் கேட்கப்படும் முதல் கேள்வி. அதுவே அந்த மாலை நேரத்தைச் சுமையாக்கி விடும். அதுவும் முதல் வகுப்புகளுக்கே வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவது விந்தைதான். இதற்கொரு சிறு விடுதலையாக மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பாட முறையில் படிக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் புருஷோத்தமன் என்பவர், ஐந்து, ஆறு வயதே ஆன குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதால் மனதளவில் சோர்ந்துவிடுவதாகப் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதி மன்றம், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்றும் இந்த உத்தரவை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கல்வி மற்றும் குழந்தைகள் நலச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்களிடம் கருத்துக் கேட்டோம். 

 விழியன், சிறுவர் எழுத்தாளர்

"சி.பி.எஸ்.சி பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரையில் வீட்டுப்பாடம் இல்லை என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. துறையின் இந்த அறிவிப்பினை பள்ளிகள் அப்படியே நடைமுறைப்படுத்துமா என்றால் கேள்விக்குறிதான். காரணம் முழுக்கப் பள்ளிகள் மட்டுமே அல்ல. பெரும்பாலான பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் பாடப்புத்தகம் வைத்துப் படித்தால்தான் திருப்தி என்ற மனநிலையில் இருக்கின்றார்கள். அவர்களின் மனநிலையும் மாறவேண்டும். நிறைய பள்ளிகளில் பெற்றோர்களே நிறைய வீட்டுப்பாடம் தாங்க ஓரிடத்தில் உட்காரமறுக்கின்றார்கள் எனப் பள்ளியை நெருக்குகின்றார்கள். பாரமில்லாத கல்வி நிச்சயமாகக் கற்றலை இனித்திடச் செய்யும். பள்ளிகள் தேர்வுக்கு என்றில்லாமல் பாடத்திட்டம் தாண்டிய புத்தகங்களையும் வாசிக்க ஊக்குவிக்க இது உதவும். மேலும், இந்த அறிவிப்பில் இன்னும் சில முக்கிய அறிவிப்புகளும் உள்ளன. பள்ளியே பாட அட்டவணையைத் (Time Table) தயாரிக்கலாம், இதன் மூலம் செயல்வழி கல்வியை ஊக்குவிப்பதாக அறிவித்துள்ளது. பள்ளிகள் இதனைச் செயல்படுத்தினால் நலமே."

ப்ரித்தா நிலா, குழந்தைகள் செயற்பாட்டாளர்

"மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தருவதே ஒருவித ஏமாற்று வேலைதான். இரண்டாம் வகுப்புப் படிக்கும் பிள்ளைக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தாங்க. பறவைகளுடைய குரல் ஒலியைக் குறிப்பிடணும் என்பதுதான் கேள்வி. அவங்க குறிப்பிட்டிருக்கும் பறவைகள் பெயர் எதுமே நம்ம நாட்டுப் பறவை இல்லை. சரி .இந்தக் கேள்விக்கான பதிலை வகுப்பில் சொல்லிக்கொடுத்தாங்களான்னு கேட்டா அதும் இல்ல. எழுதாம போய் தெரியலன்னு பையன் சொன்னா ஸ்கூல்ல அடிப்பாங்க அதுக்கு பயந்து அவன் அழறான். கடைசியா அவங்க அம்மா கூகுள்ல பார்த்து பையன எழுத வெச்சாங்க. உண்மையில் பல நாள்கள் அவனுக்கான வீட்டுப்பாடத்துக்குக் கூகுள் பார்த்துத்தான் எழுதுறாங்க.

ஒரு நாளில் குழந்தைக்கான நேரம் முழுமையா பாடப்புத்தகத்தோடதான் இருக்கு. பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி. வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற முடிவு வரவேற்கத்தக்கதுதான். வீட்டில் இருக்கும் நேரத்திலாவது அவங்களுடைய இயல்பில் அவங்க இருப்பாங்க. பாடப்புத்தகத்தின் திணிப்பு இல்லாமல் அவங்க சிந்திப்பதை அவங்க செய்வதற்கான மாலை நேரம் அவங்களுக்குக் கிடைக்கும். பாரதியார் எழுதியபடி, மாலை முழுவதும் விளையாட்டுன்னு மகிழ்ச்சியான மாலைப் பொழுது அவங்களுக்குக் கிடைக்கும்"

குழந்தைகளின் விருப்பங்களை அறிந்த கல்வி முறையே அவர்களை புதிய சிந்தனைக்குரியவர்களாக மாற்றுகிறது