Published:Updated:

``காட்டெருமை போஸ்டர் திண்ணு பாத்திருக்கீங்களா?” - உடையும் உயிர்ச் சங்கிலி

``காட்டெருமை போஸ்டர் திண்ணு பாத்திருக்கீங்களா?” - உடையும் உயிர்ச் சங்கிலி
``காட்டெருமை போஸ்டர் திண்ணு பாத்திருக்கீங்களா?” - உடையும் உயிர்ச் சங்கிலி

கழுதை போஸ்டரைத் தின்னு பார்த்திருப்பீங்க. ஆடு போஸ்டரைத் தின்னு பார்த்திருப்பீங்க..ஏன் மாடு தின்னுக்கூட பார்த்திருப்பீங்க. காட்டெருமை போஸ்டரை தின்னு பார்த்திருக்கீங்களா? கொடைக்கானலுக்குப் போனால் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். பத்து வருஷத்துக்கு முன்ன வரைக்கும் கொடைக்கானலுக்குப் போனா காட்டு மாடுகளை பாக்குறது அத்தனை அபூர்வம். மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள்ள போனாதான் காட்டெருமையைப் பார்க்க முடியும். அதுவும் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்தான் உண்டு. ஆனால், இன்னிக்கு பஸ்ஸ்டாண்டுல பல்ல இளிச்சிட்டு நிக்குது காட்டெருமை. செல்போன் இருக்கவங்கள்லாம் செல்ஃபி எடுத்து, ஃபேஸ்புக்கை நிரப்பிட்டு இருக்காங்க. ஏழெட்டு காட்டெருமைங்க பஸ்ஸ்டாண்டுல சுத்திக்கிட்டு இருக்குதுங்க. ரெண்டு டன் வெயிட் இருக்க அந்தப் பிரமாண்டமான கானுயிர்கள், தன்னோட ராஜ்ஜியத்தை விட்டுட்டு, உணவுக்காக வீதி வீதியா பிச்சையெடுத்துகிட்டு இருக்குதுங்க. கொடைக்கானல் தெருக்களில் வீட்டுக்கு வெளியே வைக்குற பழைய சோத்தைத் தின்னு உயிர் வளர்த்துகிட்டு திரியுதுங்க. இது எத்தனை பெரிய கொடுமை. இதைச் சாதாரணமான ஒரு நிகழ்வா பார்க்கக் கூடாது. இது, சூழல் சூனியமாயிட்டு வருதுன்னு இயற்கை அடிக்குற எச்சரிக்கை மணி.

யானைகள் ஊருக்குள்ள உணவு தேடி வந்து ரயில்களின்மீதும், சுவர்களின்மீதும் மோதி செத்து விழுதுகுதுங்க. அதுங்க போற பாதையை மறிச்சு கட்டடங்களைக் கட்டிக்குறோம். இதுல கொடுமை என்னன்னா யானைகளோட வழியை யார் மறிச்சு, அதுங்களை திக்கு திசை தெரியாம அலைய விட்டாங்களோ, அதுக்காக காட்டுல இருந்த நூறு வயசுக்கும் மேலான ஏராளமான மரங்களை அழிச்சாங்களோ, அதே ஆளுங்க ஊரெல்லாம் மரக்கன்னு நடுறோம், சுற்றுச்சூழலைப் பாதுக்காக்குறோம்னு சொல்லிட்டு திரியறாங்க. இதுல இவங்களுக்கு விருது வேற... 

காட்டுக்குள்ல தனக்குன்னு ஒரு எல்லை வகுத்துகிட்டு, வாழுற புலிங்ககூட ஊருக்குள்ள வந்து பீதியைக் கிளப்புதுங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி திருச்சி-மதுரை சாலையில வேகமா போன ஒரு வண்டியில அடிபட்டு செத்துப்போச்சு ஒரு காட்டெருமை. சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் மோதி மான் இறந்ததுனு அடிக்கடி நியூஸ்ல கேக்குறோம். இதெல்லாம் வெறும் சம்பவங்கள்னு நினைச்சுகிட்டு, நாம பேசாம நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கோம். ஆனா, இந்தச் சம்பவங்கள் உலகுக்கு ஒரு சேதியை உரக்க சொல்லிக்கிட்டே இருக்கு. நம்ம செவிட்டுக் காதுகளுக்கு அது கேட்கலை. அல்லது கேட்காத மாதிரி நடிச்சுகிட்டு இருக்கோம். 

வனவிலங்குகள் ஊருக்குள்ள வர்றது, காடுகள் வேகமாக அழியறது, உயிர்ச் சங்கிலியின் கண்ணிகளாக இருக்கும் பல்வேறு உயிர்கள் அழிஞ்சுட்டு வர்றது, பருவத்துல மழை கிடைக்காமப் போறது இல்லையின்னா வெள்ளம் வர்றதுனு எல்லாம் ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இருக்கு. சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாம பாத்துக்கிட்டா, இது எதுவும் நடக்காது. ஆனா, நாம ஆயிரம் மரக்கன்னு நட்டுட்டு, ஆயிரம் ஏக்கர் வனத்தை அழிக்குறோம். சிலபேரு பிளாஸ்டிக்கை எல்லாம் பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்திக்கிட்டே போறாங்க, இன்னொரு பக்கம் மக்கள் லட்சக்கணக்கான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்திட்டு தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டே இருக்காங்க. சூழலைப் பாதுக்காக்கும் நடவடிக்கையை விட, சேதப்படுத்துற நடவடிக்கைதான் அதிகமா இருக்கு. 

காடுகளை அழிச்சோம். மழை குறைஞ்சது. தண்ணீர் பஞ்சம் வந்துச்சு. விவசாயம் பொய்த்துப்போச்சு. வனவிலங்குகள் வாழிடமும், உணவும் பறிபோயிடுச்சு. தொழில்களை பெருக்கினோம். நீர்நிலைகள் நாசமாச்சு. வாகனங்களை இயக்கினோம். காத்து கற்பிழந்துபோச்சு. இப்படி இயற்கை அன்னை நமக்காகக் கொடுத்த அருட்கொடைகளை அசால்டா நாசம் பண்ணிட்டோம். சரி, போனது போகட்டும், இருக்கறதையாவது காப்பாத்துவோம்னு உலகம் கதறிகிட்டு இருக்கு. 

சிதைந்துபோன சூழலை நம்மால நிச்சயம் சரிசெய்ய முடியாது, மேலும் மோசமாகாம பார்த்துக்கிடணும்னுதான் ஒவ்வொரு வருசமும் ஜுன் 5-ம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் நாள்னு உலகம் கொண்டாடி, விழிப்பு உணர்வை ஏற்படுத்துது. ஆனா, அன்னிக்கு ஒருநாள் மட்டும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிப் பேசிட்டு, மத்த நாள்கள்ல வழக்கம்போல, நம்ம வேலையைச் செஞ்சிகிட்டே இருக்கும். 

உண்மையில, இயற்கை இப்ப ஐசியூவுல இருக்கு. அதுக்குத் தேவை அதிக அக்கறையும் கவனிப்பும். அதை ஜுன் 5-ம் தேதி மட்டும் கொடுத்தா போதாது. வருஷம் முழுக்கக் கொடுக்கணும். நாம செய்ற எந்தச் செயலா இருந்தாலும், அதுனால சுற்றுச்சூழலுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கானு தெரிஞ்சுக்கணும். சிலவற்றைத் தவிர்க்க முடியாதேனு தோணும். அப்படிப்பட்ட செயலை கூடுமானவரை குறைச்சுக்குங்க. நாம வசதியா இருக்கறதை விட, ஆரோக்கியமா இருக்கணும் அதுதான் முக்கியம். இந்த நாள்ல இருந்து எல்லோரும் ஒரு உறுதி எடுத்துக்குவோம். கூடுமானவரை பிளாஸ்டிக் பயன்படுத்துறதை தவிர்ப்போம். வாய்ப்பு இருக்க எடத்துல எல்லாம் மரக்கன்றுகளை நட்டு வெப்போம்.