Published:Updated:

`ரஞ்சித்தை தலித் இயக்குநராகப் பார்ப்பது நியாயமில்லை!' - ஆவணப்பட இயக்குநர் சோம்நாத்

`ரஞ்சித்தை தலித் இயக்குநராகப் பார்ப்பது நியாயமில்லை!' -  ஆவணப்பட இயக்குநர் சோம்நாத்
`ரஞ்சித்தை தலித் இயக்குநராகப் பார்ப்பது நியாயமில்லை!' - ஆவணப்பட இயக்குநர் சோம்நாத்

``ஆதிக்கச் சக்திகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல்வயப்பட்டு ஒன்றுபடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இந்துத்துவ சக்திகள் தேசவிரோதக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நான், மக்களின் போராட்ட மனநிலையை ஆதரிக்கிறேன். அன்றைய தலித் மக்கள், சாதிய மேலாதிக்க பேஷ்வாக்களுக்கு எதிராக பீமா கோரேகான் போரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். சாதிய சக்திகளுக்கு எதிரான ஒரு குறியீடு என்ற வகையில், பீமா கோரேகான் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்'' - ``பீமா கோரேகான் நினைவுப் பேரணி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்வு என விமர்சிக்கப்படுகிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து'' என்றபோது, சில நாள்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அளித்த பதில் இது. 

பிரிட்டிஷ் படையுடன் இணைந்து நடத்தப்பட்ட அந்தப் போரைப் பற்றிய விளக்கமான ஆவணப்படமான, `The Battle of Bhima-Koregaon: An Unending Journey'-யை, சமீபத்தில் சென்னையில் திரையிட வந்திருந்தார், ஆவணப்பட இயக்குநர் சோம்நாத் வக்மரே. டாக்டர் அம்பேத்கர் சார்ந்த சமூகமான `மஹர்’ சமூகத்தைச் சார்ந்தவர் சோம்நாத். சமூகவியலில் இளநிலைப் பட்டம், ஊடகப் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், கம்யூனிட்டி ரேடியோவில் பணியாற்றிய அனுபவம்கொண்டவர். `ஆவணப்படம், திரைமொழி, அதன் உள்ளடக்கம் அனைத்தும், எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்’ என்னும் கருத்தை வலியுறுத்திய அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

``உங்களின் பீமா கோரேகான் ஆவணப்படம் குறித்துச் சொல்லுங்கள்."

``பீமா கோரேகான் போர் முடிந்து, 200-வது நினைவுதினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். இப்போதுகூட, பீமா கோரேகான் என்றோர் இடத்தைப் பற்றி ஊடகங்கள் பேசுவதற்கு, இந்த வருடம் இங்கு நடந்த வன்முறைதான் காரணம். 1817-ம் ஆண்டு பேஷ்வா ராணுவத்துக்கு எதிரான சண்டையில் இறந்த தலித்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வோர் ஆண்டும் பெரும் எண்ணிக்கையிலான தலித்கள் பீமா கோரேகானில் கூடுவது வழக்கமாக இருந்துவருகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் படைவீரர்களாக இருந்த தலித்கள் (மஹர்), பேஷ்வாக்களுக்கு எதிராகப் போரிட்டு வென்றனர்.

1927-ம் ஆண்டு இந்த நினைவிடத்துக்குச் சென்ற டாக்டர் அம்பேத்கர், இந்தப் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 200-வது ஆண்டு நினைவுதினம் என்பதால் இந்த நிகழ்வு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமஷ்த் இந்து அகாதி என்னும் இந்து அமைப்பு, இந்த வருடம் அஞ்சலி நிகழ்ச்சியின்போது தெரிவித்த எதிர்ப்பால் அங்கு ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அதனால் மட்டுமே பீமா கோரேகான் பேசுபொருளாகியிருக்கிறது.

மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள், ஒடுக்கப்பட்டவர்களின், எளியவர்களின் வாழ்க்கையைக் காட்டுவதில் அக்கறை காட்டியதில்லை. பிராமணீயத்தை எதிர்த்து இந்தியாவில் நடந்த முதல் பெரிய போர், பீமா கோரேகான் போர்தான். இது அம்பேத்கரின் காலத்துக்கும் முன்னதாக நடந்த ஒன்று. இது பாடப்புத்தகங்களில் சொல்லப்படாத ஒன்று. பாடப்புத்தகத்தை நிர்மாணிப்பவர்கள், இந்த மகத்தான வரலாற்றைச் சொல்லபோவதுமில்லை. சிலருக்காவது இந்த வரலாறுகுறித்து தெரிவிக்க நினைத்தேன். அந்த வகையில் பீமா கோரேகான் குறித்த ஆவணப்படம், உங்களுக்கு மிகப்பெரிய வரலாற்றைச் சொல்லும்".

``ஆவணப்பட இயக்குநராக நீங்கள் சந்திக்கும் தடைகள் என்னென்ன?"

``முதலாவது தடை நிதிதான். தயாரிப்பாளர் இதற்கு முழு சுதந்திரம் அளிப்பவராக இருப்பாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தயாரிப்பாளர் ஒருவரைத் தேடுவதை நிறுத்திக்கொண்டேன். யாருடைய விளம்பரத்துக்காகவும், நான் எதையும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பொதுவாக, எளிய பின்புலத்திலிருந்து இயக்குநர்கள் உருவாவது கடினம். ஏனெனில், அவர்களுக்கு சப்போர்ட் சிஸ்டம் இருக்காது. ஒரே அளவிலான, எளிய பொருளாதாரப் பின்புலத்தைக்கொண்டவர்களாக இருப்பதால், நிதி திரட்டுவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.

டிஜிட்டல் இந்தியா ஒரே ஓர் உதவியைச் செய்திருக்கிறது. ஒரே சிந்தனையைக்கொண்ட பலரிடம், ஆன்லைனில் நிதி திரட்டி பீமா கோரேகான் ஆவணப்படத்தை உருவாக்கி முடித்தேன். இப்போது, கெயில் ஓம்வேத் மற்றும் பரத் பதங்கரைக் குறித்து ஒரு ஆவணப்படத்தை எடுத்துவருகிறேன். சாதி ஒழிப்பு இயக்கத்தில் இவர்களின் பங்கு மிகப்பெரியது."

``சாதியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய உங்கள் எண்ணத்தில் சாதியின் தாக்கம் என்ன?"

``சாதி இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. நகர்ப்புறங்களில் கொஞ்சம் மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இன்னும்கூட கிராமங்களில் வகுப்பில் உங்கள் பக்கத்தில் உட்காரும் மாணவனும், உங்களுடன் தேநீர் அருந்துவதற்காகச் சேர்ந்துகொள்ளும் ஒரு நபரும், உங்கள் சாதியைப் பொறுத்துதான் அமைகிறார்கள். நானும் எனது நண்பன் ஒருவனும் புனே டெக்கன் கல்லூரியில் படிக்கும்போது, பிராமண மாணவன் ஒருவனுடன் சண்டைபோட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டோம். நாங்கள் மட்டும்தான். அவன் இல்லை. அவன் வகுப்புக்குச் சென்றுகொண்டுதான் இருந்தான்".

``சமீபத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தைச் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் இருவருக்குமான உரையாடலைப் பற்றிச் சொல்லுங்கள்..."

``இரஞ்சித் சிறந்த இயக்குநர். தமிழில், மராத்தியில் இப்போதுதான் எளிய மக்களின் குரல் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவரது படங்களைப் பற்றியும், எனது ஆவணப்படத்தையும் குறித்த அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆழமாகப் பாதித்தது. ஒரு நேர்காணலில், `நான் தலித் இயக்குநராக அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை’ என்று அவர் சொல்லியிருக்கிறார். 

பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இயக்குநரை `பிராமண இயக்குநர்' என்று குறிப்பிடுவார்களா? இரஞ்சித்துக்கு மட்டும் அந்த அடையாளத்தைக் கொடுத்து அவரை சிலர் அந்நியப்படுத்துகிறார்கள். இரஞ்சித்தின் படங்கள் பொது சமூகத்திடம் உரையாடலை ஏற்படுத்தவேண்டும் என விரும்புகிறேன். அவருக்கு முத்திரை குத்தாதீர்கள். ஜிக்னேஷ் மேவானியை எதற்காக `தலித் தலைவர்' என்று அழைக்கவேண்டும்? பொது சமூகத்தை ஆளும், வழிநடத்தும் தகுதி அவருக்கு இல்லையா என்ன? அறிவுக்கடலான அம்பேத்கரும்கூட, அப்படித்தான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்."

``இன்றைய மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில், ஒடுக்கப்பட்டவர்களின், தலித்துகளின் வாழ்க்கை சரியாகக் காட்டப்படுகிறதா?"

``நாகராஜ் மஞ்சுளே, பா.இரஞ்சித், நீரஜ் கெய்வான் போன்ற மிகச்சிலரே தலித்களின் வாழ்க்கையைப் படமெடுக்கிறார்கள். மற்ற இயக்குநர்களும் ஒடுக்கப்பட்டவர்களைத் தங்களது சினிமாவில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அத்தகைய படங்களில் அவர்கள் மீதான கருணையே அதிகமாக இருக்கும். அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை, வாழ்க்கை, கலாசாரம் என எதையும் பேசாமல், கண்ணீர் வரவழைப்பதற்காக அவர்களைப் பாவமாகச் சித்திரிக்கும் போக்கு அதிகமாக இருக்கும். Victimisation படங்களை அத்தகைய இயக்குநர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். கருணை போதும், இனி உரிமைகளைப் பேசலாம் என நினைக்கிறேன்."

``மெயின்ஸ்ட்ரீம் சினிமாக்களில் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என நினைக்கிறீர்கள்?"

``ஸ்டீரியோ டைப்பான விஷயங்களை மாற்ற வேண்டும். சாதிரீதியான ஒடுக்குமுறையை நகைச்சுவையாகவும், பெருமையான விஷயமாகவும் காட்டிய இழிவு மாறவேண்டும். இதுவரை பேசப்படாத 25 சதவிகிதம் மக்களின் வாழ்க்கையையும் சேர்த்தே சினிமாக்களாக வேண்டும். சில இயக்குநர்கள் உருவாகத் தொடங்கியிருக்கிறார்கள். நானும் அதில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்."

பின் செல்ல