Published:Updated:

காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 16

காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 16
காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 16

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

``காவிரிப் பிரச்னையில் கருணாநிதி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்யக்கூடாததைச் செய்தும், செய்ய வேண்டியதைச் செய்யாமலும் விட்ட பெருங்குற்றங்களால்தான், நாம் இன்று காவிரியை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலாது” என்று கருணாநிதி மீது குற்றம்சாட்டுகிறார் பூ.அர.குப்புசாமி. 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்....

கருணாநிதி மீது விமர்சனம்!

குப்புசாமி மட்டுமல்ல... இன்னும் பலரும் காவிரிப் பிரச்னையில் கருணாநிதி மீது குற்றம் சுமத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் அவர், “இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு, காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்திலிருந்து கருணாநிதி திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டுவாக்கிலேயே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்கும். கர்நாடகாவைப் பொறுத்தவரை, காவிரி விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு வந்த தி.மு.க. அரசு அதுபோன்று செய்யவில்லை” என்ற விமர்சனத்தை கருணாநிதி மீது வைக்கிறார். இவர் மட்டுமல்ல... இன்னும் பலரும் இன்றுவரை கருணாநிதி மீது விமர்சனத்தை வைக்கின்றனர். 

தனி திறமைசாலி!

இப்படி, காவிரி விவகாரம் பற்றி எரியும்போதெல்லாம் தி.மு.க. மீதும், அதன் தலைவர் கருணாநிதி மீதும் விமர்சனம் வைக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம்  தமிழகத்துக்கானத் தண்ணீரைக் கேட்டு வாங்கிவிடுவதில் கருணாநிதி மிகச் சிறந்த திறமைசாலி என்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.

இதுகுறித்து ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற புத்தகத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், “தமிழகம் - கர்நாடகம் என்றாலே, காவிரிப் பிரச்னைதானே முதலில் வந்து நிற்கும். பொதுவாக, பற்றாக்குறையால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்படும்போது, தமிழக முதல்வராக இருப்பவர், கர்நாடக முதல்வரிடம் பேசுவதும், தண்ணீர் திறந்துவிடுமாறு கடிதம் எழுதுவதும் வழக்கம். ஆனால், கருணாநிதி எப்படியாவது தண்ணீரைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகப் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார். கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில், அங்கே நான் (தேவகவுடா) எதிர்க் கட்சித் தலைவராக இருந்தேன். தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த கருணாநிதி, ‘தமிழக விவசாயிகள் தவிக்கிறார்கள்; மறுத்துவிடாதீர்கள்’ என்று அவரிடம் தண்ணீருக்காக மிகவும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார். 

நீங்களும் ஒரு விவசாயி!

இதுதொடர்பாக தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்த நான், ‘எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என்று எச்சரித்துவிட்டு வந்தேன். இந்தச் சூழலில், தேவராஜ் அர்ஸைச் சந்தித்ததோடு, யாருமே எதிர்பாராத வண்ணம் என்னையும் வந்து சந்தித்தார், கருணாநிதி. அப்போது அவர், ‘நீங்களும் ஒரு விவசாயி; சக விவசாயிகளின் வலியைக் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... மனதுவையுங்கள்’ என்று என் கையைப் பற்றிக்கொண்டு கேட்டார். இந்த அணுகுமுறை என்னை நெகிழச் செய்துவிட்டது. அன்று தொடங்கி கவனித்துவருகிறேன். அவர், முதல்வராக இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்று எப்படியாவது பேசி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை வாங்கிவிடுவார்” என்று  தெரிவித்திருக்கிறார் நெகிழ்ச்சியுடன்.

எப்போதும் கர்நாடகத்திடமிருந்து கடுகளவுகூடத் தண்ணீரை வாங்க முடியாத சூழலில், இப்படியெல்லாம் கருணாநிதி ஏதாவது ஒன்றைச் சொல்லி உரிய நேரத்தில் தண்ணீரை வாங்கியிருக்கிறார் என்றால், உண்மையிலேயே நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். அப்படி, ஒருவேளை தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காதநிலை வந்தால்கூட, தஞ்சையை வளர்ச்சிக்குள் கொண்டுவந்து விடுவார் என்கிறார், தி.மு.க. மூத்தத் தலைவர் எல்.கணேசன். அவர், “தஞ்சைக்கு நீர் வராமல் தரிசாகி விட்டாலும், கலைஞர் தஞ்சையைத் தொழில் மயமாக்கிவிடுவார்” என்கிறார். 

காவிரியைப் பற்றிப் பேசக்கூடாது!

தமிழக அரசியல் வரலாற்றில், ஏன் இந்திய அரசியலிலும்கூட கருணாநிதிக்கென்று நிச்சயமாக தனியானதொரு இடமுண்டு. அந்த வரலாற்றின் ஓர் அத்தியாயத்தில் காவிரி பற்றிய செய்திகளிலும் கருணாநிதி இடம்பிடித்திருப்பார். தி.மு.க-வின் முக்கியத் தலைவரும், கருணாநிதியின் அக்காள் மகனுமான முரசொலி மாறனின் புதல்வர் கலாநிதி மாறன் - காவேரி திருமண வரவேற்பில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய தி.மு.க. பிரமுகர்கள் பலரும், ``தலைவர் (கருணாநிதி), ‘காவிரி’யைத் (கலாநிதி மாறனின் மனைவி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்) தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்” என்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கலாநிதி மாறனுக்கு மணமுடித்ததால், இவ்வாறு பலரும் பேசினர். இறுதியில் பேசிய எஸ்.ஆர்.பொம்மை, ``காவிரியைக் கேட்டீர்கள்... கொடுத்துவிட்டோம். பிரச்னை முடிந்தது; இனி, யாரும் காவிரி வேண்டும் எனப் பேசக்கூடாது” என்றார்.

இந்தக் கூற்றைப் பார்க்கும்போது, கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்த முதல்வரானாலும், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரானாலும், `தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட மாட்டோம்’ என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்; இருந்துகொண்டு வருகிறார்கள் என்பதை நாம் தற்போதுவரை தெளிவாக உணர முடிகிறது. அதேபோல், கர்நாடகத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் மட்டும் காவிரிக்கு ஆதரவாகத் தலைகீழ் மாற்றம் இருக்கிறது.

அதேபோல், கடந்த 2009-ம் ஆண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அந்தச் சமயத்தில் மருத்துவர், அங்கிருந்த பெண் செவிலியரிடம், ``மயக்கம் தெளிந்து பேஷன்ட் விழிக்கும்போது, அனஸ்தீஸியாவின் பாதிப்பால்  தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனாலும் அதிக அளவில் தண்ணீர் கொடுத்துவிடக் கூடாது. அது, உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, நாக்கு நனையும்படி சில சொட்டு நீரை மட்டும் கொடுங்கள்” என்று அறிவுறுத்திவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

கருணாநிதிக்கு மெள்ள மயக்கம் தெளிய ஆரம்பித்தது. மருத்துவர் சொல்லியிருந்ததுபோலவே, அவருக்குத் தாகம் எடுத்தது. செவிலியரை அழைத்து தண்ணீர் கேட்டார். அந்தச் செவிலியரும் மருத்துவர் சொல்லியிருந்தபடியே சில துளி நீரை மட்டும் பருகக் கொடுத்தார். தாகம் தணியாத கருணாநிதி, மீண்டும் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அப்போதும், அந்தச் செவிலியர் சில துளி நீரை மட்டும் கொடுக்கவே.... “ஏம்மா... உன்பேரு என்ன ‘காவிரி’யா” என்று கேட்டேவிட்டார் கருணாநிதி. அந்த செவிலியப் பெண்ணுக்கோ அவரின் கேள்வி புரியவில்லை. ஆனால், உடனிருந்த அனைவரும் அந்தச் சூழ்நிலையிலும் சிரித்துவிட்டனர். அதாவது, காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தைத்தான் அப்படி நகைச்சுவையாய் வெளிப்படுத்தியிருந்தார், கருணாநிதி. 

இப்படிக் காவிரி பற்றிய விவகாரங்களில் கருணாநிதியின் பெயர் பல்வேறு தருணங்களில் இடம்பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அவரின் ஆட்சிக்காலத்தின்போது காவிரிப் பிரச்னைக்காக எண்ணற்ற தீர்மானங்களையும் கருணாநிதி நிறைவேற்றியிருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் 8-7-1971 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் எனலாம். 

இதையடுத்து, காவிரிப் பிரச்னை குறித்து விவாதிக்க மூன்று மாநில (கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு) முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயினர்.

- காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு