Published:Updated:

"நம் வாழ்க்கையே ஒரு நீளமான சிங்கிள் ஷாட்தான்!" - சனல் குமார் சசிதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நம் வாழ்க்கையே ஒரு நீளமான சிங்கிள் ஷாட்தான்!" - சனல் குமார் சசிதரன்
"நம் வாழ்க்கையே ஒரு நீளமான சிங்கிள் ஷாட்தான்!" - சனல் குமார் சசிதரன்

"கதை, திரைக்கதை எழுதி அதனை அச்சுபிசகாமல் அப்படியே எடுப்பதன் மூலம் சினிமாவை இன்னும் இறுக்கமுடையதாக மாற்றுகிறோம் என்று நினைக்கிறேன். சினிமாவிற்கும் சுதந்திரம் வேண்டும். அதன் இயல்பிலேயே படமாக்குவது இன்னும் உண்மையைப் பக்கத்தில் சொல்வது போல இருக்கும்!" - சனல் குமார் சசிதரன்

`ஒழிவுதிவசத்தே களி' எனும் மலையாளப் படத்தின் கடைசிக்காட்சி இந்தியச் சமூகத்தையே உறைய வைத்தது. அதுவரை சனல் குமார் சசிதரன் என்பவரைப் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரு வருடமாகவே பல்வேறு தடைகளைச் சந்தித்து, இவரது மூன்றாவது படமான `எஸ் துர்கா' வெளியானது. தனது படைப்புகள் மூலம் இந்தியச் சமூகத்தின் மீதான சமரசமற்ற விமர்சனங்களை வைப்பவர், சனல் குமார் சசிதரன். அவரைச் சந்தித்தோம்.     

``சமீப வருடங்களில் தொடர்ந்து கலைப் படைப்புகளை ஒடுக்கும் அடிப்படைவாதிகள் அதிகரித்துவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" 

``இது எல்லாக் காலத்திலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். தற்போது இன்னும் அதிகரித்திருக்கிறது. அடிப்படைவாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். மாற்றம் என்பது தொடர்ந்து நிகழக்கூடியது. ஆனால், அந்த மாற்றத்தை ஏற்காத பழைமைவாதிகள் புதியதாக எந்தச் சிந்தனைகள், கருத்துகள் வந்தாலும் அதனை ஏற்பதில்லை. இதுதான் `எஸ் துர்கா'வுக்கும் நிகழ்ந்தது. தலைப்பில் வேறு மதங்களைக் குறிக்கும் பெயர்கள் இருந்திருந்தால், அந்த மதத்தின் அடிப்படைவாதிகளும் இதனை எதிர்த்திருப்பார்கள். சமூகம் முழுவதற்குமான சிந்தனையோட்டம் மாறினால்தான் இதனை மாற்ற முடியும்." 

`` `எஸ் துர்கா'வில் வன்முறைக் காட்சிகளை வைத்திருக்க வாய்ப்பிருந்தும் அதனை ஏன் வெளிப்படுத்தவில்லை?" 

``வன்முறைக் காட்சிகளை வைப்பதற்கான திட்டமிடல் இருந்தது. ஏனென்றால், படமே வன்மத்தைப் பேசுவதாகத்தான் இருக்கிறது. ஆனால், படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் வன்முறைக் காட்சியை வைக்கவேண்டாமென முடிவெடுத்தேன். ஏனென்றால், வெளிப்படுத்தக்கூடிய வன்முறையைக் காட்டிலும் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் வன்முறை பயங்கரமானது. ஒரு கொலையைக் காணும்போது இருக்கும் பதைபதைப்பு அடுத்த கொலையைக் காணும்போது இருப்பதில்லை. அதேபோல எந்நேரத்திலும் மிகப்பெரிய வன்முறை நிகழ்ந்துவிடலாம் என்ற சூழலில் இருக்கும் பயமும் பதைபதைப்பும், வன்முறை நிகழும்போது ஏற்படும் பயத்தைவிடக் கொடூரமானது. எனவேதான் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பதைபதைப்பைப் பயன்படுத்த முடிவெடுத்தேன்." 

`` `ஒழிவுதிவசத்தே களி'யில் 52 நிமிடங்களுக்கும், `எஸ் துர்கா'வில் பெரும்பாலான இடங்களிலும் பல நீளமான சிங்கிள் ஷாட்களைப் பயன்படுத்திருப்பீர்கள். `சிங்கிள் ஷாட்'டை அதிகம் பயன்படுத்துவது ஏன்?" 

``நான் தொழில்நுட்ப விஷயங்களைப் பெரிதும் சார்ந்திருப்பதில்லை. பலரும் சினிமாவைத் தொழில்நுட்பக் கலையாகப் பார்க்கிறார்கள். ஆனால், சினிமாவானது தொழில்நுட்பக் கலை அல்ல. சினிமாவில் எடிட்டிங் மூலமாகவும், பல்வேறு ஷாட்கள் மூலமாகவும் பலவற்றை மிகைப்படுத்திக் காட்டமுடியும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படியான மிகைப்படுத்தல் எதுவும் நிகழ்வதில்லை. சொல்லப்போனால் நமது வாழ்க்கையே நீளமான சிங்கிள் ஷாட்தான். யதார்த்தமான உணர்வுகளை ஆழமாகக் கடத்துவதற்கு சிங்கிள் ஷாட்கள் பயன்படுகின்றன. அப்படியிருக்கும்போது ரியலிஸ்டிக்காக ஒரு படத்தைக் கொடுப்பதற்கு இவை ரொம்பவே உதவியாக இருக்கின்றன. ஆனால், பலருக்கும் இது பொறுமையைச் சோதிக்கும் விஷயமாக இருக்கிறது. இதுவரை பார்த்துவந்த சினிமாவிலிருந்து வேறொன்றைப் பார்ப்பதற்கு அவர்களுக்குப் பொறுமை இருக்காது. தவிர, நிஜ வாழ்க்கையில் இருக்கும் ஓர் அதிர்வு, சிங்கிள் ஷாட்டில் இருப்பதாக நான் உணர்கிறேன். `ஒழிவுதிவசத்தே களி'யின் இறுதியில் வரும் அந்த நிகழ்வின் தாக்கம் பயங்கரமானதாய் இருந்ததற்குப் பெரிய சிங்கிள் ஷாட்டும் ஒரு காரணம். அதனால்தான், சிங்கிள் ஷாட்களை அதிகம் பயன்படுத்துகிறேன்." 

``ஒரு சம்பவத்தை நிகழவிட்டுப் படமாக்கும் முறையைக் கடைபிடிக்கிறீர்கள். இந்த முறைக்காக எவ்வளவு மெனெக்கெடுகிறீர்கள், ஒத்திகை பார்ப்பது உண்டா?" 

``ஸ்கிரிப்ட் இல்லாமல்தான் பெரும்பாலும் படப்பிடிப்புக்குச் செல்கிறேன். ஸ்கிரிப்ட், வசனங்கள் போன்றவற்றை நான் பெரும்பாலும் பயன்படுத்தமாட்டேன். நான் நடக்கவேண்டிய சம்பவத்தைக் கூறி விடுவேன். அந்தச் சம்பவத்தில் அவர்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படியே நடந்துகொள்ளச் சொல்வேன். ஆரம்பத்தில் அவர்களது வசனங்களும் செய்கைகளும் நான் எதிர்பார்த்ததிலிருந்து விலகிச் செல்லலாம். ஆனால், அவற்றை நடக்கவிட்டு எனக்குத் தேவையானதை நான் வடிவமைப்பேன்.  நடிகர்களிடம் நடிக்கச் சொல்லமாட்டேன், நீங்கள் எதிர்வினையாற்றினால் போதும் என்றே சொல்வேன். அதனால்தான், மிக இயல்பாகப் படமாக்க முடிகிறது. ஒத்திகையில்கூட வசனங்களுக்குப் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். நடிகர்களின் மூவ்மென்ட்ஸ், எந்த இடத்தில் நிற்கவேண்டும், யார் முதலில் வசனத்தைத் தொடங்க வேண்டும், கேமரா ஆங்கிள்களுக்கு ஏற்ப எப்படி இடம் மாறவேண்டும், கேமராவின் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றவையே ஒத்திகையின்போது கவனத்தில் கொள்வேன்." 

``நிகழவிட்டுப் படம்பிடிக்கும் யுக்தியில் ஒலியமைப்பை எப்படிக் கையாள்கிறீர்கள்?" 

``சினிமாவில் ஒலியும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு காட்சியை ஒலியுடனும் ஒலியில்லாமலும் பார்க்கும்போது இருவேறு மனநிலை உருவாவதை உணரலாம். இங்கே ஒலியமைப்பு என்பதுகூட செயற்கையாக அமைக்கப்படுவதாகத்தான் இருக்கிறது. படப்பிடிப்பு நிகழும்போதே பதிவு செய்யப்படும் நேரடி ஒலிப்பதிவானது நமக்குத் தேவையான உணர்வுகளை அதன் அழுத்தம் குறையாமல் தரக்கூடியது. எனவேதான் லைவ் சவுண்டையே பயன்படுத்துகிறேன்."

``திரைக்கதையில் நம்பிக்கை இல்லை எனச் சொல்கிறீர்கள். ஆனால், எல்லாக் கதைகளையும் திரைக்கதை இல்லாமல் படமாக எடுத்துவிட முடியுமா?" 

``ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சினிமாவை அணுகுகிறார்கள். நான் கதை இல்லாமல் திரைக்கதை இல்லாமல் படமாக்குவதை விரும்புகிறேன். கதை, திரைக்கதை எழுதி அதனை அச்சுப்பிசகாமல் அப்படியே எடுப்பதன் மூலம் சினிமாவை இன்னும் இறுக்கமுடையதாக மாற்றுகிறோம் என்று நினைக்கிறேன். சினிமாவுக்கும் சுதந்திரம் வேண்டும். அதன் இயல்பிலேயே படமாக்குவது இன்னும் உண்மையைப் பக்கத்தில் சொல்வதுபோல இருக்கும்." 

``உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள், இயக்குநர்கள்...?" 

``சிறுவயதிலிருந்து நிறைய படங்களைப் பார்த்திருந்தாலும், அவையெல்லாம் சினிமா கனவை மட்டுமே தந்தன. இயல்பான சினிமாவை எடுக்கவேண்டும் என்பதை கிஸ்லோவ்ஸ்கியிடம் (Krzysztof Kieślowski) இருந்துதான் தெரிந்துகொண்டேன். அதிலும், கிஸ்லோவ்ஸ்கியின் `டெகலாக்' (Dekalog) திரைப்படம் முக்கியமானது. பத்துக் குறும்படங்களை உள்ளடக்கிய படம் அது."

``உங்களது குறும்படங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி... கதாபாத்திரங்களின் பின்புலத்தைப் பற்றிய தகவல்களை அதிகம் கொடுக்காமலேயே கதையை நகர்த்துவது ஏன்?"  

``திட்டமிட்டு இதனைச் செய்யவில்லை. ஒரு கதாபாத்திரத்தின் ஊர், அவனது குணநலன்கள், மதம் என எல்லாத்தையும் தெளிவாகச் சொல்லி கதையை நகர்த்தும் இயக்குநர்கள் உண்டு. நமது வாழ்க்கை முழுவதிலும் நம்மை நன்கு அறிந்த மனிதர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், பெயரைத் தாண்டி வேறெதுவும் தெரியாத பலரும் நமது வாழ்க்கை நெடுக இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோன்றுதான் எனது கதாபாத்திரங்களும். ஆபத்தான சூழலில் ஒருவருக்கான உதவியை அந்த மனிதரின் பின்புலம் அறிந்துதான் செய்வோமோ? ஒரு மனிதருக்காகக் கருணைகொள்ளவும், உடைந்து அழவும் அவர்களது பின்புலம் தேவையாக இருக்கிறதா? அவ்வளவு குறுகிய மனப்பான்மை உடையவர்களா நாம்? சகமனிதர்களை அவர்களின் அடையாளங்களைத் தாண்டி நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்."

``உங்களது கடந்த இரண்டு படங்களும் ஆவணப் புனைவு (Docufiction) எனும் அதிகம் அறியப்படாத ஜானரைக் கொண்டது. அந்த ஜானரைப் பின்பற்றுவதற்கான காரணம் என்ன?"   

``என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது முழுக்க பொழுதுபோக்கு விஷயமில்லை. அப்படி இருக்கும்போது வெறும் புனைவை மட்டும் தருவது சரியாகாது. அதேநேரம் புனைவை நோக்கிப் போகும்பொழுது கதையும் திரைக்கதையும் கட்டாயமாகும். அப்பொழுது அங்கே ஒரு செயற்கைத் தன்மை உண்டாகிவிடும். ஆவணப் புனைவிலும் கதை இருக்கும். ஆனால், முழுக்க  யதார்த்தத்துடன் இணைந்த விஷயமாக அது இருக்கும். கதையின் வழியே ஆவணத்தைப் புனைவதன் வழி நிஜத்துக்கு மிக நெருக்கமான சினிமாவைக் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். எனது முதல் படமான `ஓராள்பொக்கத்'திலும் இதனைத்தான் செயல்படுத்தியிருப்பேன்." 

``உங்களது படங்களில் புனைவில்லாத பகுதியை இயல்பில் எப்படி இருக்குமோ அவ்வளவு உண்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்களே எப்படி?" 

``எனக்குள் இருக்கும் ஆவணப்பட இயக்குநர்தான் அதற்குக் காரணம். புனைவுக் கதைப் பகுதியை எடுக்கும்போதுகூட உள்ளிருக்கும் ஆவணப்பட இயக்குநர் எட்டிப்பார்க்கவே செய்கிறான். எனது படங்களில் புனைவில்லாத ஆவணக் காட்சிகளை வெளியிலிருந்து ஒருவர் பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்தவகையில் படமாக்குகிறேன். கதையைப் படமாக்கும்போது அந்தச் சம்பவத்திற்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் சென்று படமாக்குவதால், அது வேறாக இருக்கிறது. அவ்வளவுதான்!" 

`` `ஓராள்பொக்கம்', `எஸ் துர்கா' இரண்டு படங்களிலும் முதன்மைப் பெண் கதாபாத்திரங்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதா?"  

``திட்டமிட்டு உருவாக்கவில்லை. தவிர, அதனை ஒரு பெரிய விஷயமாக எப்போதுமே நான் கருதியதில்லை. சாதி, மதத்தை வைத்து ஒருவனை அடையாளப்படுத்துவதைப் போன்றுதான், மொழியை வைத்தும் ஒருவரை அடையாளப்படுத்தி அந்நியப்படுத்துவது. மொழி என்பது ஒரு தொடர்பியல் கருவி மட்டுமே. மொழியின்பால் பற்று இருக்கலாம். ஆனால், அதனை வைத்து சக மனிதரைப் பிரித்துப் பார்ப்பது எப்போதும் நியாயமற்றது. இதுபோன்ற கட்டுப்பாடுகளை உடைக்க விரும்பியதன் விளைவே, இதுபோன்ற கதாபாத்திரங்கள்." 

``கதையில்லாமல் படம் எடுப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், மற்ற மொழிகளைவிட கேரளாவில்தான் Script writer-க்கான மரியாதை அதிகமாக இருக்கிறது. மேலும், இலக்கியமும் சினிமாவும் சரிசமமாக மரியாதை பெறுவதும் அங்குதான். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?" 

``மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இருக்கின்றனர். அவர்களுக்காகவே சினிமாவை வந்து பார்க்கும் கூட்டம் இங்கே அதிகமாகவும் இருக்கிறது. இது மிக மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், நான் அணுகக்கூடிய சினிமா என்பது முற்றிலும் வேறானது. முக்கியமாக, ஒரு சம்பவத்தின் வழியே கதை சொல்ல முயற்சி செய்பவன் நான். இதன்மூலம் மிக அழுத்தமான சினிமாவைத் தரமுடியும் என்ற நம்பிக்கை என்னிடத்தில் இருக்கிறது." 

``சுயாதீன சினிமா என்பதை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?" 

``தயாரிப்பாளர் இருந்தாலும் இல்லையென்றாலும் ஏற்கெனவே இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் சினிமாவிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு சினிமாவாக உருவாக்கப்படுபவை அனைத்துமே, சுயாதீன சினிமாக்கள்தாம். புதுமுகங்களை வைத்து வணிக ரீதியான திரைப்படங்களை எடுத்தால், அவை எப்படிச் சுயாதீன சினிமாவாக இருக்கமுடியும். மேலும், எங்களது `காழ்ச்சா சலசித்திரா வேதி' மூலம் தொடர்ந்து சுயாதீன சினிமாக்களையே உருவாக்குவோம்!." 

``நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணையதளங்களில் சினிமாவைக் காணும் வசதி மூலம், சினிமா அடுத்தகட்டத்துக்குச் சென்றுவிட்டதா... அத்தகைய இணையதளங்களில் வெளியாகும் படங்களுக்குத் தணிக்கை அவசியமில்லை என்பது கூடுதல் பலமா?"  

``என்னைப் பொறுத்தவரை, சினிமா என்பது வெகுஜன ஊடகம். தியேட்டரில் பார்க்கும்போது பல்வேறு உணர்வுகளை நாம் பெறலாம். எந்தப் படமாக இருந்தாலும் தியேட்டரில் காணும் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். மேலும், அது ஒரு சமூக வழக்கமாகவும் இருக்கிறது. 50, 60 பேர் மத்தியில் உட்கார்ந்து படம் பார்ப்பது, மற்றவர்களின் உணர்வுகளில் நாமும் பங்குகொள்ள வைக்கக்கூடியது. முக்கியமாக, விவாதங்களை எழுப்பக்கூடியது. நெட்ஃபிலிக்ஸ் போன்றவற்றில் தணிக்கை தேவையில்லை என்றாலும், அதைவிட முக்கியமாக நமது தணிக்கை அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். ஒரு படத்தை ஒரு தடவையாவது தியேட்டரில் பார்க்க வேண்டும். அதன்பின் இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் பார்க்க தணிக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்."  

``உங்களது படங்களில் தொடர்ந்து ஆதிக்கத்தை நிறுவ முயல்பவர்களைக் காட்சிப்படுத்துவதாக நினைக்கிறேன்... சரிதானா?"

``சரிதான்! இங்கு ஆதிக்க மனநிலை என்பது பல்வேறு வகையாகப் பரவி, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஜனநாயகத் தன்மையுடைய நாட்டில் வாழ்ந்தாலும், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் ஆதிக்கத்தை நிறுவ முயல்பவனாக இருக்கிறான். அந்த ஆதிக்கத்தைத் தன்னைவிட கீழே உள்ளவர்கள் என நினைக்கிறவர்களிடம் செலுத்துகிறான். இந்த ஆதிக்க மனநிலையானது பாரம்பர்ய படிநிலையில் ஒவ்வொருவரிடமும் சென்று சேர்கிறது. சமூகத்தின் உண்மைகளைக் காட்சிப்படுத்தும்போது ஆதிக்கம் இல்லாமல் இல்லை."

``உங்களுடைய அடுத்த படமான `உன்மாடியுடே மரணம்' பற்றி?"

`` `உன்மாடியுடே மரணம்' கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிய படமாக இருக்கும். நாம் சிந்திப்பதற்கு இங்கே தணிக்கைகள் இல்லை. வருகின்ற காலத்தில் அதுவும் நிகழலாம். சுதந்திரமாகச் சிந்திப்பதையும் பேசுவதையும் இந்தப் படம் பேசும். இதிலும் கதை, திரைக்கதை என எதுவும் இல்லை."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு