Published:Updated:

காலனியாக்கத்தின் சாட்சி... சென்னைக்கு முந்தைய தொன்மம்... பழவேற்காடு சுற்றுலாத்தலம் மட்டுமல்ல!

நான்கு புறமும் நீர் சூழ, இந்தியாவின் காலனியாதிக்க வரலாற்றுச் சுவடுகளை தனக்குள் சுமந்து கொண்டு காலத்தின் மடியில் அமைதியாக அமர்ந்திருக்கிறது பழவேற்காடு.

காலனியாக்கத்தின் சாட்சி... சென்னைக்கு முந்தைய தொன்மம்... பழவேற்காடு சுற்றுலாத்தலம் மட்டுமல்ல!
காலனியாக்கத்தின் சாட்சி... சென்னைக்கு முந்தைய தொன்மம்... பழவேற்காடு சுற்றுலாத்தலம் மட்டுமல்ல!

சாலையின் இருபக்கங்களும் உப்புப் பூத்த நீர்வயல்கள். கண்படும் இடமெல்லாம் குட்டையும் நெட்டையுமாக பறவைக் கூட்டம். நெடுங்காலம் புகை சுவாசித்து வரண்டுகிடக்கும் மூச்சுக்குழாயை, தூய ஈரக்காற்று மென்மையாக வருடிக்கொடுக்கிறது. அந்தச் சாலைப்பயணமே குதூகலமான சுற்றுலா அனுபவத்தைத் தருகிறது.  

பொன்னேரியிலிருந்து கிழக்காக விலகி, நேர்க்கோடாக நீளும் அந்தச் சாலையில் நீர் வாசனை நுகர்ந்துகொண்டே பயணித்தால், விளிம்பில் இருக்கிறது பழவேற்காடு. சென்னையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர்.  இந்தியாவின் ஐந்து நூற்றாண்டு வரலாற்றைச் சுமந்துகொண்டிருக்கும், நவீனங்கள் சிதைத்திராத ஆதிநிலம். அரேபியர்களும், டச்சுக்காரர்களும், போர்ச்சுக்கீசியர்களும், ஆங்கிலேயர்களும் விட்டுப்போன அடையாளங்கள் ஆங்காங்கே அந்த மண்ணின் பழைமைக்குச் சாட்சிகளாக மிஞ்சியிருக்கின்றன.

பழவேற்காடு என்றால், படகுப்பயணம், ஜிளீர் குளியல், டிராகன் இறால், நண்டுக்குழம்பு இவைதான் பலருக்கும் நினைவு வரும். நான்கு புறங்களிலும் நீர் சூழ நடுவில் அமர்ந்திருக்கும் அந்த ஊரே ஓர் அருங்காட்சியகம் என்பது பலருக்குத் தெரியாது.   

ஒரு திசையில், கடல்... அதிவேக அலைகள் நிலத்தை மோதித் தீர்க்கும் ஒலி இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மூன்று திசைகளிலும் ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டுக்குமான நீர்வேலியாக விரிந்து கிடக்கிறது பழவேற்காடு ஏரி. மிகப்பெரிய உயிர்ச் சூழலியல் மண்டலம். ஏரியின் உள்ளே பறவைகளும் விலங்குகளும் நிறைந்த வனத்திட்டுகள். 20 நிமிடம் படகுப்பயணத்தில் கடலும் ஏரியும் இணையும் பகுதி. அதையொட்டி, வெண்மணல் திட்டு... ஒரு புறத்திலிருந்து அகன்ற நீர்க்கோடாய்ப் பிரிகிறது பக்கிங்காம் கால்வாய். ஒருகாலத்தில் விஜயவாடாவிலிருந்து மரக்காணம் வரையிலான நீர்வழிப்பாதை. 

இந்தியாவின் கௌரவங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளம், இந்த ஏரியின் மடியில்தான் இருக்கிறது. அந்த ஏவுதளத்துக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்த மீனவர்கள் பழவேற்காட்டைச் சுற்றிலும் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரம் இந்த ஏரிதான். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த ஏரியில் மீன்பிடிக்கிறார்கள். 

மிகப் பழைமையான பாடி வலை மீன்பிடித்தல் பழவேற்காட்டின் சிறப்புகளில் ஒன்று. 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இணைந்து இரண்டு கி.மீ தூரத்துக்கு வலைகளை விரவிவிட்டுக் காத்திருப்பார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு கரையில் நின்றபடி வலைகளை இழுக்க, பெரும்பொதியாக வருகின்றன மீன்கள். நீரில் மூழ்கி கைகளால் தரையைத் தடவி இறால் பிடிப்பது, கட்டுமரத்தில் ஒருங்கிணைந்து மீன்பிடிப்பது எனத் தொன்மையான நுட்பங்களே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.   

வானம் கம்மி மெல்லிய தூறல் பறக்கும் ஒரு காலைப்பொழுதில், பழவேற்காட்டில் நிற்பது இதமான அனுபவம். சிறிய சலசலப்போடு பரந்து கிடக்கும் ஏரி, `வா வா' என்று மனதைப் பிடித்து இழுக்கிறது. நள்ளிரவு மீன் பிடிக்கச் சென்று, படகு நிறைத்துத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் சில மீனவர்கள். சிலர் இப்போதுதான் தொழிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள். 

ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரியை அடுத்து, இந்தியாவின் இரண்டாவது பெரிய கழிமுக ஏரி இதுதான். ஆந்திராவிலிருந்து வரும் ஸ்வர்ணமுகி, கலங்கி, ஆரணி, கொசஸ்தலை நதிகள் இங்கே கலக்கின்றன. 46,102 ஹெக்டேர் நீள அகலத்தில் பிரமாண்டமாக விரிந்துகிடக்கும் இந்த ஏரி, பறவைகள் சரணாலயமாகவும் விளங்குகிறது.   

டிசம்பர், ஜனவரி மாதங்களில் பழவேற்காடு, `பறவைகள் காடா'கிவிடும். ஆர்ட்டிக்கில் இருந்து வரும் விம்ரல், ஆலா, செங்கிளுவை, கூழைக்கடா, சாம்பல் நாரை, ஊசிவால் வாத்து, நாமக்கோழி, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் என 150 வகையான பறவைகள் இங்கே குவிந்துவிடும். ஆயினும் பூநாரைகள்தான் பழவேற்காட்டின் அடையாளம். சீஸன் காலத்தில் சாலையின் இருபுறங்களிலும் பூப்பொதிபோல குவியல் குவியலாக நிற்கும் பூநாரைகளைக் காண கண்கொள்ளாது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூநாரைகள் வந்து போவதாகக் கணக்குச் சொல்கிறார்கள் பறவை ஆர்வலர்கள். 

பழவேற்காட்டின் வரலாறு, சென்னையைவிடவும் பழைமையானது. கி.பி முதல் நூற்றாண்டில் செங்கடல் வழியாக பிற கடற்பரப்புகளுக்கு வந்து வணிகம் செய்த ரோம் நாட்டைச் சேர்ந்த மாலுமிகளால் எழுதப்பட்ட `The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea' என்னும் பயணக் குறிப்பேட்டில் `பழவேற்காடு துறைமுக நகரம்' என்ற செய்தி இடம்பெற்றிருக்கிறது. இரண்டாம் நூற்றாண்டில், கிரேக்க அறிஞர் தாலமி தொகுத்த துறைமுகங்களின் பட்டியலிலும் பழவேற்காடு துறைமுகம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அந்தக் காலகட்டங்களிலேயே தூரக்கிழக்கு நாடுகளுடன் இறக்குமதி தொடர்பும், மேற்குலக நாடுகளோடு ஏற்றுமதி தொடர்பும்கொண்டிருந்தது பழவேற்காடு. மசாலா பொருள்கள், சந்தனம், முத்து, கற்பூரம், பட்டு போன்ற பொருள்கள் இங்கே வணிகம் செய்யப்பட்டுள்ளன. 

11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆதிநாராயணப் பெருமாள் கோயில், சிதைந்த நிலையில் பழவேற்காட்டின் தொன்மைக்குச் சான்றாக இருக்கிறது. அற்புதமான சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் நிறைந்த தூண்கள் என கலைநயம் ததும்பும் இந்தக் கோயில், கற்கள் பெயர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. கோயிலுக்கு வெளிமண்டபத்தில் படங்களை வைத்து பூஜை செய்கிறார்கள். இப்போது யுனெஸ்கோ அமைப்பின் கவனம் இந்தக் கோயில் மீது விழுந்துள்ளது. 

ஆதிநாராயணப் பெருமாள் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமயேஸ்வரர் கோயிலும் தொன்மையானது. அதுவும் உரிய பராமரிப்பின்றிக் கிடக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் கடற்பயணம் மேற்கொண்ட அரேபியர்கள் பழவேற்காட்டின் தெற்கே  கரையேறினார்கள். கடலும் ஏரியும் இணையும் இடம் என்பதால், போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் பொருத்தமாக இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டனர். இங்கிருந்து கிழக்கே மரக்காணம் வரைக்கும், மேற்கே விஜயவாடா வரைக்கும் நீர்வழியிலேயே பயணம் செய்ய முடிந்தது. 

இந்த அரேபியர்களை முன்வைத்து பல குடும்பங்கள் இந்தப் பகுதிக்கு வரத்தொடங்கின. இவர்கள் வந்திறங்கிய இடம் `தோணிரவு' என்று இப்போது அழைக்கப்படுகிறது. அரேபியர்கள், தங்கள் வழிபாட்டுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். பெரிய `ஜாமியா பள்ளிவாசல்' எனப்படும் அந்தப் பிரமாண்டப் பள்ளிவாசல் வரலாற்றுக்குச் சான்றாக இன்னும் மிஞ்சியிருக்கிறது. மிதமான மினராக்களுடன்கூடிய இது, கருங்கற்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது. இப்போதும் முறைப்படியான வழிபாடு இங்கே நடக்கிறது.  

1498-ம் ஆண்டில் கள்ளிக்கோட்டை வந்தடைந்த போர்ச்சுக்கீசிய கடற்பயணியான வாஸ்கோடகாமா, கண்ணூர், கொச்சி, கள்ளிக்கோட்டை போன்ற பகுதிகளில் வணிக நிறுவனங்களை ஸ்தாபித்தார். அந்தக் காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது போர்ச்சுக்கீசிய-இந்தோ வரலாறு. கொச்சிக்கு கிழக்கே மிக நீண்ட இயற்கை நீர்வழிப்பாதையும் கடலும் ஒருங்கிணைந்த ஒரு பகுதி இருப்பதைக் கேள்விப்பட்டு `பெட்ரோஸ் ஆல்வாரஸ் கேப்ரால்' என்ற போர்ச்சுக்கீசிய அதிகாரி, விஜயநகரப் பேரரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு பழவேற்காட்டில் தங்களின் வணிக மேலாதிக்கத்தை நிறுவினார். 

போர்ச்சுக்கீசியர்களின் வரலாற்றுக்குச் சான்றாக பழவேற்காட்டில் மிஞ்சியிருக்கிறது புனித அன்னையின் தேவாலயம். பழவேற்காட்டின் கோட்டைக்குப்பம் பகுதியில் இருக்கும் இந்தத் தேவாலயம் 1515-ம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. `லேடி ஆஃப் த குளோரி சர்ச்' எனப்படும் இந்தத் தேவாலயத்தில் போர்ச்சுக்கீசியக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. மிகவும் பாழடைந்து கிடந்த இந்தத் தேவாலயத்தை அண்மையில் செப்பனிட்டு பிரமாண்டமாக எழுப்பியிருக்கிறார்கள். பழைமையான அன்னை சிலை, புதிய தேவாலயத்துக்குக் கீழே நிறுவப்பட்டுள்ளது. 

கி.பி. 1510-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் கோவாவை வென்று தங்கள் தலைநகராக மாற்றிக்கொண்டார்கள். அதன் பிறகு, அந்தப் பிராந்தியத்தை மையமாகவைத்தே அவர்களின் வணிகம் நடந்தது. பழவேற்காடு மீதான ஆர்வம் மங்கியது.

கி.பி.1600-களின் தொடக்கத்தில் கடல் பயணம் மேற்கொண்ட டச்சு வணிகர்கள், இயற்கைச்சீற்றம் காரணமாக, பழவேற்காட்டையொட்டி இருக்கும் கரிமணல் கிராமத்தில் கரை ஒதுங்கினார்கள்.  வணிகத்துக்கும் வாழ்க்கைக்கும் போதிய வசதிகள் இருந்ததால், இந்தப் பகுதியையே தங்கள் வாழிடமாகக்கொண்டார்கள். போர்ச்சுக்கீசியர்கள், தங்கள் ஆதிக்கத்தில் இருக்கும் இடத்தில் டச்சுக் குடியேற்றம் ஏற்படுவதைப் பொறுக்காமல் அவ்வப்போது அச்சுறுத்திவந்தனர். இதற்கிடையே டச்சுக்காரர்கள் விஜயநகரத்து மன்னர்களைச் சரிகட்டிக்கொண்டு தங்கள் வல்லாதிக்கத்தை நிறுவத் தொடங்கினர். 

அந்தக் காலகட்டத்தில் பழவேற்காடு, `பாளையக்காடு' என்று அழைக்கப்பட்டது. விஜயநகரத்துக்குக் கீழிருந்து  வேங்கடன் என்கிற உள்ளூர் தலைவன் இந்தப் பகுதியை நிர்வகித்து வந்தான். வேங்கடன், தங்கள் பாதுகாப்புக்காக சிறு கோட்டை ஒன்றைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தான். கோரமண்டல் கடற்பரப்பில் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கு எல்லாவிதங்களிலும் வசதியாக இருந்த பழவேற்காட்டை தங்கள் தலைமையகமாகவே மாற்றிக்கொள்ள நினைத்தார்கள் டச்சுக்காரர்கள். வேங்கடனுடன் இணக்கமாக இருந்ததோடு, கோட்டையைக் கட்டுவதற்கான பொருளையும் வழங்கினார்கள். வேங்கடன் டச்சுக்காரர்களோடு இணக்கமாக இருப்பதை பிற உள்ளூர் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆயினும் டச்சுக்காரர்கள் எதிர்ப்பை முறியடித்தார்கள். பழவேற்காட்டின் ஏரியோரம் பெரிய கோட்டை எழும்பியது. இந்தக் கோட்டையைக் கட்டி முடிப்பதற்குள்ளாக வேங்கடன் இறந்துவிட்டான். அதன் பிறகு அந்தக் கோட்டை மட்டுமின்றி பழவேற்காட்டின் மொத்த நிர்வாகத்தையும் டச்சுக்காரர்கள் எடுத்துக்கொண்டார்கள். டச்சுக்காரர்களின் தாயகமான நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயரான `ஜெல்டிரியா' என்ற பெயர் கோட்டைக்குச் சூட்டப்பட்டது. 1613-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கோட்டையின் பணிகள் 1616-ம் ஆண்டில் நிறைவுற்றது. இதன் முதல் தலைவராக வெம்மர் என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டார். 

இந்தக் கோட்டையைச் சுற்றிலும் பிரமாண்ட அகழிகள் வெட்டப்பட்டன. கோட்டைப் பாதுகாப்புப் பணியில் பெரும்படை ஈடுபடுத்தப்பட்டது. ஆயினும், இந்தக் கோட்டை பலத்த எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருந்தது.

வேங்கடவனின் உறவுக்காரனான எத்திராசன் என்பவன் இந்தக் கோட்டை மீது தாக்குதல் தொடுத்தான். ஆனால், டச்சுக்காரர்களின் நவீன ஆயுதங்களின் முன்னால் எத்திராசனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சாந்தோம் துறைமுகத்தை ஆக்கிரமித்து வணிகம் செய்துவந்த போர்ச்சுக்கீசியர்கள், கோரமண்டல் கடற்பகுதியில் தங்களுக்குப் போட்டியாளர்களாக டச்சுக்காரர்கள் வளருவதைத் தடுப்பதற்காக பெரும்படையோடு இந்தக் கோட்டையைத் தாக்கினார்கள். அதையும் டச்சுக்காரர்கள் முறியடித்தார்கள். 

1800-களில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் பிரிட்டிஷ் ஆதிக்கம் மேலோங்கிய பிறகு இந்தக் கோட்டை அவர்கள் கைக்குப் போனது. பிரிட்டிஷார் இந்தக் கோட்டையை முற்றிலும் தரைமட்டமாக்கிவிட்டனர். 

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கோட்டையில், குடிநீர் தேவைக்காக நிறைய கிணறுகள் வெட்டப்பட்டன. வெடிமருந்து கிடங்கு ஒன்றும் செயல்பட்டது. தவிர, டச்சு இந்தியாவின் நிர்வாக வசதிக்காக நாணயங்களையும் இங்கே அச்சடித்தார்கள். இந்த நாணயங்கள் `புலிக்காட் நாணயங்கள்' என்றே அழைக்கப்பட்டன. 

இன்று இந்தக் கோட்டை இருந்த இடம் கருவேல மரக்காடாக இருக்கிறது. முள்களைக் கடந்து சென்றால் உள்ளே  கிணறுகளும் அகழியும் மட்டுமே தன்மை குலையாமல் டச்சு அடையாளங்களை சுமந்துகொண்டிருக்கின்றன. தொல்லியல் துறை, இந்தப் பகுதியில் அகழ்வுசெய்து சில படிமங்களைக் கண்டெடுத்தது. பிறகு, இந்தக் கோட்டை இருந்த பகுதி கைவிடப்பட்டுவிட்டது. 

டச்சுக் குறிப்பேடுகளில் `பழையகட்டா' என்ற பெயரில் பழவேற்காடு குறிப்பிடப்படுகிறது. டச்சுக்காரர்களின் வரலாற்று எச்சங்கள் பழவேற்காட்டில் நிரம்பியிருக்கின்றன. போர்ச்சுக்கீசியர்கள் கட்டிய புனித அன்னையின் தேவாலயத்துக்கு சிறிது தூரத்தில் டச்சுக்காரர்கள் புனித அந்தோணியர் தேவாலயத்தை நிர்மாணித்திருக்கிறார்கள். இது பழைமை மாறாமல் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

டச்சுக்காரர்கள் துறைமுக அலுவலகமாகப் பயன்படுத்தி கட்டடம் ஒன்று, ஏரிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கிறது. டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்குச் சான்றாக பழவேற்காட்டில் புதைந்து கிடக்கின்றன கல்லறைகள். ஜெல்டிரியா கோட்டைக்கு எதிரில் உள்ள இந்தக் கல்லறைத் திடலில் 80 கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையிலும் இறந்தவரின் பெயர், அவர் பற்றிய செய்திகள், அழகிய ஓவியம் இடம்பெற்றுள்ளன. ராட்டர்டேம், மசூலிப்பட்டினம், நாகப்பட்டினம் எனத் தொன்மையான பல நகரங்களை, பிறந்த இடமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். பூக்கள், தேவதைகள், குழந்தைகள் என, கல்லறைகளில் படங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. கடலில் பயணித்தபோது, தவறி விழுந்து இறந்த ஒரு குழந்தைக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னமும் இங்கே இருக்கிறது. இங்கிருந்து ஜெல்டிரியா கோட்டைக்கு ஒரு சுரங்கமும் இருக்கிறது. 

கி.பி.1708-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிறிய பள்ளிவாசலும் பழவேற்காட்டின் பழைமைக்குச் சான்று. இங்கு சூரிய ஒளி கடிகாரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சூரியனின் நகர்வை அடிப்படையாகவைத்து நேரம் காட்டும் கடிகாரம் இது. 

நான்கு புறங்களும் நீர் சூழ, இந்தியாவின் காலனியாதிக்க வரலாற்றுச் சுவடுகளை தனக்குள் சுமந்துகொண்டு காலத்தின் மடியில் அமைதியாக அமர்ந்திருக்கிறது பழவேற்காடு.