Published:Updated:

``நடிகையர் திலகம் தந்த பாடம்... எங்க குடும்பத்தைப் பிரிச்சதுதான்!'' - 'ஜெமினி' கணேசன் மகள் #VikatanExclusive

``நடிகையர் திலகம் தந்த பாடம்... எங்க குடும்பத்தைப் பிரிச்சதுதான்!'' - 'ஜெமினி' கணேசன் மகள் #VikatanExclusive

``நடிகையர் திலகம் தந்த பாடம்... எங்க குடும்பத்தைப் பிரிச்சதுதான்!'' - 'ஜெமினி' கணேசன் மகள் #VikatanExclusive

``நடிகையர் திலகம் தந்த பாடம்... எங்க குடும்பத்தைப் பிரிச்சதுதான்!'' - 'ஜெமினி' கணேசன் மகள் #VikatanExclusive

``நடிகையர் திலகம் தந்த பாடம்... எங்க குடும்பத்தைப் பிரிச்சதுதான்!'' - 'ஜெமினி' கணேசன் மகள் #VikatanExclusive

Published:Updated:
``நடிகையர் திலகம் தந்த பாடம்... எங்க குடும்பத்தைப் பிரிச்சதுதான்!'' - 'ஜெமினி' கணேசன் மகள் #VikatanExclusive

புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும்போது சர்ச்சைகள் எழுவது வழக்கமான விஷயம். நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறான `நடிகையர் திலகம்' படமும் இதற்குத் தப்பவில்லை. ``என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தை ஏற்படுத்தியதுபோல காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அது தவறு'' என்று ஆவேசப்பட்டிருந்தார் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ். தன் அப்பா மற்றும் அம்மா பற்றிய ஆவணப்படத்தை கூடிய விரைவில் வெளியிடப்போவதாகச் சொல்லியிருந்தார். இந்த ஆவணப்படம் குறித்துப் பேசுவதற்காகப் போன் செய்தவுடன், ``நேர்ல வாங்கோ. உங்ககிட்ட நிறைய பேசணும்'' என்றார். அவருடைய ஜிஜி மருத்துவமனைக்குக் கிளம்பினேன்.

``ஆவணப்படம் கூடிய சீக்கிரம் வெளியிடப்போறேன் என்பது உண்மைதான். ஆனா, அம்மா அப்பாவின் சுயசரிதை புக், ஆவணப்படம் ரெண்டையும் நான் ஏழெட்டு வருஷம் முன்னாடியே சொந்தப் பணத்தைச் செலவழிச்சு ரெடி பண்ணிட்டேன். அந்தப் புத்தகத்திலும் ஆவணப்படத்திலும் சாவித்திரி பற்றி மரியாதை குறைச்சலா எதுவுமே எழுதவும் இல்லை, சொல்லவும் இல்லை. அந்த ஆவணப்படங்களை விஜிக்கும் (விஜய சாமூண்டீஸ்வரி) போட்டுக் காண்பிச்சிருக்கேன். ஆனால், `நடிகையர் திலகம்' படம் விஷயத்தில் அப்படி நடக்கலை. அப்பா பற்றி தப்பா வந்திருக்குன்னு தெரிஞ்சும், விஜி அதை விட்டுட்டா. அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம். என் ஹாஸ்பிட்டலிலும் என் வீட்டுக்குள்ளேயும் இனி அவளுக்கு இடமில்லை. `நடிகையர் திலகம்' படம் ஒற்றுமையா இருந்த அக்கா - தங்கையைப் பிரிச்சுடுச்சி. இந்தப் படத்தால் எங்க குடும்பத்துக்குக் கிடைச்சது இதுதான்'' என வேதனையுடன் பேசுகிறார் கமலா செல்வராஜ்.

``இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தப் படம் எங்க அப்பாவை மட்டுமல்லாமல், எங்க கங்கம்மா பாட்டியின் மரியாதையையும் ஸ்பாயில் செஞ்சிருக்கு. தலையை சிரச்சுண்டு, வீட்டுல கட்டிக்க ரெண்டு நார்மடி, வெளியே போக ஒரு பட்டு நார்மடின்னு எந்த ஆசையும் இல்லாம வாழ்ந்துட்டுப் போனவங்க. `நடிகையர் திலகம்' படம் பார்த்த ரசிகர்கள் `சன் ஆஃப் பாஸ்டர்ட்', `சன் ஆஃப் விச்' என்று இணையதளங்களில் விமர்சனம் செஞ்சிருக்காங்க. இந்த விமர்சனங்கள் எங்களை எவ்வளவு காயப்படுத்தும்னு விஜி யோசிச்சுப் பார்க்கணும். 

எங்க பாப்ஜி (அம்மாவை பாப்ஜி என்றுதான் குறிப்பிடுகிறார்) தன் வயித்துல பொறந்த எங்களை மட்டுமல்லாமல், புஷ்பவல்லியின் பெண்களை, சாவித்திரியின் பிள்ளைகளையும் தன் குழந்தைகளாவே நினைச்சாங்க. கணவரின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தைகளா நினைச்ச தெய்வம் அவள். சாவித்திரி இறந்ததும் மகன் சதீஷை, `நீ யார்கிட்ட இருக்கப்போறே. விஜி அக்காகிட்டேயா? என்கிட்டேயா?'னு அப்பா கேட்டப்போ, அவன் என் அம்மாவைத்தான் கைகாட்டினான்'' என்றவர், சற்றே மெளனமடைந்து தொடர்கிறார்.

``பாப்ஜி குணத்துக்கு உதாரணம் சொல்லட்டுமா? அந்தப் படத்தில், சாவித்திரி ஏதோ ஹாஸ்பிடல் வாசலில் ஸ்ட்ரெச்சர்ல கிடக்கற மாதிரி எடுத்திருக்காங்க. அப்போ நடந்த உண்மை என்ன தெரியுமா? அந்த நேரம் எனக்குக் கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் இருந்தாங்க. நான் பிஸியா பிராக்டிஸ் பண்ணிட்டிருந்த நேரம். துரதிர்ஷ்டவசமா என் ரெண்டு குழந்தைகளுக்கும் மணல்வாரி அம்மைப் போட்டுவிட்டது. அம்மாவை நான் உதவிக்குக் கூப்பிட்டேன். அம்மாவும் வர்றதுக்கு ஒத்துண்டா. திடீர்னு வீட்டுக்கு வந்து, `கமலா, சாவித்திரி பெங்களூர் ஷூட்டிங்லேயே கோமாவுக்குப் போயிட்டாளாம். உங்கப்பா வேற ஊர்ல இல்லை. நான் போய் அவளைப் பார்த்துக்கணும்டி'னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. நான் அழுதுட்டே `என்னைவிட அவங்க முக்கியமா? நீ போகிற கார் எங்கேயாவது முட்டிண்டுரும் பாரு'னு பாப்ஜிக்குச் சாபம் கொடுத்தேன். சொந்தப் பேரப் பிள்ளைகளைப் பார்க்காமல் சாவித்திரியைப் பார்க்க ஓடினவர் என் பாப்ஜி. சாவித்திரி இறந்ததும் எங்கப்பாகிட்ட சொல்லி, முறைப்படி சடங்குகள் செய்யவெச்சதும் அம்மாதான்.

எனக்கு நல்லா நினைவிருக்கு. 18 வருஷமா அப்பா நைட்ல வீட்டுக்கு வந்ததே இல்லை. சாவித்திரி வீட்லதான் இருப்பார். நாலு பெண் குழந்தைகள், எங்க பாட்டி, அவா தங்கை சின்ன பாட்டி எல்லாரையும் அவ்ளோ பெரிய வீட்ல பாப்ஜி எப்படிப் பொத்தி பொத்திப் பாதுகாப்பா தெரியுமா? லேசா இருட்ட ஆரம்பிச்சாலே மாடிக் கதவு, பால்கனி ஜன்னல் எல்லாத்தையும் சாத்த ஆரம்பிச்சுடுவா. கட்டில் கீழே, சோஃபா கீழே வெளியாள் யாராவது ஒளிஞ்சிருக்காளான்னு குனிஞ்சு குனிஞ்சு பார்த்துட்டிருப்பா. எனக்கு அப்போ சிரிப்பு வந்துச்சு. இப்பத்தான் நாலு பெண் குழந்தைகளை வெச்சுட்டு தனியா இருந்த அம்மாவின் பயம் புரியுது.

குழந்தைகளா இருக்கறச்சே புஷ்பவல்லியாலும், சாவித்திரியாலும் பாப்ஜிமா பட்ட கஷ்டங்கள் எங்களுக்குப் புரியலை. புஷ்பவல்லி நெருக்கமா தொடுத்த மல்லிகைப்பூ அனுப்பினதும் சந்தோஷமாயிடுவோம். சாவித்திரி எங்களுக்குச் சரிசமமா விளையாடினா ஹேப்பி ஆகிடுவோம். அம்மா பாவம், தன் வாழ்க்கை பங்குப் போடப்படறதைத் தாங்கமுடியாமல் என்னையும் என் அக்கா ரேவதியையும் அடிச்சு நொறுக்குவா. நாங்களோ, `பாப்ஜி எப்பவும் கண்டிப்பா இருக்கா. அடிச்சுண்டே இருக்கா. உலகத்திலேயே மோசமான அம்மா'னு நினைச்சுண்டிருந்தோம். `நடிகையர் திலகம்' பார்த்த பிறகுதான் புரியுது, பாப்ஜிமா என் அப்பாவாலும் சாவித்திரியாலும் எவ்வளவு மனம் புழுங்கி இருக்கான்னு. ஸாரிம்மா, அன்னிக்கு உன் வலி தெரியாம உன்னை மனசுக்குள்ள நிறைய திட்டிட்டோம் ஸாரிம்மா'' என்ற கமலா செல்வராஜின் குரல் உடைகிறது. 

தான் ஒரு புகழ்பெற்ற மருத்துவர், பல பெண்களுக்குத் தாயாகும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தந்தவர் என்பதையெல்லாம் மறந்து, திருமதி. அலமேலு கணேசனின் மகளாக அழ ஆரம்பித்தவரைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் அற்று அமர்ந்திருந்தேன் நான்.