Published:Updated:

சிறையில் பேரறிவாளனுக்கு 27-வது ஆண்டு நிறைவு... ஒரு 'சின்ன விசாரணை'யின் கதை!

சிறையில் பேரறிவாளனுக்கு 27-வது ஆண்டு நிறைவு... ஒரு 'சின்ன விசாரணை'யின் கதை!
சிறையில் பேரறிவாளனுக்கு 27-வது ஆண்டு நிறைவு... ஒரு 'சின்ன விசாரணை'யின் கதை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ’சின்ன விசாரணை தான்’ என்று சொல்லி பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் ஆகின்றன.

``ஒன்றுமில்லாததற்கு அவனுக்கு அந்த புதிய வாழ்க்கை வழங்கப்படமாட்டாது, அதற்கு அவன் மிக மிக அதிகமான விலையைத் தர வேண்டும் அதாவது அது பெரிய போராட்டத்தையும், பெருந்துயரத்தையும் விலையாகக் கேட்கும். ஆனால், அதுதான் புதிய கதையின் தொடக்கம் - ஒரு மனிதனின் படிப்படியான புதுப்பித்தலின் கதை, அவனது மீளுருவாக்கத்தின் கதை, ஒரு உலகத்திலிருந்து இன்னொன்றுக்கு அவன் கடந்து செல்வதன் கதை, அவனறியாதப் புதிய வாழ்க்கையின் தொடக்கம் அது. அதுவே அந்த புதிய கதையின் கருவாக இருக்கும், ஆனால், அதற்கு நமது தற்போதைய கதை முடிய வேண்டும்’’ - ஃபியோதர் தாஸ்தோவ்ஸ்கி (குற்றமும் தண்டனையும்)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ’சின்ன விசாரணை தான்’ என்று சொல்லி பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் ஆகின்றன. 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்ற காரணத்துக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. அவரது கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ’அந்த பேட்டரியை எதற்காக வாங்கிக் கொடுத்தேன்’ எனத் தெரியாது என்ற பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதி தவறிழைத்துவிட்டேன் என்று விசாரணை அதிகாரி தியாகராஜன் வருத்தம் தெரிவித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. தூக்குக் கயிற்றின் நிழலிருந்து விடுவித்து உச்சநீதிமன்றம் பேரறிவாளனின் தண்டனையை ஆயுளாகக் குறைத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன.  ``உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசு மூன்று நாள்களுக்குள் கருத்து சொல்லாவிட்டால் எழுவரும் விடுவிக்கப்படுவார்கள்’ என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்து நான்கு ஆண்டு காலம் போய்விட்டது. ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. ’ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை 19 ஆண்டுகளாக சி.பி.ஐ விசாரித்துக்கொண்டிருக்கின்றது. எனவே, இதுதொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு தன் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. விசாரணை நீதிமன்றம் மேற்கண்ட விசாரணையை கண்காணிக்க வேண்டும் என  பேரறிவாளன் நீதிமன்றத்தில் மனு செய்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன.  இதுதொடர்பான மேல் முறையீட்டில் மறுவிசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் ஆகிறது. ’என் தந்தையைக் கொன்றவர்களை நானும் பிரியங்காவும் மன்னித்துவிட்டோம்’ என ராகுல் காந்தி பேசி மூன்று மாதங்களாகின்றன. ’மத்திய அரசு விடுவிக்கச் சொன்னால் உடனே விடுதலை செய்வோம்’ என தமிழக அரசு சொல்லி ஒரு மாத காலமாகிறது. என்றோ முற்றுப்புள்ளி வைத்திருக்கப்பட வேண்டிய ராஜீவ் காந்திக் கொலை வழக்கு ஆண்டுக்கணக்கில் மாதக்கணக்கில் நாட்கணக்கில், நிமிடக்கணக்கில் நொடிக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகிறது.

சற்றே நீளமான இந்தப் பத்தியை படித்து முடிப்பதற்கே நமக்கெல்லாம் அயர்ச்சியாக இருக்கக் கூடும். ஆனால், ராட்சத சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட சிற்றெறும்பைப் போல, தனது 19-வது வயதில் ராஜீவ் கொலை வழக்கு எனும் உயர்மட்ட சதியில் மாட்டிக்கொண்ட பேரறிவாளன் 27 ஆண்டுகளாக இந்த விஷயங்களை வாழ்ந்து கடப்பதென்பது எத்தகைய கொடுங்கனவாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

1980 மற்றும் 1990களில் ஒட்டுமொத்தத் தமிழகமுமே விடுதலைப்புலி ஆதரவாளர்களாகவே இருந்தது. இளைஞர்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் திகழ்ந்தார். புலிகள் தமிழகத்துக்கு வருவதும் ஆதரவாளர்களின் வீடுகளில் தங்குவதும்கூட சர்வ சாதாரணமான விஷயமாகவே இருந்தது. குறிப்பாக திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் விடுதலைப் புலிகளோடு அணுக்கமானத் தொடர்பில் இருந்த காலகட்டம் அது. பெரியாரியக் கொள்கையில் ஊறிய பேரறிவாளனின் குடும்பமும் ஈழத் தமிழர்களோடு நல்லுறவில் இருந்தது அப்போதிருந்த ஒரு ’கலாசாரத்தில்’ அங்கம் தானே தவிர தனித்த, வினோதமான செயல்பாடு அல்ல. அரசியல் பின்னணியோ, செல்வாக்கோ இல்லாத, ஆனால், உறுதியான கொள்கைப் பிடிப்புகொண்ட ஒரு எளிய மனிதனுக்கு நேர்ந்தது அந்த பெருங்கொடுமை.

ராஜீவ் காந்திக் கொல்லப்பட்டதும் ஒட்டுமொத்த தேசமும் அவ்வளவு ஏன் சர்வதேசங்களும்கூட அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில் இந்திய அரசுக்கு கடுமையான நெருக்கடி உண்டானது. நாட்டின் பாதுகாப்பின் மீது ஆட்டங்கண்டிருந்தக் கூட்டு மனசாட்சியின் நம்பிக்கையை மீட்டெடுக்க பல நிலைகளிலும் கைது நடந்தது. யாரையாவது கைது செய்து தண்டனை வழங்கப்பட்டால் தான் அந்த கூட்டு மனசாட்சியின் பயம் அடங்கும் என்ற நிலை.  கொன்றது விடுதலைப் புலிகளே என அக்கணமே தீர்ப்பெழுதப்பட்ட நிலையில் புலி ஆதாரவாளர்களைச் சுற்றி வளைத்தனர் மத்திய புலனாய்வு அதிகாரிகள். சி.பி.ஐ அள்ளிக் கொண்டு போன நூற்றுக்கணக்கோரில் பேரறிவாளனும் ஒருவர். அப்போது அவர், எலெக்ட்ரானிக்கல் அண்ட் கம்யூனிக்கேஷன் படிப்பில் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பைத் தொடர பெரியார் திடலில் தங்கியிருந்தார். ’சின்ன விசாரணைதான்’ என்ற வார்த்தைகளை நம்பி எந்த எதிர்ப்பும் காட்டாமல் பேரறிவாளனை அவரது பெற்றோர் அற்புதம் அம்மாள் மற்றும் குயில்தாசன் இருவரும் சி.பி.ஐ அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தனர். அந்த நாள் ஜூன் 11, 1991. இதோ...இரட்டை ஆயுள் தண்டனைக்கான காலகட்டம் முடிந்துவிட்ட நிலையில், இன்றும் கூட சிறையிலிருந்து வெளியேறும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்களில் 41 பேரை வடிகட்டி அவர்கள் மீது சென்னை பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது சி.பி.ஐ. ராஜீவ்காந்தி படுகொலையை நடத்தியது விடுதலைப் புலிகளே என அது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உட்பட மூன்று பேர் தலைமறைவாகி இருந்த நிலையில், கொலையாளிகளான வெவ்வேறு சூழல்களில் உயிரிழந்த தானு மற்றும் சிவராசன் உட்பட 12 பேர் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் தருவாயில் உயிரிழந்துவிட்டதால், எஞ்சிய 26 பேருக்கு 1998 ஜனவரி 28-ம் தேதி தூக்குத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது தடா நீதிமன்றம். உச்சபட்ச தண்டனை அளிப்பதற்கு, பேரறிவாளன் மீது வைக்கப்பட்டக் குற்றச்சாட்டு, அவர் ’9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரியை சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தார்’ என்பதுதான். ராஜீவ்காந்தி படுகொலைக்கு காரணமான வெடிகுண்டை வடிவமைத்தது யார், அதை வடிவமைக்கச் சொன்னது யார், இந்த சதி யாருடைய மூளையிலிருந்து உருவாகி வந்தது என்ற முக்கிய கேள்விகளுக்கான விடையை அதாவது உண்மையான குற்றவாளிகள் யாரென கண்டுபிடிக்காமல் குற்றத்துக்கு உடைந்தையாக இருந்தனர் என அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு தூக்கு வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கையே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நீதித்துறை செயல்படத் தொடங்கினால், குற்றவாளியோடு  ஏதாவது ஒரு வகையில்  தொடர்புடையவர் எல்லாம் குற்றவாளியே என்று அறிவிக்கப்பட்டால் இந்திய மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி பேர் சிறை செல்ல வேண்டி வரும்.

இன்று வரையிலும் கூட முக்கியக் குற்றவாளிகளை நோக்கி இந்த விசாரணை எள்ளளவும் நகரவில்லை. இந்திய புலனாய்வு அமைப்பின் தோல்வியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அப்படியான களங்கத்தை ஏற்க இந்திய அரசுத் தயாராக இல்லை. அதனால், இந்தியக் கூட்டு மனசாட்சியின் கொந்தளிப்பை ஆற்றுப்படுத்தும் வகையில் இவ்வளவு நீதிப் போராட்டங்களுக்கு இடையிலும், இவ்வளவு சமூகக் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும் இவ்வளவு திருப்புமுனைகளுக்கு நடுவிலும் 27 ஆண்டுகளாக ஒரே காரணத்தை வேறு வேறு விதமாகச் சொல்லி விடுதலையைத் தாமதித்துக்கொண்டே போகிறது.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரியாக இருந்து ஒய்வுபெற்ற ரகோத்தமன் 31-07-2005 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலும், 10-08-2005 தேதியிட்ட குமுதம் வார இதழிலும்,  ``தனு தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து கொடுத்தவர் யார் என்று இதுநாள் வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை“ என பதிவு செய்திருக்கிறார். இதையே பேரறிவாளனும் சொல்கிறார். ஆனால், இதுபோன்ற விஷயங்களை எந்த நீதிமன்றமும் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

விசாரணை அதிகாரி தியாகராஜன், ’9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை ஒற்றைக் கண் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனா எதற்காக அந்த 2 பேட்டரிகளும் வாங்கிக் கொடுத்தேன் என்பதும் அது ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக என்பதும் எனக்குத் தெரியாது’ என பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில் முதல் பாதியை மட்டுமே பதிவு செய்ததாகவும் ’எனக்குத் தெரியாது’ என்ற விஷயத்தைப் பதிவு செய்தால் அது ஒப்புதல் வாக்குமூலமாக இருக்காது என்பதால் அதை நீக்கினேன் என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட்டு பேரறிவாளனின் விடுதலைக்கு ஆதரவளித்தார்.

ஆனால், ஓய்வு பெற்றப் பின் தியாகராஜன் அளிக்கும் இந்த வாக்குமூலத்தை வைத்து தீர்ப்பில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒரு விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்துக்கு அந்த வழக்கு உயிருடன் இருக்கிற வரை மதிப்பு இருக்கிறது. மாறாக அவர் பதவியில் இருக்கிறாரா இல்லையா என்பது இரண்டாம் பட்சமே! அதிலும் இதுபோல கால் நூற்றாண்டு காலத்துக்கும் முடிவு வராமல் இழுத்தடிக்கப்படும் வழக்குகளில் முன்னதாக விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஒதுக்கிவிட முடியாது. பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை என்பது இன்றளவிலும் நீதித்துறை, சட்டத்துறை, மனித உரிமை தளங்களில் பெரிய விவாதமாக இருந்து வருகையில், எந்த ஒரு முக்கியமான வாக்குமூலத்தையோ சாட்சியோ ஆதாரத்தையோ புறந்தள்ளுவது ஏற்புடையதல்ல.

பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், 18.10.2017 அன்று சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ``இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தீவிரக் குறைபாடு இருக்கிறது. அது இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் மீதான மன்னிக்கமுடியாத களங்கம், இந்த வழக்குக்கான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் ஒருவரான நான் இந்த கடிதத்தை எழுதுவதுதான் சரியாக இருக்கும். நீங்களும் ராகுல்காந்தியும் மனிதாபிமானத்தோடு இவர்களின் தண்டனைக் குறைப்புக்குக் கடிதம் எழுதுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரரான கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில், 14 ஆண்டுகள் கழித்து 1964-ல் அவர் விடுதலை செய்யப்பட்டதையும் தாமஸ் இக்கடிதத்தில் சுட்டிக் காட்டினார். மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் மனித உரிமை ஆர்வலரான வி.ஆர்.கிருஷ்ணய்யர், பேரறிவாளன் விடுதலைக்காக வெகு முன்னதாகவே குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர்.

விசாரணை அதிகாரி, வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரி, வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி அனைவருமே வழக்கு விசாரணையில் மிகப்பெரிய குறைபாடு உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரை மன்னித்துவிட்டதாகக் கூறிவிட்ட பின்னர், மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் நிலையில், யாரை திருப்திப்படுத்த பேரறிவாளனின் விடுதலையில் மத்திய அரசு இத்தனை தயக்கம் காட்டுகிறது?

சுற்றிலும் சூழ்ச்சிகள் சூழ்ந்திருக்கும்போது தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இத்தனை ஆண்டு காலமும் போராடிக்கொண்டே இருப்பது எத்தனை பெரிய மனச்சோர்வுக்கு ஆளாக்கும்! கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், பொதுமக்களின் பேராதரவு இருந்தாலும் நிர்வாக அநீதியினால் (Insitutional Injustice) இவ்வழக்குக்கான நீதி மரித்துவிடாமல், இத்தனை ஆண்டு காலமும் அதை உயிர்ப்போடு நகர்த்திச் சென்றது பேரறிவாளன் என்ற ஒற்றை மனிதனின் பெரும் உழைப்பும் துடிப்பும் என்றால் அது மிகையல்ல. அநீதிகளால் சூழப்பட்ட இவ்வழக்கில் ஓரளவுக்கிற்கேனும் நீதி கிடைத்ததெனில் பேரறிவாளனின் விடாமுயற்சிக்கு அதில் முக்கிய பங்கு உண்டு..  

நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் புலனாய்வு அதிகாரிகளால் எவ்வாறு விசாரிக்கப்பட்டிருப்பார் என்பது மனித உரிமைகள் முற்றிலும் துடைத்தழிக்கப்பட்ட இந்திய காவல்துறையின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்களுக்குத் தெரியும். நகக்கண்ணில் ஊசி ஏற்றுவது தொடங்கி மின்சாரம் பாய்ச்சுவது வரை பல வகையான சித்ரவதைகளையும் பேரறிவாளன் அக்காலகட்டங்களில் அனுபவித்தார்.  ஆனால், தன்னை சூழ்ந்திருந்த இருளைப் போக்குதற்கான ஒளியாய் தன்னையே மாற்றிக்கொண்டார் என்பதே அவரது பலம். ஆரம்பகாலத் தனிமைச் சிறைவாசத்தில் ஒரு நாளில் 22 மணி நேர காலம் மனித முகம் எதையும் பார்க்காத தனிக் கொட்டடியில் அடைந்து கிடந்தார். கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைகளுக்கு நடுவே ஒருவர் வாழ்வின் மீதான பிடிப்புகளையும் மனிதர்கள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவதே இயல்பு. தனது இளமைக் காலத்தை அநீதிகள் தின்று செரித்த நிலையிலும் அவர் பகுத்தறிவாளராகவே பலப்பட்டார்.

சிறையிலிருந்தபடி பிசிஏ, எம்.சி.ஏ முடித்தார். துயரறுத்த இடைப்பட்ட காலங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்தார். சிறை நூலகத்தை பராமரிப்பது, சக கைதிகளுக்கு கல்வி வழி காட்டுவது என நொறுக்கப்பட்ட தன் எலும்புகளை தானே சேகரித்து நிமிர்ந்து நின்றார் என்பதுதான் பேரறிவாளன் மீது இச்சமூகம் பற்று கொள்ளக் காரணம். தனது செயல்பாடுகளையும் அறிவாற்றலையும் நன்னடத்தை என்றளவோடு நிறுத்திக் கொள்ளாமல் தனக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கான சட்டப் போராட்டக் கருவியாகவும் ஏந்தத் தொடங்கினார். தான் எழுதிய, தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற நூலில், ’தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல் உண்மைகள் மற்றும் தர்க்கங்களின் அடிப்படையில் தெளிவாக விளக்கினார். மறுக்க முடியாத அவரது வாதங்கள் அப்போது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.   

ராஜீவ் கொலை வழக்கு சந்தித்த முக்கியமானத் திருப்புமுனைகளில் பேரறிவாளனின் பெயர் காலத்துக்கும் பதிந்திருக்கும். அவர் முன்னெடுத்த முக்கியமான சில விஷயங்களையும் மட்டும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் தாய் அற்புதம் அம்மாள் மற்றும் சில வழக்கறிஞர்கள் துணையுடன் அவர் சிறையிலிருந்தபடி இவ்வழக்குக்காக செய்தவை ஏராளம்.   

2011-ம் ஆண்டு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி குறிக்கப்பட்ட நிலையில், தமிழகமே கொந்தளித்தது. அத்தருணத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்டோரால், தூக்குக்குத் தடை கேட்டு ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் சட்ட அமைச்சரும் வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கோலின் கோன்சால்வ்ஸ் போன்றோர் இவ்வழக்குக்காக வாதாடினர். தடை வழங்கப்பட்டது. இந்தத் தடைக்குப் பிறகு தான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சதாசிவம் அமர்வு மூவருக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி ஏழு பேரையும் விடுவிக்க ஜெயலலிதா முடிவெடுத்ததும் மத்திய அரசுக்குதான் அதிகாரம் என்பதற்கு ஒப்புதலா (concent) மத்திய/மாநிலம் என இருவருக்கும் அதிகாரம் இருக்கிறதா (concurrent) என்ற விவாதம் நடந்தது. ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் என்று தீர்ப்பளிக்க, அதன் பிறகு வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டது.

ராஜீவ் வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை அறிவித்தப் பிறகு 1999 இல், இவ்வழக்குக்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு, இப்படுகொலையில் வெளிநாட்டு சதியிருக்கிறதா என மேற்கொண்டு விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தடா நீதிமன்றம் அதை அனுமதித்த நிலையில், இக்குழு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்களது விசாரணை முடிவுகளை மூடிய உரைகளில் சமர்ப்பித்து வருகிறது. ஆனால், தடா நீதிமன்றம் அதை திறந்து கூட பார்க்கவில்லை. ’அந்த உரைகளை திறந்து பார்க்க வேண்டும்’ என பேரறிவாளன் மனுத்தாக்கல் செய்ய அதை தடா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்தும், கண்காணிப்புக் குழு விசாரணையை விரைவாக முடிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் பேரறிவாளன். அவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலா, தடா நீதிமன்ற வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்குதான் இருக்கிறது எனக் கூறி வழக்கை விசாரிக்க மறுக்கவே, இந்த வழக்கு 2016 டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரஞ்சன் கோகாய், ’ராஜீவ் கொலை வழக்கு இன்னுமா முடியவில்லை’ என கேட்டு அது குறித்த ஆவணங்களை கேட்க இவ்வழக்கு மீண்டும் பரபரப்பானது. தற்போது, இதுவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, ’தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கு முடிகிற வரை விடுவிக்க வேண்டும்’ என்ற மனுவையும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் தண்டனை காலம் முடிவடைவதற்கு வெகு முன்பாகவே நன்னடத்தை அடிப்படையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட, ’எந்த விதிமுறைகளின் கீழ் அவருக்கு விடுதலை வழங்கினீர்கள்’ என்று புனே எரவாடா சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பினார். ஆனால் பதிலளிக்கப்படவில்லை. மீண்டும், இதே கேள்வியை புனேவில் உள்ள மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் கேட்டார். இந்த மனுவும் நிலுவையில் இருக்கிறது.  

1993-ம் ஆண்டு மும்பையில் 257 பேர் படுகொலை செய்யப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா கோர்ட் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சட்டத்தில் (Arms Act) கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு தண்டனை குறைப்பு, பரோலில் வெளிவருதல், முன்கூட்டியே விடுதலை போன்ற சலுகைகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய இவ்வழக்கில் மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுவித்தது. ஆனால், தனிமனித கொலைக்கான இபிகோ 302 சட்டப்பிரிவின் கீழ் வரும் தனது வழக்கில் மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்ற போதிலும் மத்திய அரசு தொடர்ந்து அதற்கு தடையாக இருப்பது ஏன்’’ என்பதுதான் பேரறிவாளன் எழுப்பும் கேள்வி.

இப்படி நாட்டு நடப்புகளையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் சட்டச் செயல்பாடுகளையும் நுணுக்கமாக கவனித்து இவ்வழக்கு திசைமாறிப் போகும் போதெல்லாம் அல்லது மறக்க வைக்கப்படும் போதெல்லாம் சரியான திசை நோக்கி வழக்கை நகர்த்திச் சென்றார். பொதுவாக, இது போன்ற பயங்கரக் குற்றங்களில் சிக்கியவர்களின் பெயர் சமூக உளவியலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும். ஆனால், பேரறிவாளன் என்ற பெயர் தமிழக வீடுகளில் குடும்பப் பெயராக ஒலிக்கிறது. தன் பிள்ளைகளுக்கு இப்பெயரை சூட்டி மகிழ்கிறவர்கள் ஏராளம். 19 வயதில் கைது செய்யப்பட்டப் பேரறிவாளன் 25 ஆண்டுகள் கழித்து தனது 46- வது வயதில், கடந்த ஆண்டுதான் உடல் நலம் குன்றிய தந்தையைக் காண முதல் முறையாக பரோலில் வெளிவந்தார். அப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரை சந்திக்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டே இருந்தனர். ஒரு மாத காலம் முழுக்க கூட்டம் குறையவில்லை. இதற்கிடையே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு சில கட்டுப்பாடுகளோடு கூடுதலாக ஒரு மாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் சிறையிலிருந்தபடி சட்டப் போராட்டத்தை தொடர்கிறார்.  

மகனின் விடுதலைக்காகவும் மரண தண்டனை ஒழிப்பிற்காகவும் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்தனர் பேரறிவாளனின் பெற்றோர். குறிப்பாக அவரது தாய். மல்லிகை வளாகத்தின் வாசலில், ’மகனை விட்டுவிடுங்கள்’ என்று கண்ணீர் மல்க நடக்கத் தொடங்கியவர் இன்றும் நடையாய் நடக்கிறார். ஆயுள் தண்டனைக் கைதிகளின் குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் சிறைக்கு வருவதையே நிறுத்தி விடுவதுதான் வழக்கம். ஆனால், அற்புதம் அம்மாள் இத்தனை ஆண்டுகளில் மகனை சந்திக்கச் செல்லாதே வாரமே இல்லை எனலாம். மகன் சொல்லும் வேலைகளை தவறாமல் செய்து முடிப்பார். தமிழகத்தின் அரசியல் கூட்டங்களில் மரண தண்டனை ஒழிப்புக்காக ஒரு குரல் தொடர்ச்சியாக ஓங்கி ஒலிக்கிறதெனில் அது அற்புதம் அம்மாளுடையதுதான். 27 ஆண்டு தண்டனைக்குப் பிறகு இன்னும் உங்களுக்கு என்ன வேண்டும்? என்பதே அவர் கேட்கும் கேள்வி.

நீதியை பொறுத்தவரை `தாமதம்’ தான் மிகக் கொடூரமான தண்டனை. ஆம், மரண தண்டனையைவிடவும் அதுவே கொடூரமானது. ஏனென்றால் அதுதான் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியும் மரணத்துக்கு இணையான வலியைத் தருகிறது. 27 ஆண்டுகளென்பது சாதாரணமா? விளையாட்டா? வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் சிறையின் இருளில் வதங்கிச் சாக வேண்டுமென எதிர்பார்ப்பது எந்த வகையில் நீதியின் நியாயமாகும்?! இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் முழுக்க முழுக்க சமூகப் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்பதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சுட்டிக் காட்டினார். இந்திய மேட்டுக்குடிகளும் மேல் சாதியினரும் குற்றங்களே இழைப்பதில்லையா என்ன! அவர்களுக்கென்றால் சட்டத்தின் எல்லா ஓட்டைகளும் திறந்து கொள்கின்றன.

பேரறிவாளன், எளிய மக்களின் பிரதிநிதி. ஆயுள் தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணையே நடத்தப்படாமல் பல்லாண்டு காலம் இந்திய சிறைகளில் உழலும் எண்ணற்ற விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வடையாளம். மேல்வர்க்க/சாதியினரின் கூட்டு மனசாட்சியை குளிர்விப்பதற்காக சஞ்சய் தத் போன்றோர் விடுவிக்கப்பட்டு, பேரறிவாளன் போன்றோர் பலிகொள்ளப்படுகின்றனர். ஆயுதங்கள் வைத்திருந்தவரை பார்த்து அச்சப்படாதவர்கள், பேட்டரி கொடுத்தவரை கண்டு மிரள்கின்றனர். இவ்விரண்டிலும் பொருளா பிரச்னை? இல்லை...நிச்சயமாக இல்லை. அவர்கள் சார்ந்த சமூகப் பின்னணிதான். இந்தியக் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த சிலர் தூக்கிலிடப்படுகின்றனர், சிலர் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால், தூக்கிலிடப்படுவதும் விடுவிக்கப்படுவதும் யார் என்பது தான் பிரச்னையே! இந்திய நீதித்துறை வரலாறு தண்டிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள் என்கிறது. பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பது இந்திய அரசு, உச்சநீதிமன்றம், உளவுத்துறை ஆகியவற்றின் மீது படிந்த கரை. அவரை உடனடியாக விடுதலை செய்வதன் மூலமே இவ்வழக்கில் இதுவரை செய்த வரலாற்றுத் தவறை அவை சற்றே திருத்திக் கொள்ளலாம்.

இப்போது தாஸ்தாயேவ்ஸ்கியின் முதல் பத்தியை மீண்டுமொரு முறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

27 ஆண்டுகள் வாழ்வைத் தொலைத்த பேரறிவாளன் புதிய வாழ்வைத் தொடங்க வேண்டுமெனில் இதுவரை அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறை வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும். வஞ்சிக்கப்பட்டவருக்கு இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் நீதியை தர மறுக்கும் இச்சமூகத்தை உண்மையிலேயே பண்பட்டதென்று அழைக்க முடியுமா?   

அடுத்த கட்டுரைக்கு