Published:Updated:

சூர்மா... ஹாக்கி லெஜண்ட் சந்தீப் சிங்... ஒரு நிஜ பீனிக்ஸ் பறவையின் கதை!

சூர்மா... ஹாக்கி லெஜண்ட் சந்தீப் சிங்... ஒரு நிஜ பீனிக்ஸ் பறவையின் கதை!
சூர்மா... ஹாக்கி லெஜண்ட் சந்தீப் சிங்... ஒரு நிஜ பீனிக்ஸ் பறவையின் கதை!

போராடி வென்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை ரசிக்கும்படியான திரைப்படமாக எடுப்பதையே வழக்கமாகக்கொண்டுள்ளது பாலிவுட். `பாக் மில்கா பாக்', `மேரி கோம்', `தங்கல்' போன்ற திரைப்படங்கள் வரிசையில், இப்போது புதிதாக இணைந்துள்ளது `சூர்மா' திரைப்படம்.

ஷாத் அலி இயக்கத்தில் திலிஜித் தோஷன்ஜ் மற்றும் டாப்சி நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர், கடந்த திங்களன்று வெளியானது. ஹரியானாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சந்தீப் சிங்? 

1986-ம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தவர் சந்தீப் சிங். இவரின் தந்தை குருசரண் சிங் பிந்தர், தாய் தல்ஜித் கவுர் பிந்தர். இவருடைய அண்ணன் பிக்ரம்ஜித் சிங்கும் ஹாக்கி வீரர்தான். 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை மூலமாக சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார் சந்தீப். 2009-ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு, சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து, ஒரு பெருந்தவம்போல இந்திய அணி மலேசியாவுக்கு எதிராகப் போராடி பெற்ற வெற்றி அது. 2010-ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. அதே ஆண்டு, விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் `அர்ஜுனா’ விருது சந்தீப் சிங்குக்கு வந்து சேர்கிறது.

2012- ஆம் ஆண்டு, லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள். தகுதிபெறும் சுற்றுகளில் ஒன்றல்ல இரண்டல்ல, 16 கோல்கள் அடித்துக் குவிக்கிறார் சந்தீப்! `Drag flicking' எனப்படும் ஹாக்கி நுணுக்கத்தில் கைதேர்ந்தவர். சந்தீப் சிங்கின் செல்லபெயராக `Flicker Singh' என்று கூறும் அளவுக்கு ஆபத்தானவர்! ஒருகாலத்தில் இவருடைய drag flicking-ன் வேகம் மணிக்கு 145 கி.மீ ஆக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! 

அளப்பரிய சாதனைகள் புரிந்தவர்தான். ஆனால், இன்று சந்தீப்பை ஒரு நாயகனாக மாற்றுவது எது? சாதாரண தோள்பட்டைக் காயமோ, முட்டிக்காயமோ ஒரு விளையாட்டு வீரரை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று நாம் அனைவரும் அறிவோம். சந்தீப்புக்கு நேர்ந்தது, காயமோ... விபத்தோ அல்ல; ஒரு துப்பாக்கிச்சூடு! 

2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ம் நாள். உலகக்கோப்பை ஹாக்கி பயிற்சிக்காக டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தார் சந்தீப். அவர் பயணம் செய்துகொண்டிருந்த சதாப்தி விரைவுவண்டி, தன்னுடைய வாழ்நாளில் எதிர்பார்க்க முடியாத வலி நிறைந்த ஒரு திருப்பத்தை அளிக்கும் என்று அறியாமல் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அவரது வலது இடுப்பில் ஒரு துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. கணையம், ஒரு பக்க சிறுநீரகம், கல்லீரல் என்று முக்கியமான உறுப்புகளில் காயங்களை உருவாக்கியதோடு நில்லாமல், தண்டுவடத்தையும் பாதித்தது அந்தத் துப்பாக்கிக் குண்டு. 

விளைவு, இரண்டு ஆண்டுகள் சக்கர நாற்காலி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார் சந்தீப். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு தவம்போல மீண்டெழுந்து வந்தார். காரணம், அவருக்கு ஹாக்கியின் மீதிருந்த அளவில்லாக் காதல்! ஒரு விளையாட்டு வீரர் ஃபார்மில் இல்லாமல்போவதற்கு, சிறிய அளவு காயங்களே போதுமானவை. ஆனால், தண்டுவடம் வரை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் முடங்கினாலும், உள்ளத்தின் உறுதி குலையாமல் மீண்டுவருவதெல்லாம் நம் அனைவருக்குமான உற்சாகப் பெருந்தீ! 

இந்த நிகழ்வுகுறித்து பிறகு ஒருமுறை சந்தீப் குறிப்பிடும்போது, ``உடலின் நாற்பது சதவிகித எடையை இழந்து நின்றேன். வெறும் 55 கிலோவிலிருந்து தொடங்கி ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மீண்டு எழுந்தேன்” என்றார். 

இந்தத் திரைப்படத்தின் டிரெய்லரின் நடுவில், `A champion died but a legend was born' என்றொரு வாக்கியம் வரும். அந்த வாக்கியத்துக்கு முழுவதும் பொருத்தமானவர் சந்தீப் என்றால் மிகையாகாது!