Published:Updated:

சுமேரியா, மெசபடோமியா... உலக புராணக் கதைகளில் கருடன்!

உலகம் முழுவதும் கருடனுக்கென்று பல புராணக் கதைகள் இருக்கின்றன

சுமேரியா, மெசபடோமியா... உலக புராணக் கதைகளில் கருடன்!
சுமேரியா, மெசபடோமியா... உலக புராணக் கதைகளில் கருடன்!

ருணையே வடிவானவர் கடவுள். மனிதர்களிடம் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களிடமும் அன்பும் கருணையும் கொண்டவர். மனிதர்கள் பிற உயிரினங்களான விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அத்தகைய விலங்குகளையும் பறவைகளையும் தனக்கு வாகனமாகக் கொண்டு, பக்தர்கள் தன்னுடன் தன் வாகனத்தையும் சேர்த்து வழிபடும்படிச் செய்தார். இதனால்தான் ஒவ்வொரு கடவுளருக்கும் ஒரு வாகனம் அமைந்திருக்கிறது. இறைவனின் வாகனங்களில் தனிச் சிறப்பு கொண்டது மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன்.

விரைந்து வந்து பக்தர்களைக் காக்க வேண்டும் என்பதாலோ என்னவோ பெருமாள் கருடனை வாகனமாகக்கொண்டிருக்கிறார். மற்ற பறவைகளைவிட கருடன் வேகமானவன். `கருடனை நேரில் கண்டாலும், கனவில் கண்டாலும் நல்லது நடக்கும்’ என்று மக்கள் நம்புகிறார்கள். புராணப்படி கருடன் காசியபர் - விநதை தம்பதியின் மகன். பறவைகளின் அரசன் கருடன். தன் தாய் விநதையை அடிமைத்தளத்திலிருந்து விடுவித்தவன். புராணத்தில் கருடனுக்கு சிறப்பான இடம் உண்டு.

கருடனைப் பற்றிய புராணக் கதைகள் இந்தியாவில் மட்டும் பிரபலமாக பேசப்படுவதில்லை. உலகம் முழுவதும் கருடனுக்கென்று பல புராணக் கதைகள் இருக்கின்றன. மிகவும் பழைமையான கதை சுமேரியாவில்தான் வழங்கப்படுகிறது.

சுமேரியாவில் கிஷ் எனும் ஊரின் அரசன் ஏதனன். இவனுக்குக் குழந்தை இல்லை. குழந்தை வேண்டி ஷமாஸ் எனும் சூரியக் கடவுளிடம், 'குழந்தை வரம் தரும் மூலிகை'யை வேண்டுகிறான். அவனை தேவலோகத்திலிருக்கும் மலைக்குச் செல்லும்படி சூரியக் கடவுள் உத்தரவிடுகிறார். ஏதனன் மூலிகையைத் தேடி மலைக்குச் செல்கிறான். அவன் சென்ற நேரத்தில் கருடன் சிறைப்பட்டிருப்பதைக் காண்கிறான். கடவுளின் துணையுடன் நாகங்கள் செய்த சூழ்ச்சி அது. ஏதனன், கருடனை விடுவிக்கிறான். கருடன் அவனை தேவலோகத்துக்கு தூக்கிச் செல்கிறது. அங்கே ஏதனன் தெய்விக மூலிகை உண்கிறான். அதன் பலனாக அவனுக்குக் குழந்தை பிறக்கிறது. பலி என்ற பெயர் கொண்ட அந்தப் பிள்ளையே பின்னர் அரசனாகிறான்.

நம் புராணக் கதையைப் போன்று சுமேரியக் கதையிலும், கருடன் - நாகத்துக்கு இடையே போர் நடைபெறுவதும், கருடன் அமிர்தத்தைத் தேடிச் செல்வதைப் போன்று சுமேரியக் கதையில் தெய்விக மூலிகையைத் தேடி தேவலோகம் செல்வதும் போன்ற கதை இருப்பதைக் காணலாம். கி.மு 2600-ம் ஆண்டு கால தொல்பொருள் படிமத்தில் கிடைத்த சுமேரியன் நாட்டு மதுக்கோப்பைகளில், பின்னிப்பிணைந்த நாகங்களைக் கொத்துவதைப் போன்று கருடன் அமர்ந்திருப்பது சுமேரியப் புராணக் கதையின் நீட்சிதான். சுமேரியக் கதைகளில் வரும் கருடன் மிகப்பெரிய இரண்டு சிறகு உடையவனாகக் காணப்படுகிறது.

இதைப் போன்றே, மெசபடோமியா கடவுள்களில் ஆசூர், எரெஸ்கிகள், நிங்கிஷிடா எனப் பெரும்பாலானவர்கள் மிகப் பெரிய சிறகுடன் காணப்படுகிறார்கள்.

கிரேக்கர்களின் ஆதிகாலப் புராணமாகிய 'இலியட்’டில்கூட கருடனைப் பற்றிய கதைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இன்றும் கருடனைப் பார்த்தால் நல்ல சகுனமாகவே கிரேக்கர்கள் கருதுகிறார்கள்.

கருடன், காஃப் எனும் மலையில் வசிப்பதாக முற்கால அரேபியர்கள் நம்பினார்கள். யானையைத் தூக்குமளவுக்கு கருடன் பலமாக இருந்ததால், அதற்கு 'யானை தூக்கிப் பறவை' என்று பெயர். கருடனுக்கு அரேபியர்கள் வைத்த பெயர் 'ரூக்'. அரேபியர்களின் தேவதைக் கதைகள், சிந்துபாத் கதைகள் போன்றவற்றிலும் கருடனின் (ரூக் ) சாகசங்கள் பலவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. படகுகளை சேதப்படுத்திய ரூக் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரேபியக் கதைகளுக்கு மூலம் மெசபடோமியா மற்றும் சுமேரியர்களின் கதையாகும்.

ஜப்பான் நாட்டின் புராணத்திலும்கூட மனித உடலும், கருடனின் தலையும் கொண்ட கருரா (கருடா) எனும் கடவுளைப் பற்றிய கதைகள் பிரபலமானவை. ஜப்பானில் நாரா எனும் பகுதியில் காணப்படும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொஃபுகுஜி கோயிலில், மனித உடலும் கருடனின் தலையும் கொண்ட சிற்பம் காணப்படுகிறது. ஆனால், சிறகுகள் இல்லை. கருடா என்னும் வார்த்தையின் திரிபுதான் `கருரா’ என்று மருவியதாகக் கூறுகிறார்கள்.

மங்கோலியாவில் கருடன் மிகவும் புனிதமான பறவை. குழுத் தலைவர்களுக்கு கருடனின் பெயரைத்தான் 'கான் - கிரிட்' என்று சூட்டினார்கள். கான் என்றால் `தலைவன்.’ கிரிட் என்றால் `கருடன்.’ கான் - கிரிட் என்றால் `கருட ராஜா’ என்று பெயர். இதே போன்று துருக்கியத் தலைவர்களை கருடனின் பெயர் கொண்டே அழைக்கிறார்கள். ஈரானிய மொழியில் கருடனை `ஷாருக்’ என்று அழைக்கிறார்கள். ஷா என்றால் `ராஜா’ என்று அர்த்தம். ருக் என்றால் `கருடன்’ எனப் பொருள். ஷா-ருக் என்றால் கருடராஜா என்று அர்த்தம்.

தன் தலைவரான திருமாலின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் கருட பகவான், தன் தாயை சிறையிலிருந்து விடுவித்தது, சுதந்திரத்தின் அடையாளம் எனலாம். கருடனைக் கண்டால் நல்லது என்று நினைக்காமல், அடிமைத்தளைகளிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். பிறவி எனும் அடிமைத்தளையில் இருந்து மீள கருடனின் மீதேறி பவனி வரும் திருமாலை வழிபடுவோம்!