Published:Updated:

``கூடிய சீக்கிரம் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம்!" - கார்த்தி

``கூடிய சீக்கிரம் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம்!" - கார்த்தி
``கூடிய சீக்கிரம் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம்!" - கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழா மேள தாளங்களுடன் ஆரவாரமாக சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் ஆரம்பமாக, `ஆத்தாடி என்ன உடம்பீ' பாடலோடு என்ட்ரி கொடுத்தார் `சிரிச்சா போச்சு' ராமர். ஆம்! அவர்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 

முதலில் மேடை ஏறிய சூரி, ``எல்லாப் படத்துலேயும் நண்பனாவோ ஏதோ ஒரு கேரக்டராவோ வருவேன். ஆனால், இந்தப் படத்துல முக்கியமான உறவா நடிச்சிருக்கேன். இந்தப் படத்தைப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துலேயும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதை உங்களால உணர முடியும்." என்றார். பின் ராமர், `மாமன்களை அழைக்கிறோம்' என்றவுடன், சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஶ்ரீமன் ஆகியோர் பேசத் தொடங்கினர். அப்போது அகரம் கல்வி அறக்கட்டளை பற்றி பேசிய மாரிமுத்து, ``அகரம் மூலமா கல்விக்காக உதவுகிற மாதிரி சிவக்குமார் அவர்களின் ஆலோசனையுடன் சூர்யாவும் கார்த்தியும் விவசாயிகளைக் காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும்." என்றார். 

`` `பருத்திவீரன்' ஆரம்பிச்சு இன்னைக்கு வரை எங்கே பார்த்தாலும் என்ன `மாமா செளக்கியமா?'னு அதிகம் விசாரித்தவர், கார்த்திதான். `மாயாண்டி குடும்பத்தார்' படத்துக்கு இன்னைக்கு வரை வெளிநாடுகள் உட்பட எல்லாப் பக்கமும் நல்ல பெயர் இருக்கு. அதேமாதிரி, இந்தப் படமும் பெயர் வாங்கித் தரும். காரணம், பாண்டிராஜுடைய உழைப்பும் திறமையும்தான். இந்தப் படத்துல நானும் சேர்ந்து வொர்க் பண்ணது ரொம்பவே சந்தோஷம்." என விடைபெற்றார், பொன்வண்ணன். தொடர்ந்து, படத்தின் நாயகிகள் சாயீஷா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 

``இந்தப் படத்துல ஒரு அப்பா, ரெண்டு அம்மா... ஆக, மூணுபேரும் மேடைக்கு வாங்க" என்று ஒவ்வொருவரையும் தன் ஸ்டைலில் அழைத்தார், ராமர். முதலில் பேசிய பானுப்ரியா, ``இத்தனை ஸ்டார்கள் படத்துல இருக்காங்க. நான் இதுவரை இப்படி ஒரு படத்துல  நடிச்சதில்லை. பாண்டிராஜ் சார் ரொம்ப பொறுமையான நபர். அதேசமயம், தன்னை சினிமாவுக்காக அர்பணிக்கிறவரும்கூட! கார்த்தி தம்பிகூட முதல்முறையா நடிச்சிருக்கேன். ரொம்பவே சந்தோஷம்" என்றார். ``இந்தப் படம் மூலமா அருமையான குடும்பம் கிடைச்சிருக்கு. அந்த வாய்ப்புக்கு நன்றி. கார்த்தி பிரமாதமா நடிச்சிருக்கார். கார்த்தி நடிக்க வர்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். அன்னைக்கு மாதிரிதான், இப்போவும் இருக்கார். இந்தப் படத்தைப் பார்க்கிறவங்களுக்கு உறவுகளோட உன்னதம் தெரியும். ஏதோ ஒரு பிரச்னையால பிரிஞ்சு போனவங்க இந்தப் படத்தைப் பார்த்தா, மீண்டும் சேர விரும்புவாங்க" என்றார், விஜி. 

ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே பேச ஆரம்பித்த சத்யராஜ், ``ஹீரோ கார்த்திக்குகூட ஒரு பொண்ணுதான் ஜோடி. ஆனா, எனக்கு ரெண்டு ஜோடி பார்த்தீங்களா?" என்று புன்னகைத்தார். ``முதல்நாள் சூர்யா கையால சம்பளம் வாங்குனது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒவ்வொரு விஷயத்தையும் இப்படித்தான் இருக்கணும்னு என்னை கரெக்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டு போயிருக்கார். ஒருமுறை ஒரு பெரிய வசனத்தைப் பேசி முடிச்சவுடன், கை தட்டுனாங்க. ஆனா, பாண்டிராஜ் முகத்துல ஒரு சந்தேகம் இருந்துச்சு. அப்போதான், ஏதோ ஒரு இடத்துல நம்மளோட பழைய நடிப்பை வெளிப்படுத்திட்டோமோனு தோணுச்சு. அப்படி தோணும்போதெல்லாம் நானே ஒன்மோர் கேட்டு நடிக்க ஆரம்பிச்சிடுவேன். இப்போ இருக்கிற இளைஞர்களைத் திருப்தி படுத்தணும். அப்போதான் இங்கே நிற்க முடியும். இந்தப் படத்துல எனக்குப் பிடிச்சதே கார்த்தி பைக்ல `விவசாயி'னு எழுதியிருக்கிறதும், படத்தோட டைட்டிலுக்குக் கீழ `எங்க வீட்டுப் பிள்ளை'னு வெச்சிருக்கிறதும்தான். ரெண்டுமே புரட்சித் தலைவரோட படம்" என்று முடித்தார். 

இதற்கிடையில், ``யாரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மாதிரி பேச வேண்டாம். ட்விட்டர் மாதிரி பேசுங்க" என்ற வசனத்தை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தார், ராமர். அடுத்து பேசிய சிவக்குமார், ``அண்ணன் தயாரிப்பில் தம்பி நடிக்கிறார். சந்தோஷமான விஷயம். அதோட சந்தோஷமான செய்தி சத்யராஜ் படத்துல இருக்கார். ஜமீன் குடும்பத்துல பிறந்திருந்தாலும், தனக்கான உழைப்புலதான் வளரணும்னு சென்னைக்கு வந்தவர். இவர்கூட வந்தவங்க எல்லாம் ரிட்டையர்டு ஆயிட்டாங்க. ஆனா, கட்டப்பாவா உலகம் முழுக்கக் கலக்கிட்டு இருக்கார். இவரோட முதல் சம்பளம் பத்து ரூபாய். அப்போ சூர்யாவுக்கு அஞ்சு வயசு, கார்த்திக்கு மூணு வயசு. பெட்ரோல் டேங்க்ல உட்கார வெச்சு கூட்டிக்கிட்டு போய் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தார், சத்யராஜ். கண்டிப்பா, இவங்க எல்லாம் இருக்கிற இந்தப் படம் வெற்றியடையும்" என்றார்.  

ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் மேடை ஏறினார்கள் சிங்கமும் கடைக்குட்டி சிங்கமும். ``ராமர் ஐயாவுக்கு நன்றி. இன்னைக்கு டிரெண்டிங் அவர்தான்!" என்று ராமரிடமிருந்து தொடங்கிய கார்த்தி, ``ரொம்ப நாளைக்குப் பிறகு இப்படி ஒரு மனிதரைப் பார்த்து ரசிச்சேன்னா, அது பாண்டிராஜ் சாரைப் பார்த்துதான். படத்தை ரொம்ப ரசிச்சு எடுத்திருக்கார். சத்யராஜ் மாமாகூட வொர்க் பண்ணது சந்தோசமா இருக்கு. பானுப்ரியா மேடம் டான்ஸுக்கு நான் பெரிய ரசிகன். படத்துல என் முதல் அக்காவோட பையன் சூரி. என்னைவிட அஞ்சு வயசு மூத்தவர். அவருக்கு நான் தாய்மாமன். படம் முழுக்க என்னை மாமானு கூப்பிட்டுக்கிட்டே இருப்பார். எங்க காம்பினேஷன் படத்துல சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கு. பெரிய குடும்பத்தோட வாழ்ந்துட்டு வந்த மாதிரி இருக்கு. இந்தப் படத்தை அண்ணனே தயாரிப்பார்னு நினைக்கவே இல்லை. கூடிய சீக்கிரம் ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்ணுவோம்." என்றார்.

இறுதியாகப் பேசிய சூர்யா, ``இந்தப் படத்துக்கு வொர்க் பண்ண எல்லோருக்கும் நன்றி. பாண்டிராஜ் சாரோட இந்தக் கதையைக் கண்டிப்பா மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்தே ஆகணும்னு நினைச்சேன். படத்துல நடிக்கிறோம்னு இல்லாம, சில காட்சிகளுக்கு எல்லோரும் அவங்களோட உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தைப் பயிரிடுற கடவுள்களுக்கும் தாய்மாமன்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் சந்தோசத்தைக் கொடுக்கும். நன்றி" என்றார். பின், படக்குழுவினர் முன்னிலையில் இசை வெளியிடப்பட்டது. இயக்குநர்கள் சுசீந்திரன், சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

அடுத்த கட்டுரைக்கு