Published:Updated:

ஆர்ட்டோகிராஃப்!

ஆர்ட்டோகிராஃப்!

##~##

''பிரபலங்கள் ஆயிரம் பேரை படம் வரைஞ்சு அதில் அவங்க ஆட்டோகிராஃப் வாங்கணும். பிறகு, அந்த ஓவியங்களை கண்காட்சியா வைக்கணும். இதுதான் என் கனவு. உங்களுக்கு ஒண்ணுத் தெரியுமா? விகடன் பவள விழாப் போட்டியில் தேர்வுசெய்யப்பட்ட 75 ஓவியங்களில் என் ஓவியமும் ஒண்ணு!'' - ஃபைலை திறந்து ஓவி யங்களை ஆர்வமாக எடுத்துக் காட்டியபடி பேசுகிறார் ஆனந்த்.

 ''மூணாம் வகுப்பு படிக்கும்போதே மணல்ல மாதா, ஏசு படங்களை வரைவேன். ஓவியம், சிற்பம் மேலேயே ஆர்வம் இருந்ததால ப்ளஸ்-டூவுக்கு மேல படிக்கத் தோணலை. முழுநேர ஓவியர் ஆகிட்டேன். எங்க ஏரியாவுல அஞ்சு அடி உயரத்துல ஒரு நாகவள்ளி அம்மன் சிலையை சிமென்ட்ல செஞ்சேன். அந்தச் சிலை அமைப்பு ஏரியாவுக்கே பிடிச்சுப்போய் கோயிலா எடுத்துக்கட்டிட்டாங்க. அந்த விழாவில் பாடுறதுக்காக பாடகர் சக்தி சண்முகராஜ் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சியில பாடிட்டு இருக்கும்போது ஓரமா உட்கார்ந்து அவரை வரைஞ்சு கொண்டுபோய் கொடுத்தேன். சந்தோஷத்தோட ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார். 'இந்த ஐடியா நல்லா இருக் கே’ன்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் பழக்கம்.  

ஆர்ட்டோகிராஃப்!

பிரபலங்களை நேர்லேயோ, இல்லை படத்தைப் பார்த்தோ வரைவேன். ஆனா, அவங்ககிட்டே கையெழுத்து வாங்குறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடும். நடிகர் விஜய்யை ஓவியமா வரைஞ்சு அதை எடுத்துட்டு அவரைப் பார்க்கப்போனேன். ஏதாவது சொல்லுவார்னு எதிர்பார்த்தேன். ஓவியத்தைப் பாத்துட்டு எந்த ரியாக்ஷனும் இல்லாமக் கையெழுத்து போட்டுக் கொடுத்திட்டார். ஒரு முறை எங்க ஏரியா வுக்கு ஒரு கூட்டத்துல பேசுறதுக்காக கலைஞர் வந்தார். கூட்டத்துல முண்டியடிச்சு போய் அவர்கிட்ட ஓவியத்தை கொடுத்தேன். பார்த்துட்டு சிரிச்சவர், 'மு.க.’னு கையெழுத்துப்போட்டுட்டு 'நல்லாயிருக்கு’னு சைகை செஞ்சார். இதேபோல மு.க.ஸ்டாலின், வைர முத்து, வைகோ, சீமான், ஜெமினி கணேசன், இளையராஜா, சிவகுமார், மனோரமா, திண்டுக்கல் லியோனி, சோ, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.எஸ்., எஸ்.பி. பாலசுப்ரமணியம்,  எல்.ஆர்.ஈஸ்வரினு கிட்டத்தட்ட 100 பிரபலங்களை வரைஞ்சு அவங்ககிட்டே ஆட்டோகிராஃப் வாங்கி இருக்கேன். அடுத்ததா பெரிய லிஸ்ட் போட்டுவெச்சிருக்கேன். ஆயிரமாவது ஓவியத்தில் ஆட்டோகிராஃப் வாங்கினதும் கண்டிப்பா நான் உங்களைத் தேடி வர்றேன்!'' - நட்பாகச் சிரிக்கிறார் ஆனந்த்.

- ம.கா.செந்தில்குமார்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு