Published:Updated:

நிக்கோலோ மாக்கியவெல்லி எனும் 'அரசியல் தந்திரன்'! நினைவு தின சிறப்புப் பகிர்வு

நிக்கோலோ மாக்கியவெல்லி எனும் 'அரசியல் தந்திரன்'! நினைவு தின சிறப்புப் பகிர்வு
நிக்கோலோ மாக்கியவெல்லி எனும் 'அரசியல் தந்திரன்'! நினைவு தின சிறப்புப் பகிர்வு

ரசியல் தத்துவவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர் நிக்கோலோ மாக்கியவெல்லி (Niccolò Machiavelli). அவர் எழுதிய `The Prince’ எனும் நூல் இன்றும் அரசியல் சாணக்கியர்கள் பலருக்கு முக்கிய அரிச்சுவடி. ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் பலருக்கும் மாக்கியவெல்லியின் தாக்கம் உண்டு. அவரின் எழுத்துகள் பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், அவருடைய இடம் மேற்கத்திய தத்துவத்தில் அசைக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. 

15 ம் நூற்றாண்டு – ஐரோப்பாவில் அரசாங்கத்துக்கும், மதகுருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குழப்பங்களுக்கும், மோதல்களுக்கும் வித்திட்ட காலம். இதே நேரத்தில் இத்தாலியில் உள்ள ப்ளோரன்டின் மாநிலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் மூன்றாவது மகனாக 1469 ம் ஆண்டு பிறந்தார் நிக்கோலோ மாக்கியவெல்லி. புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்ததால், இளம் வயதிலேயே துசிடிடிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்களின் தத்துவங்களை ஆழ்ந்து கற்றுக்கொண்டார் அவர். கூடிய விரைவில் அரசுப் பணியில் ஆலோசகராகவும் இணைந்தார் மாக்கியவெல்லி. 1498ம் ஆண்டுமுதல் 1512ம் ஆண்டுவரை ப்ளோரன்டின் அரசுக்கு அரசியல் ஆலோசகராகவும், சில வருடங்கள் ராணுவ ஆலோசகராகவும் பணியாற்றினார். புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டா வின்சியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 1503 - 1506 ஆகிய ஆண்டுகளில் ராணுவப் போறுப்பில் இருந்த இவர் 'பைசா' நகரத்தினை 1509 ம் ஆண்டு தோற்கடித்தார். இதன் பின்னணியில் இவரும், டா வின்சியும் இணைந்து ஓராண்டுக்கு முன்னதாக அந்நகரத்துக்குத் தண்ணீர் வரும் தடங்களை எல்லாம் அடைத்தார்கள் போன்ற கதைகளும் உண்டு. 

சூரியனாகவே இருந்தாலும் மாலை நேரத்தில் அஸ்தமித்துதானே ஆகவேண்டும். 1512 ம் ஆண்டு ப்ளோரன்டின் அரசு வீழ்ந்தது. மாக்கியவெல்லி சிறைக்கைதியானார். 1513 ம் ஆண்டு Strappado எனும் கொடுமையான தண்டனையை 22 நாள்கள் அனுபவித்தார். அதனால் அவருடைய கை எலும்பு மூட்டுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. விடுதலை செய்யப்பட்ட பிறகு சில நாள்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். 

ஆனால், அரசியலும் தத்துவமும் அவரை விடாமல் அலைக்கழித்தது. விளைவு, மீண்டும் எழுத ஆரம்பித்தார். அப்படி அவரால் எழுதப்பட்ட புத்தகங்கள்தாம் `The Prince' மற்றும் `Discourses On Living'.  வெறும் 26 அதிகாரங்கள் கொண்ட `The Prince' நூல், அன்றைய அரசியல் ஆட்சிமுறையில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியது. லாரன்ஸோ என்ற இளவரசருக்குச் சமர்ப்பணம் எனத் தொடங்கும் இந்நூல், ஓர் ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும், மனித இயல்பு என்ன என்று பல விஷயங்களை அலசியது. 

``சிங்கத்தின் வீரமும், நரியின் தந்திரமும் ஓர் அரசனுக்கு ஒருங்கே அமைய வேண்டும். பயம் என்பதும் ஒரு வகையில் ஆட்சியாளரின் ஆயுதம்தான்” என்று கூறும் மாக்கியவெல்லி, அரசியல் அதிகாரத்தினைக் குறிக்கோளாகக் கருதுபவர். `கருணையாக இருப்பதைவிடக் கடுமையாக இருப்பதே நல்லது' என்று கூறியவர்! “ஆட்சியாளன் விரிவான கேள்விகள் கேட்பவராகவும், நிதானமாகக் கவனிப்பவராகவும் இருக்க வேண்டும். அமைதியான சூழ்நிலைகளிலும் ஓர் ஆட்சியாளன் போர் குறித்த ஆயத்தங்களைச் செய்யவேண்டும். அப்படி இருந்தால்தான் அவசர காலங்களில் பாதுகாப்பாக இருக்க முடியும். மனிதர்களை எப்போதும் முழுமையாக நம்பிவிடக் கூடாது. எந்நேரமும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று ஒவ்வொரு குணநலன்களையும் அலசி ஆராய்ந்து கூறியவர் மாக்கியவெல்லி.
 
கொஞ்சமும் ஜனநாயகத்துக்கு இடமளிக்காமல், சர்வாதிகார ஆட்சியைக் குறித்தே பேசுகிறாரே இவர் என்று நாம் நினைத்தால், மாக்கியவெல்லி ஒரு தத்துவவியலாளர் மட்டும் அல்லர், ஒரு நல்ல வரலாற்று ஆய்வாளரும்கூட. போரினையும், ஆட்சிகளையும் பார்த்து பார்த்து எழுதிய நூல் என்பதால் இது விமர்சனங்களை அதிகமாகவே பெற்றது. 

``எப்போதும் உச்சபட்ச அறத்தினையே தேர்வு செய்ய வேண்டும் என்று ஓர் அவசியமும் இல்லை. எப்போது நன்மையையும், நல்லொழுக்கத்தையும் கைவிட்டுவிட்டு, கொஞ்சம் தீமையையும், தந்திரத்தையும் கைக்கொள்ளவேண்டும் என்று அறிந்துகொள்வதும் அவசியம்” என்று பாடம் எடுக்கிறார் மாக்கியவெல்லி. 

இவ்வளவு இருந்தாலும், `மக்களிடம் ஓர் ஆட்சியாளன் எதிர்ப்பினைச் சம்பாதித்துக்கொள்ளக் கூடாது. மக்களிடம் ஓர் ஆட்சியாளனுக்கு நல்ல பெயர் இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் கொஞ்சம் பயமும் இருக்க வேண்டும்' என்று கூறுகிறார் மாக்கியவெல்லி. 

எப்படி இவரால் சர்வாதிகாரத்தையும், கடுமையான நடைமுறைகளையும் உயர்த்திப்பிடிக்க முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் இவருடைய நூல்களைப் படித்தபோது, இவர் எழுதிய `The Prince' நூல் ஒரு அரசியல் பகடி நூலாகவோ, ஒரு முரண் நூலாகவோகூட இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். 

ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் இன்றுவரை அறிவுஜீவிகளை ஆட்டிப்படைக்கிறது என்றால் மாக்கியவெல்லியின் தாக்கம் எவ்வளவு பெரியது என்று நாம் அறிந்துகொள்ளலாம். ஜூன் 21, 1527 அன்று இறந்த இவரின் கல்லறை வாசகம் – ‘TANTO NOMINI NULLUM PAR ELOGIUM’ அப்படியென்றால், இவனுடைய பெயருக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ஒரு புகழுரை இன்னும் எழுதப்படவில்லை என்பதாகும்!