Election bannerElection banner
Published:Updated:

``செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா?" - நீண்டகால மர்மத்துக்கு விடை தரும் நாசா

``செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா?" - நீண்டகால மர்மத்துக்கு விடை தரும் நாசா
``செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா?" - நீண்டகால மர்மத்துக்கு விடை தரும் நாசா

``செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா?" - நீண்டகால மர்மத்துக்கு விடை தரும் நாசா

``இன்னும் அதிக பட்சம் நூறு வருடங்கள் தான் பூமியில் மனிதர்கள் வாழ முடியும் அதற்குள்ளாக வேறு இடத்தைத் தேடி குடியேறிவிட வேண்டும்"  என  அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால் தெரிவித்திருந்தார். உண்மையில் அவர் கூறியபடியே நிஜத்தில்  நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்தப் பூமி இப்படியே நிலையாக  இருந்துவிடப் போவதில்லை, மனிதர்களும் அதை விரும்புவது போலத் தெரியவில்லை. எதிர்காலத்தில் ஒரு வேளை மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாகப் பூமி மாறினால் மனிதர்களுக்கு இருக்கும் ஒரே வழி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியதைப் போல வேறு கிரகத்தில் குடியேறுவதுதான்.

எதிர்காலத்தில் எங்கே போய் வாழ்வது ?

எதிர்கால குடியேற்றத்துக்கான தேடுதலை மனிதர்கள் தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. உலக நாடுகளின் முதல் இலக்கு பூமிக்கு அருகிலே சுற்றிக்கொண்டிருக்கும் நிலவுதான். அமெரிக்கா, ரஷ்யா எனப் பல உலக நாடுகள் நிலவை ஆராய்வதில் கவனத்தை செலுத்தின. ஆனால், அங்கே உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று தெரிந்ததும் உலக நாடுகளின் கவனம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் மற்ற கோள்களின் பக்கமாகத் திரும்பியது. குறிப்பாகச் செவ்வாயின் பக்கம்.

1950-களில் செவ்வாய்க் கிரகம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆனால், 1960-களுக்குப் பிறகு அமெரிக்கா செவ்வாயை ஆராய்ச்சி செய்யும் திட்டங்களைத் தொடர்ச்சியாக செயல்படுத்தியது. அதன் பிறகு வழக்கம்போல மற்ற உலக நாடுகளும் செவ்வாயின் பக்கம் திரும்பின. அதுவும் கடந்த கால் நூற்றாண்டுகளில் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சி உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவும் கூட தனது பங்குக்கு மங்கல்யான் என்ற விண்கலத்தைச் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. முதலில் தண்ணீர் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தவர்கள் படிப்படியாக அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்தார்கள். தேடலின் அடுத்தகட்டம் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதுதான். ஒரு வேளை உயிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் அடுத்தகட்டமாக மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதும் அதன் பிறகு அங்கே குடியேறுவதும்தான் இந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியின் இறுதி நோக்கமாக இருக்கும்.

செவ்வாயில் உயிர்கள் இருக்கிறதா ?

செவ்வாயின் வளிமண்டலத்தில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களால் புகைப்படம் எடுக்க முடியும், வளிமண்டலத்தை ஆராய முடியும் ஆனால், அங்கே ஏதேனும் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிய தரையில் இறங்குவதுதான் ஒரே வழி. ஆனால், பூமியின் வளிமண்டலத்தைவிட நூறு  மடங்கு அதிக அடர்த்தியைக் கொண்டசெவ்வாயில் ஓர் ஆய்வு வாகனத்தைப் பாதிப்பின்றி தரையிறக்குவது என்பது சற்று கடினமான விஷயம்தான். 1971-ம் ஆண்டில் சோவியத் யூனியன் இரண்டு விண்கலங்களைச் செவ்வாயில் தரையிறக்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்தது. 1997-ம் ஆண்டில் நாசா அனுப்பிய  Sojourner என்ற ஆய்வு வாகனம் செவ்வாயின் தரையை முதன் முதலாகத் தொட்டது. அது முன்று மாத காலம் சிறப்பாகச் செயல்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா அனுப்பிய பல ஆய்வு வாகனங்கள் செவ்வாயின் நிலப்பரப்பில் இறங்கி ஆய்வு செய்தன.

இவ்வளவு இருந்தாலும் கடைசியாக  நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி (Curiosity) ரோவர் கொஞ்சம் ஸ்பெஷல். 2011-ம் ஆண்டில் அனுப்பப்பட இது ஆகஸ்ட் 6, 2012  அன்று செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது ஸ்பெஷலாக கருதப்பட காரணம் இதில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் தான்.  தரையைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்வதற்கு , இன்னும் பல பரிசோதனை மேற்கொள்ள என பல்வேறு மேம்படுத்தப்பட்ட கருவிகள் இதில் பொருத்தப்பட்டிருந்தன. ஆறு வருட காலத்தில் 19 கிலோமீட்டர் தூரம் பயணித்து இன்று வரை சிறப்பான நிலையில் செயல்பட்டு வருகிறது. இறுதியாக க்யூரியாசிட்டி ரோவர்தான் செவ்வாயின் நீண்ட கால மர்மத்துக்கும் விடையைக் கண்டுபிடித்திருக்கிறது.

செவ்வாய் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட முடிவு செய்திருப்பதாக நாசா கடந்த சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. அதன்படி செவ்வாயில் முக்கியமான கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. மூன்று பில்லியன் வருடங்கள் பழைமையான இந்தக் கரிம மூலக்கூறுகளை ஒரு காலத்தில் ஏரியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இடத்தில் இருந்த பாறையை ஆய்வு செய்ததில் இதைக் கண்டுபிடித்திருக்கிறது க்யூரியாசிட்டி ரோவர். கரிம மூலக்கூறுகள் வாழும் உயிரினத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகவும், அவற்றை உருவாக்குவதில் முக்கியமானதாகவும் கருதப்படுகின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த மூலக்கூறுகள் செவ்வாயில் வாழ்ந்த உயிரினங்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது உயிரினங்களுக்கு அவை உணவாகப் பயன்பட்டிருக்கலாம். இந்தப் புதிய கண்டுபிடிப்பு செவ்வாயில் தொடர்ந்து உயிரினங்களைத் தேடுவதற்கான ஊக்கத்தை அளித்திருக்கிறது. எதிர்காலத் திட்டங்கள் மூலமாக இன்னும் சிறப்பான தகவல்களைப் பெற முடியும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தவிர செவ்வாயின் வளிமண்டலத்தில் காணப்படும் மீத்தேன் வாயுவைப் பற்றிய முக்கியமான விஷயம் ஒன்றையும் க்யூரியாசிட்டி ரோவர் கண்டறிந்திருக்கிறது. கோடைக்காலத்தில் வளிமண்டலத்தில் அதிகமாகக் காணப்படும் மீத்தேன் வாயுவின் அளவு குளிர்காலங்களில் குறைந்து காணப்படுகிறது. இந்த வேறுபாடு எதனால் நிகழ்கிறது என்பதை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும் மீத்தேன் வாயு செவ்வாயின் நிலப்பரப்புக்குக் கீழே ஆழத்தில் இருந்து வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு வேளை மீத்தேனை வெளியிடுவது நுண்ணுயிர் அல்லது பல கோடி வருடங்களுக்கு முன்னால் புதைந்து போன உயிரினங்களா என்பதை  நிலத்தை இன்னும் ஆழமாகத் தோண்டிப்பார்த்தால் அறிந்துகொள்ள முடியும். எது எப்படியோ செவ்வாயில் உயிர் தேடுதல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு