Published:Updated:

மனிதன் பாதி... ரோபோ மீதி... எதையும் தாங்கும் எக்ஸோகெலிட்டன்ஸ்! #Exoskeletons

மனிதன் பாதி... ரோபோ மீதி... எதையும் தாங்கும் எக்ஸோகெலிட்டன்ஸ்! #Exoskeletons
மனிதன் பாதி... ரோபோ மீதி... எதையும் தாங்கும் எக்ஸோகெலிட்டன்ஸ்! #Exoskeletons

ஒரு சாதாரண வீரரை சூப்பர்மேனாக்கும் திறன்படைத்தவை எக்ஸோகெலிட்டன்கள்... அவற்றால் என்ன செய்யமுடியும்?

மெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் என எல்லா வல்லரசு நாடுகளும், தங்கள் ராணுவத்தை காலத்துக்கு ஏற்ப நவீனப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கின்றன. இதற்காக, கடந்த நூற்றாண்டின் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம், இந்த நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவு வரை அத்தனையையும் ராணுவத்தில் புகுத்தி விளையாடிவருகின்றன. இந்த நவீனமயமாக்கலின் சமீபத்திய ட்ரெண்ட்களில் ஒன்று எக்ஸோகெலிட்டன்ஸ் (exoskeletons). மனிதனும், ரோபோவும் கலந்த கலவைதான் இந்த எக்ஸோகெலிட்டன். இதன்மூலம் சாதாரண ஒரு ராணுவவீரரை சூப்பர்மேனாக மாற்றலாம்; எப்பேர்ப்பட்ட தாக்குதலில் இருந்தும் தப்பிக்கலாம். அதனால்தான் அனைத்து வல்லரசு நாடுகளும் ஒருசேர எக்ஸோகெலிட்டன் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்திவருகின்றன. எக்ஸோகெலிட்டன்கள் என்றால் என்ன?

அயர்ன்மேன்களின் ஆதி ஊற்று!

ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சியில் இருக்கும் அமெரிக்கா, சமீபத்தில் சோதனை முறையில் ஒரு கருவியை வடிவமைத்தது. அது ஒரு செயற்கை கை. ஆனால், அது மனிதனின் கைகளின் பணிகளைச் செய்யும் பயோனிக் கை அல்ல; மெக்கானிக் கை. அதிக எடைகொண்ட துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை ராணுவ வீரர்கள் நீண்டதூரம் ஏந்திச்செல்லும்போது அவர்களின் தசைகள் பாதிப்படைய வாய்ப்புண்டு. மேலும், அதிக எடையைத் தாங்கிக்கொண்டு ஓடுவதால் விரைவிலேயே களைப்படைந்தும் விடுவார்கள். இதைத் தடுப்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் விஞ்ஞானிகள் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் இந்த மெக்கானிக் கை. இந்தச் செயற்கை கையை ராணுவ வீரரின் இடுப்புப்பகுதியில் பொருத்திவிட வேண்டும். இதன்மூலம் இந்தக் கை தாங்கும் பொருளின் எடையானது முழுவதுமாகத் தரையை வந்தடைந்துவிடும். இரண்டு கைகளில் தாங்கும் துப்பாக்கியை மூன்று கைகள் மூலம் தாங்குவதால், கைகள் எளிதில் சோர்வடையாது. மேலும், அதிக எடையுள்ள ஆயுதங்களையும் எளிதாகக் கையாளமுடியும். M249, M240B ஆகிய துப்பாக்கிகளை வைத்து இப்போதைக்குச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது வெற்றியடைந்தால் இந்த மெக்கானிக் கை அமெரிக்க ராணுவத்தில் முக்கிய அங்கம் வகிக்கலாம். இதுதான் எக்ஸோகெலிட்டனா? இல்லை. ஆனால், எக்ஸோகெலிட்டனின் பணியும் இதேபோலத்தான்.

எக்ஸோகெலிட்டன் என்பது ஒரு ரோபோட்டிக் கவசம். கிட்டத்தட்ட அயர்ன்மேனின் கவசம் போலத்தான். ஒரு சாதாரண மனிதனின் முழு இயக்கத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ரோபோட்டிக் கவசம். தலையிலிருந்து கால் வரை நம் உடலின் இயக்கங்கள் அனைத்தும் எக்ஸோகெலிட்டன்கள் கவனித்துக்கொள்ளும். நாம் தூக்கும் ஒரு பொருளின் எடையைத்தாங்குவது, ஓடும்போது நம் வேகத்தை ஊக்குவிப்பது, மிகக்கடினமான பரப்புகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் உடலின் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்வது என எல்லாப் பணிகளும் எக்ஸோகெலிட்டன்கள் வசம்தான். இதனை ஒரு ராணுவ வீரர் அணிந்துகொண்டால் அவர் சாதாரணமாகச் செய்யும் செயல்களைவிடவும் 27 மடங்கு அதிகமானப் பணிகளைச் செய்யமுடியும். ஒரு வீரர் நீண்டதூரம் ஓடவேண்டுமா? முடியும்; அதிக உயரம் தாண்ட முடியுமா? முடியும்; 90 கிலோ எடையுள்ள பொருளை அசால்ட்டாக தூக்கிக்கொண்டு மலையேற முடியுமா? முடியும்; எக்ஸோகெலிட்டன் இருந்தால் இவை அத்தனையும் சாத்தியம்தான். இதனால்தான் தங்கள் நாட்டு ராணுவ எக்ஸோகெலிட்டன்களை மாட்டி அழகுபார்க்கின்றன பன்னாட்டு ராணுவங்கள்.

பந்தயத்தில் முந்தும் அமெரிக்கா!

ஏற்கெனவே பார்த்தபடி ரஷ்யா, சீனா, பிரிட்டன் எனப் பல்வேறு நாடுகளும் இந்த எக்ஸோகெலிட்டன்கள் ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கென பிரத்யேக எக்ஸோகெலிட்டன்களையும் தயார் செய்துவருகின்றன. ஆனால், அமெரிக்கா இந்த விஷயத்தில் இன்னும் ஒருபடி முன்னாள்சென்று, முழு அயர்ன்மேன் கவசத்தையே உருவாக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டது. இந்தக் கவசத்துக்கு TALOS (Tactical Assault Light Operator Suit) எனப் பெயரிட்டுள்ளது அமெரிக்கா. எக்ஸோகெலிட்டன்கள் என்பவை முழுவதும் மெக்கானிக்கலான விஷயங்களை மட்டும் செய்பவை. அத்துடன் கூடுதலாக AI, Smart Gadgets ஆகியவற்றை இணைத்து உருவாக்கியிருப்பதுதான் இந்த TALOS. 2013-ம் ஆண்டு முதலே இதனைத் தயாரித்துவரும் அமெரிக்கா கடந்த ஆண்டுதான் இதுகுறித்த முழுமையான விவரங்களை வெளியிட்டது. ராணுவ வீரருக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கும் கவசங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கு உதவும் ஸ்மார்ட் டிஸ்ப்ளே, வீரரின் அசைவுகளைக் கண்காணிக்கும் சென்சார்கள், அதிக எடையைத் தாங்கக்கூடிய அமைப்புகள் எனப் பக்காவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது TALOS. இதற்கான ஆராய்ச்சிகள் இந்த ஆண்டுக்குள், முடிந்துவிட்டால், கூடிய விரைவிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முனைப்பில் இருக்கிறது அமெரிக்க ராணுவம்.

எவ்வளவு நாள்கள் ஆகும்?

உலகின் அனைத்து வல்லரசு நாடுகளும் முயன்றும்கூட, இன்னும் எக்ஸோகெலிட்டன்களுக்கு முழுவடிவம் கொடுக்கமுடியவில்லை. காரணம், இதன் உற்பத்தியில் இருக்கும் சவால்கள்தாம். இந்த எக்ஸோகெலிட்டன் கருத்துருவாக்கம் என்பது கடந்த நூற்றாண்டிலிருந்தே இருக்கிறது. 1960-களிலேயே இதற்கு வடிவம் கொடுக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்தன. ஆனால், எந்த நிறுவனத்தாலும் அதன் முழுப்பலனை அடையமுடியவில்லை. பின்னர் 2000-க்குப் பிறகுதான் மீண்டும் எக்ஸோகெலிட்டன்கள் ஆராய்ச்சி வேகமாக முன்னேறத்தொடங்கியது. ஒரு வீரர் அதிக எடையைத் தாங்கக்கூடிய வகையில் இருக்கவேண்டும் என்பதுதான் எக்ஸோகெலிட்டன்களின் முதல் தகுதி. ஆனால் ஆரம்பத்தில், எக்ஸோகெலிட்டன்களே வீரர்களுக்கு அதிக எடையாக இருந்தன. காரணம், அவை அப்போது இரும்பில் செய்யப்பட்டதுதான். பின்னர்தான் அலுமினியம் போன்ற எடை குறைவான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று எடையைக் குறைப்பதற்காக இன்னும் நிறைய உலோகங்கள் வந்துவிட்டன. 

Photo courtesy: Lockheed Martin Company

இதேபோல அடுத்த சிக்கல் பேட்டரி. மனிதர்களின் கைகால் எலும்புகளைப் போலவே, எக்ஸோகெலிட்டன்களும் மூட்டுகள் போன்ற இணைப்புகளால் ஆனவையே. இந்த இணைப்புகளுக்கு ஹைட்ராலிக் முறையில் உந்துசக்தி தேவைப்படும். இதனை உற்பத்தி செய்வதற்கு பேட்டரி போன்ற ஓர் ஆற்றல்மூலம் வேண்டும். ஆனால், இன்றளவும் நம்மால் நீண்டகாலம் சக்தியை அளிக்கும் ஆற்றல்மூலத்தை உருவாக்க முடியவில்லை. இப்போதைக்கு ரீசார்ஜ் செய்யும் வகையிலிருக்கும் லித்தியம் அயன் பேட்டரிகளே இவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நீண்டநாள் போரில் ஈடுபடும் வீரர்களுக்கு இவையெல்லாம் போதுமானதாக இல்லை. இதுவும் எக்ஸோகெலிட்டன்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. இதில் கவனிக்கவேண்டிய இன்னோர் அம்சம், இந்தக் குறைபாடுகள் அனைத்தும் எக்ஸோகெலிட்டன்களின் ராணுவரீதியான பயன்பாடுகளில் மட்டுமே. பிறதுறைகளில் நினைத்ததை விடவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஃபோர்டு நிறுவனத்தின் புதுமுயற்சி!

எக்ஸோ பயோனிக்ஸ் என்ற நிறுவனத்தின் எக்ஸோகெலிட்டன்களை ஃபோர்டு நிறுவனம் தனது கார் தொழிற்சாலையில் பயன்படுத்திவருகிறது. அந்நிறுவனத்தின் அமெரிக்கத் தொழிற்சாலையில் இருக்கும் பொறியாளர்கள் எக்ஸோகெலிட்டன்களை பயன்படுத்திவருகின்றனர். கார் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் இந்தப் பொறியாளர்கள் ஒரு நாளைக்குச் சுமார் 4,600 முறை கைகளை உயர்த்த வேண்டியிருக்கும். அத்தனை முறையும் கையில் உதிரிபாகங்கள், கருவிகள் போன்றவை இருக்கும்.

இத்தனைமுறை கைகளை உயர்த்தியபடி பணிபுரிவதால் அவர்களுக்குத் தோள்பட்டை வலி ஏற்படும். இதனைக் குறைக்கத்தான் இந்த எக்ஸோகெலிட்டன்கள். இதனை அணிந்து பணிபுரிவதன்மூலம் கைகள் எவ்வித எடையையும் உணராது. மொத்த எடையையும் எக்ஸோகெலிட்டன்களே வாங்கிக்கொள்ளும். எனவே, தோள்பட்டை வலியும் வராது. மருத்துவத்துறையிலும் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டு நடக்கமுடியாமல் இருப்பவர்களுக்கு இந்த எக்ஸோகெலிட்டன்களே முதுகெலும்பாக இருக்கின்றன. இதன்மூலம் அவர்களால் எழுந்துநடக்கவும் முடியும். இப்படி ராணுவம், தொழிற்சாலை, கட்டுமானம் என மனிதனின் அசுர உழைப்பு தேவைப்படும் எல்லா இடங்களிலும் நமக்காகப் பணிசெய்கின்றன எக்ஸோகெலிட்டன்கள். 

தனி மனிதர்களின் பங்களிப்பு எப்போதும் வேண்டுமென்பதால், ராணுவத்தைப் பொறுத்தவரைக்கும் எக்ஸோகெலிட்டன்களுக்கு அதிக தேவையிருக்கிறது. ஆனால், பிறதுறைகளுக்கு அப்படிச் சொல்லமுடியாது; காரணம், வருங்காலத்தில் வரவிருக்கும் ஆட்டோமேஷன்!

அடுத்த கட்டுரைக்கு