Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

பொட்டிக் கடை ராசு பொசுக்குன்னு உள்ள வரவும், பொத்தியிருந்த வேட்டிய விசுக்குன்னு உருவி எறிஞ்சுட்டு வெறிச்சு வெறிச்சுப் பாத்தாரு கருத்தமாயி.

 ஊருக்குள்ள ஒரு நல்ல ஆளு பொட்டிக் கடை ராசு. மந்தையில இருந்து நேரா வடக்க போயி நொட்டாங்கையிப் பக்கம் திரும்புனா முட்டுச்சந்துல மூணாம் கடை ராசு கடை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொட்டிக் கடைன்னுதான் பேரு -

ஆனா -

காய்கறி, சிகரெட்டு, ரொட்டி, முட்டாயி, கலரு, வெத்தல, உப்பு, புளி, மொளகு, மொளகா, செல்போன் கார்டு இப்பிடி அட்டணம்பட்டி அனுபவிக்கிற சகல பொருளும் கிடைக்கும் ராசு கடையில. போன் இல்லாத வீட்டுக்கு வெளியூர்க்காரங்க தகவல் சொல்றது அந்தக் கடைக்குத்தான்.

மூன்றாம் உலகப் போர்

சில பேரு மூஞ்சிய மட்டும் கழுவிட்டுப் பத்து நாளைக்குக் குளிக்காமலேயே காலந்தள்ளுவான் பாருங்க... அப்படி ஆளு ராசு. சட்டைய மட்டும் அப்பப்ப மாத்திக்கிருவான்; வேட்டிய மாத்த மாட்டான். வெள்ளை வேட்டி காலப்போக்குல

மஞ்சளா மாறிக்கிட்டே வரும். இனிமே மஞ்சப் புடிக்க இடமில்லேங்கிறபோது மாத்திருவான் வேட்டிய; அன்னைக்குச் சட்டைய மாத்துவான்னு சத்தியமெல்லாம் பண்ண முடியாது. நல்லவன்தான் பாவம். ஆனா, அழுதாலும் சிரிச்சாலும் பெரிய வித்தியாசம் காட்டாத பெறவி. சிரிப்பச் செலவழிக்க வசதி இல்லாத மூஞ்சி.

''என்னப்பா ராசு இந்த நேரத்துல?''

''கல்லூத்துல இருந்து ஒம் மக பேசுச்சு பெரியப்பா.''

''என்னா சொன்னா அழுகுணிச் சிறுக்கி?''

''உங்க சம்பந்தகாரரு வெள்ளச்சாமி இல்ல..?''

''ஆமா இருக்காரு?''

''அவரு இப்ப இல்ல. ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி அடியாயிட்டாராம். சொல்லுச்சு அத்திப்பூவு.''

படக்குன்னு எந்திரிச்சு உக்காந்துட்டாரு கருத்தமாயி; அடிச்ச காய்ச்சல் ஓடிப்போச்சு. கடுங்காப்பியும் மாத்திரையும் நிறுத்தாத காய்ச்சலப் பொட்டுன்னு நிறுத்திட்டுப்போயிருச்சு ஒரு எழவு.

ரொம்ப நேரமா யோசிச்சுத் தொங்கப்போட்ட தலைய அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டுனாரு. என்னமோ 'பிராணாயாமம்’ பண்ற மாதிரி இழுத்து நெஞ்சுல தேக்கின மூச்ச, ஒரு கஞ்சப்பய காசைச் செலவழிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா விட்டாரு. மூஞ்சியில இருந்த கவலையெல்லாம் நெத்திச் சுருக்கத்துப் பள்ளத்துல போயிப் படுத்துக்கிருச்சு பாளம் பாளமா.

அவரு பாவம் கவலப்பட்டது சம்பந்தகாரரு சாவுக்கு இல்ல. வரவு வராத காலத்துல எழவு வந்திருச்சேன்னுதான் கலங்கிப்போனாரு கருத்தமாயி.

இறுக்கிப் புடிச்சுச் செலவழிச்சாலும் ஆயிரத்து இருநூறு ரூவா ஆகும். இருந்த பணம் எழுநூறையும் சின்னப்பாண்டி வாங்கிட்டுப் போயிட்டான் செலவுக்கில்லேன்னு. செத்த எழவுக்குப் போகாம இருக்க முடியுமா? யாருகிட்டக் கைமாத்துக் கேக்கலாம்?

கட்டிலவிட்டு எறங்காம விட்டம் பாத்து யோசிக்கிறாரு நெடுநேரமா.

இப்ப எந்தக் காக்கா சத்தத்தையும் காணோம். தப்பான தகவல் தந்துட்டோம்னு வெக்கப்பட்டுப்போன காக்கா வெளியேறிஇருக்கும் ஊரவிட்டே.

சுழியன் சத்தத்தையும் காணோம். பாவத்த இருமலும் கைவிட்டுருச்சு போலருக்கு கடைசியில.

ஒரு கடப்பாரை விழுகுற சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டேயிருக்கு 'டொங்கு டொங்கு’ன்னு. பின் சுவத்த இடிச்சுக்கிட்டிருக்காங்க முத்துமணி ஆளுக வீட்ட மாத்திக் கட்ட. சுவத்துக்குள்ள போன கடப்பாரை ஊடுருவி நெத்தியிலயும் நெஞ்சிலயும் மாறி மாறி இடிக்கற மாதிரி இருக்கு கருத்தமாயிக்கு.

எந்திரிச்சாரு.

ஒழுகுன மூக்கை வேட்டியில ஒரு ஓரமாத் தொடச்சு அதக் கீழ்ப்பக்கமா வச்சுக் கட்டிக்கிட்டாரு.

குடல் தொங்குன கொடியில பத்தோட பதினொண்ணாக் கிடந்த சட்டைய எடுத்து மாட்டிக்கிட்டுத் துண்டை உதறித் தோள்ல போட்டுக்கிட்டு வெளிய வந்து பாத்தா ஒத்தச் செருப்பக் காணோம். கழுதை இங்கதான் கெடக்கும்; தேடிப் பாத்தாச் சிக்காது. இப்ப இதெல்லாம் பாத்தா முடியுமா? செருப்பத் தேடிக்கிட்டிருந்தா செத்தவரு வருத்தப்படுவாரு.

மூன்றாம் உலகப் போர்

வெறுங்காலோட வெளியேறிட்டாரு.

இருக்கிற ஆளுகள்ல கொஞ்சம் ஈரப்பசை உள்ள ஆளு கோவிந்த நாயக்கரு. கேட்டதில்ல இன்ன வரைக்கும்; கேட்டுருவோம்.

வீட்டுக்குப் போனா -

மாவுக்கட்டு போட்டுக் கழுத்துல கயிறு கட்டிக் கையத் தொங்கவிட்டுருந்தாரு கோவிந்த நாயக்கரு. அவர் எதுக்க தலையத் தொங்கப் போட்டு உக்காந்திருந்தாரு பொன்னுமுத்துப் பிள்ளை.

கருத்தமாயப் பாத்ததும் 'வாய்யா வாய்யா’ன்னாரு வாய் நெறையா.

''என்னய்யா இது?'' - பதறிப்போனாரு கருத்தமாயி.

''பசு மாடும் கன்னுக்குட்டியும் பண்ணுன கூத்து. கன்னுக்குட்டியப் புடிச்சுக் கட்டப்போனவன் சாணிய மிதிச்சு விழுந்துபோனேன். அது இருக்கட்டும் கருத்தமாயி - என்னா விசயம் இம்புட்டுத் தூரம்?''

இப்பப் பாதி மனசாகிப்போனாரு கருத்தமாயி. கை ஒடுஞ்சு கிடக்கிற ஆளுகிட்டக் கடன் கேட்டா நல்லாவா இருக்கும்?

''ஒண்ணுமில்லய்யா. சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.''

இப்ப பொன்னுமுத்துப் பிள்ளை மேல கொதிச்சு விழுந்து குதற ஆரம்பிச்சுட்டாரு கோவிந்த நாயக்கரு.

''பாருய்யா... இந்தாளு மனுசன். பழகுன பழக்கத்துக்குக் கையடிஞ்ச ஆள விசாரிக்க வந்திருக்காரு. நீயி கையடிஞ்சவன விசாரிக்கிற மாதிரி கைமாத்துக் கேட்டு வந்திருக்கிற. பழசெல்லாம் கொடுத்துட்டியா? கருத்தமாய எடுத்துக்க. முப்பது நாப்பது வருசத்துப் பழக்கம். ஒரு நாளாச்சும் கடன் கேட்டு வந்திருப்பாரா? கத்தி ஒருத்தனைத்தான் அறுக்கும். கடன் பரம்பரைய அறுக்கும். என்ன கருத்தமாயி நான் சொல்றது?''

''நூத்துல ஒரு பேச்சு.''

இப்ப முழு மனசும் மாறிப்போனாரு கருத்தமாயி.

உக்காந்த மேனிக்கு ஒரு கும்புடு போட்டு எந்திரிச்சுட்டாரு.

காசி நாடாரை ஊர்ல எல்லாரும் காசு நாடார்னுதான் சொல்றது. இடம் பொருள் ஏவல் பாத்து உண்மைன்னு தெரிஞ்சா உதவி செய்வாரு.

மம்பட்டி வீரன் பேரன சைக்கிள் மிதிக்கச் சொல்லிட்டுப் பின்னால ஒக்காந்து காசி நாடார் கடைக்குப் போறாரு கருத்தமாயி. அவர் பாவம் கடையப் பூட்டிட்டு விரதம்விடப் போயிட்டாரு சதுரகிரிக்கு.

நொந்து வெந்துபோனாரு கருத்தமாயி.

செத்தவன் மரண யோகத்துல சாக வேணாமா? இப்படி எமகண்டத்துலயா செத்துத் தொலைக்கிறது?

ஒரு முடிவோட வீட்டுக்கு வந்துட்டாரு.

கட்டிவச்ச அகத்திக் கீரையக் 'கறுச் கறுச்’னு தின்னுக்கிட்டிருந்த வெள்ளாடு இவரைப் பாத்ததுமே 'மேமே 'மே... மே’ன்னு கத்துச்சு.

''ஒன்னிய நெனச்சுத்தான் வந்திருக்கேன் - வா போவோம்.''

கட்டிக்கிடந்த வெள்ளாட்ட அவுத்துக் கையில புடிச்சு நடந்துட்டாரு.

மூன்றாம் உலகப் போர்

இன்னைக்கு சனிக்கிழமை சந்தை இல்ல; கசாப்புக் கடைக்குத்தான் போயாகணும்.

கசாப்பு சுப்பு ரொம்ப வினயமான ஆளு. கொஞ்சம் அசந்தாப் போதும் - ஆட்டுக்கொம்ப வெட்டி எலும்புல சேத்து எடை போட்டு விக்கக்கூடிய ஆளுன்னு பேசுவாக ஊருல.

அந்த ஆள விட்டாலும் ஆள் கெடையாது கசாப்புக்கு.

'யப்பா சுப்பு! சம்பந்தி காலமாயிட்டாரு. எழவுக்குப் போகணும். சந்தையுமில்ல. இந்தா இந்த வெள்ளாட்டுக்கு வெல போட்டுக் கொடு.''

சந்தை ஆட்டையே சல்லிசா வாங்குற ஆளு வந்த ஆட்டை விடுவானா?

''யண்ணே! கையில காசில்லண்ணே. கடனுக்குக் கறி வாங்கித் தின்னுட்டுக் கொழுப்பெடுத்து அலையறாய்ங்க ஊருல. வேணும்னா ஒண்ணு பண்றேன். இன்னைக்கு என் ஆட்டை நிறுத்திட்டு உன் ஆட்டை உரிக்கிறேன். விக்கிற கறி உனக்கு; வெட்டுக் கூலி எனக்கு.''

ஆட்டுக்கு முன்ன அவன் தன்னக் கழுத்தறுக்கிறான்னு தெரிஞ்சுபோச்சு கருத்தமாயிக்கு.

வேற வழி..?

கசாப்புக்காரனும் கருத்தமாயும் மாறி மாறிப் பாக்குறாக. கருத்தமாயி ஆடும் கசாப்புக்கடைக்காரன் ஆடும் மாறி மாறிப் பாக்குதுக.

கசாப்புக்கடைக்காரனும் அவன் கட்டிவச்சிருந்த ஆடும் பாத்த பார்வையில இருந்த எண்ணம் ஒண்ணுதான்:

''இன்னைக்குப் பொழச்சுக்கிட்டோம்.''

கருத்தமாயி பார்வையிலயும் அவர் வீட்டு வெள்ளாடு பாத்த பார்வையிலயும் இருந்த கேள்வி ஒண்ணுதான்:

''என்னப் பொழைக்கவிட மாட்டியா?''

ப்பத் தொழில் வித்தையக் காமிக்க ஆரம்பிக்கிறான் சுப்பு.

ஆட்டு முதுகெலும்பைத் தடவிக்கிட்டே வந்து சுருக்குன்னு குறுக்கப் புடிச்சு ஒரு அமுக்கு அமுக்குனான். உள்ளங்கையி சொல்லி ருச்சு ஆடு என்ன எடைன்னு. அப்படியே கையக் கீழ எறக்கிப் பின்னங்கால் சப்பைய ஒரு புடி புடிச்சான். கொழுப்பு சேந்தும் சேராம இருக்கு குட்டி.

ஒரு கையில கழுத்தப் புடிச்சு, மறுகையில கழுத்தத் தடவுற மாதிரி தடவிக் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சங்குல வச்சு ஒரு அழுத்து அழுத்தவும் இருமிச் செருமிருச்சு ஆடு.

அகத்திக் குழையோட சளித் துண்டு ஒண்ணு கெத்துன்னு வெளியேறிப் பொத்துன்னு விழுகுது.

ஒம்போது கிலோ; கொழுப்புப் பசையுள்ள ஆடு; எளங்கறி. எல்லாம் தெரிஞ்சுபோச்சு சுப்புக்கு.

எந்த ஆட்டையும் சங்கப் புடிச்சா செருமி இருமித் துப்பத்தான் செய்யும். அந்த நாடகத்தை யும் நடத்திக் காமிச்சுட்டான்.

'யண்ணே கருத்தமாயண்ணே! குட்டி எளங்குட்டி; கொழுப்பு சேரல. ஏழெட்டுக் கிலோ வந்தாப் பெருசு. அதுவுமில்லாம இருமுது ஆடு. சீக்கு வந்த மந்தையில சிக்கியிருக்கும் போலிருக்கு. போங்க... போயி வேலையப் பாருங்க. வித்து வச்சிருக்கேன்; வந்து வாங்கிட்டுப் போங்க.''

அவன் பசப்பு - பம்மாத்து - வித்தை - வினயம் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துக் கிட்டேயிருந்தாரு கருத்தமாயி.

'சரி ஆனது ஆகட்டும். இவன் அடிக்கிற காசு இவன் எழவுக்கு நான் இப்பவே செய்யிற மொய்யா இருக்கட்டும்.’

புறப்பட்டாரு.

கடைசியா ஒரு பார்வை பாத்தாரு வீட்டு வெள்ளாட்டை. அது அவரைப் பாத்துச்சு ஒரு பார்வை:

''எழவுக்குப் போறவரே! உங்க வீட்டுல இருந்து யாரு வருவாக என் எழவுக்கு?''

துட்டுச் சேக்கிறதவிடச் சள்ளை புடிச்சது எழவுக்கு செட்டு சேக்கிறது.

இந்தா இந்தான்னு இழுத்துப் பறிச்சு சொந்தபந்தங்க ஒரு மணி வாக்குல ஒண்ணு சேருதுங்க.

பெரிய கருப்பு, மண்டையன், செவத்தராமன், ஒத்த வீட்டு மூளி, சின்ன இருளாயி, செவனம்மா, மாங்காயன், ஒத்தக்கண்ணு மணி, கருவாட்டு முத்தம்மா எல்லாரையும் ஒண்ணு சொன்னாப்புல கூட்டிட்டாரு.

தோட்டத்துல இருந்து சிட்டம்மாவ வத்தலக்குண்டுக்கு நேர வரச்சொல்லிச் சவுளி எடுத்தாக. உத்தப்பநாயக்கனூர்ல எறங்கி, பஸ்ஸு மாறி வந்துட்டாக கல்லூத்துக்கு.

ஆம்பளைக பின்னப் போக, நெறை மரக்காவும் சீலையும் சுமந்து பொம்பளைக முன்னப் போக, பொம்பளைகளுக்கும் முன்னப் போறாக கொம்பு ஊதுற ரெண்டு பேரு.

வித்தையெல்லாம் இந்த ஊர்லயே வித்துறணும்னு முடிவு பண்ணிட்டாக ரெண்டு பேரும். தம் புடிச்சு அந்த ஊது ஊதுறானுக. கிழியுது காது கேக்கிற ஆளுகளுக்கு. நல்ல வேளை வெள்ளச்சாமி செத்தே போனாரு; இல்லேன்னா கேட்டுச் செத்திருப்பாரு.

''வந்துட்டாகய்யா சம்பந்தகாரக'' கல்லூத்தே வேடிக்கை பாக்குது.

இந்தக் கூட்டத்தை ஒதுங்கச் சொல்லிக் கடந்து போகுது தக்காளிப் பழ நெறத்துல காரு ஒண்ணு. போறாக முத்துமணியும் அவன் பொண்டாட்டியும், செத்த வீடு விசாரிக்கவா போகுதுக? செவப்பு காரைக் காமிக்கணுமேங்கிற பகுமானம்.

ஆத்தாளக் கட்டிப் புடிச்சு மக அழுக, மகளக் கட்டிப் புடிச்சு ஆத்தா அழுக, சக்தியெல்லாம் திரட்டி ஆனமட்டும் 'தம்’ கட்டி அழுது பாத்தும் கண்ணீர் வரல ரெண்டு பேருக்கும்.

மழைக் கோப்பா இருந்துச்சு. நாலு மணிக்கே கட்டித் தூக்கிட்டாக பாடைய; எடுக்கப் போற நேரத்துக்குச் சின்னப்பாண்டியும் வந்து சேர்ந்துட்டான்.

சுடுகாட்டுல இருந்து திரும்புனாக. சொட்டையில்லாம எல்லாரும் கால்ல தண்ணி ஊத்திக் கழுவுனாக.

''ஒம்பதாம் நாளு உருமாக்கட்டு.''

கெடு குறிச்சுக் கிளம்பிருச்சு வந்த கூட்டம்.

கல்லூத்துல பஸ்ஸு ஏத்தி உத்தப்பநாயக்கனூர்ல எறக்கித் தொண்டை காஞ்சுபோன சாதிசனத்துக்குக் காப்பித் தண்ணி வாங்கித் தாராரு கருத்தமாயி.

''மிச்சரா? பக்காவடையா? வேணுங்கறத வாங்கித் தின்னுங்கப்பா.''

சிட்டம்மாவுக்குப் பொறுக்கல. கருத்தமாயி ஆடம்பரம் பண்றதா அவ அடிமனசு சொல்லுது.

''ஏன்டி... செவனம்மா! எங்க வீட்டு ஆளு இந்த மின்னு மின்னுது. எனக்குத் தெரியாம எங்கேயோ வச்சு எடுத்துச் செலவழிக்குது இந்தாளு.''

''எடுத்து எங்க செலவு பண்றது? இருக்கிறத வித்துத்தான் செலவு பண்ணுனேன் செவனம்மா.''

''விட்டாப் பொண்டு புள்ளைகளக்கூட வித்துச் செலவு பண்ணிரும் இந்தாளு.''

''விக்கலாம் - எவன் வாங்குவான்?'' சலிச்சுக் கோவிச்சுக்கிட்டாரு கருத்தமாயி.

காஞ்சுபோன தொண்டைக்குக் காப்பித் தண்ணி ஊத்தி நனைக்கிறப்ப வெள்ளாட்டு ஞாபகம் வந்துருச்சு சிட்டம்மாவுக்கு.

''விடியக் கருக்கல்ல தண்ணி வச்சது. பாவம் கொலப்பட்டினியா எரையில்லாமக் கெடக்கும் என் ஆடு. போறபோதே ஆமணக் கங்குழை ஒடிச்சுக்கிட்டுப் போகணும் செவனம்மா.''

''எரையான கழுதைக்கு எரை எதுக்கு? வெள்ளாட்ட வெட்டி வித்துட்டுத்தான் எழவு வீட்டுக்கே வந்திருக்கோம்.''

''யாத்தே என் வெள்ளாடு போச்சே.''

காப்பி கிளாசைத் தரையில வீசிச் செதறு தேங்கா போட்டு, வீச்சுன்னு கத்தி அழுது அமளி துமளி பண்றா சிட்டம்மா.

எழவு வீட்டுல வராத கண்ணீரு, கொட்டுது இப்பக் கொடம் கொடமா.

சிட்டம்மா வெள்ளச்சாமிக்கு அழுதாளே... அது பொய்யி, இப்ப - வெள்ளாட்டுக்கு அழுகிறா பாருங்க... இதுதான் மெய்யி!

- மூளும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism