Published:Updated:

ஜூஸ், கேக், ஐஸ் க்ரீம்... `விவசாயிகளின் ஜாக்பாட்' பேஷன் ஃப்ரூட் சாப்பிட்டிருக்கீங்களா?

ஜூஸ், கேக், ஐஸ் க்ரீம்... `விவசாயிகளின் ஜாக்பாட்' பேஷன் ஃப்ரூட் சாப்பிட்டிருக்கீங்களா?
News
ஜூஸ், கேக், ஐஸ் க்ரீம்... `விவசாயிகளின் ஜாக்பாட்' பேஷன் ஃப்ரூட் சாப்பிட்டிருக்கீங்களா?

ஒரு வருடத்துக்கு ஒரு கொடியிலிருந்து 8 முதல் 9 கிலோ வரை 200 இருந்து 250 பழங்கள் வரை எதிர்பார்க்கலாம். கென்யாவில் மஞ்சள் நிற ஃபேஷன் ஃபுரூட் மூலம் அதிக லாபம் பார்க்கின்றனர்.

மிகப் பழைமையான ஒரு பழவகைதான் இந்த `ஃபேஷன் ஃபுரூட்' (passion fruit). இந்தப் பழம் `பேசிஃப்ளோரா' (passiflora) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது, `பேசிஃப்ளோரா எடூலிஸ்' ( passiflora edulis) என்பது இதன் அறிவியல் பெயராகும். தமிழில் கொடித்தோடை என்று அழைக்கப்படும் இந்தப் பழம் இந்தியா மற்றும் பிரேசிலை தாயகமாகக் கொண்டது.   

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளான நீலகிரி, கொடைக்கானல், வயநாடு போன்ற மலைப்பகுதிகளில் அதிகமாகவும் மற்ற நிலப்பகுதிகளிலும் விளைகிறது.  இப்பழத்திலிருந்து போஷாக்கு நிறைந்த, மருத்துவ குணமுடைய மற்றும் சுவை மிகுந்த ஜீஸ் கிடைப்பதால் வர்த்தக ரீதியாக முக்கியமான பழம் இது. இந்தியாவில் அதிக அளவில் இமாசலப் பிரதேசம் மற்றும் கிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர் போன்ற இடங்களில் விளைவிக்கப்படுகிறது.  

ஜூஸ் தயாரிப்பதற்கு மட்டுமல்லாது,  ஐஸ் கிரீம், கேக் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். வடகிழக்கு இந்திய மலைப்பகுதிகளில் இதன் இலைகள் மருந்துக்காகவும் அதிகம் பயன்படுகிறது. இது வட்டவடிவிலான தோற்றத்தைக்கொண்டது.  இப்பழம் 90 நாள்கள் வரை கெடாமலிருக்கும், இதன் தோல் சுருங்கினாலும் பழத்தின் சுவை மாறாது. இப்பழத்தின் தோல் பகுதியைத் தவிர்த்து நடுப்பகுதியை சாப்பிடலாம்.  இந்தப் பழமானது மஞ்சள், ஊதா, சிவப்பு, பிங்க் போன்ற நிறைய வண்ணங்களில் காணப்படுகிறது. மண்ணின் தன்மை தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து இவ்வாறான நிறங்களில் காணப்படுகிறது. இப்பழங்கள் கொடிகளில் விளைகிறது, அக்கொடிகள் ஐந்து ஆண்டுகள் வரை நின்று பயனளிக்கக்கூடியது. இதன் வேரானது ஈரப்பதம் குறைந்த மண்ணிலும்கூட ஆழமாக வேரிடுகிறது, குறிப்பாகக் குளிர்ச்சியான சூழல்களில் நன்கு வளர்கிறது.  ஒரு கொடியை நட்ட பத்து மாதங்களில் பழம் உருவாகிறது,  80-ல் இருந்து 90 நாள்களில் நன்கு வளர்ச்சியடைந்து விடுகிறது. ஃபேஷன் ஃபுரூட் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களில் கிடைக்கும், மற்ற மாதங்களில் கிடைத்தாலும் இந்த சீசன் சமயங்களில் கிடைக்கும் பழத்துக்கு அதிக வரவேற்பு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு வருடத்துக்கு ஒரு கொடியிலிருந்து 8 முதல் 9 கிலோ வரை 200 முதல் 250 பழங்கள் வரை எதிர்பார்க்கலாம். கென்யாவில் மஞ்சள் நிற ஃபேஷன் ஃபுரூட் மூலம் அதிக லாபம் பார்க்கின்றனர். மஞ்சள் ஃபேஷன்  ஃபுரூட்டில் தயாரிக்கப்படும் ஜூஸுக்கு அங்கு தேவை அதிகமாக உள்ளது. அங்கு ஊதா (purple) நிற ஃபுரூட்டைவிட மஞ்சள் நிற ஃபுரூட்டைத்தான் அதிகம் விரும்புகின்றனர். மஞ்சள் நிற ஃபேஷன் ஃபுரூட்டானது குறைந்த வெப்ப நிலையிலும், ஊதா நிற பழத்தைவிட அளவில் பெரியதாகவும் காணப்படுகிறது. இதன் எடை 60 முதல் 65 கிராம் வரை இருக்கும். பர்ப்பிள் கலர் ஃபுரூட் அதிக மனமாக இருக்கும். இதன் எடை 35 முதல் 50 கிராம் வரை இருக்கும். 

ஓர் ஏக்கருக்கு ஒவ்வொரு செடிக்கும் இடையில் 3 மீட்டர் இடைவெளியிட்டு நடுவதால் 1100 செடிகள் வரை நடலாம்.  நடவு செய்து முதல் ஒரு வருடத்துக்கு இதன் இடையில் ஊடு பயிரிடலாம். கொடைக்கானலில் கோடைக்காலம் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் இப்பழத்தை வாங்கிச் செல்வதால், விற்பனையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.  ஒரு கிலோ 100 முதல் 150 வரை விற்கப்படுகிறது.  

இந்தப் பழத்தின் சுவையானது சிறிது புளிப்பும், சிறிது இனிப்பும் கலந்திருக்கும். இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய்த்தொற்றைத் தடுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால் இதைக் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.  வைட்டமின் ஏ இருப்பதாலும் கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சிறப்பைப் பெற்றது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் கண் பார்வையில் ஏற்படும் குறைகளை சரிசெய்வதற்கு இந்தப் பழத்தைக் கொடுக்கலாம்.

இப்பழத்தில் பொட்டாசியம், இரும்புச் சத்து, நார்சத்து (fibre) போன்ற உடலுக்குத் தேவையான சத்துகள் இதில் காணப்படுகிறது. முக்கியமாக கோலோரெக்டல் கேன்சர் (Colorectal cancer) எனப்படும் குடல்களில் ஏற்படும் புற்றுநோயைக்கு எதிராக செயல்படுகிறது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தையும் குணப்படுத்துகிறது.