Published:Updated:

`வீரப்பன் தேடுதல் வேட்டை'யின் வன்முறைக்கு சாட்சியாக இருக்கும் சோளகர் தொட்டியில் ஒருநாள்!

`வீரப்பன் தேடுதல் வேட்டை'யின் வன்முறைக்கு சாட்சியாக இருக்கும் சோளகர் தொட்டியில் ஒருநாள்!

சத்தியமங்கலத்தின் தொடக்கத்திலேயே இருக்கிற போலீஸ் செக்போஸ்ட், மெல்லிய பதற்றத்தை உருவாக்குகிறது. 'இது டூரிஸ்ட் பகுதியல்ல... பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி... தேவையில்லாமல் வாகனத்தை விட்டு இறங்கக்கூடாது' என்று  எச்சரித்துவிட்டுத்தான் அனுமதிக்கிறார்கள்.

`வீரப்பன் தேடுதல் வேட்டை'யின் வன்முறைக்கு சாட்சியாக இருக்கும் சோளகர் தொட்டியில் ஒருநாள்!

சத்தியமங்கலத்தின் தொடக்கத்திலேயே இருக்கிற போலீஸ் செக்போஸ்ட், மெல்லிய பதற்றத்தை உருவாக்குகிறது. 'இது டூரிஸ்ட் பகுதியல்ல... பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி... தேவையில்லாமல் வாகனத்தை விட்டு இறங்கக்கூடாது' என்று  எச்சரித்துவிட்டுத்தான் அனுமதிக்கிறார்கள்.

Published:Updated:
`வீரப்பன் தேடுதல் வேட்டை'யின் வன்முறைக்கு சாட்சியாக இருக்கும் சோளகர் தொட்டியில் ஒருநாள்!

ரண்டு தெருக்கள்... தெருவுக்குப் பத்து வீடுகள். பெரும்பாலும் எல்லாம் தொகுப்பு வீடுகள்தான். கதவு தெரித்து, சுவர் உடைந்து பல வீடுகள் பொலிவிழந்து கிடக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள் தவிர ஊருக்குள் யாருமில்லை. ஊரைச்சுற்றி நான்கு புறங்களும் அடர் வனங்கள். கிழக்கில் மிக நெருக்கமாக இருக்கும் சிக்கரன்குட்டே மலையில் இருந்து மாடுகள் இறங்க, அருகேயிருக்கும் மின்வேலியில் பட்டுவிடாமல்  அவற்றை விலக்கி நடத்தியபடி வருகிற கிழிசலாடைப் பெண் கேள்வியோடும் சற்று அச்சத்தோடும் எங்களைக் கடந்து போகிறார்.

எங்களை மட்டுமல்ல... பேன்ட்-சட்டை அணிந்து யார் தங்கள் ஊருக்கு வந்தாலும் அந்த மக்கள் அச்சத்தோடுதான் பார்ப்பார்கள். காரணம், அவர்களது அனுபவம். 

நாங்கள் நின்றது சோளகர் தொட்டி. 'வீரப்பன் தேடுதல் வேட்டை' என்ற பெயரில் நிகழ்ந்த பல அதிகார வன்முறைகளுக்கு சாட்சியாக இருக்கும் சிறு கிராமம். சோளகர் என்ற, வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட ஆதிப்பழங்குடிகள் வாழும் ஊர். பிற மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாமல், தங்கள் தொன்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த மக்களை, விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியது வீரப்பனைத் தேடிச்சென்ற அதிரடிப்படை. அந்தக் காலத்தின் தழும்புகள் தொட்டியில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் அத்தனை பேரின் மேனியிலும் பதிந்திருக்கின்றன. 

சத்தியமங்கலத்தில் இருந்து, திம்மம் செல்லும் பயணம், சாகசமானது. மிகவும் குறுகலான 27 ஹேர்பின் வளைவுகள். ஒவ்வொரு வளைவைக் கடக்கும்போதும் இதயம் நின்று துடிக்கும். தளும்பத்தளும்ப பொதி ஏற்றிக்கொண்டு மைசூரில் இருந்து இறங்கும் பெரிய லாரிகள் அவ்வப்போது  உயிரச்சத்தை ஏற்படுத்தியபடி கடக்கின்றன.  மிகவும் அமைதியான, மேடு பள்ளங்கள் கொண்ட  நிராதரவான காடு.  சுற்றிலும் சூழ்ந்து கிடக்கிற இந்தக் காடுதான் ஒரு காலத்தில் வீரப்பன் கோட்டையாக இருந்தது.

சத்தியமங்கலத்தின் தொடக்கத்திலேயே இருக்கிற போலீஸ் செக்போஸ்ட், மெல்லிய பதற்றத்தை உருவாக்குகிறது. 'இது டூரிஸ்ட் பகுதியல்ல... பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி... தேவையில்லாமல் வாகனத்தை விட்டு இறங்கக்கூடாது' என்று  எச்சரித்துவிட்டுத்தான் அனுமதிக்கிறார்கள். மான்களும், குரங்குகளும், கேழையாடுகளும், காட்டுப்பன்றிகளும் வாகனத்தின் இரைச்சலுக்குப் பழகிவிட்டன. சாவகாசமாக நம்மை அண்ணாந்து பார்த்துவிட்டு தன் போக்கில் மேய்கின்றன. திம்மம் கடந்து மலைக்கு மேலான சமதளத்தில் பயணிக்கிறது எங்கள் வாகனம். 

சோளகர் தொட்டியின் நிலக்காட்சிகள் மனதுக்குள் அப்படியே பதிவாயிருகின்றன. வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பாலமுருகன், சோளகர் தொட்டி குறித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். 2004-ல் வெளிவந்த அந்த நாவல், சோளகர்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடு, வழிபாடு, சடங்கு என அவர்களின் வாழ்வியலோடு சேர்த்து வீரப்பன் தேடுதல் வேட்டை வன்கொடுமைகளையும்  ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தும். சோளகர் தொட்டியில் வசிக்கும் மனிதர்கள்தான் அந்த நாவலின் கதை மாந்தர்கள். வீரப்பன் கொல்லப்படும் காலம் வரை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினரின் தீவிரக் கண்காணிப்பில்  இருந்த அந்த கிராமம்,  இப்போது கொஞ்சம் இயல்பாக மூச்சு விடுகிறது. 14 ஆண்டுகளில் அந்தக் கிராமம் என்ன மாதிரி மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது என்று பார்க்கும் உந்துதலில் அமைந்தது எங்கள் பயணம். 

சோளகர்கள்  கர்நாடக-தமிழக எல்லைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். மிகவும் சொற்ப எண்ணிக்கையில் வாழும் ஆதி சமூகம் இது. இவர்களின் குலதெய்வம் மணிராசன். ஜடையன், சனிக்கடவுளையும் கும்பிடுவார்கள். வேளாண்மைதான் பிரதான தொழில். சோளகர்கள் வசிக்கும் ஊருக்கு, 'தொட்டி' என்று பெயர். தங்களைத் தொட்டியைச் சுற்றி வனத்தைத் திருத்தி தங்களது உணவுக்கு என்ன தேவையோ அதை விளைவித்துக்கொள்வார்கள். உப்பு, புளி என தேவையான பிற பொருள்களை பண்டமாற்று முறையில் வாங்கிக்கொள்வார்கள். 'சோளகா' என்கிற மொழி பேசுவார்கள். இந்த மொழிக்கு  எழுத்து வடிவம் இல்லை. இந்தத் தலைமுறையில் சிலர் தவிர வேறு எவரும் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. பொது சமூகத்திடம் தமிழும் கன்னடமும் கலந்த மொழி பேசுகிறார்கள். வார்த்தைகளில் மரியாதை தளும்பி நிறைந்திருக்கிறது. 

தாளவாடி தாண்டி சிறுசிறு வன கிராமங்களைக் கடந்தால் எரன்ஹல்லி என்ற ஊர் வருகிறது. ஹொய்சால மன்னர்கள் காலத்தில் யுத்தக்களமாக இருந்த பகுதி. கண்படும் இடமெல்லாம் குத்தி நிறுத்தியிருக்கிற, வீரர்களுக்கான நடுகற்களே இந்த ஊரின் தொன்மையையும், சூழலையும் விளக்குகின்றன. 

எரன்ஹல்லியில் இருந்து  தெற்கில் நுழைகிறது சிறு சாலை. கல்மண்டிபுரத்துக்கு முன்னால் கிழக்கில் திரும்பும் பாதையின் இறுதியில் இருக்கிறது சோளகர் தொட்டி. நாங்கள் சோளகர் தொட்டியில் இறங்கியபோது நேரம் மாலை 4 மணி. 

அதிகாலை 6 மணிக்கு வேலைக்குக் கிளம்புகிற மக்கள் ஓரிருவராக திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். வனத்துக்கு ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் கீழிறங்குகிறார்கள். அவர்களுக்கு முன்பாக நாக்கைத் தொங்கவிட்டபடி கம்பீரமாக ஓடி வருகின்றன நாய்கள். தொட்டிக்கு யார் புதிதாக வந்தாலும் ஊர்த்தலைவரான கொத்தல்லியின் அனுமதி பெற வேண்டும். அவர் கண்ணசைக்காமல் எவரும் நம்மை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். கொத்தல்லிக்குக் கீழே கோல்காரன் என்று ஒருவர் உண்டு. கோயிலில் பூஜை வைப்பவர்.  இருவரும்தான் ஊர் நிர்வாகிகள். ஊரின் பொதுக்காரியங்களில் தொடங்கி தனி நபர் சச்சரவுகள் வரை எல்லாவற்றுக்கும் இவர்கள் சொல்வதுதான் தீர்ப்பு. 

தயக்கத்தோடும், அச்சத்தோடும் நம்மை அணுகும் கொத்தல்லி, பத்திரிகையாளர்கள் என்று தெரிந்ததும்,  அடுத்த பத்து நிமிடத்தில் இயல்பாகி விடுகிறார். அதன்பிறகு, தங்கள் விருந்தாளிகளாக எங்களை ஏற்றுக்கொண்டார்கள் அந்த மக்கள். 

இரண்டாண்டுகளுக்குப் பிறகு தொட்டியின் எல்லையில் இருக்கும் மணிராசன் கோயிலுக்கு திருவிழா நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு குழு, வசூல் முடித்துவிட்டு வந்திருக்கிறது. கண் முன்னால் பசும்பால் கறந்து, அருகிலேயே கல்லெடுத்து அடுப்பு மூட்டி சுடச்சுட வெல்லம் போட்ட டீ தருகிறார்கள்.  அந்தச் சூழலுக்கு இதமாக இருக்கிறது.  மெல்ல மெல்ல இணக்கமாகிறார்கள் மக்கள். 

``கீழ்நாட்டுல இருந்து வர்ற யாரையும் நாங்க அவ்வளவு எளிதா நம்புறதில்லை தம்பி. நம்பி நிறைய மோசம் போயிட்டோம். பல பிரச்னைகளைக் கடந்து, இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம். பழைய விஷயங்களை எல்லாம் நினைச்சாவே நெஞ்சு நடுங்குது. இதோ இந்தா நிக்குறானே சித்தன்... இவன் மீண்டு வந்ததே பெரிய விஷயம். ஆயுள் தண்டனை... சிறையில நல்லவிதமா நடந்துக்கிட்டதால 18 வருஷத்துல வெளியில விட்டிருக்காங்க... எப்படியும் தன்னோட மகன் விடுதலையாயிருவான்... அவன் முகத்தைப் பாத்துட்டுப் போகலாம்ன்னு ரொம்பநாள் காத்துக்கிடந்தா, இவனோட அம்மா... கடைசியா பொணம் தூக்கத்தான் பரோல்ல வந்தான்.  இங்கேயிருக்கிற பலபேரு தலைமலையில இருக்கிற ஒர்க்ஷாப்புக்குப் (அதிரடிப்படை முகாம்) போயிருக்கிறோம். அந்த பாதிப்பு இன்னும் உடம்புல இருக்கு..."- கொத்தல்லி நிதானமாகப் பேசுகிறார். 

சோளகர் தொட்டி நாவலின் கதைநாயகன் சிவண்ணா. சித்தன்தான் சிவண்ணா. சிவண்ணாவுக்கு போலீஸ் வைத்த பெயர், 'துப்பாக்கி' சித்தன். 

``தொட்டியில கொஞ்சம் துடுக்காத் திரிஞ்ச பய நான். மத்தவங்களை மாதிரி பயந்து ஓடமாட்டேன். இதோ, இந்தத் தொட்டியைச் சுத்தியிருக்கே விவசாய நிலம்... இதெல்லாம் எங்க தாத்தன் பாட்டன் காட்டைத் திருத்தி உருவாக்கினது. இங்கே இருக்கிற எல்லாருக்கும் நிலம் இருந்துச்சு. காடே எங்களோடதா இருந்ததால, 'விவசாய நிலத்துக்குப் பட்டா வாங்கணும், ரசீது வாங்கணும்'னெல்லாம் எங்களுக்குத் தெரியாது. என்ன தேவையோ அதை விதைப்போம். அறுத்துக்கிட்டுப் போய் படல்போட்டு பாதுகாத்து வச்சு சாப்பிடுவோம். 

சிக்கரன்குட்டே மலைக்கு அடிவாரத்துல நாலரை ஏக்கர் நிலம் எங்க தாத்தன் திருத்தினது. கீழ்நாட்டுல இருந்து ஒருத்தன் வந்து, எங்க தாத்தனுக்குச் சினேகமானான். அவர்கிட்டப் பழகி, அந்த நிலத்தைப் பறிச்சுக்கிட்டான். எங்க அப்பன் பேதன், அதைக்கேட்டு சண்டை போட்டப்போ, அந்த நிலத்துல நாங்க வளர்த்த சந்தன மரத்துலேயே எங்களை கட்டி வச்சு அடிச்சானுங்க. சொந்த நிலமில்லாம சோளகன் வாழவே கூடாது. அந்தக் கவலையிலையே எங்க அப்பன் செத்துப்போயிட்டார். நிலத்தை அபகரிச்சவன் இந்தப்பக்கம் நடக்கும்போதெல்லாம் கொஞ்சம் வேகமாப் பேசுவேன். என் தைரியத்தைப் பாத்தே வனத்துறை எனக்கு நர்ச்சரி வாட்சர் வேலை குடுத்துச்சு. 

எல்லா சோளகனும் அடங்கிகிடக்கிறப்போ இந்தப்பய மட்டும் துடுக்காயிருக்கானேன்னு, என்னை பல வழிகள்ல போலீஸ்ல மாட்டி விட்டானுங்க. போலீஸைக் கண்டா பயந்து நடங்குற கூட்டம் இது. யாரு அடிச்சாலும் கால்ல விழுந்து 'மன்னிசிருக்கங்கய்யா'ன்னு அழுதுதான் பழகியிருக்கோம்.  இப்படி நில விவகாரம் புகைஞ்சுக்கிட்டிருந்த நேரத்துலதான் வீரப்பன் பிரச்னை வந்துச்சு.  

வீரப்பனை நாங்கள்லாம் பாத்தது கூட இல்லை. இதோ இந்தக் காட்டுப்பக்கம் திரியுறார்னு பேசிக்குவாங்க.  கீழ்நாட்டுல இருந்து எங்க காட்டுக்கு வந்து எங்க நிலங்களைப் பறிச்ச ஆட்கள் அதிரடிப்படைக்கு இன்ஃபார்மரா இருந்தாங்க. என்மேல இருந்த கோபத்தைப் போக்கிக்க, `இவன் வீரப்பனுக்கு ரேஷன் கொடுத்தான்'னு சொல்லி மாட்டி விட்டுட்டாங்க. மாதேஸ்வரன் மலையில எங்க குலதெய்வக் கோயிலுக்கு கிடா நேர்ந்து பூசை செய்யப்போயிருந்தப்போ,  `செயின் திருடினதா புகார் வந்திருக்கு, ஸ்டேஷனுக்கு வாங்க’னு என்னையும் என் தம்பி மாதையனையும் கூட்டிட்டுப் போனாங்க. சாமி கும்பிட வந்திருந்த உறவுக்காரங்கள்லாம் பயந்துட்டாங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சபிறகு, `வீரப்பனுக்கு ரேஷன் கொடுத்திருக்கான் சித்தன்... அதான் கூட்டிக்கிட்டு வந்தோம்... விசாரிச்சிட்டு விட்டுருவோம்'னு சொல்லி அவங்களை அனுப்பிட்டு என்னை தாளவாடி ஒர்க்ஷாப்புக்குக் கொண்டு போயிட்டாங்க. சித்திரவதைன்னா சித்திரவதை... வார்த்தையால சொல்ல முடியாது. ஒரு கட்டத்துல எம் தம்பியை விட்டுட்டு எனக்கு டிரெஸ்க்கு அளவெடுத்தாங்க. 

அதிரடிப்படை முகாம்ல டிரெஸ்க்கு அளவெடுத்துட்டாங்கன்னா கதையை முடிக்கப்போறாங்கன்னு அர்த்தம். வீரப்பன் போட்டுருக்கிற மாதிரியே டிரஸ்ஸைத் தச்சுப்போட்டு காட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போயி சுட்டுப்போட்டு, `வீரப்பனோடு நடந்த துப்பாக்கிச் சண்டையில அவன் கூட்டாளி பலி'ன்னு பத்திரிகைக்குச் செய்தி கொடுத்துருவாங்க. முடிவு தெரிஞ்சவுடனே,  கட்டிப்போட்டிருந்த சங்கிலியை அறுத்துக்கிட்டு தப்பிச்சுட்டேன். நேரா, பாலப்படுகைக்குப் போயி என் பொண்டாட்டி கும்பியைக் கூட்டிக்கிட்டுக் காட்டுக்குள்ள ஓடிட்டேன். அஞ்சாறு மாசம் காட்டுக்குள்ள அலைஞ்சு திரிஞ்சோம். ஒருநாள், ஒரு பாறைக்குக் கீழே உக்காந்து சமையல் செஞ்சுக்கிட்டிருந்தோம். அஞ்சாறு பேரு வந்து துப்பாக்கியோட மடக்கிட்டாங்க..."- இப்போதும், அந்தத் தருணத்தை நினைக்கும்போது சித்தனின் கண்கள் மருள்கின்றன. 

துப்பாக்கியோடு சுற்றி வளைத்தது வீரப்பனும், அவனது கூட்டாளிகளும்தான். 'போலீஸ் காவலில் இருந்து தப்பி வீரப்பன் கூட்டாளி தப்பி ஓட்டம்' என்ற பத்திரிகை செய்தியைப் படித்த வீரப்பன், சித்தனை காடு காடாகத் தேடி அலைந்திருக்கிறான். ஒருவழியாக கண்டுபிடித்து விட்டான்.

``அதை நினைச்சாலே இப்பவும் உடம்பெல்லாம் நடுங்கும்... ஆறடி உயரத்துல நிக்கிறாரு வீரப்பன்.  நான் ஓடி ஒரு புதருக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டேன். நாலைஞ்சு பேரு இவரு தலையில துப்பாக்கியை வச்சிருக்காங்க. `நீதான் போலீஸ் காவல்ல இருந்து தப்பிச்ச சித்தனா'னு கேட்டாரு வீரப்பன். இவரு 'ஆமா'னாரு... `நான் தான் வீரப்பன்... ஒளிஞ்சிருக்கிற ஒம் பொஞ்சாதியை வரச்சொல்லு'ன்னு சொன்னாரு. இவரு கைகாட்ட, நான் வெளியில வந்தேன். `எனக்காக நீ மட்டுமில்லாம உன் ஊரே கஷ்டப்பட்டிருக்கு... சரி... இனிமே தனியா அலையாதே... என்கூட வா... நான் பாத்துக்கறேன்'னு சொன்னாரு. நாங்களும் அவரோட கிளம்பிட்டோம். அதுக்கப்பறம் ரெண்டரை வருஷம்...  வீரப்பன் கூடவே அலைஞ்சோம். எங்கே தங்கினாலும் எங்களுக்குத் தனியா டென்ட் போட்டுக் கொடுப்பாங்க. பல ஆபத்தான கட்டங்களைக் கடந்திருக்கோம். அதையெல்லாம் மறந்துட்டு இப்போ புது வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கோம்" என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் கும்பி. சித்தனின் மனைவி. 

ஒரு பழங்குடி மனிதர், வீரப்பனோடு இணைந்து வாழ்வது மிகவும் கடினம். வனத்தை அவன் பார்க்கும் பார்வை வேறு. ஒரு பழங்குடி பார்க்கும் பார்வை வேறு. மரம், விலங்குகள், புழு, பூச்சிகள் அனைத்தையுமே சக உயிர்களாக, தெய்வங்களாகப் பார்ப்பது பழங்குடிகளின் மரபு. வீரப்பனுக்கு அப்படியல்ல... அவன் வாழ்க்கைப்போக்கு வேறு மாதிரி. சித்தனால்  தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒருநாள், சித்தனும் கும்பியும் வீரப்பனிடமிருந்து தப்பி ஓடி வந்து விடுகிறார்கள். 

``வீரப்பன்கிட்ட இருந்து தப்பி, இதோ இந்த காட்டுக்குள்ளதான் ஒளிஞ்சிக்கிட்டுத் திரிஞ்சோம். ஒருநாள் ராத்திரி தண்ணியெடுக்க கீழேயிறங்கி வந்த கும்பியை அதிரடிப்படைக்காரங்க பிடிச்சுட்டாங்க. அதுமட்டுமில்லே... தொட்டி மக்களையும் ஏகப்பட்ட கொடுமைகள் செஞ்சுட்டாங்க. அதனால நான் சரண்டராக முடிவு செஞ்சேன். ஒரு நண்பர் மூலமா சென்னைக்கே வந்து கமிஷனர்கிட்ட சரண்டரானேன். தமிழ்நாட்டுல நாலைஞ்சு வருஷம் விசாரணை நடந்துச்சு. எல்லா வழக்குகளும் ரிலீஸ் ஆச்சு. ஆனா, கர்நாடகாவுல ஒரு வழக்குல சேத்து ஆயுள் தண்டனை கொடுத்திட்டாங்க..." என்கிறார் சித்தன். 

18 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு, நன்னடத்தை காரணமாக 2006-ல் விடுதலை செய்யப்பட்டார் சித்தன். ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு கும்பியும் விடுதலையாகி வந்தார். இப்போது துயரங்களை மறந்து புதிய வாழ்க்கை வாழ்கிறார்கள். 

தொட்டியைச் சுற்றிலும் தக்காளி, தர்பூசணி, பீன்ஸ், முட்டைக்கோஸ், சோளம், வாழை, மா என பசுமை படர்ந்திருக்கிறது. பெரும்பாலும் விவசாயம் செய்வதெல்லாம் கீழ்நாட்டுக்காரர்கள்தான். நான்கைந்து சோளகர்கள் தவிர மற்றவர்களெல்லாம் நிலமற்றவர்கள். பலர் நிலத்தைப் பறிகொடுத்தவர்கள். நிலத்தை வாங்கியவுடன் கீழ்நாட்டுக்காரர்கள் செய்யும் முதல் வேலை தோட்டங்களைச் சுற்றி மின்வேலி போடுவது. அதுவும், தொட்டியில் இருந்து வனத்துக்குச் செல்லும் பாதை முற்றிலும் மின்வேலியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. லேசாக விரல் பட்டாலும் மின்சாரம் தூக்கி எறிந்துவிடும்.   

மெல்ல எழுந்து வனத்தின் அடிவாரம் நோக்கி நடக்கிறோம். சித்தன் வழிநடத்துகிறார். 

``இங்கே யாரையும் கேள்விகேட்கமுடியாது. கேக்கவும் பயமாயிருக்கு. இதோ, தென்னை மரம் இருக்கு பாருங்க... அதுதான் எங்க சீர்காடு. அதுக்குள்ள ஒரு சந்தனமரம் இருந்துச்சு. அதுலதான் எங்க அம்மா ஜோகம்மாளைக் கட்டி வச்சு அடிச்சாங்க. படிப்படியா எல்லா நிலத்தையும் பிடிச்சுட்டாங்க. அதோ அந்த இடம்தான் எங்க சுடுகாடு. அதையும் பிடிச்சு மின்வேலி போட்டாங்க. பேசிப்பாத்தாச்சு. `உன்னால முடிஞ்சதைப் பாத்துக்கோ'ன்னு சொல்லிட்டாங்க. நாங்க யார்கிட்ட போய் சொல்லுவோம். யாராவது செத்துப்போனா, இந்த வரப்பைக் கடந்துபோயி காட்டுக்குள்ள காரியம் செஞ்சுட்டு வந்திருவோம். இன்னும் நாலைஞ்சு வருஷத்தில வனத்துக்குப் போற பாதையையே அடைச்சுருவாங்க போல... கொஞ்சநாள் முன்னாடி ஒரு யானைக்குட்டி இந்த மின்வேலியில அடிபட்டு செத்துப்போச்சு. யாரும் கேட்கலே..." என்கிறார்  உடன் வந்த தொட்டியின் மூத்தவர்களில் ஒருவரான குள்ள மாதையன். 

தொட்டி முழுவதும் மாதையன்கள் நிறைந்திருப்பதால் குள்ள மாதன், மீசை மாதன் என பட்டப்பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள். எல்லா மாதையன்களுக்கும் உள்ள ஒற்றுமை, வீரப்பனுக்கு ரேஷன் கொடுத்தார்கள் என்று குற்றம்சாட்டி சிறைக்குள் அடைக்கப்பட்டதுதான். 

``சித்தன் காட்டுக்குள்ள இருந்த காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டோம். திடீர்ன்னு அதிகாரிங்க வந்து தொட்டியில இருக்கிற ஆம்பளை, பொம்பளைக எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிருவாங்க. ஒர்க்ஷாப்புல வச்சு சித்திரவதை நடக்கும். பொம்பளைப் புள்ளைக பட்ட கஷ்டத்தை எல்லாம் வெளியில சொல்ல முடியாது. பலபேரு இப்போ நடைபிணமா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க..." - சித்தனின் தம்பி மகாதேவன் மெல்லிய குரலில் பேசுகிறார். 

வானத்தை இருள் கவ்வத் தொடங்குகிறது. தொட்டி மனிதர்களால் நிறைந்து விடுகிறது. தொட்டிக்குள் நிறைய ஆடு, மாடுகள், நாய்கள் இழைகின்றன.  பெண்கள் எல்லோரும் மிகவும் மெலிந்திருக்கிறார்கள்.  பலரின் உடல்களில் விசாரணை சித்திரவதைகளின் அடையாளங்கள் இன்னும் மிஞ்சியிருக்கின்றன. மரியாதையோடும் அன்போடும் நம்மை அணுகுகிறார்கள். 

ராஜா, தொட்டியின் மூத்தவர்களில் ஒருவர். தொள தொள பேன்ட் சட்டை போட்டிருக்கிறார். கறை படிந்திருக்கிறது பற்களில்.  பணிவு உடம்போடு ஒட்டியிருக்கிறது. இவரது வீடு, தொட்டியைத் தாண்டி வனத்துக்கு நெருக்கமாக இருக்கிறது. ஐந்து ஏக்கர் நிலம் திருத்தி விவசாயம் செய்கிறார். அருகில் வேளாண்மை செய்யும் கீழ்நாட்டுக்காரர் இந்த நிலத்தின் மீது கண்வைத்து பிரச்னை செய்து வருகிறார்.  வீட்டுக்குக் காவலாக நான்கைந்து நாய்கள் இருக்கின்றன. வீட்டின் முகப்பில் தேங்காய் போல் காய்த்துத் தொங்கும் பப்பாளிகளில் செங்காயாக ஒன்றைப் பறித்து, தோல் சீவி, அழகாக நறுக்கி ஒரு தாம்பாளத்தில் வைக்கிறார். கூடவே, ஒரு கிண்ணம் மலைத்தேன். இரண்டும் அமுதம் போலிருக்கின்றன.  மூன்று மகள்கள்... மூவரும் 'அண்ணா... அண்ணா' என உடன்பிறந்தோரைக் கொண்டாடுவது போல எவ்வித மனத்தயக்கமுமின்றி கொண்டாடுகிறார்கள்.    

``நானும் மூணு வருஷம் ஜெயில்ல கிடந்துட்டு வந்த ஆளு தான். எல்லாத்தையும் மறந்துட்டோம். இனிமே நாங்க ஒரு பொட்டு நிலத்தைக்கூட விட்டுத்தரப்போறதில்லை. முன்னை மாதிரியில்லை... இப்போ புள்ளைகள்லாம படிச்சிருக்குதுக. நாங்களும் கோர்ட், கேசுன்னு போவோம். மூத்தவ  எம்ஏ முடிச்சுட்டா... இளையவ பிஏ முடிக்கப்போறா... கடைசிப்பொண்ணு பண்ணெண்டாவது... ஒத்தைப்புள்ளையையாவது வக்கீலுக்குப் படிக்க வச்சுப்புடுவேன்..." என்று உறுதியாகச் சொல்கிறார் ராஜா. 

ராஜா வீட்டில் அமர்ந்து பார்த்தால் மூன்று புறங்களும் வன அடிவாரங்கள் தெரிகின்றன. விளைச்சல் கால இரவில், எவ்வித அச்சமும் இன்றி வயல்வெளியில் தான் உறங்குகிறார்கள். காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, யானைகள் வரும்போது நாய்கள் குரைத்து உறக்கம் கலைக்கின்றன. பெரிய தகரங்களைத் தட்டியோ, சத்தமிட்டோ அவற்றை விரட்டுவார்கள்.   

``நாலு நாளைக்கு முன்னாடி ஒரு சிறுத்தை ஒரு நாயை இழுத்துக்கிட்டுப் போயிருச்சு. சாயங்காலம் வீட்டுல உக்காந்து பாத்தா, பாறைகள்ல சிறுத்தை, கரடியெல்லாம் உக்காந்து வீட்டையே பாத்துக்கிட்டிருக்கும்.  யானைங்க வீட்டு வாசல் வரைக்கும் வந்துட்டுப் போகும். நாங்க அதுங்க போக்குல விட்டுருவோம். எங்களையும் அதுங்க எங்க போக்குல விட்ரும்... இது காலங்காலமா இருக்கிற ஒப்பந்தம்" - சிரிக்கிறார் ராஜா.

இருள் தொட்டி மேல் கவிழ்கிறது. ஆண்களும் பெண்களும் வீட்டுக்குள் இருந்து வெளியில் குவிகிறார்கள். ஒண்ணன் மகன் தாசன், விறகுகளை சாலைக்கு மத்தியில் குவித்து உக்கடத் தீ மூட்டுகிறார். ஆண்கள், பெண்கள் எல்லோரும் அந்தத் தீ முன்பு வட்ட வடிவில் அமர, கோல்காரன் பீனாச்சிக் கருவியை வாசிக்கிறார். தாசன் மத்தளம் தட்ட அந்த இடம் உக்கிரமாகிறது. கும்பி, சித்தி, இன்னும் சில பெண்கள் கைகளை முன்னும் பின்னும் அசைத்து தங்கள் பாரம்பர்ய நடனத்தை ஆடுகிறார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து சிறுமிகள் ஆடுகிறார்கள். கூடவே தாசனும் மத்தளம் இசைத்தபடி ஆடுகிறார். 

கொத்தல்லி பீடியை ஆழ இழுத்து நிதானமாக புகையை வெளிவிட்டபடி வானைப் பார்க்கிறார். 

"ஒருநாள் கூட நிம்மதியாத் தூங்கமுடியாது. எப்போ வேன் வரும்... யாரைத் தூக்கிட்டுப் போவாங்கன்னு தெரியாது. மனுஷங்களை மட்டுமில்லாம, ஆடு, கோழி எல்லாம் காணாமப் போகும். இதோ ஆடுறாளே ஒரு பொண்ணு, அவ அப்பன் என்ன ஆனான்னே இதுவரைக்கும் தெரியலே... இந்தப் பக்கம் கூட்டிக்கிட்டுப் போனதை பாத்தோம். அவ்வளவுதான். எல்லாத்தையும் மறந்துட்டோம்... இப்போ உள்ள புள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கூடம் அனுப்பனும்ன்னு ஊர்க்கட்டுப்பாட்டு போட்டுட்டோம். சின்னப்புள்ளைகளுக்கெல்லாம் நாங்க பட்ட கஷ்டம் தெரியாது. அதுங்க, வேற போக்குல வளருதுக... பல புள்ளைகளுக்கு ஊர்ல கொத்தல்லி யாரு, கோல்காரன் யாருன்னு கூட தெரியலே... பரவாயில்லே... அதைத்தெரிஞ்சு என்ன செய்யப்போகுதுக... அதுங்களைக் காப்பாத்திக்கத் தெரிஞ்சா போதும்... ஏமாறாம இருந்தாப் போதும். 

ரெண்டு வருஷமா மணிராசனுக்கு விழா எடுக்கலே... இந்த வருஷம் ஏற்பாடு செஞ்சிருக்கோம். எங்களுக்கு எல்லாமே மணிராசன்தான். யாரு என்ன கொடுமை செஞ்சாலும் அவனுக்கு முன்னாடி உக்காந்து அழுதுட்டு வந்திருவோம். அவன் பாத்துக்குவான்... இதோ இந்த சித்தன் இருக்கானே... அவன் நிலத்தைப் பறிச்சவன், அவன் போட்ட மின்வேலியிலயே அடிபட்டுச் செத்தான்... எங்க கண் முன்னாடியே காலம் எல்லாருக்கும் தண்டனை கொடுத்துக்கிட்டிருக்கு..." இன்னும் ஆழமாக  பீடியை இழுக்கிறார் கொத்தல்லி. 

உக்கடத்தீயில் தொட்டி ஒளிர்கிறது. கோல்காரன் பீனாட்சியைத் தனித்துவிட்டு, மேலே அண்ணாந்து நட்சத்திரங்களைப் பார்க்கிறார். ஜாமம் மாறுகிறது.  உக்கடத்தீ தணிகிறது. மெல்ல மெல்ல மக்கள் கலைகிறார்கள். 

விடிகிறது. 

அதிகாலை பனியும் குளிரும் தொகுப்பு வீடுகளை ஊடுருவி உடலைத் தைக்கின்றன.  பொட்டுச் சிவப்பாக மெல்ல எழும்புகிறது சூரியன். நம்பிக்கையும், அன்பும், கனிவும், புத்துணர்வும் அதன் வெளிச்சத்தில் நிறைந்திருக்கின்றன.