Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : வேலுசரவணன் (குழந்தைகள் நாடகக் கலைஞர்)நா.கதிர்வேலன், படங்கள் : ஜெ. முருகன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : வேலுசரவணன் (குழந்தைகள் நாடகக் கலைஞர்)நா.கதிர்வேலன், படங்கள் : ஜெ. முருகன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''என்னோட ஊரு கம்பர்கோவில்னு ஒரு சின்னக் கிராமம். சிறுசுன்னா, அப்பிடி ஒரு சிறுசு. ஒரே ஒரு டீக்கடை மட்டும்தான் இருக்கு. அதையும் காலையில் அஞ்சு மணிக்குத் திறந்து எட்டு மணிக்கு மூடிருவாங்க. எங்க அப்பா அப்பப்போ பக்கத்து டவுனில் இருந்து கொண்டுவர்ற பேப்பருக்கும் விகடனுக்கும் காத்திருப்பேன். விகடன் வாங்கிட்டு வந்தால்... மகிழ்ச்சி, இல்லாவிட்டால் சோகம். இப்படித்தான் என் பால்யம் கழிஞ்சது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு விகடன்ல முதல்ல பிடிச்சது ஜோக்ஸ். கோமாளிக்கு ஜோக்தானே பிடிக்கும்... அதுவும் நான் நாகரிகக் கோமாளி. அம்புலிமாமாவும் விகடனும்தான் எனது நிறைய பொழுதுகளைச் சந்தோஷமா ஆக்குச்சு. எனக்கு எப்பவும் குழந்தைகள் உலகம்தான் பிடிக்கும். குழந்தைகள் ரொம்பவும் தனிமையில் இருப்பதா நெனைச்சேன். அவங்களுக்கு நம்மால் ஆனதைச் செய்யணும்னு நெனைச்சுக்கிட்டே இருந்தேன். 'கடல் பூதம்’னு ஒரு குழந்தைகள் நாடகம் போட்டதுதான் என் ஆரம்பம். திடீர்னு பார்த்தா... விகடன் என்னை அடையாளம் கண்டுக்கிட்டாங்க... தூக்கிவிட்டாங்க. சும்மா சுத்திக்கிட்டுத் திரிஞ்ச என்னை ஒரு மழை நாளில் தேடி வந்துச்சு விகடன். அவ்வளவுதான். அந்த ஆரம்ப வெளிச்சம் என்னை உலகம் சுற்றும் வாலிபன் ஆக்குச்சு. ஐரோப்பிய தேசம் முழுக்கச் சுத்திட்டேன். 'வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்’னு பாரதி சொன்னாரே, அதெல்லாம் சாத்தியமாச்சு. சுவிஸ், ஜெர்மன் பள்ளிகளில் என் கால் படாத இடமே இல்லை. சுனாமியால் கடலூர் பக்கம் குழந்தைகள் பாதிக்கப் பட்டப்போ, அவங்களுக்காக நாடகம் போட்டேன். அதைப் பார்த்துட்டு கிளின்டன் 'ஒன்ஸ் மோர் வேலு மாமா’ன்னார். அப்ப என் மேல பாய்ஞ்ச மீடியா வெளிச்சம் எல்லாமே விகடன் எனக்கு அளிச்ச வெளிச்சம். ஒரு சாமான்யனா இருந்த என்னை ஊரறிய... உலகறியவெச்சாங்க. குழந்தைகள் நாடகக் கலைஞனாகவும் குழந்தைகளோடு நான் சுற்றித் திரிவதையும் அங்கீகரிச்சாங்க. நான் விருப்பப்பட்டதைச் செய்ய விகடன்தான் உதவிச்சு!

நானும் விகடனும்!

பல பத்திரிகைகள் செய்ய விரும்பாத குழந்தைகளுக்கான பத்திரிகையை ஆரம்பிச் சாங்க. 'சுட்டி விகடன்’ ஆரம்ப விழாவுக்குப் போனப்ப,  நிர்வாக இயக்குநர் சீனிவாசன் அவர்களைச் சந்திச்சேன். 'பார்க்க கலர்ஃபுல்லா இருக்கீங்க சரவணன். எங்க தாத்தா ஆபீஸுக்கு நடிகர்கள் வர்ற டைம் எல்லாம் இப்போ ஞாபகம் வருது’னு சொன்னார். மற்ற எல்லோரையும்விட நான்தான் விகடனுக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன். பிரபலமானவர்களை மட்டுமல்ல, சாதாரண மனிதர்களையும் கண்டுகொள்கிற, அடை யாளப்படுத்துகிற, அங்கீகரிக்கிற ஆற்றல் விகடனுக்கு எப்படி வந்ததுங்கிறது எனக்கு இன்னும் புரியலை.

நானும் விகடனும்!

விகடன் ஒரு பெரிய மலர்த் தோட்டம். எல்லாத் துறைகளின் விமர்சனங்களும் அங்கே செய்யப்படுகின்றன. ஒரு நல்ல கல்வி நிறுவனம் மாதிரி சமூகத்துக்கு நல்லது செஞ்சுக்கிட்டே இருக்காங்க. 2000-மாவது ஆண்டின் மிகச் சிறந்த மனிதர்களின் பட்டியலில் கமல்ஹாசனால் நான் குறிப்பிடப்பட்டேன். எல்லாக் குழந்தைகளாலும் 'வேலு மாமா’னு நான் பிரியமா அழைக்கப்படுவதற்குக் காரணம், விகடன்தான். இப்போ தமிழ்நாட்டில் எங்கேயும் குழந்தைகளுக்கான இடம் இல்லை. குழந்தைகள் குழந்தைகளாகவே காட்டப்படும் சினிமாவைப் பார்ப்பது அரிதாகிட்டு இருக்கு. பட்டாம்பூச்சி, சொட்டாங்கல்லு, 'ஏழு கடல், ஏழு மலை தாண்டி, ஒரு ராஜா இருந்தான்’னு கேட்ட கதை, கற்பனையைத் தாண்டி இருந்த தேசத்தில் இருந்த ராஜாக்கள், ராணி, குட்டி இளவரசர்கள், இளவரசிகள்னு தாத்தா - பாட்டி சொன்ன கதைகளை எல்லாம் இன்னிக்கு சேட்டிலைட் கம்பிகள் பிடுங்கி எறிந்துவிட்டன. அதையும் 'சுட்டி விகடன்’ மூலமா இப்போ தந்துட்டு இருக்கு விகடன். விகடனின் மிகப் பெரிய சேவை... சுட்டி விகடன்.

ஒரு சமயம் விகடனில் 'மூணு பேர் குல்லா போட்டா அழகா இருக்கும். அது நேரு, எம்.ஜி.ஆர்., வேலு சரவணன்’னு சுஜாதா எழுதினார். என்னைப்பத்தி இப்படி ஏதாவது விகடனில் எழுதிக்கிட்டே இருப்பாங்க. அந்த உற்சாகம்தான், கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடாம, 'கண்ணாமூச்சி ரேரே’னு பாடாம ஒரு தலைமுறையே வளர்ந்துபோச்சேனு அதிர்ச்சியில் இருந்த என்னை, இப்ப என் எல்லா நேரத்தையும் குழந்தைகளுக்காகச் செலவிட மாத் துச்சு.

குழந்தைகளை நாம வேறு மாதிரி அணுகணும்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். அதை விகடனில் வெளியிட்டுக் கிட்டே இருப்பாங்க. நம்ம ரசனையை அவங்க மேல திணிக்கிறோம். நம்ம படங்களை அவங்களைப் பார்க்கவைக்கிறோம். 'எங்கே, ஏ.பி.சி.டி. சொல்லு... ரைம்ஸ் சொல்லு... ஒன் ப்ளஸ் ஒன் எத்தனை?’னு ஒரு குழந்தைக்கு கல்வி அறிவு புகட்டுகிற அவசரத்தில், நம்ம தவிப்பையும் பதற்றத்தையும் அவங்க தலைமேல வெச்சிடுறோம். நான் சின்னப் பிள்ளைல ஆட்டுக்குட்டியோட, நாய்க் குட்டியோட, குருவிகளோட திரிஞ்சேன். ஆறு, கோயில், குளம் போகத்தான் படிப்பு இருந்தது!

பொதுவா, கோமாளின்னா முட்டாள்தான்னு சொல்வாங்க. ஆனா, எல்லாரையும்விட அவங்க அறிவாளி. அதைப் புரியவெச்சது விகடன். எனக்கு விகடன் ரொம்ப முக்கியம். விகடனால் ஒரு கெடுதி நடந்ததுனு எங்கேயும் எப்போதும் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட முடியாது. பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே விகடனுக்கு உரியதல்ல. அதற்கும் மேலான அக்கறை. தமிழ் மக்களின் நாடி பார்க்கிற புரிதல் எல்லாமே இருக்கு. பொழுதுபோக்கைத் தாண்டி சமூகத்தைக் கண்காணிக்கிற வேலையை விகடன் செஞ்சுக்கிட்டே இருக்கு. அதை விகடன் எப்போதும் செய்யணும்!

குழந்தைகளோட திரிஞ்சுக்கிட்டு இருந்த எனக்கு யாருமே பொண்ணு கொடுக்கலை. 'டேய்! அவன் கூத்தாடிப் பயடா!’னு நினைச்சு இருக்கலாம். 'புள்ளைக பின்னாடியே திரிவாராம். நாடகம் போட்டுக்கிட்டு

நானும் விகடனும்!

துள்ளித் திரிவாராம்’னு நம்மளைப்பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லி விகடன் பேட்டியில் படத்தோட செய்தி வந்தது. அதைக் கொண்டுபோய் ஒரு பொண்ணு வீட்ல காண்பிச்சேன். முத்துலட்சுமி  எனக்கு மனைவியா வந்ததுக்கும்  நிஜமா விகடன்தான் காரணம். இப்ப நம்ம பொண்ணு வைகவி... சுட்டி விகடன் பத்திரிகையில் சுட்டி ஸ்டார். நான் அடையாத பாக்கியத்தை என் குழந்தை அடையுது. அதுக்கும் விகடன்தான் காரணம்.

ஊர் ஊராக் குழந்தைகளோடு குழந்தையாத் திரிஞ்சவன், இப்ப புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறையில் சேர்ந்துட்டேன். குழந்தை களுக்கான மனிதர்களை உருவாக்க இங்கேயும் என் தேடல் தொடர்ந்துட்டே இருக்கு. உலகத்தின் நிம்மதி, உலக மக்கள்தொகையில் 30 சதவிகிதமா இருக்கிற குழந்தைகளை நம்பி இருக்கு. அவங்களுக்கு விகடன் இன்னும் இன்னும் நல்லது செய்யணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism