Published:Updated:

``இப்படியொரு முடிவை அவள் எடுப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை." - சே பிறந்தநாள் பகிர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இப்படியொரு முடிவை அவள் எடுப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை." - சே பிறந்தநாள் பகிர்வு!
``இப்படியொரு முடிவை அவள் எடுப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை." - சே பிறந்தநாள் பகிர்வு!

``இப்படியொரு முடிவை அவள் எடுப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை." - சே பிறந்தநாள் பகிர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'சே' பிறந்ததினம் இன்று! 'லட்சக்கணக்கான பக்கங்களில் இன்னும் 1000 வருடங்களுக்கு வேண்டுமானாலும் சே குவேராவை பற்றி எழுதிக் கொண்டிருக்கலாம்' என்று கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் குறிப்பிடுகிறார். அசாதாரணமான காரியங்களையும் சாதாரணமாக செய்யும் சே குவேராவை நாம், மிக மன உறுதி கொண்டவராகவும், கூரிய அரசியல் பார்வை மிக்கவராகவும், ராணுவம் மற்றும் பொருளாதார ஆளுமையாகவும், பயணங்களின் காதலனாகவும் அறிந்திருக்கிறோம். அவரது முதல் காதலைப் பற்றி அறிந்திருக்கிறோமா? இல்லை. அவர் தன்னுடைய காதலி சிசினாவை எப்படி விழுந்து விழுந்து காதலித்திருக்கிறார் என்று தெரியுமா.... பார்ப்போம்!

அன்று ஜனவரி 4, 1952. சே குவேராவும், அவருடைய நண்பர் ஆல்பர்டோவும் 500 சி.சி நார்ட்டான் மோட்டார் வாகனத்தில் பயணத்துக்கு கிளம்பினர். பலவகையான மனிதர்கள், பறவைகள், விலங்குகள், புல்வெளிகள், மரங்கள் என இயற்கையின் ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். காதோரம் கிழித்துச் செல்லும் காற்று, ஏனோ சேவிற்கு மட்டும் தென்றலாக இருந்தது. தன் மனம் கவர்ந்த காதலியை நினைத்த படியே, காற்றில் மிதந்தபடி பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது? அப்போது தன்னுடைய காதலியை நினைத்துப் பார்க்கிறார் சே.

மருத்துவம் படித்துக்கொண்டே கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தபோது தங்களது உறவினரின் திருமணத்துக்கு குடும்பத்தினருடன் 'கொரடோபா'வுக்கு சென்றார். அங்குதான் முதன் முதலில், சிசினாவைப் பார்த்தார் சே. அழகிய மங்கையாகிய சிசினாவும், அழகான உருவமும், வெகுளியான பேச்சும் உடைய சேவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அக்கணத்தில் இரு இதயங்களும் இடம் மாறியதில் ஐயமொன்றும் இல்லையே! 'சே குவேராவின் தோற்றத்தைப் பார்த்தவர்கள் அவரை யாராவது காதலிக்க முடியுமா?' என்றுதான் யோசிப்பார்கள்.

ஏனென்றால், சே குவேராவுக்குத் தான் அணியும் ஆடை பற்றியும், சவரம் செய்வது பற்றியும் சிறிதளவும் கவலை இல்லை. பலருக்கு இவரின் புறத்தோற்றம் இதனாலேயே பிடிக்காமல் போனது. ஆனால், அவரின் அகத் தோற்றமோ... கள்ளமில்லா மனதைக் கொண்டது... கூடவே கம்பீரமான தோற்றமும் கொண்டவர். 

சே குவேராவிடம் உள்ள சில இயல்புகள் மற்றவரிடத்திலிருந்து இவரைத் தள்ளி வைத்தது. தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறிவிடுவார். அதே சமயம் கேலிப் பேச்சால், எதிரில் உள்ளவரை நோகடித்தும் விடுவார். அக்காலத்தில், இவரின் வயதை ஒட்டிய இளைஞர்கள் பலரும் நவீன ஆடைகளை மட்டுமே உடுத்தினர். நம் சே குவேராவோ, நைந்து போன ஆடையாக இருக்கட்டும், சுருக்கங்கள் கொண்ட ஆடையாக இருக்கட்டும்... எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவற்றை அணிந்துகொள்வார்.

தன் வாழ்வில் இணையப்போகிற பெண் இவள்தான் என்று முடிவெடுத்து காதலில் தீவிரமானார். சிசினா ஒன்றும் ஏழை வீட்டுப் பெண் அல்ல. செல்வந்தரின் மகள். சிசினாவின் குடும்பத்துக்கு முற்றிலும் வேறானவர் சே குவேரா. காதல் என்ற இணைப்பே இவர்களை இணைத்தது. கோடை விடுமுறையில், சிசினா தன்னுடைய சொந்த வீட்டை விட்டு, அருகில் உள்ள 'மலகுயெனோ' என்ற இடத்தில் தங்களுக்கு உள்ள அரண்மனையில் தங்கினார். 200 ஏக்கர் நிலம், சுற்றிலும் அரேபியக் குதிரைகள் என ஆடம்பரமான அந்த அரண்மனையில் தங்கினார் சிசினா. உடனே நம் சே, தனது மோட்டார் வாகனத்தை எடுத்துக்கொண்டு சிசினாவைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்.

இரு வீட்டிலும் காதல் விவகாரம் தெரிய வர, சிசினாவின் குடும்பமோ சே குவேராவை நிராகரிக்கவில்லை. அவரின் எளிமையான தோற்றம் அவர்களைக் கவர்ந்தது. இலக்கியம், தத்துவம், வரலாறு என பல துறைகளைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டார். அடிக்கடி காதலியை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வேளையில், நாம் திருமணம் செய்து கொள்வோமா?' என்று இவர் கேட்க, சிசினா தன்னுடைய குடும்ப நிலையை எண்ணிப் பார்க்க...  அவர்களிடையே இடைவெளி ஏற்பட்டது.

குறிப்பாக சே தனது புறத்தோற்றத்தில் அக்கறை இல்லாமல் இருப்பது சிசினாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அடிக்கடி இவர்களிடையே சண்டை எழுவதற்கும் இதுவே காரணம் ஆயிற்று. 'இப்படி இருப்பதுதான் என்னுடைய இயல்பு. மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் நானாகத்தான் இருப்பேன்' என்று கூறுவார் சே.

நாளடைவில் இதுவே இவர்களின் காதலில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சே குவேரா தனது நண்பர் ஆல்பர்டோவுடன் பயணத்துக்குக் கிளம்பினார். அப்போது அவர் சிசினாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 'நான் உன்னை எந்த அளவுக்கு விரும்புகிறேன் என்று உனக்குத் தெரியும். உனக்காக நான் என்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி நான் விட்டுக் கொடுத்தால் நான் என்னையே விட்டுக் கொடுப்பதுபோல் ஆகும்' என்று தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தினார்.

இக்கடிதத்தை சிசினாவிடம் நேரில் கொடுத்து விட்டு கிளம்பும்போது, 'நாம் இருவரும் நிச்சயம் ஒன்று சேர்வோம். எனக்கு நம்பிக்கை உள்ளது' என்று கூறிவிட்டுக் கிளம்பினார். தனக்காக தன்னுடைய காதலி காத்திருப்பாள் என்றும், கடைசி வரை தன்னுடன் வாழ்வாள் என்றும் நம்பினார் சே. ஆனால், சிசினாவுக்கு பல சந்தேகங்கள் எழுந்தன. இப்பொழுது பயணம் என்று கிளம்புபவர் திருமணத்துக்குப் பிறகும் கிளம்பிவிட்டால் என்ன செய்வது? அவருக்கு என் மீது உண்மையில் காதல் இருக்கிறதா? என பல கேள்விகள் சிசினாவைத் தொல்லை செய்தன. இறுதியில் சே குவேராவைப் பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவு செய்தார் சிசினா.

மிகவும் வலி மிகுந்த இம்முடிவை கடிதத்தின் மூலம் சேவுக்குத் தெரியப்படுத்தினாள் சிசினா. இந்தக் கடிதம் சே கையில் கிடைத்தபோதும் அவர் பயணத்தில்தான் இருந்தார். இப்படியொரு முடிவை அவள் எடுப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை சே. காலம் எல்லா விதமான காயங்களையும் ஆற்றும் என்பது சே குவேராவின் வாழ்க்கையிலும் நிரூபணமாகிவிட்டது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு