Election bannerElection banner
Published:Updated:

லுக்கா சுப்பி, அப்பட்டமான ஆண்களின் படம்; பெண்கள் தள்ளி வைக்கக்கூடாத படம்..! - மலையாள கிளாசிக் பகுதி 14

லுக்கா சுப்பி, அப்பட்டமான ஆண்களின் படம்; பெண்கள் தள்ளி வைக்கக்கூடாத படம்..! - மலையாள கிளாசிக் பகுதி 14
லுக்கா சுப்பி, அப்பட்டமான ஆண்களின் படம்; பெண்கள் தள்ளி வைக்கக்கூடாத படம்..! - மலையாள கிளாசிக் பகுதி 14

லுக்கா சுப்பி, அப்பட்டமான ஆண்களின் படம்; பெண்கள் தள்ளி வைக்கக்கூடாத படம்..! - மலையாள கிளாசிக் பகுதி 14

லுக்கா சுப்பி...

பொதுவாய் நான் யாரும் இந்தப் படம் பற்றி பேசிக் கேட்கவில்லை. மிகவும் தற்செயலாய் ஒருநாள் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து படம் பார்த்ததாக ஞாபகம். உண்மையில் நம்ப முடியாத ஒரு வழிக்குச் சென்ற படத்தை மிகவும் வியக்க வேண்டியதாயிற்று. அதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குப் பிடித்த ஒரு சப்ஜெக்டாக இருந்தது. இது மாதிரியெல்லாம் யாரும் செய்து பார்க்க மாட்டார்கள், அப்படிச் செய்தால் நன்றாக வராது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். எனது கற்பனையைக் காட்டிலும் உயரத்துக்கு எழும்பியது படம். அது அதன் எல்லையைத் தொட்டது.

முழுமையான படமும் ஒரு பார்ட்டியை மையமாகக் கொண்டது.

அடேயப்பா, அப்பட்டமான ஆண்களின் படம் என்று நினைக்கிறேன். இப்போது நிலவுகிற இசங்களின் சரியான அளவு பற்றி எனக்கு இருப்பது வெறும் ஐயங்கள் மட்டுமே. ஒன்றை முழு சைசில் ஜட்ஜ் பண்ண வர மாட்டேன் என்கிறது. ஒன்று சொல்லலாம் என்றும் தோன்றுகிறது. நிச்சயமாய் பெண்கள் தள்ளி வைக்கக் கூடாத படம்.

துவங்கும்போதே முழு மப்புடன் இருக்கிற ஒரு ஆட்டோ டிரைவர் மீன் கறி, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, தனிமையில் இருக்கிற ஒரு வீட்டுக்குள் அவற்றைக் கொண்டு வந்து சேர்க்கிறான். வருகிற வழியில் அவன் பபெல்லோ சோல்ஜர்ஸ் பாடுகிறான். சமையல் செய்யப் போகிற ஒரு மாஸ்டர் இருக்கிறார். அவருக்கு உதவியாய் ஒரு பெண்மணி இருக்கிறாள்.  ஏதோ பார்ட்டி நடப்பதை பேசிக்கொள்கிறார்கள். முடிந்தால் இங்கிலீஷ் சரக்கை இரண்டு பெக் ஒதுக்க முடியுமா என்று டிரைவர் கேட்டுக் கிளம்பும்போது கார் வருகிறது. 

காரிலிருந்து இவனும் ஆடிக் கொண்டு இறங்குகிறான். பெயர் ரகு.

டிரைவரிடம் ரகு முழு போதையில் நல்ல லோக்கல் சரக்கை தருவிக்க முடியுமா என்று அந்த போதையிலும் கேட்கிறான். அவன் பார்க்கலாம் என்று நகர்ந்து செல்ல, ’யாராவது என்னை உள்ளே கொண்டு போய் சேர்க்க முடியுமா’ என்று தள்ளாடுகிறான். மாஸ்டர் கொண்டு சென்று ஹாலில் உட்கார வைக்கிறார். கண் மயங்கி விழிப்பதற்குள் சித்தார்த்தும் அவனது மனைவியும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறிய மகனும் இருக்கிறான். சித்து ரகுவை எழுப்புகிறான். சில போன் கால்கள், மெசேஜஸ் இவைகளை முடித்துக் கொண்டு அவனும் தண்ணியடிக்கிறான். அப்படி போகிற நேரத்தில் உடனடியாகவே ரபீக்கும் அவனது மனைவி சுஹாராவும் வந்தாயிற்று. பெண்கள் ஒதுங்கிக்கொள்ள ஆண்கள் முழ்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், பெண்களின் கண்களும் காதுகளும் இவர்களைத்தான் குறி வைத்து கூர்மை கொண்டிருக்கின்றன.

ஒரு கெட் டு கெதர். ஒரு கல்லூரியில் படித்த நண்பர்கள் கூடியிருக்கிறார்கள் என்பது சுருக்கம். பதினான்கு வருடங்களுக்கு அப்புறம் நடக்கிற முதல் சந்திப்பு.

இன்னும் வர வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

கல்லூரியில் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். ஏகப்பட்ட நினைவுகள் இருக்கின்றன. மிகவும் ரொமான்டிக்காக சித்து தான் காதலித்த ராதிகாவை நினைவு கூர்வது அவனது மனைவி ரேவதிக்கு நன்றாகவே கேட்கிறது. அவள் பார்ட்டிக்கு வருவாளா என்பதை ரேவதி சற்று முன்பு தான் கேட்டாள். நல்ல வேளை அவள் இருப்பது எங்கோ தூரதேசம். ரகுவும் ஆனியும் அந்தக் கல்லூரியில் தான் விழுந்து விழுந்து காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேரும் வேலை நிமித்தமாய் பிரிந்து போனில் பேசிக்கூட ஒரு வருடமாயிற்று. அவளிடம் இருந்து பிரியப் போகிறேன் என்கிறான் ரகு. அவள் நன்றாய் இருப்பாள், எனக்கும் சுதந்திரம் வேண்டும் என்கிறான் அவன்.

ரகு கொஞ்ச காலமாகவே குடித்தவாறு இருக்கிறான் என்பது தெளிவு. கவிஞன். வேறு பல தேடல்களுண்டு. உனக்கு ஏற்கெனவே இந்த எக்சிஸ்டென்ஷியலிச வியாதி இருந்தது என்கிறான் சித். அவன் குடித்து மறிவதை முதலில் வந்த ரேவதி விரும்பவில்லை. அப்புறம் வந்த சுஹாரா நேரடியாய் அடிக்கிறாள்.

எனக்கு உங்களைத் தெரியும். இந்த பாட்டெல்லாம் எழுதுகிறவர் தானே?

ஏய், அவன் எழுதுவது கவிதை.

எல்லாம் ஒன்று தான், விடுங்கள். நீங்கள் இந்த பாட்டெழுதுவதற்கு தான் குடிக்கிறீர்களா?

இல்லை. குடிப்பதற்காகத் தான் பாட்டெழுதுகிறேன்!

அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை. தனது புருஷன் ரபீக்கிடமே கூட இரண்டே கிளாஸ்தான். அதற்கு மேல் அடித்தால் நான் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று எச்சரிக்கிறாள். அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் எடுத்த உடனேயே ராவாக மூன்று பெக் அடித்து விட்டு வாழ்கையே வேஸ்ட் என்கிறான். அவன் ஒரு டாக்டர். சித் ராதிகாவைப் பற்றி சொல்லி வருகையில், விரும்பிய பெண் கிடைக்காமல் போனதும் நான் என்னை விற்று விட்டேன் என்கிறான். எனது மனைவிக்கும் அவரது அப்பாவுக்கும் நான் ஒரு அடிமை என்கிறான். அவர் என்னை குனிந்து போ என்றால் தவழ்ந்து போய்க்கொண்டிருக்கிறேன் என்று அவன் சிரிக்க மற்றவர்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள். ஆனியை ரகு பிரியப் போகிறான் என்பது ரபீக்கிக்குப் பிடிக்கவில்லை. கல்லூரி காலத்தில் ரபீக் அவளிடம் மனதை விட்டிருக்கிறான் என்பது தெரிய வருகிறது. அவள் வாழ்க்கையை நீ எப்படி கெடுக்கப் போகலாம் என்பதில் அடிதடி. 

அந்த நேரத்தில் ஆனி வருகிறாள்.

சமாளிக்கிறார்கள்.

அவளுக்கு ரகுவின் மனநிலை தெரியாது.

அவனை அவள் அரவணைத்துக் கொள்கிற மனப்பான்மையில் தான் இருக்கிறாள். அவன் மீது இப்போதும் அவள் கொண்டிருக்கிற வாத்சல்யம் அலாதியானது. அதுதான் அவனை மூச்சு முட்ட செய்கிறதோ? விட்டு விடுதலையாக சொல்கிறதோ?

குடி மட்டும் தானா பார்ட்டி என்று ஆனி கேட்கிறாள். அவளுமே கூட கொஞ்சமாய் குடிக்கிறவள் தான்.

சித் பாடுகிறான்.

சித் பாடுவான் என்பதே அவனது மனைவி ரேவதிக்கு இப்போது தான் தெரிகிறது. 

இதற்கிடையில் ரகு கேட்ட லோக்கல் சரக்குடன் ஆட்டோ டிரைவர் வந்து அதை அவனிடம் ஒப்படைக்கிறான். மிச்ச காசை வைத்துக்கொள் என்பதை ஏற்கவில்லை. இரண்டு பெக்கை கேட்டு விழுங்கி விட்டு அவன் கிளம்பும்போது ரகு அவனை நில்லு என்கிறான். நீ பென்னி தானே என்று கேட்கிறான். அனைவரும் அவனை அணைத்துக் கொள்கிறார்கள். அவனும் அவர்களுடன் படித்தவன். ஒரு சீரியல் நடிகையைக் கட்டி, அவளின் மீது சந்தேகப்பட்டு, அது அடிதடி கலகமாகி, இறுதியில் வீடு கார் பணம் எல்லாம் ஒழிந்து குடிகாரனாகி இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பதை பிற்பாடு அவன் சொல்லுகிறான். 
யாரும் எதிர்பாராவண்ணம் ராதிகா வருகிறாள்.

இவர்கள் குரூப்பில் அதி முக்கியமான ப்ளேபாயாக இருந்து இன்று கிறிஸ்துவ பாதிரியாய் இருக்கிற சேவியர் அவளுக்கு இந்தப் பார்ட்டியை சொல்லி இருக்கிறான். அவனுக்கு தேவ ஊழியம் நெருக்கடியாய் இடித்தவாறே இருப்பதால் பார்ட்டிக்கு வரவில்லை.

நிலைமைகள் இறுகுகின்றன.

சித் தன்னை மீறி ராதிகாவில் ஈடுபடுவது ரேவதிக்கு துடிக்கிறது. 

இறுதியாய் வெடிக்கிறாள்.

அதன் எதிர்விளைவில் ரகுவும் ஆனியிடம் தனது முடிவை சொல்லுகிறான்.

ராதிகா யாரையும் பார்க்காமல் கிளம்பிச் செல்லுகிறாள்.

பார்ட்டி கந்தலாகி நிற்கும்போது வருகிறான் சேவியர்.

யாரும் சந்தோஷமாயில்லை.

ராதிகா சென்று விட்டாள் என்று தெரிய வருகிறது.

ஏறக்குறைய படம் முடிகிற இடத்துக்கு வந்து விட்டோம். பென்னிக்கு இப்போது ஒரு மனைவியும் குழந்தையும் உண்டு. குடிக்கிற இடம் தேடி வந்து அவனிடம் காசைப் பிடுங்கி செல்கிறாள் அவள். பென்னி அவளைத் திரும்பக் கூட்டி வந்து என்ன சண்டை போட்டாலும் எங்கள் வாழ்க்கை இனிது என்கிறான். வறுமை மட்டுமே இடர், ஈகோ அல்ல என்கிறான். சேவியர் ராதிகாவுக்காக காத்திருக்கிற அவளது புருஷன் ஜான் பற்றி சொல்லுகிறான். அவன் அனுப்பின நெக்லசை எல்லோரும் பார்க்கிறார்கள். ரேவதி என்னை மன்னித்துக்கொள் என்று ராதிகாவுக்கு மெசெஜ் போடுகிறாள். சேவியர் மிக சிறிய அளவில் அன்பைப் பற்றி சொல்கிறான். ரகு ஆனியின் கரத்தைப் பற்ற வேண்டியதாய் இருக்கிறது.

ஹாப்பி எண்ட் என்று சொல்ல முடியுமா.

சந்தேகம் தான். விஷயங்கள் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

நாம் அக்கரை பச்சை உறவுகளுக்காக அலைபாய்கிறோம். அதைப் பற்றின கற்பனைகள் சுகமாகவும் சௌகர்யமாகவும் இருக்கின்றன. தன்னைச் சுற்றி ஒரு துயர் நிலவுவதாக எண்ணிக்கொண்டு நாம் தனிமைக்கு வந்து சேருகிறோம். அது பெரும்பாலும் தன்னைச் சூழ்கிற அன்பை கவனிக்காத ஒரு தனிமை. எப்போதாவது ஒரு வெளிச்சம் தோன்றலாம். மடமை புரிய வரலாம். ஆயினும் அதை போதிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் வாழ்வு குறைபட்டது. கருத்துகள் நொண்டுகிறவை. இயற்கையில் ஆணும் பெண்ணும் இணைவது இனப் பெருக்கத்துக்கு நோக்கமாயிருக்கலாம். என்றால் திருமணம் என்கிற அமைப்பு எவ்வளவு தூரம் சரியென்று குறைந்த பட்ஷம் எதிர்காலத் தலைமுறை யோசிக்கவே செய்யும். ஒரு ஆணும் பெண்ணும் கரங்களைப் பற்றிக் கொண்டு ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு அம்பது வருஷம் வாழ்வதெல்லாம் கொடுமை என்று நினைக்கிறேன். பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மாற்றுவழிகள் ஒரு நேரத்தில் புலப்பட்டு விடக் கூடும்.

சிறிய படம் தான்.

ஆனால், யோசிக்கத் தூண்டியவாறு இருந்தது.

பெண்களின் தரப்பு இல்லையா. இருந்தது, வலுவாய் இருந்தது. நகைகளை விற்று உலகம் சுற்றுவதா என்று வாயில் அடித்துக் கொள்கிற சுஹாரா ஒரு கட்டத்தில் அப்படியே தனது வளையல்களைக் கழற்றி பென்னியின் மனைவிக்கு கொடுக்கிறாள். ஒரு சிறிய சலனம் கூட இல்லாமல். சுஹாராவிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் நல்ல கான்வென்டில் முதல் மார்க் வாங்கிக் கொண்டு அற்புதமாக படித்துக் கொண்டிருந்தவள். அவளுடைய அப்பா பத்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்துகிறார். பெண்களுக்கு அது போதும் என்றிருக்கிறார். அவள் தனது டாக்டர் கனவை சொல்லி அழவே ஒரு டாக்டரை பிடித்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். என்ன வினோதமான தீர்ப்பு?

படம் சிறியதாக இருப்பினும் எங்கேயும் சோடையாகாத தெளிவான ஆக்கம். தெளிவான பார்வையே ஒரு திரைக்கதையாய் உருவெடுத்திருந்தது. வசனங்கள் வாழ்வைப் பற்றி அலசுவதாய் விரிந்தன. முரளி கோபி எல்லாவற்றிலும் சுழல்வார், தெரியும். ஜெய சூர்யா தான் ஒரு அற்புதமான நடிகன் என்று நிரூபித்த படம் இது. ரம்யா நம்பீசன், முத்துமணி, அபிஜா போன்ற பெண்களின் கண்கள் படத்தை ஆள்கிறது என்று சொல்ல வேண்டும். எல்லோருடைய பேரையும் சொல்லவில்லை, அத்தனை பேரும் பொருந்திக் கொண்டு நிலைத்தார்கள். ஒளிப்பதிவும், இசையும், எடிட்டிங்கும், மற்ற தொழில்நுட்பங்களும் மாற்றுக் குறைவில்லாமல் இருந்தன. என்னடா இது என்கிற அயர்ச்சி ஒருபோதும் உண்டாகவில்லை.

இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

குடி உடல் நலத்துக்கு தீங்கு என்று வருகிற பிட்டை அகற்றவே முடியாமல் எல்லா காட்சிகளிலும் மக்கள் குடித்துக்கொண்டிருந்தார்கள், புகைத்துக்கொண்டிருந்தார்கள். பெண்களுமே அதில் பங்கு பெற்றார்கள். பார்க்கிறவர்கள் தான் திணறிக்கொள்ள வேண்டுமேயல்லாது எடுக்கும்போது இயக்குநர்  எதற்கும் அஞ்சியவராய் தெரியவில்லை. ஏனெனில் அவரது நோக்கம், நல்ல வேளையாய் குடியை ஒழிப்பதாக இல்லை.

குடிக்கு சரணடைகிற மன நிலையை க்ளிக் செய்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு