Published:Updated:

200 பேர், 110 ஆடைகள்! -`நடிகையர் திலகம்' ரகசியம் சொல்லும் காஸ்ட்யூம் டிசைனர் #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
200 பேர், 110 ஆடைகள்! -`நடிகையர் திலகம்' ரகசியம் சொல்லும் காஸ்ட்யூம் டிசைனர் #VikatanExclusive
200 பேர், 110 ஆடைகள்! -`நடிகையர் திலகம்' ரகசியம் சொல்லும் காஸ்ட்யூம் டிசைனர் #VikatanExclusive

200 பேர், 110 ஆடைகள்! -`நடிகையர் திலகம்' ரகசியம் சொல்லும் காஸ்ட்யூம் டிசைனர் #VikatanExclusive

`நடிகையர் திலகம்' என்றாலே நம் எல்லோருக்கும் நினைவு வருவது மறைந்த மாபெரும் நடிகை `சாவித்திரி'. ஆனால், தன்னை மீம்ஸ் போட்டு கேலிசெய்தவர்களுக்குத் தனது அசாதாரணமான நடிப்பால் அனைவரையும் `நாக் அவுட்' செய்திருக்கும் கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாள்களாக சாவித்திரியின் மறு உருவமாய் மாறியிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் கீர்த்தி சுரேஷ் என்றாலும், சாவித்திரியின் தோற்றத்தைக் கொண்டுவருவதற்கு அவர் உடுத்தியிருந்த உடைகளும் முக்கியக் காரணம்.

பொதுவாகவே பழங்கால உடைகளை இந்தக் காலத்தில் வடிவமைப்பது என்பது கடினமான ஒன்று. அதிலும் திரைத்துறையில் தனக்கென்று அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த சாவித்திரி உடுத்திய உடைகளை அப்படியே வடிவமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. தனது முதல் படத்திலேயே அதை மிகவும் நேர்த்தியாகவும், அசல் வண்ணம் மாறாமலும் குழந்தை சாவித்திரி முதல் மரணப்படுக்கையில் வீழ்ந்த சாவித்திரி வரை அனைத்து ஆடைகளையும் வடிவமைத்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த கவுரங் ஷா. தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைன்களில் மறுபடியும் சாவித்திரியை நம் கண்முன் நிறுத்திய ஆடை வடிவமைப்பாளர் கவுரங் ஷாவிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

`` `நடிகையர் திலகம்' படத்தில் பணியாற்றியதை எப்படி உணர்கிறீர்கள்?"

``என்னோட முதல் படமே பெரிய லெஜெண்ட் பற்றிய படம். அதிலும் அவங்களோட கதாபாத்திரத்துக்கு டிசைன் பண்ணணும்னு நினைக்கிறப்போ சந்தோஷம் அதுகூடவே பொறுப்பும் அதிகமாச்சு. இந்தக் கதையோட பழைமைத்தன்மைதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அந்தக் காலத்து உடைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்றதுக்கே பல மாசம் ஆச்சு. இரவு-பகல்னு நிறையா உழைச்சோம். இப்போ மக்கள்கிட்ட இருந்து கிடைக்கிற வரவேற்பைப் பார்க்கிறப்போ, நாங்க பட்ட கஷ்டங்களுக்கான பலன்னு தோணுது."

``சாவித்திரியின் தோற்றத்தைக் கொண்டுவருவதற்கு, என்னென்ன ஆராய்ச்சிகள் செய்தீர்கள்?"

``கீர்த்தி சுரேஷ் போட்டிருக்கும் ஒவ்வொரு உடைக்கும் ஏகப்பட்ட ஆராய்ச்சிகளைச் செஞ்சிருக்கோம். சுமார் 100 பேர் இருந்த டீம், அந்தக் காலத்துக் கைவினைப்பொருள்கள், சிற்பங்கள், மியூசியம் போன்றவற்றை ஆராய்ச்சி செஞ்சாங்க. காஞ்சிபுரம், பனாரஸ் போன்ற பகுதிகள்ல இருந்து கனமான பட்டுத்துணி வகைகளை வாங்கி, கோட்டா, மங்கலகிரி, பிளாக் போன்ற வேலைப்பாடுகளை நாங்களே செஞ்சோம். ஆடை வடிவமைக்கிற டீம்ல மட்டும் 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் கைவினைஞர்கள் இருந்தாங்க. மொத்தமா 200-க்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு இதுல இருக்கு. சாவித்திரி கதாபாத்திரத்துக்கு 110 காஸ்டியூம்ஸ் பண்ணியிருக்கோம்."  

``நிச்சயம் ஏகப்பட்ட  சவால்கள் இருந்திருக்குமே!"

``சரியா சொன்னீங்க. துணிவகை தேர்வு செய்றதுல இருந்து சரியான நிறத்தைத் தேர்வுசெய்றது வரைக்கும் எல்லாமே சவாலாதான் இருந்துச்சு. டைரக்டர் சில சீன்ஸுக்கு `சாட்டின்', `சிஃபான் (Chiffon)', `ஜார்ஜெட்' போன்ற துணிவகையில ஆடை வேணும்னு கேட்டாங்க. அந்தக் காலத்துல இந்தத் துணிவகை பெரும்பாலும் உபயோகப்படுத்திருக்க மாட்டாங்க. காரணம், 1950-களின் ஆடைகள் எல்லாமே கைத்தறியால உருவாக்கப்பட்டவை. அந்தத் தனித்துவத்தை மாற்றிடக் கூடாதுனு கவனமா இருந்தேன். அதனால, இயக்குநர் சொன்ன மெட்டீரியல்ஸ்கூட கைத்தறியில செஞ்சோம். கீர்த்தி சுரேஷோட எந்த உடையும் நவீன காலத்துத் தொழில்நுட்பத்துல உருவான உடைகள் இல்லை. அதுதான் தனிப்பட்ட தோற்றத்தையும் கொடுத்துச்சு. உதாரணத்துக்கு, `மாயாபஜார்' சீன்ல கீர்த்தி போட்டிருக்கும் லெஹெங்கா சோலியோட டிசைன், கலர், துணிவகைனு தேர்வு செஞ்சு முழு காஸ்டியூம் வடிவமைக்கிறதுக்கு மொத்தமா மூணு மாசமாச்சு". 

``படவாய்ப்புகள் வருகின்றனவா?"

``நிறையா வந்துட்டுதான் இருக்கு. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் கைத்தறியை விடவே மாட்டேன். நான் வடிவமைக்கிற உடைகள் எல்லாமே கைத்தறியால செய்றதுதான். இதுக்கேற்ற படவாய்ப்புகள் வந்தால் நிச்சயம் சந்தோஷமா பண்ணுவேன். இதுபோல வாய்ப்புகள் மூலமா கைத்தறியை மேலும் விரிவுபடுத்த எங்களுக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமா இருக்கும்."

``எதிர்காலத் திட்டம்?"

``தரமான கைத்தறி ஆடைகளை உலகம் எங்கேயும் கொடுக்கணும். பழங்கால ஃபேஷன், துணிவகை எல்லாத்தையும் ஆராய்ச்சி செஞ்சு கைத்தறியை அழியாமப் பார்த்துக்கிறதுதான் என் நோக்கம். அதுக்கான முயற்சியை செஞ்சுட்டுதான் இருக்கேன். உங்களின் ஆதரவும் முக்கியம்" என்றுகூறி விடைபெற்றார் கவுரங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு