Published:Updated:

‘ட்ரெண்ட்’ பெட்டி!

‘ட்ரெண்ட்’ பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘ட்ரெண்ட்’ பெட்டி!

‘ட்ரெண்ட்’ பெட்டி!

‘ட்ரெண்ட்’ பெட்டி!

அன்புடன் சேவாக்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபின் பல்வேறு விஷயங்களில் தான் தெரிவிக்கும் கருத்துகளால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் அதிரடி நாயகன் வீரேந்தர் சேவாக். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்துக்கு தமிழில் வாழ்த்து கூறிய சேவாக்கின் ட்வீட் வைரலானது. `அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள். அன்புடன்' என்ற அவரது ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சில நாட்களில் 55,000 பேர் லைக் செய்ததோடு, 27,000 பேர் அந்த ட்வீட்டைப் பகிர்ந்தனர். தேசிய அளவிலான ட்ரெண்டில் @virendrashwag பெயர் இடம்பெற்றதோடு, தமிழக மக்கள் மனதிலும் சேவாக் இடம்பிடித்தார். லவ் யூ சேவாக்!

‘ட்ரெண்ட்’ பெட்டி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இளைஞர்களின் வெற்றி!

சென்னை மெரினா கடற்கரை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்கள்தான் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தின் ட்ரெண்டிங் டாபிக்காக இருந்தது. இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து அவசரச்சட்ட முன்வரைவு, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழக மக்களின் இந்தப் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொண்டாடும் விதமாக #jallikattuforever #nandrigalkodi போன்ற டேக்குகளில் நெட்டிசன்கள் தங்களது வெற்றிக்களிப்பைக் ஷேர் செய்ததில், தமிழக அளவிலான ட்ரெண்டில் முன்னிலை பெற்றன. #ஜெய் ஹோ!

‘ட்ரெண்ட்’ பெட்டி!

சர்ச்சை நாயகன்!

சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து நெட்டிசன்களிடம் அடிக்கடி வாங்கிக்கட்டிக் கொள் வதை வழக்கமாக வைத்திருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிக் கூறிய கருத்துகளால், ரஜினிகாந்த் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை ட்விட்டரில் தாளித்தெடுத்தனர். இந்நிலையில் மெரினாவில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தைக் கேலி செய்யும் விதமாக, `1000 காளைகளால் துரத்தவிட்டு, அதன்பின்னர் ஜல்லிக்கட்டுப் பற்றி போராட்டக்காரர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்' என்று இவர் செய்த ட்வீட், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் சில திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் எதிர்வினையாற்றியதில், #RGV @RGVzoomin பெயர் ட்ரெண்டில் இடம்பெற்றது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!

‘ட்ரெண்ட்’ பெட்டி!

கலக்கிய இந்திய கிரிக்கெட் அணி!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் கடந்த வாரம் நடந்து முடிந்தது. டெஸ்ட் தொடரைப் போல் ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்தை வொய்ட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடரை வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட தொடராக இது அமைந்தது. மொத்தம் 2,090 ரன்கள் இரு அணிகளாலும் ஸ்கோர் செய்யப்பட்டது. ஆறு இன்னிங்ஸ்களிலும் 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ட்ரெண்டில் #IndVsEng டேக் முன்னிலை வகித்தது. கமான் இந்தியா!

‘ட்ரெண்ட்’ பெட்டி!

மனிதி வெளியே வா!

சமூகத்தில் பெண் குழந்தை களுக்கு சமத்துவம் கிடைக்கவும், வாய்ப்புகள் வழங்கப்படவும் வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24-ம் தேதி தேசியப் பெண் குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என மல்யுத்த வீராங்கனை கீதா போகட் வெளியிட்ட வீடியோ முன்னரே வைரல் ஆனது. பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்களும் இத்தினத்தன்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததில் #NationalGirlChildDay ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம் பிடித்தது. நெட்டிசன்களும் தங்கள் சகோதரிகளைப் பற்றி பெருமிதமாக எழுதிய ட்வீட்கள் காண்போரை நெகிழச் செய்யும்படியாக இருந்தன. வாவ்!

‘ட்ரெண்ட்’ பெட்டி!

பதக்க மங்கை சாய்னா!

இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் நடந்து முடிந்த, மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மின்டன் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் மலேசிய வீராங்கனையை 22-20, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா. இப்போட்டி நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே ட்விட்டர் ட்ரெண்டில் @nsaina ஆதிக்கம் செலுத்தினார். கடந்த வருடம் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்ற பின், சாய்னா வெல்லும் முதல் தொடர் இது. சமீபத்தில் நடந்து முடிந்த பிரீமியர் பேட்மின்டன் லீக்கின் அரை இறுதிப் போட்டியில், சக இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆல் தி பெஸ்ட் சாய்னா!

- ட்ரெண்டிங் பாண்டி