Published:Updated:

`சைக்கிக் டைவர்ஸ்' உங்கள் தாம்பத்யத்தை அசைக்கிற வில்லன் என்பது தெரியுமா?

`சைக்கிக் டைவர்ஸ்' உங்கள் தாம்பத்யத்தை அசைக்கிற வில்லன் என்பது தெரியுமா?
`சைக்கிக் டைவர்ஸ்' உங்கள் தாம்பத்யத்தை அசைக்கிற வில்லன் என்பது தெரியுமா?

காதலர்களாக இருக்கும் தருணங்களைவிட, கல்யாணம் நடந்த பிறகு தம்பதியரிடையே ஈர்ப்பு இரட்டிப்பாக வேண்டும். இந்த ஈர்ப்புதான் ஒரு திருமண பந்தத்தைப் பிரியாமல் பாதுகாக்கும் பசை. இந்தக் காதல் பசை உலர்ந்துபோகும் நேரத்தில், தாம்பத்ய உறவில் மெல்லிய சலிப்பு தட்ட ஆரம்பிக்கும். இந்தச் சலிப்பு உங்கள் மனதில் நுழையும்போதே சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து களையெடுத்துவிட்டால், தாம்பத்யம் தொடர்ந்து இனிதாகப் பயணிக்கும். சரி, உங்கள் தாம்பத்யத்தில் சலிப்பு தட்ட ஆரம்பித்துவிட்டது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இதோ சுட்டிக்காட்டுகிறார், மேரிட்டல் சைக்காலஜிஸ்ட் அசோகன்.

* அந்தக் காலத்தில் அம்மாக்கள், தங்கள் பெண்களிடம் அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி விசாரிக்கும்போது, ``நீயும் உன் வீட்டுக்காரரும் நல்லபடியா பேசிட்டிருக்கீங்களா?'' என்று இலைமறை காயாகக் கேட்பார்கள். இன்றைக்கோ பேசிக்கொள்ளவே நேரமில்லாமல், வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தம்பதியர். இதில், முதலில் அடிபடுவது கணவன் மனைவியின் அந்தரங்கத் தருணங்களே. உழைத்துக் களைத்து வரும் உடம்புக்குத் தூக்கம்தான் தேவைப்படுமே ஒழிய, தாம்பத்யம் தேவைப்படாது என்பது நியாயமே. ஆனால், உடம்பு சோர்வாக இருக்கிறது என்று உறவைத் தவிர்க்கிறீர்களா, அல்லது உறவைத் தவிர்ப்பதற்காக சோர்வைக் காரணம் காட்டுகிறீர்களா என்பதை யோசியுங்கள். சோர்வைக் காரணம் காட்டுகிறீர்கள் என்றால், உங்கள் உறவில் சலிப்பு வந்துவிட்டது என்று அர்த்தம்.

     * மனமோ, உடலோ துணையுடன் பகிர்ந்துகொள்ள நேரமில்லை என்று சொல்வீர்கள் என்றால், அது உண்மை கிடையாது. மனிதர்களின் மன இயல்பானது, தனக்குப் பிடித்த விஷயத்தைச் செய்வதற்கு எப்படியாவது நேரத்தைக் கண்டுபிடித்துவிடும். நேரமில்லை என்று சொல்லும்போதே, சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்கள் மனம் ஈடுபட விரும்பவில்லை என்றே அர்த்தம். இதுவும் சலிப்பின் இன்னொரு வடிவம்தான்

  * திருமணமாகி இரண்டு அல்லது மூன்று வருடங்களில் விடுமுறைகளை நீங்களும் உங்கள் துணையும் எப்படியெல்லாம் என்ஜாய் செய்தீர்கள் என்று யோசியுங்கள். அவற்றில் பாதியையாவது தற்போது அனுபவிக்கிறீர்களா? `ஆம்' என்றால், உங்கள் உறவில் சலிப்பு என்ட்ரி ஆகவில்லை. `இல்லை' என்றால், உங்கள் விடுமுறை நாள்களைத் துணையுடன் சேர்ந்து கலர்ஃபுல்லாக்க உடனே திட்டமிடுங்கள். 

* பரஸ்பரம் கேலி, கிண்டல் செய்துகொள்ளும் ஜாலியான நடவடிக்கைகள் குறைந்துவிடுவதும் சலிப்பின் ஆரம்ப அறிகுறிதான்.

* `பட்ஜெட் இடிக்குது', `பிள்ளை சரியா படிக்கலை' என்பதைத் தாண்டி, நீங்களும் உங்கள் துணையும் `மிஸ்.இண்டியா', `காலா' போன்ற பொதுவான விஷயங்களைப் பேசிக்கொள்கிறீர்களா? `இல்லை, குடும்பத்துக்குத் தேவைப்பட்டதை மட்டும்தான் பேசுவோம்' என்கிறீர்களா? மன்னிக்கவும், உங்கள் தாம்பத்யம் அவ்வளவு இன்ட்ரஸ்டிங்காக இல்லை. `வீட்டுக்கு ஒரு பயனும் இல்லைன்னாலும் நாங்க டிரம்ப் பற்றிப் பேசுவோம்' என்று சொல்கிறீகளா? கங்கிராட்ஸ்... `வாழ்றீங்க' என்று கொண்டாடப்படும் தம்பதி நீங்கள்தான்.

* சின்ன சின்ன விஷயங்களிலும் துணையிடம் எரிந்து விழுகிறீர்களா? காரணமே இல்லாமல் கோபப்படுகிறீர்களா? இப்படியெல்லாம் நடந்துகொண்ட பிறகு மனம் வருந்தி துணையிடம் மன்னிப்புக் கேட்கிறீர்களா? `எரிந்து மட்டும்தான் விழுவேன். மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்' என்றால், உங்கள் திருமண பந்தம் பெரியதொரு சலிப்பில் இருக்கிறது. உடனடியாக இரண்டாவது தேனிலவுக்கு ஏற்பாடு செய்து, உங்களுக்கான தனிமைத் தருணங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்தப் பெரும் சலிப்பிலிருந்து மீள்வதற்கான நல்ல வழி அது.

* கணவனோ, மனைவியோ அவர்களே அறியாமல் துணையை அடிமனதுக்குள் வெறுக்க ஆரம்பித்திருப்பார்கள். இதற்கான காரணம், ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த வெறுப்பு அவர்களே அறியாமல் செக்ஸை ஒதுக்க ஆரம்பிக்கும். இதை மருத்துவத்தில் `சைக்கிக் டைவர்ஸ்' என்போம். எச்சரிக்கை தம்பதிகளே... இதுவே பின்னாளில் `லீகல் டைவர்ஸ்' மாற்றத்தை அடைகிறது.

இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடியாகக் களைந்தெறியுங்கள். உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் என்றுமே வசந்த காலம்தான்!