Published:Updated:

ஒரு சகாப்தம் முடிந்தது!

ஒரு சகாப்தம் முடிந்தது!

ஒரு சகாப்தம் முடிந்தது!

ஒரு சகாப்தம் முடிந்தது!

Published:Updated:
##~##

க்டோபர் 31:
ஒரு மாபெரும் தேசத்தின்...
ஒரு மாபெரும் சகாப்தத்தின்....
இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டு இருக்கிறேன்!

இந்திய தேச நீண்ட வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட அந்த அக்டோபர் 31 எப்போதும்போல்தான் விடிந்தது. வழக்கம்போல் தலைநகர்வாசிகள் தலைபோகிற அவசரத்தில் இயந்திரகதி வாழ்க்கையுடன் தங்களை இணைத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 மணியில் இருந்து, 'இந்திரா சுடப்பட்டார்’ என்ற செய்தி வேகமாகப் பரவியது. நானும் என் சட்டக் கல்லூரி நண்பரும் 'ஆல் இண்டியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்’ ஆஸ்பத்திரிக்கு விரைவதற்குள், 11.30 மணி பி.பி.சி. செய்தியில் இந்திரா காந்தி இறந்துவிட்ட செய்தியை அறிவித்துவிட்டார்கள்.

அதற்குள் எப்படித்தான் அவ்வளவு கூட்டம் கூடியதோ! ஆஸ்பத்திரியைச் சுற்றி மூன்று கி.மீ. வட்டம் முழுவதும் மக்கள் வெள்ளம்!

ஒரு சகாப்தம் முடிந்தது!

விகடன் நிருபர் சான்று அட்டை மிகப் பலத்த ராணுவ பந்தோபஸ்தைக் கடந்து மருத்துவ மனைக்குள், மனிதக் கடலைத் தாண்டிச் செல்ல உதவியது. (பின்னால்... இரு சம்பவங்களில் என்னைக் காப்பாற்றியதும் அதுவே!)

எட்டாவது மாடியில் அவசர அறுவைச் சிகிச்சைப் பிரிவில் இந்திரா. பிரமுகர்கள் தவிர, பிறர் அங்கு அனுமதிக்கப்படவில்லை. 'உயிர் இருக்கிறதா, இல்லையா?’ என்பதுகூடத் தெரிய வில்லை. 'இன்னும் சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறது’ என்பதுதான் பதில். 2.15 மணி அளவில் இந்திராவின் மரணம் குறித்த அமெரிக்க ஜனாதிபதி ரீகனின் இரங்கல் செய்திகூட வந்துவிட்டது. ஆனால், இங்கேயோ 'இன்னும் சிகிச்சை’ நடந்துகொண்டு இருந்தது!

அதிகாரபூர்வமான அறிவிப்புக்கு முன்பே பல உலகத் தலைவர்களிடம் இருந்து இரங்கல் செய்திகள் வர ஆரம்பித்தன. 1.30 மணி அளவில் இந்தியச் செய்தி ஸ்தாபனம் ஒன்று 11 மணி அளவில் பிரதமர் மரணமடைந்ததாக அறிவித்தது.

ஒரு நிருபர் உள்துறைக் காரியதரிசி வாலிக்கு 2.45 மணி அளவில் போன் செய்தபோது அவர், டாக்டர்கள் இன்னும் முயற்சி செய்து வருவ தாகவே கூறினார்.

காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் முதன் முதலில் பேசியவர் ஜி.எல்.டோக்ரா, எம்.பி. ''இந்திராவின் நிலைமை மோசமாக இருக்கிறது!''

தீரேந்திர ப்ரும்மச்சாரி வந்த சிறிது நேரத்தில் மேனகா காந்தி வந்தார், மகன் வருணுடன்.

துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் இரு முறை விஜயம் செய்தார். சந்திரசேகர், வாஜ்பாய், ஜகஜீவன் ராம், அத்வானி, சரண்சிங் போன்ற எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் வந்த வண்ணம் இருந்தனர்.

3 மணி அளவில் திரு.கமல்நாத், 'ராஜீவ் வரட் டும்’ என்று கண்ணீருக்கு இடையில் குறிப்பிட்ட போதுதான் பத்திரிகையாளர்களுக்கு விஷயம் உறுதியாயிற்று.

3.45 மணி அளவில் ராஜீவ் காந்தி புயலாக விரைந்துவந்தார். உடன் பிரணாப் முகர்ஜி, அருண் நேரு, பூட்டாசிங்.

அன்று காலை 9 மணிக்கு, ஐரிஷ் படத் தயாரிப்பாளர்களான பீட்டர் உஸ்தினோவ் குழுவினருடன், பிரதமரைப் பற்றி எடுக்கப்படும் ஐரிஷ்-மேற்கு ஜெர்மனி தொலைக்காட்சித் தொடர் சம்பந்தமாகப் பேசுவதற்கு நேரம் கொடுத்திருந்தார் இந்திரா. அவருடைய காலை 'தரிசனமும்’ அந்த நேரத்தில்தான் நடை பெறும்.

தமது இல்லத்தில் இருந்து அக்பர் ரோடு அலுவலகத்துக்கு இந்திரா நடந்து வந்துகொண்டு இருந்தார். மூன்றடி தள்ளிப் பின்னால் ஐந்து பாதுகாவலர்கள் அந்தரங்கப் பாதுகாப்பு அதிகாரி தினேஷ்பட் தலைமையில், அந்தரங்கச் செயலாளர் தவான் அவர்களுக்குப் பின்னால், அந்த இரு கொலையாளிகளும்!

இரண்டு காம்பவுண்டுகளையும் இணைக்கும் கேட்டுக்குள்... இந்திரா நுழைகிறார். சப்-இன்ஸ் பெக்டர் பென்த்ஸிங்கும் கான்ஸ்டபிள் ஸத்வன்த் ஸிங்கும் இருபுறமும் காவல் நிற்கிறார்கள்.

ஸத்வன்த்ஸிங் தன் ஸ்டென் துப்பாக்கியை சல்யூட் அடிக்க உயர்த்துகிறார் என்று பிற பாதுகாவலர்கள் எண்ணும் முன், 'ஓ... இட் வாஸ் டூ லேட்..!’ பென்த்ஸிங், தன் 38 ரிவால்வரினால் ஐந்து முறை பாய்ன்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட... தொடந்து ஸத்வன்த்ஸிங்கின் ஸ்டென் துப்பாக்கி தன் ரவைகளை எல்லாம் காலி செய்துவிட்டே நின்றது.

ரமேஷ்வர் எனும் காவலர் விரைந்து சென்று இந்திராஜியின் உடலைக் கவசம்போல் மூடிக் கொள்ள, அவரும் குண்டடிபட்டார். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லை.

பாதுகாவலர்கள் பென்த்ஸிங்கைச் சுட்டுக் கொன்றார்கள். ஸ்த்வன்த்ஸிங் குண்டுக் காயங்களுடன் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.

ஐரிஷ் படத் தயாரிப்பாளர் பீட்டர் உஸ்த்தினோவ் கூறுகிறார்: ''என் கைக் கடிகாரத்தில் அப்போது

ஒரு சகாப்தம் முடிந்தது!

சரியாக 9 மணி 8 நிமிடம் 27 விநாடி. முதலில் மூன்று குண்டுச் சத்தம் கேட்டது. யாரோ பட்டாசு வெடிப்பதாகச் சொன்னார்கள். தொடர்ந்து கேட்ட சத்தம் ஸ்டென் துப்பாக்கிக் குண்டுகள்தான் என்பதை உணர முடிந்தது. இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் இரு முறை குண்டுச் சத்தம் கேட்டது!''

காரில் ஆஸ்பத்திரிக்குப் பிரதமருடன் சென்ற சோனியா, 'மேடம் சுடப்பட்டார்’ என்று கதற, முதலில் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லையாம். ஒரு 'ஸ்ட்ரெச்சர் பாய்’தான் முதலில் இந்திரா காந்தி சுடப்பட்டு இருக்கிறார் என்பதைஉணர்ந்து கொண்டவன்.

முதலில் கேஷ§வாலிட்டி வார்டுக்கும் பின்னர் எமர்ஜென்ஸி வார்டுக்கும் பிரதமர் எடுத்துச்செல்லப்பட்டு இருக்கிறார். அதற்குக் கீழே, ஏழாவது மாடியில்தான் பத்திரிகைக்காரர்கள் காத்துக்கொண்டு இருந்தோம்.

3.40 மணிக்கு ராஜீவ் காந்தி வெள்ளை குர்தா பைஜாமா உடையில் சிவப்புக் கரை அங்கவஸ்திரத்துடன் வந்தார். அநேகமாக நண்பர்கள் அவரைத் தாங்கிக்கொண்டு செல்ல வேண்டிஇருந்தது.

அவ்வளவுதான்... செய்தி பரவப் பரவ... கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.

பிரதமரின் உடல் ராணுவ வண்டியில் 9.30 மணிக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப் பட்டது.

ஆஸ்பத்திரிக்கு உள்ளிருந்து எங்களால் வெளியே வர இயலவில்லை. உணவு, தண்ணீர் ஒன்றும் கிடையாது. வெளியே, 'இந்திரா காந்தி அமர்ரஹே’... 'தேஷ் கீ மாதா இந்திரா காந்தி’ கோஷங்கள்!

ரவுக் குளிர் ஆரம்பித்துவிட்டது. சோக இருள் போர்வையைப் பூமி போர்த்தத் துவங்கியது. ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒரு சர்தார்ஜியின் உதவியோடு பின்வழியாக ஸ்டோர் ரூம் கதவைத் திறந்துகொண்டு ஒரு கட்டைச் சுவரை ஏறிக் குதித்து எப்படியோ வெளியே வந்துவிட்டோம்.

ராணுவம் டெல்லியை நோக்கி விரைந்து வருவதாகச் சொன்னார்கள்.

மருத்துவமனைக்கு அருகில் உள்ள சவுத் எக்ஸ்டென்ஷன். ரிங்ரோட், கித்வாய் நகர் பகுதியில் கலவரங்கள் வலுக்கத் தொடங்கிவிட்டன.

பஸ், ஆட்டோ, கார் ஒன்றும் கிடையாது. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. கம்பு, இரும்புத் தடிகளுடன் சீக்கிய சமூகத்தவர் கடைகளில் புகுந்து சூறையாடவும் நொறுக்கவும் எரிக்கவும் ஒரு மிகப் பெரிய கூட்டம் கிளம்பி விட்டது.

நானும் நண்பர் கனிவண்ணனும் நடக்கத் துவங்கினோம்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, பல அரசியல் கொலைகள் நடத்தப்பட்ட ஒரு நாளில், வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியான் நம்பியும் பலவித அலங்கோலக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே கொள்ளிட நதிக்கரை வழியாக அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலில் நடந்தார்களே -

அந்தக் கோப இருளில் நாங்கள் இரு யாத்ரீகர்கள்.

எங்கள் கண்முன்னே பல பயங்கரக் காட்சிகள்.

மத வெறியும் மனிதக் கொலைவெறியும் எத்தனை தூரம் கொடுமைகளுக்கு வித்திடும் என்பதை நேரில் பார்த்துக்கொண்டே மிகுந்த சோகத்துடன், மனக் கலக்கத்துடன் குளிர் ஊதல் காற்றினூடே நடந்தோம்.

இருவர் என் தாடியைப் பார்த்து ஓடி வந்தனர். பின்னர், ஹிந்து... அதுவும் 'மதறாஸி’ என அறிந்ததும்... எங்களை விட்டுவிட்டு அடுத்த வாகனத்தை மடக்க ஓடினர். அப்போதுதான் காரில் வந்துகொண்டு இருந்த 'துக்ளக்’ கே.ஸ்ரீனிவாஸன் மடக்கப்பட்டு, பின்னர் விடப்பட்டார்.

சப்தர் ஜங் ரோடு மேம்பாலத்தை அடைந் தோம். மேம்பாலத்தின் அடியில் மூன்று டி.டி.சி. பஸ்கள் எரிந்துகொண்டு இருந்தன. வரிசையாக. அந்தப் பக்கம் இன்னொரு மூன்று பஸ்கள்.

மேம்பாலத்தின் உச்சியில்தான் அந்தக் கோர நிகழ்ச்சி நடந்தது. இரவு மணி 9. மூன்று ஸ்கூட்டர்களில் மூன்று சர்தார்ஜிகள். எங்கள் கண்ணெதிரே மடக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள். தலை முடி கத்தரிக்கப்பட்டது. அப்படியே மேம்பால உச்சியில் இருந்து தூக்கிக் கீழே எறியப்பட்டார்கள்.

ஸ்கூட்டர்களின் பெட்ரோல் டேங்க் திறக்கப்பட்டு, நெருப்பு வைக்கப்பட்டது.

பயங்கர வெடிச் சத்தத்துடன் நெருப்பின் கோர தாண்டவம்.

மேலே நடக்க நடக்கப் பல அம்பாஸடர்கள், பத்மினிகள், ப்ரீமியர்கள், மாருதிகள், பஜாஜ்கள், புல்லட்கள், கப்பல் கார்கள், ஆட்டோக்கள், விஜய்கள், ஹீரோக்கள் தீக்குளித்துக்கொண்டு இருந்தன. ஒரு போஸ்டல் வேன் கவிழ்க்கப்பட்டு பெட்ரோல் ஸ்நானம் செய்யப்பட்டது. நல்ல வேளை, இதை மட்டும் போலீஸார் தடுத்து விட்டனர்.

வழி எல்லாம் கும்பிட்ட கரங்களுடன் கலகக் காரர்களிடம் கெஞ்சி வரம் பெற்ற பின்,

இறுதியில் இரவு 12.30 மணி அளவில் நண்பர் வீட்டுக்கு வந்தோம்.

அசதி, சோர்வு, நடந்த களைப்பு. ஆனால், தூக்கம் வரவில்லை. காலையில் இருந்து வயிறு காலி. ஆனால், பசிக்கவில்லை. நெஞ்சு நிறைய துயரச் சுமை.

ஐயோ! மனிதகுல நாகரிகமும் பண்பாடும் படிப்பும் அன்பும் அறிவும் நம்மைவிட்டு எவ்வளவு தொலைவில் போய்க்கொண்டு இருக்கின்றன!

நவம்பர் 1:

மறுநாள் காலை வாகனம் ஒன்றும் கிடையாது. நண்பர் வீட்டில் இருந்து நான் வசிக்கும் கரோல் பாக் அறைக்குத் தனியாக நடந்தேன்.

போஸ்டாபீஸ் கிடையாது.

தந்தி, போன்... சுப்!

மறு நாள் காலை பத்திரிகைகள் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஒன்றை வாங்கிப் படித்துக்கொண்டே நடந்தேன்.

1947-க்குப் பிறகு மிகப் பெரிய வன்முறையும் சட்டம் - ஒழுங்கும் இந்த அளவில் டெல்லியில் சீர்கெட்டது இன்றுதான்.

ந்தப் பயங்கர நிலை மறு நாள் மாலை வரை நீடித்தது. வெளியே 'தைரியமாக’ வந்த சீக்கியர்கள் பூட்டாசிங், ஜைல்சிங் - இவர்களைத் தவிர, சீக்கிய போலீஸார்தான்.

அஜ்மல்கான் ரோடில் மிகச் சிறிய சீக்கிய குருத்வாரா ஒன்று உண்டு. அது, இந்தியாவில் எப்படி இந்துக்களுடன் இரண்டறக் கலந்து சகோதரத்துவத்துடன் பிற மதத்தினர் வாழ்ந்து வந்தனர் என்பதற்குச் சான்று.

ஆம்! அது ஓர் இந்துவால் நடத்தப்பட்டு வந்தது. அவர் அங்கேயே வசித்துவந்தார், இரு சீக்கிய மதக் குருக்களுடன். சீக்கிய குருக்கள் ஓடிவிட, கலகக்காரர்களால் வெளியே இழுக்கப்பட்ட அந்த இந்துக் கிழவரின் கண் முன்னால் அவர் வீடு, கோயில், அவர் உடமைகள் தவிர, பிற நொறுக்கப்பட்டன; பின், எரிக்கப்பட்டன.

அந்தக் கிழவர் குழந்தையைப் போல், தன் கண் எதிரில் தன் வீடு எரிவதை, தேம்பித் தேம்பி அழுதுகொண்டே குளிரில் விறைத்துக்கொண்டே - 'நோ’!

அவர்களுக்கு அதை எல்லாம் இப்போது கவனிக்க முடியாது. 'கீதை’ படித்த இந்துக்கள், யுத்த களத்தில் நிற்கிறார்கள்!

மாலை ஊரடங்கு உத்தரவு. அனைவரும் வீட்டுக்குள்.

ஒரு சகாப்தம் முடிந்தது!

கிழவர்..?

வேண்டாம். இப்போது இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. பிளாட்ஃபாரத்தில் படுத்துக்கொள்வார்.

டெல்லிக்குள் ராணுவம் - மூன்று பட்டாலியன் கள் நுழைந்தன. எல்லைப் பாதுகாப்புப் படை விரைந்துவந்தது. டி.வி-யில் ராஜீவ் அமைதி காக்கச் சொன்னார்.

நடந்தேன். நல்லவேளை, 'விகடன் நிருபர் சான்றிதழ்’ கையில். ராணுவத்தினர் மடக்கினார் கள்.

நிருபர்களுக்கு ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு. ஆனால், சொந்த 'ரிஸ்க்’கில்தான்.

நவம்பர் 2:

பிரதமரின் சடலம் பொதுமக்கள் பார்வைக்கு நேரு வசித்த 'தீன் மூர்த்தி’ பவனில். அங்கு மட்டும் 'கர்ஃப்யூ’ கிடையாது.

கூட்டத்தை போலீஸ் தடியடிப் பிரயோகம் செய்துதான் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மனிதக் கடலுக்கு அணை போடச் சரியான ஏற்பாடுகள் இல்லை. பிரதான வாயில் உடைக்கப் பட்டு, மக்கள் வேலி ஏறிக் குதிக்கத் தலைப் பட்டனர். 25-க்கும் மேற்பட்ட கண்ணீர்ப் புகை 'ஷெல்கள்’ வெடிக்கப்பட்டன.

'ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ புகைப்படக்காரர் என்னை ஆபீஸ் காரில் ஏற்றிக்கொண்டு போய்க் காப்பாற்றினார். பெயர் சொல்லக்கூட மறுத்து விட்டார். ''யூ ஆர் அல்ஸோ எ ரிப்போர்ட்டர்'' என்றார்.

முந்திய நாள் இரவு குடிநீரில் விஷம் கலந்து விட்டதாகவும், யாரும் அதைக் குடிக்கக் கூடாது என்றும் வாய்மொழியாக 'சௌக்கிதார்’ வந்து சொல்ல... மறு நாள்... அது இல்லை, வெறும் புரளி என்று தெரிந்தாலும், தண்ணீர் குடிக்கப் பயமாகத்தான் இருந்தது!

நவம்பர் 3:

பிற்பகல் 12.30 மணிக்குப் பிரதமரின் இறுதி யாத்திரை. இன்று காலை 'கர்ஃப்யூ’ ரத்து.

காலையில் இருந்தே ஜன சமுத்திரம். பக்கத்துக் கிராமங்களில் இருந்து முதல் நாள் இரவே குடும்ப சகிதம் வந்து ஊர்வலம்செல்லும் பாதையில் எல்லாம் கிராம மக்கள். ராஜஸ்தானி, பார்ஸி, சிந்தி-உடைகளில். மொழிகள் பலபேசிக் கொண்டு... வேறு வேறு கலாசாரப் பின்னணிகளில், சமூகப் பொருளாதாரப் பின்னணிகளில் பரட்டைத் தலைச் சிறுமிகள். அரை நிஜார் சிறுவர்கள். குழந்தைகளைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு 'பிரதமரின் முகத்தையாவது காட்ட’ தாய்மார்கள், வாலிபர்கள்.

மிகச் சரியாக 12.30-க்கு தீன்மூர்த்தி பவனில் இருந்து ராணுவ வண்டியில் பிரதமரின் புகழுடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

வழி எல்லாம், ''இந்திரா காந்தி அமர் ரஹே!''

''தேஷ் கீ மாதா இந்திரா காந்தி!''

''ஜப்தக் சூரஜ் சாந்த் ரஹேகா இந்திரா தேரா நாம் ரஹேகா!''

(சூரிய சந்திரர் இருக்கும் வரை இந்திரா, உந்தன் நாமம் இருக்கும்)

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 'கன் காரேஜ்’ வண்டியில்... மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு - அதோ, மறைந்த பிரதமர் போகிறார். எந்த 'ராஜ்பாத்’தில் சுதந்திர தினத்துக்கு, குடியரசு தினத்துக்கு ஊர்வலம் வந்தாரோ -

அதே 'ராஜ்பாத்’தில்...

மணி 3.16. சாந்தி வனத்துக்குள் பிரதமரின் சடலம் இருந்த ராணுவ வண்டி நுழைகிறது.

பிர்லா மந்திரின் தலைமை குரு பண்டிட் கிரிதாரிலால் கோஸ்வாமி - நேருஜிக்கும் சஞ்சய் காந்திக்கும் இறுதி ஈமச் சடங்குகளைச் செய்தவர்...எதிர்கொள்கிறார்.

உடல் இறக்கப்படுகிறது. ராணுவ வீரர்கள் சுமந்து வருகிறார்கள். முன்புறம் ராஜீவ் காந்தியும் அருண் நேருவும் தோள் கொடுக்கிறார்கள். ராணுவ மரியாதைகள்... துப்பாக்கிகள் உயர்ந்து... தலை குனிந்துகொள்கின்றன.

அதோ... எரியூட்டு மேடை... அலங்கரிக்கப்பட்ட மேடையில் உடல் கிடத்தப்படுகிறது. போர்த்தப்பட்ட மூவர்ணக் கொடியை ராணுவ வீரர்கள் எடுக்கின்றனர்.

கங்கை நீரில் குளிப்பாட்டப்பட்டு, தங்க நிற பார்டரில் சிவப்புச் சேலை கட்டப்பட்டு, சந்தனம் பூசப்பட்ட இந்திராவின் சடலம்...

இறுதிச் சடங்குகள்...

வெள்ளை குர்த்தா, பைஜாமாவில் காந்தி குல்லாயில் ராஜீவ். தோளில் அங்கவஸ்திரம்.

அருகில், மனைவி சோனியா - மகன் ராகுல் - மகள் ப்ரியங்கா - மேனகா காந்தி வெள்ளைப் புடவையில் -

அருகில் மகன் வருண் - ப்ரியங்காவின் கைகளை இறுக்கமாகக் கோத்துக்கொண்டு.

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய வேத மந்திரங்கள் ஒலிக்கின்றன.

கையில் அக்னியுடன் ராஜீவ் வலம் வருகிறார். பண்டிட்கள் வேதம் ஓத, ராணுவத் துப்பாக்கிகள் உயர்ந்து குண்டு பொழிய...

அடுக்கப்பட்ட 500 கிலோ சந்தனக் கட்டைகளின் மீது...

நெய், தேன் மழையில் மூண்டது பெருந்தீ.

ஏற்றுகின்ற செந்தீ எரிவதிலும் அவர் பாட்டை எழுந்து பாட...

ஒரு மாபெரும் தேசத்தின் -

ஒரு மாபெரும் சகாப்தத்தின் -

இறுதி அத்தியாயம் முற்றுப்பெற்றுவிட்டது.

இனி, அரசியல் மட்டத்திலும் வேறு பல்வேறு நிலைகளிலும் மிகுந்த சோதனைகள் காத்திருக்கின்றன. ஆனாலும், ராஜீவ் காந்தி மிகமிக நிதானத் துடன் உறுதியாக இருப்பது புலப்படுகிறது.

சிறிதுகூடச் சலனம் இல்லாமல் சிதைக்குத் தீ வைத்ததில் இருந்து... ஒவ்வொரு நிலையிலும் அவர் மிகுந்த பொறுப்புடன், நிதானத்துடன், ஆனால், உறுதியாக இருப்பது தெரிகிறது.

ஓர் ஆண் மகன் இளம் தோளில் பெரும் பொறுப்பை ஏற்றிக்கொண்டவன் எப்படி இருக்க வேண்டுமோ... அப்படியே அவர் ஆச்சர்யப்படும் விதத்தில் அமைதி காத்தது - நம்பிக்கை தருகிறது.

- ஆர்.வெங்கட்ராமன், புதுடெல்லி.

ஒரு சகாப்தம் முடிந்தது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism