Published:Updated:

என் ஊர்!

காசு தெரியும் கண்ணாடி ஆறு!

என் ஊர்!

காசு தெரியும் கண்ணாடி ஆறு!

Published:Updated:
##~##

'விவசாயிகள் கள் இறக்க அனுமதி அளிக்க வேண் டும். அந்நிய மதுபானங்களுக்குத் தடை விதிக்க  வேண்டும்’ என்று கோரி, தமிழ்நாடு கள் இயக்கத்தைத் தொடங்கி போராடி வருபவர் செ.நல்லசாமி. இவர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

 ''எங்க ஊர்ல அறச்சாலையம்மன் கோயில் இருக்குது. அதனால, எங்க ஊரின் உண்மையான பெயர் அறச் சாலையூர். இப்படிப் பெயரிலேயே அறம்கொண்ட ஊர் என் ஊர். அதுக்கேத்தபடி ஊர் மக்களும் அறநெறி கொண்டவங்கதான். காலப்போக்குல ஊர்ப் பெயர் மருவி அரச்சலூர் ஆகிடுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழக் கூடிய மக்கள் இங்கே அதிகம். என்ன போட்டாலும் விளையக் கூடிய மண் வளம் மிக்க இந்த ஊர்ல நெல், வாழை, கரும்பு ஆகியவை முக்கியப் பயிர்கள்.

1954-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்துல பவானி சாகர் அணை கட்டினாங்க. அந்த அணையில் இருந்து கீழ் பவானி ஆறு உருவாக்கப்பட்ட பிறகு, ஊர் நல்ல செழிப்பாச்சு. அதுக்கு முன்னாடி கிணத்துப் பாசனமும் மானாவாரி விவசாயமும்தான்.

இங்கே பக்கத்துல ஓடாநிலைனு ஒரு கிராமம் இருக்கு. வெள்ளையர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய தீரன் சின்னமலையின் சொந்த ஊர் அது. அந்தக் காலகட்டத்துல ஆங்கிலேயர்களும் தீரன் சின்னமலையும் அரச்சலூரில்தான் இரண்டு முறை போர் புரிஞ்சாங்க.

அரச்சலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்தான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிச்சேன். இப்ப அது மேல்நிலைப் பள்ளி ஆயிடுச்சு. அந்தக் காலத்துல வசதியான வீட்டுப் பிள்ளைகளும் ஏழை வீட்டுப் பிள்ளைகளும் ஒண்ணாப் படிச்ச பாகு பாடு இல்லாத அரசுப் பள்ளிக்கூடம் அது.  ஆசிரியர்களும் தரமான கல்வியோட நல்ல ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க. ஆனா, மக்கள் இன்னைக்கு ஆங்கில மோகத்துல கான்வென்ட்களை நோக்கி ஓடுறாங்க. கல்வி வியாபாரமாகி, இன்னைக்கு அந்தப் பள்ளி, ஏழைக் குழந்தைகளின் பள்ளினு ஆகிப்போச்சு. அரசுப் பள்ளி ஆசிரியர்களே அவங்க பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்குறாங்க. இந்த நிலைமை மாற  மக்களும் ஆசிரியர்களும் அரசு எந்திரமும் ஒண்ணா சேர்ந்து முயற்சி எடுக்கணும்.

என் ஊர்!

எங்க ஊருக்குப் பக்கத்தில் நாகமலைனு ஒரு குன்று இருக்கு. பசுமையான மரங்கள் செழிச்சு வளர்ந்து இருக்குற இந்த மலையைப் பார்த்தா நாகம் படுத்திருக்கிற மாதிரி தெரியும். அதனால தான் இதுக்கு நாகமலைனு பேர். சின்ன வயசுல விறகு வெட்டவும் சுள்ளி பொறுக்கவும் நாக மலைக்குப் போவோம். இந்த மலையில் மயில்கள் நிறைய இருக்கும். மயில்களிடம் இருந்து உதிர்கிற இறகுகள் நிறையக் கிடைக்கும். அதை எல்லாம் எடுத்துட்டு வந்து மயிலிறகு விசிறி செய்வோம்.

என் ஊர்!

இன்னைக்கு ஊர் நிறைய மாறிடுச்சு. விவ சாயத்தைப் பிரதானமாகக்கொண்ட அரச்ச லூர்ல இப்போ காகித ஆலை, விசைத்தறினு சிறு தொழில்களும் பெருகிடுச்சு. ரியல் எஸ்டேட் முதலாளிகளும் பெருகிட்டாங்க. சர்க்கரை நோயாளி மாசம் ஒரு முறை டாக்டர்கிட்ட போய் சர்க்கரை அளவைத் தெரிஞ்சுக்கிற மாதிரி, நிலம் வெச்சு இருக்கிறவங்க பத்திரப் பதிவு ஆபீஸ் போய் நிலம் தன்னோட பேர்லதான் இருக்கான்னு தெரிஞ்சுக்க வேண்டிய மோசமான சூழல் இன்னைக்கு.

அன்னைக்கு பவானி ஆத்துத் தண்ணி அவ்வ ளவு தெளிவா இருக்கும். ஆத்துக்குள்ள காசை வீசி அப்புறம் குதிச்சுக் காசை எடுப்போம். ஆனா, இன்னைக்கு கழிவுகளால பவானி ஆறு சாக்கடை மாதிரி ஆகிடுச்சு.

தொழில் வளர்ச்சியாலும் விஞ்ஞான வளர்ச்சி யாலும் இயற்கையை இழந்துட்டோம். ஆனாலும், அது என் ஊர் இல்லைனு ஆகிடுமா, என்ன?''

- கி.ச.திலீபன்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism