Published:Updated:

``ஐயப்பனும் ஷீரடி பாபாவும் வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்குற மாதிரி!’’ - வீரமணிராஜு

``ஐயப்பனும் ஷீரடி பாபாவும் வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்குற மாதிரி!’’ - வீரமணிராஜு

ஐயப்பன் பக்திப் பாடல்களின் ஆதார ஸ்ருதியான வீரமணிராஜு, தன் மெய்சிலிர்க்கும் ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

``ஐயப்பனும் ஷீரடி பாபாவும் வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்குற மாதிரி!’’ - வீரமணிராஜு

ஐயப்பன் பக்திப் பாடல்களின் ஆதார ஸ்ருதியான வீரமணிராஜு, தன் மெய்சிலிர்க்கும் ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

Published:Updated:
``ஐயப்பனும் ஷீரடி பாபாவும் வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்குற மாதிரி!’’ - வீரமணிராஜு

வீரமணிராஜு, கணீர் குரல்... அழுத்தமான வார்த்தை உச்சரிப்பு... கேட்பவரை மயங்கவைக்கும் கான மழையைப் பொழிபவர் வீரமணிராஜு. குறிப்பாக, `ஐயப்பன் பக்திப் பாடல்களின் ஆதார ஸ்ருதி இவர்’ என்றே சொல்லலாம். இவரை அறியாத ஆன்மிக அன்பர்கள் இருக்க முடியாது. அவரை `எனது ஆன்மிகம்' பகுதிக்காகச் சந்தித்தோம்.  


``ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாமியைப் பிடிக்கும். அதுக்கு என்ன காரணம்னா, அந்த இஷ்ட தெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு எதையாவது செஞ்சப்போ அதை நிறைவேத்தித் தந்திருக்கும். 

எங்களுக்கு மகமாயிதான் குலதெய்வம். இஷ்டதெய்வம்னா எனக்கு சபரிமலை ஐயப்பனும் ஷீரடி சாய்பாபாவும்தான். இவங்க ரெண்டுபேரும் என்னோட ரெண்டு கண்கள். அவங்க காட்டுற வழியிலதான் என் வாழ்க்கை பயணம் போய்க்கிட்டிருக்கு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ பாடலை எழுதினது எங்க அப்பா சோமு; பாடினது எங்க சித்தப்பா வீரமணி. அவங்ககூடத்தான் முதன்முதலா சபரிமலைக்குப் போனேன். ஐயப்பன் அருளால இதுவரை நூறு முறைக்கு மேல போயிட்டு வந்துட்டேன். இது என்னோட பெருமை கிடையாது. ஐயப்பனோட கருணை. சபரிமலை சீசன் நேரத்துல எங்களுக்குக் கச்சேரிகள் தொடர்ந்து இருக்கும்கிறதால ஜனவரி 10-ம் தேதிக்கு மேலதான் போவேன். பெரிய வழிப் பாதையில (48 மைல்) ரெண்டு முறை போயிருக்கேன்.  

1970-ம் வருஷத்துல, என்னோட ஒன்பது வயசுலதான் முதல்முறையா சபரிமலைக்குப் போனேன். அன்னிக்குப் பார்த்த சபரி மலைக்கும் இன்னிக்குப் பார்க்கிற சபரி மலைக்கும் பெரிய அளவுல வித்தியாசமிருக்கு. அப்போல்லாம், நடக்க ஆரம்பிச்சிட்டோம்னா சாப்பிடக்கூட எங்கேயும் எதுவும் கிடைக்காது. கையிலிருக்கிற பழங்கள்தாம் உணவு. பம்பை ஆத்தங்கரைக்கிட்டதான்,  கப்பக் கஞ்சினு (மரவள்ளிக்கிழங்குக் கஞ்சி) விற்பனை செய்வாங்க. அதோட ஊறுகாய், பாசிப்பருப்பெல்லாம் போட்டுக் கொடுப்பாங்க. அது ஒரு எனர்ஜி டிரிங்க். காடுகளும் மரங்களும் அப்போ ரொம்ப அடர்த்தியா இருக்கும். கும்மிருட்டா இருக்கும். இப்போ போறதெல்லாம் ஃபைவ் ஸ்டார் சபரிமலை. 

1986-ம் வருஷத்துல சபரிமலைக்கு நானும் நண்பர்களுமா போயிருந்தோம். சின்னப்பாதை வழியாதான் போனோம். `சரங்குத்தி'கிட்ட ஒரு பாதை தனியாப் பிரிஞ்சு, சபரி பீடத்துக்கிட்ட போய்ச் சேரும். `நாமதான் வருஷா வருஷம் மலைக்கு வர்றோமே... நமக்குத் தெரியாத பாதையா?'னு நெனைச்சு, `வாங்க சாமி... இப்படிக் குறுக்கே போனோம்னா சீக்கிரமே சபரி பீடத்துக்கிட்ட இருக்குற படிகிட்ட போயிடலாம்'னு என் நண்பர்களைக் கூட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சிட்டேன். இருபது நிமிஷம் நடந்திருப்போம். லேசா மழை தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு. அதோட இருட்டத் தொடங்கிடுச்சு. பக்கத்துல இருக்கிற ஆளோட உருவமே உத்துப் பார்த்தாதான் தெரியுது. எந்தப் பக்கம் போறதுன்னே தெரியலை. 

`சரி... வாய்க்கொழுப்பால இன்னிக்கு நாம தொலைஞ்சோம்'னு நினைச்சேன்.`ஐயப்பா... இதென்ன சோதனை, எனக்கு ஒண்ணுனாகூடப் பரவாயில்லை. என்னை நம்பி என் நண்பர்களையும் அழைச்சிக்கிட்டு வந்துட்டேனே... ஐயப்பா... ஐயப்பா...’னு மனசுக்குள்ள அலற ஆரம்பிச்சிட்டேன். 

அந்த நேரம் பார்த்து நாங்க இருந்த இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி, கழுதை ஒண்ணு போய்க்கிட்டு இருந்துச்சு. அதைப் பார்த்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சு. சபரிமலைக்குக் காய்கறி பலசரக்குச் சாமான்களை கழுதை மேலவெச்சு சுமையாகக் கொண்டு வர்றது வழக்கம்ங்கிறதால, அதை ஃபாலோ பண்ணினோம்னா ஈஸியாப் போயிடலாம்னு தோணிச்சு. கழுதையை ஃபாலோ பண்ணிக்கிட்டே போனோம். 

தூரத்துல இருமுடி ஏந்திக்கிட்டு, சரணகோஷம் போட்டுக்கிட்டு ஐயப்பசாமிகள் போறது தெரிஞ்சுது. மனசு அப்போதான் ஒரு நிலைக்கு வந்துச்சு. நாங்க எந்த டீக்கடைக்கிட்டே இருந்து சாலையைவிட்டு பிரிஞ்சி போனோமோ அதே இடத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆளுங்களைப் பார்த்த பிறகுதான் `அப்பாடா...’னு மூச்சே வந்துச்சு. டென்ஷன் குறையறதுக்கு டீ சொல்லி குடிக்கலாம்னு போனோம். 
டீக்கடைக்காரர் எங்களைப் பார்த்துமே, `வீரமணிதானே நீங்க?'னு கேட்டார். `ஆமா'னு சொன்னேன். `அப்போ போனவங்க, இப்போதான் வர்றீங்களா?'னு கேட்டார். `நாங்க காட்டுக்குள்ளே ரொம்ப தூரம் போயிட்டோம். அங்கேயிருந்து ஒரு கழுதையை ஃபாலோ பண்ணிக்கிட்டு இப்போதான் வர்றோம்’னு சொன்னேன்.

`கள்ளம் பறையாதீங்க சாமி... கழுதைங்களுக்கு இந்த மலையோட உள்ளடங்கின காட்டுப் பகுதிங்க எல்லாம் தெரியும். அங்கே கரடி, புலி, யானை மாதிரியான வனவிலங்குகளோட நடமாட்டம் இருக்குங்கிறதும் அதுங்களுக்கு நல்லாத் தெரியும். அங்கேயெல்லாம் கழுதைங்க போகவே போகாது. நான் வேணும்னா பந்தயம் கட்டுறேன்... இப்போ அந்தக் கழுதையை நீங்க காண்பிச்சீங்கன்னா, இந்தாங்க... இந்தக் கடையை நீங்களே வெச்சுக்கங்க’னு சொல்லி கடைச்சாவியைத் தூக்கி எங்ககிட்ட கொடுத்துட்டார்.

இதைக் கேட்டதும், ஒரு விநாடி ஆடிப்போயிட்டேன். கழுதை ரூபத்துல வந்தது ஐயப்பன்தான் என்று தெரிஞ்சதும், அங்கேயே அந்த மண்ணுல `பொத்’னு விழுந்து ஐயப்பனைக் கும்பிட்டேன். 

அந்த டீக்கடைக்காரர் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. `உங்களுக்கு வழிகாட்டியாக வந்தது சாட்சாத் அந்த ஐயப்பன்தான்’னு சொல்லி, எங்களுக்குச் செவ்வாழைப் பழங்கள், புட்டு, அஞ்சு குளூக்கோஸ் பாக்கெட்டெல்லாம் கொடுத்துவிட்டார். 

அதே மாதிரி ஷீரடி சாய் பாபா. நான் பாபா பக்தரானது ஓர் ஆச்சர்யமான சம்பவம். சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஜீ தமிழ் டி.வி-யிலருந்து முதன்முதலா பாபாவைப் பத்தி பேசணும்னு சொல்லி வரச் சொன்னாங்க. அவங்கக்கிட்ட `பாபா படத்தை எங்கே பார்த்தாலும் கும்பிடுவேன். ஆனா, அவரைப் பத்தி பேசுற அளவுக்கு எனக்கு விஷயங்கள் தெரியாது. அதனால பதினைஞ்சு நாள் கழிச்சுப் பேசுறேன்’னு சொல்லிட்டேன். ஆச்சர்யம் பாருங்க...

அன்னிக்கு ராத்திரியே பாபா கனவுல வந்தார். தன் கையாலே அட்சதை கொடுத்தார். `என்ன தயக்கம்? நீ யார்னு உனக்குத் தெரியணும்ங்கிறது இல்லை. எனக்குத் தெரியும்'னு சொல்லிட்டு மறைஞ்சுட்டார். அதுக்கப்புறம் தூக்கமே வரலை. அப்பவே ஷீரடி பாபா பத்தின `சத் சரிதம்' (சாய்பாபாவின் சரித்திரம்) புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சிட்டேன். புத்தகத்தை கீழேயே வைக்க முடியலை. 

புத்தகத்தின் வழியாக, பாபா என்னைக் கையைப் பிடிச்சு அழைச்சிக்கிட்டு போற மாதிரி இருந்துச்சு. `பதினைஞ்சு நாள் கழிச்சு வர்றேன்'னு சொன்னவன், ரெண்டாவது நாளே போய்ப் பேசினேன். அதுவும் ஒரே நாள்ல பதினைஞ்சு எபிசோடுக்குப் பேசிட்டு வந்தேன். 
பாபா என் கனவுல வந்ததுல இருந்து எங்க வீட்ல தினம் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக்கிட்டே இருக்கார். ஐயப்பனும் ஷீரடி பாபாவும் இருக்கிறது, வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்கிற மாதிரி எங்களுக்கு இருக்கு...’’ பக்திப் பரவசத்துடன் கூறுகிறார் வீரமணிராஜு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism