Published:Updated:

அடுத்தவருக்கு உதவி செய்வது தர்மம்! - ரம்ஜான் நோன்புக் கட்டுரை - 3

பள்ளிவாயில்களோடு கடமைகளை நிறுத்திக்கொள்ளாமல், நமது வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் இறை வழிபாடாக, தர்மமாக வகுத்து தந்துள்ளது இஸ்லாம்.

அடுத்தவருக்கு உதவி செய்வது தர்மம்! - ரம்ஜான் நோன்புக் கட்டுரை - 3
அடுத்தவருக்கு உதவி செய்வது தர்மம்! - ரம்ஜான் நோன்புக் கட்டுரை - 3

நோக்கமற்ற வாழ்வு அர்த்தமற்றது. எல்லாவற்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கும். நாம் சாதாரணமாகத் தெருவில் செல்வதற்குக்கூட ஒரு நோக்கமிருக்கும். `நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன? நாம் எதற்காக இந்த உலகுக்கு வந்தோம்' என்ற கேள்விக்கு பதில் தெரியாமல், ஏதோ வாழ்ந்தோம், மரணமடைந்தோம் என்று நம் பொழுதுகள் கழியுமானால் நமது வாழ்க்கைக்கு எந்த ஓர் அர்த்தமும் இருக்காது. இறைவன் நம்மை மனிதனாகப் படைத்து, நம்மைக் கண்ணியப்படுத்தி நமக்காக இந்த உலகத்தைப் படைத்து, அதில் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கினான். எதற்காகத் தெரியுமா?

இறைவன் மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை திருமறையில் கூறுகிறான் : 

`இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை’ (அல்குர்ஆன் 51:56)
இறைவனை வணங்குவது என்றால், எவ்வாறு வணங்குவது? அதையும் அவனே கற்றுத் தந்துள்ளான். அவன் தினமும்  ஐந்து வேளை தொழுகையை நம் மீது கடமையாக்கினான். 

ரமலான் மாதம் வந்துவிட்டால், ஒரு மாத காலம் நோன்பிருக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை ஜகாத் (ஏழை வரி)கொடுக்க வேண்டும் என்றும், வசதி படைத்தவர்கள் ஆயுளில் ஒரு முறை ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என்றும் கடைமையாக்கினான்.
இவை ஓர் இறை நம்பிக்கையாளன் கட்டாயம் செய்தாகவேண்டிய கடமைகள். ஆனால், இஸ்லாம் இத்துடன் வணக்கத்தை முடித்துக்கொள்வதில்லை.

பள்ளிவாயில்களோடு கடமைகளை நிறுத்திக்கொள்ளாமல், நமது வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் இறை வழிபாடாக, தர்மமாக வகுத்து தந்துள்ளது இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள், நமக்கு அத்தகைய வாழ்வியல் நடைமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். 

'`சாலையில் கிடக்கும் தீங்கு தரும் பொருள்களை அகற்றுவது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி, நம்மையும் நாம் இருக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது  இறை நம்பிக்கையின் ஒரு பகுதி.  

பிற சகோதரனைப்  பார்த்து புன்முறுவலிப்பது ஒரு தர்மம். பிரிந்து வாழும் கணவன் மனைவிடையே சுமுகத்தை ஏற்படுத்துவதும் தர்மம்.
அடுத்தவருக்கு உதவி செய்வதும் தர்மம். இன்னும் தர்மத்திலேயே சிறந்த தர்மமாக ஒருவர் தனது மனைவிக்கு ஒரு கவளம் உணவளிப்பது' என்றார்கள்.

ஒரு முறை நபி அவர்கள், 'உங்களில் ஒருவர் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதும் தர்மமே' என்றார்கள். 
நபித் தோழர்களோ, `இறைத் தூதரே! நாங்கள் எங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்காக எங்களது மனைவியிடத்தில் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதும் ஒரு தர்மமா?' என ஆச்சர்யமாகக் கேட்டார்கள்.
நபி அவர்கள் பதிலளித்தார்கள். 

`ஒருவர் அவ்வாறு இறைவன் அனுமதித்த வழியில் தனது இச்சையை தீர்த்துக்கொள்ளாமல், இறைவன் தடை செய்த தவறான வழிகளில் ஈடுபடுவாரானால் அவருக்கு பாவம் எழுதப்படுமல்லவா?' என்றார்கள்.

இவ்வாறாக  இறைவன் தவிர்த்திருக்கச்  சொன்ன விஷயங்களைத் தவிர்த்திருப்பதும், அவனது கட்டளைகளுக்குக்  கீழ்படிவதும் ஒரு இறை வணக்கமாக இஸ்லாம் கூறுகிறது. 

ஐந்து வேளை தொழுதுவிட்டு, நோன்பிருந்துவிட்டு, ஒருவர் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்வாரானால், அவரது இறை வணக்கம் முழுமையடையாது. 

லஞ்சம் வாங்கிய பணத்தில், வட்டிப் பணத்தில், இறைவனால் தடை செய்யப்பட முறைகளில் வந்த பணத்தைக் கொண்டு ஒருவர் `ஜகாத்' கொடுப்பரானால், தர்மம் செய்வாரானால்,  `ஹஜ் யாத்திரை' செல்வாரானால் அதை இறைவன் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். 
இறை வழிபாடுகளில் சரியாக இருந்துவிட்டு, பிற மனித உரிமைகளைப் பறித்தால், அவரும் உண்மையான இறை வணக்கம் புரிந்தவர் ஆக மாட்டார். 

பிற மனிதரின் மனம் புண்படும்படும்படி நடந்துகொண்டால், பாதிக்கப்பட்ட நபர் அவரை மன்னிக்காதவரை இறைவனும் அவரை மன்னிப்பதில்லை.

இவ்வாறாக, இஸ்லாம் இறை வணக்கத்தை நாம் வாழும் வாழ்வின் ஊடாக அமைத்து தந்திருக்கிறது. நமது வாழ்வின் நோக்கமாக, நீதியாக, நேர்மையாக, பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது. 

இறைவனை மட்டும் திருப்திப்படுத்தாமல், நம்மோடு வாழ்பவர்களையும், நமக்காக வாழ்பவர்களையும் திருப்தியடையச் செய்வதில்தான் இறைப் பொருத்தம் உள்ளதென பறைசாற்றுகிறது. 

இறை திருப்திக்கான இந்த ரமலான் மாதத்தில் இறை திருப்தியில் இருந்து நம்மை தூரமாக்கும் விஷயங்களைத் தவிர்த்திருந்து அவனது பொருத்தத்தைப் பெறுவோம் .இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை அறிந்து அதன்படி நாளும் நடப்போம்.