Published:Updated:

ராகுல் சவுத்ரி, மோனு கோயத், தீபக் ஹூடா... ப்ரோ கபடி ஏலத்தின் கோடீஸ்வரர்கள்!

ராகுல் சவுத்ரி, மோனு கோயத், தீபக் ஹூடா... ப்ரோ கபடி ஏலத்தின் கோடீஸ்வரர்கள்!
News
ராகுல் சவுத்ரி, மோனு கோயத், தீபக் ஹூடா... ப்ரோ கபடி ஏலத்தின் கோடீஸ்வரர்கள்!

ராகுல் சவுத்ரி, மோனு கோயத், தீபக் ஹூடா... ப்ரோ கபடி ஏலத்தின் கோடீஸ்வரர்கள்!

அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ப்ரோ கபடி தொடரின் ஆறாவது சீசன் ஏலம் நான்கு மாதம் முன்பே மும்பையில் நடந்து முடிந்துவிட்டது. லட்சத்தில் இருந்த வீரர்களின் ஊதியம் கோடிகளுக்கு உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக 93 லட்சத்துக்கு ஏலம்போன நித்தின் தோமரின் சாதனைத் தொகை இந்த வருடம் 6 முறை உடைக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் புதிய சீசனுக்காக புதிய திட்டங்களுடன் ஏலத்தில் பங்கேற்றன. முன்பைவிட பல மடங்கு வீரர்களின் தொகை அதிகமானபோதும், புதிய சவாலுக்கு 12 அணிகளும் காத்திருந்தன. 422 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் அதிக விலைக்குப் போன வீரர்கள் பற்றி ஒரு பார்வை.

ஃபசல் அத்ரசலி - யு மும்பா : ரூ. 1 கோடி (ஈரான்)

ப்ரோ கபடி ஏலத்தில் முதன் முதலாக கோடிகளில் ஏலம் போனவர் ஈரான் டிஃபண்டர் ஃபசல்தான். ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், யு மும்பா அணிகள் கடுமையாக போட்டிபோட அவரது தொகை படுவேகமாக உயர்ந்தது. முந்தைய அதிகபட்ச தொகையை உடைத்து கோடியைத் தொட, ஒரு வழியாகப் பின்வாங்கியது பிங்க் பேந்தர்ஸ். ப்ரோ கபடியின் முதல் கோடீஸ்வரரானார் ஃபசல். வழக்கமாக ரைடர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், இம்முறை ஒரு டிஃபண்டருக்கு இவ்வளவு கிராக்கி ஏற்பட்டது கொஞ்சம் ஆச்சர்யம்தான். இடது கார்னர் டிஃபண்டரான ஃபசல், இதுவரை 56 ப்ரோ கபடி ஆட்டங்களில் 152 டேக்கிள் புள்ளிகள் பெற்றுள்ளார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தீபக் ஹூடா - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் - ரூ. 1.15 கோடி

ஸ்க்ரீனில் தீபக் ஹூடா என்ற பெயரைப் பார்த்ததும் 12 அணிகளுமே கோதாவில் குதிக்கத் தயாராகின. ப்ரோ கபடியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். இதுவரை 517 புள்ளிகள் குவித்துள்ளவர். ரைட், டிஃபன்ஸ் என எல்லா ஏரியாவிலும் அணிக்குப் பலமாக இருக்கக்கூடியவரை எப்படி விடுவார்கள். குஜராத், டெல்லி அணிகள் 30,32 லட்சங்களுக்கு ஏலம் கேட்டுக்கொண்டிருக்க, நேரடியாக 70 லட்சத்துக்கு ரேட்டை உயர்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ். உயர்த்திவிட்டு அவர்கள் சைலன்ட்டாக, ஹரியானா டெல்லி அணிகள் போட்டி போட்டன. 1.01 கோடிக்குக் கேட்டு புதிய ப்ரோ கபடி சாதனை படைத்தது ஹரியானா ஸ்டீலர்ஸ். பிறகு டெல்லி பின்வாங்க, மீண்டும் ஆட்டையைக் களைத்தார் பிங்க் பேந்தர்ஸ் உரிமையாளர் அபிஷேக். இரு அணிகளும் போட்டி போட்டதில் 1.15 கோடியானது தீபக் ஹூடாவின் மதிப்பு. வாங்கியது வேறு யார் அபிஷேக்தான்!

நித்தின் தோமர் - புனேரி பால்டன்ஸ் - ரூ. 1.15 கோடி

42 போட்டிகளில் 277 புள்ளிகள். சராசரியாக ஒரு போட்டிக்கு 6.6 புள்ளிகள் குவித்தவர் நித்தின் தோமர். கடந்த ஆண்டு அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்டவர், காயத்தால் தொடக்கத்திலேயே வெளியேறினார். இந்த 23 வயது இளம் வீரரை வாங்கவும் கடும் போட்டி நிலவியது. தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, புனேரி பால்டன்ஸ் என மூன்று அணிகளு மும்முனைப் போட்டி போட, 1.10 கோடி ரூபாய்வரை நீண்டுகொண்டே இருந்தது. 1.10 கோடிக்குக் கேட்டது புனேரி பால்டன்ஸ். ஏலம் அவர்களுக்குச் சாதகமாக அமைய இருந்த நேரம், மீண்டும் அவர்களே வான்டடாக ஏலத்துக்குள் நுழைந்து தொகையை 1.15 கோடியாக மாற்றினர். ரெக்கார்ட் படைக்கவேண்டுமென்றே செய்தார்கள் போல..!

ரிஷாங்க் தேவாடிகா - உ.பி.யோதாஸ் : ரூ. 1.11 கோடி

தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி மூன்று அணிகளும் முட்டி மோதியதில் நான்காவது முறையாக கோடியைத் தாண்டியது ஒரு வீரரின் மதிப்பு... இந்த முறை மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் வீரர் ரிஷாங்க் தேவாடிகாவுக்கு. 80 போட்டிகளில் 449 புள்ளிகளைக் குவித்திருக்கும் அவரை வாங்க அணிகள் யோசிக்கவே இல்லை. கடுமையாக போட்டி போட்டன. டெல்லியைத் தவிர மற்ற அணிகள் பின்வாங்கிய நிலையில், யு மும்பா மீண்டும் களம் கண்டது. ஒருவழியாக 1.11 கோடிக்கு டெல்லி அணிக்கு விலை போனார் ரிஷாங்க். அங்குதான் ட்விஸ்ட். ஐ.பி.எல் ஏலத்திலுள்ள RTM கார்டு போல் FBM  (Final Bid Match) கார்டை ப்ரோ கபடி நிர்வாகம் இந்த முறை அறிமுகப்படுத்தியிருந்தது. அதைப் பயன்படுத்தி உ.பி.யோதாஸ் அணி ரிஷாங்க் தேவாடிகாவை மீண்டும் கைப்பற்றியது. 

ராகுல் சவுத்ரி - தெலுங்கு டைட்டன்ஸ் : ரூ.1.29 கோடி

ப்ரோ கபடி தொடரின் மிகச்சிறந்த ரைடர். `அதிக விலைக்கு ஏலம் போவோம்' என்று நம்பியதால், தன்னை 'ரீடெய்ன்' செய்ய ஒத்துக்கொள்ளவில்லை ராகுல். அவர் எதிர்பார்த்தது போலவே மிக அதிக தொகைக்கு ஏலம் போனார். ரைடர்கள் அதிகம் இல்லாத மும்பைதான் போராடுகிறதெண்றால், பர்தீப் நர்வால் எனும் பாயின்ட் மெஷினை வைத்துக்கொண்டு ராகுலுக்கும் போட்டி போட்டது பாட்னா பைரேட்ஸ். இவருக்கு ஒவ்வொரு லட்சமாகவெல்லாம் ஏலத்தொகை ஏறவில்லை. ஐந்து ஐந்து லட்சங்களாகத்தான் ஏறிக்கொண்டிருந்தது. 1 கோடியைத் தொட்டபின்தான் கொஞ்சம் வேகம் குறைந்தது. ஆனால், ஆர்வம் குறையவில்லை. 1.15 கோடி சாதனையைத் தொகையைத் தாண்டி வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்தது அவரது விலை. கடைசியில் 1.29 கோடிக்கு ஒருவழியாக அவரை வாங்கியது டெல்லி. மீண்டும் இரண்டாவது முறையாக டெல்லி அணியின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டது அந்த FBM. இந்த முறை அவரை வாங்கியது தெலுங்கு டைட்டன்ஸ். இதுவரை 666 ride points குவித்தவருக்கு இந்த விலை ஓகேதான்.

மோனு கோயத் - ஹரியானா ஸ்டீலர்ஸ் : 1.51 கோடி

ஒருவகையில் மற்ற அணிகளெல்லாம் ரைடர்களை வாங்கிவிட, FBM கார்டால் வஞ்சிக்கப்பட்ட டெல்லி, யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு பெரும் வெற்றிடம் இருந்தது. அதேசமயம் அடுத்து ஏலத்தில் பெரிதாக ரைடர்கள் இல்லை. இந்த சூழ்நிலை மோனு கோயத்தை ப்ரோ கபடியின் மதிப்புமிக்க வீரராக மாற்றியது. யு மும்பா, டெல்லி அணிகள் ராகுல் சவுத்ரியின் தொகையைத் தாண்டி போட்டிபோட, ஹரியானா ஸ்டீலர்ஸ் பாரபட்சமே இல்லாமல் ஒன்றரை கோடி வரை சண்டையிட்டது. ஒரு வழியாக 1.51 கோடியில் அனைத்து அணிகளையும் பின்னுக்குத்தள்ளி மோனுவை வாங்கியது ஸ்டீலர்ஸ். 

கோடியில் போன வீரர்கள் தவிர்த்து இளம் வீரர் பிரசாந்த் குமார் ராய் யாரும் எதிர்பாராத விதமாக 79 லட்சத்துக்கு உ.பி.யோதாஸ் அணியால் வாங்கப்பட்டார். கடந்த முறையைவிட இந்த ஏலத்தில் பல வீரர்கள் பலமடங்கு அதிகமாக விலை போனார்கள். இந்த வீரர்களுக்கு இப்படியென்றால் பர்தீப் நர்வால் பெயர் ஏலத்தில் இடம் பெற்றிருந்தால்..?!