Published:Updated:

``அப்பப்போ வொர்க்-அவுட், எப்பவுமே டயட்!’’ - நடிகை நந்திதா ஸ்வேதா #FitnessTips

``அப்பப்போ வொர்க்-அவுட், எப்பவுமே டயட்!’’ - நடிகை நந்திதா ஸ்வேதா #FitnessTips
``அப்பப்போ வொர்க்-அவுட், எப்பவுமே டயட்!’’ - நடிகை நந்திதா ஸ்வேதா #FitnessTips

``அப்பப்போ வொர்க்-அவுட், எப்பவுமே டயட்!’’ - நடிகை நந்திதா ஸ்வேதா #FitnessTips

ட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. பிறகு ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’,  என தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்டவர். இப்போது, இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் `நெஞ்சம் மறப்பதில்லை’ ,சசிகுமாருடன் அசுரவதம்’ என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ‘வணங்காமுடி’யில் அவருக்கு போலீஸ் கதாபாத்திரம். அதற்காகவே, பிரத்யேகமாக சில பயிற்சிகளை எடுத்திருக்கிறார். பிஸியான ஷெட்யூலுக்கு இடையேயும் சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது தலைக்காட்டிவருகிறார். ‘ட்ப்ஸ்மாஷ்’ (Dubsmash), ‘மியூசிக்கல்லி’ (Musical.ly) போன்ற செயலிகளில் ‘வெயிட் லிஃப்டிங்’ (Weightlifting), ‘புஷ்-அப்ஸ்’ போன்ற வொர்க்-அவுட்டுகளை வீடியோ எடுத்து, பதிவிட்டு தனது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டே எப்படி ஹெவி வொர்க்-அவுட்களையும் அவரால் ஈஸியாக செய்ய முடிகிறது என்பது குறித்தும் அவரது ஃபிட்னெஸ் ரகசியம் குறித்தும் நந்திதாவே இங்கே மனம் திறக்கிறார்...

``கிராமத்தை கதைக்களமாகக் கொண்ட படங்களுக்காக தனியாக உடற்பயிற்சிகள் செய்யவேண்டியிருக்காது. நகரத்தை மையமாகக் கொண்ட மற்றும் ஆக்‌ஷன் படங்களில் நடிக்கும்போதுதான் உடலுக்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்படும். எனக்கு ஆக்‌ஷன் படங்களில் நடிப்பது பிடிக்கும். 

உடற்பயிற்சி செய்வது எனக்கு எளிமையான விஷயம். ஆனால், தொடர்ந்து பத்து, பதினைந்து நாள்களுக்கு உடற்பயிற்சி செய்தாலே ரொம்ப ஒல்லியாகத் தெரிய ஆரம்பித்துவிடுவேன்.  ஃபிட்னெஸுக்காக நான் அதிக கவனம் எடுத்துக்கொள்வது உணவுப் பழக்கத்தில்தான். ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கைப் பொறுத்து, வொர்க்-அவுட், டயட்  இரண்டுக்குமான ஷெட்யூலைத் தயார் செய்துகொள்வேன். எவ்வளவு சாப்பிடுகிறோம், உணவிலுள்ள கலோரிகளின் அளவு என்ன என்பதைப் பொறுத்து, சிலர் உடற்பயிற்சி செய்வார்கள். நான் உடற்பயிற்சியைத் தேவைக்கேற்ப மட்டும் செய்வதால், உணவுப்பழக்கத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். உடல் எடை பராமரிப்பு, சருமப் பராமரிப்பு உள்ளிட்ட உடல்நலன் சார்ந்த எல்லா விஷயங்களும் என் உணவுப்பழக்கத்தில்தான் இருக்கிறது. டயட்டை ஃபாலோ பண்ணுவதால்தான் ஃபிட்டாகத் தெரிகிறேன்!

ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடற்பயிற்சி முறைகளும், உணவுப்பழக்கங்களும் மாறும். என் டயட்டீஷியனின் ஆலோசனைபடி உணவுகளைச் சாப்பிடுவேன். பட வேலைகள் அனைத்தும் முடியும்வரை இதைப் பின்பற்றுவேன். ‘நர்மதா’ படத்தில் நடித்தபோது ஹெவியான உணவு முறைகளைப் பின்பற்றினேன். அந்தப்படம் முடிந்ததும், மீண்டும் பழைய உடல்வாகைப் பெறுவதற்காக தொடர்ந்து சில நாள்களுக்கு பழச்சாறுகள் மட்டும் குடித்தேன். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை, `சீட் மீல் டே' (Cheat Meal Day) உணவுப்பழக்கத்தை மேற்கொள்வேன். அன்றைக்கு மட்டும், எனக்குப் பிடித்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுவேன். ஒவ்வொருவருடைய உடலமைப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதனால், என்னுடைய டயட் ஷெட்யூலை நண்பர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன்.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபிசிக்கல் ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம். அதனால், தினமும் இரண்டு மணி நேரம் கார்டியோ பயிற்சிகள், யோகா, சில ஹெவி வொர்க்-அவுட்ஸ், 'ஏரோபிக் எக்சர்சைஸ்' (Aerobic exercise)களைச் செய்தேன். சில படங்களில் நடிப்பதற்காக உடல் எடையைக் குறைக்கவேண்டியிருந்தால் டயட்டில் கவனமாக இருப்பேன். சமீபத்தில் `நர்மதா' படத்துக்காக எட்டு கிலோ வரை உடல் எடையைக் குறைத்தேன். அதற்காக, தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் கார்டியோ பயிற்சிகள், மாலையில் வெயிட் லிஃப்டிங், யோகா பயிற்சிகளையும், முறையான டயட்டையும் ஃபாலோ செய்தேன். 

காலையில் ஒரு தர்பூசணித்துண்டு, இரண்டு மணி நேரம் கழித்து அவித்த முட்டை சாப்பிடுவேன். மதியம் வறுத்த மீன், இரவு ஒரு பப்பாளிப் பழத்துண்டு என்று என்னுடைய டயட் ஷெட்யூல் இருக்கும்.

இன்றைக்கு வாழ்க்கைமுறையில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொருவரும் உடலைப் ஃபிட்டாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிவிட்டது. குறிப்பாக, பெண்கள் ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினசரி ஃபிட்னெஸுக்காக என்னென்ன பயிற்சிகள் செய்தோம் என்பதைப் பெண்கள் யோசிக்க வேண்டும். தினமும் யோகா செய்தால்கூட போதும். அதேபோல உணவு விஷயத்திலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். நமக்கு ரொம்பப் பிடித்த உணவாகவே இருந்தாலும், அளவோடு சாப்பிட வேண்டும். எனக்கு அரிசி சாதம் இல்லாமல் சாப்பிடவே பிடிக்காது. ஆனால், 'டயட்' என்று வந்துவிட்டால் அரிசி சாதம் சாப்பிட மாட்டேன். நம் ஆரோக்கியத்துக்கு உடலை ஃபிட்டாக வைத்திருக்கவேண்டியது அவசியம். டயட் ஷெட்யூல் சிரமமாக இருக்கும்போதெல்லாம் இதைத்தான் மனதில் நினைத்துக்கொள்வேன். இதுதான் என்னோட ஃபிட்னெஸ் சீக்ரெட்’’ என்கிறார் நந்திதா ஸ்வேதா.

அடுத்த கட்டுரைக்கு