Published:Updated:

`பிரதமர் மன்மோகன்... முதலமைச்சர் இந்திரா காந்தி...’ அ.தி.மு.க அமைச்சர்களின் வைரல் உளறல்கள்!

`பிரதமர் மன்மோகன்... முதலமைச்சர் இந்திரா காந்தி...’ அ.தி.மு.க அமைச்சர்களின் வைரல் உளறல்கள்!
`பிரதமர் மன்மோகன்... முதலமைச்சர் இந்திரா காந்தி...’ அ.தி.மு.க அமைச்சர்களின் வைரல் உளறல்கள்!

கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்னு ஆரம்பிச்சு இந்திராகாந்தி முதலமைச்சர் என்பது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் நம் தமிழ்நாட்டு அமைச்சர்களின் உளறல் தொகுப்பு இதோ...

ஜெயலலிதா மறைவுக்கு முன் வாய்திறந்துகூட பேசாமல் இருந்த அமைச்சர்கள், தற்போது பொது மேடைகள், செய்தியாளர் சந்திப்புகள் என அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடின்றி உளறி வருகிறார்கள். இவையெல்லாமே வைரல் ரகம்தான். கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார் என ஆரம்பித்து இந்திராகாந்தி முதலமைச்சர் என்பது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் நம் அமைச்சர்களின் உளறல் தொகுப்பு இதோ

செல்லூர் ராஜு

தண்ணி ஆவியாகாம தடுக்குறதுக்காக வைகை அணையை தெர்மாக்கோல் வச்சு மூடும் முயற்சியில் ஈடுபட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மீம் கிரியேட்டர்கள், நியூஸ் சேனல்கள், எதிர்க் கட்சிகள்ட்ட... மட்டுமல்லாம சொந்த கட்சிக்காரங்களோட ட்ரோலுக்கு ஆளானார். அதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் 'முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மதுசூதனன்' என்று உளறி மீ(ம்)ண்டும் ட்ரெண்டிங் வலையத்துக்குள் வந்தார் செல்லூர் ராஜு.

திண்டுக்கல் சீனிவாசன் 

மாண்புமிகு பிரதமர் 'மன்மோகன் சிங்' அவர்களேனு சொல்லி நெட்டிசன்கள்கிட்ட சிக்கித் தவித்தார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். "மன்னிச்சுக்குங்க மக்களே... அம்மா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்கனு நாங்க சொன்னது எல்லாமே பொய்தான். சசிகலா குடும்பத்தோட நெருக்கடி காரணமாத்தான் அப்படி சொன்னோம்"னு இவர் அடிச்ச அந்தர் பல்டில ஜெயலலிதாவோட சமாதியே ஆடிப்போச்சு! ஈஷா நடத்திய நதிகளைக் காப்போம் நிகழ்ச்சியில, பாடகி சுதா ரகுநாதனை, பரதநாட்டியக் கலைஞர்னு மேடையில குறிப்பிட்டுட்டு, `ஆமா... நீங்க பரதநாட்டியம் தானே மா' என்று கேட்டு மீண்டும் வைரலானார். சமீபத்துல நடந்த நிகழ்ச்சியில "அம்மா கொள்ளை அடிச்ச காச தினகரன் திருடிட்டாரு"னு உளறி மீம் கிரியேட்டர்களுக்கு 365 நாளும் வேலைவாய்ப்பு தருகிறார் சீனிவாசன்.

செங்கோட்டையன் 

ஈஷா நடத்திய நதிகளைக் காப்போம் நிகழ்ச்சியில, `சுஹாசினி மணிரத்ன'த்தை 'சுஹாசினி மணிவாசகம்'னும் 'சுதா ரகுநாதன்'னை 'சுதா ரகுராமன்'னும் அழைப்பிதழை கையில வெச்சுக்கிட்டே தப்பு தப்பா படிச்சாரு நம்ம கல்வி அமைச்சர் செங்கோட்டையன். சசிகலாவை ஆதரித்தபோது ஆங்கில ஊடக பெண் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு தெரிந்த இங்கிஷில்  'எனிபடி ஏ.டி.எம்.கே... பிப்புள்... சப்போர்டிங் மேடம்' என்று உளறிவிட்டு தலையைச் சொறிந்து தப்பிச் சென்றார்.

பன்னீர்செல்வம் 

அதே ஈஷா நிகழ்ச்சியில பாடகி சுதா ரகுநாதனை, 'சுதா ரங்குநாதன்'னு சொல்லி ஒரு புது பேர நம்ம மக்கள் மத்தியில அறிமுகப்படுத்துனாரு துணைமுதல்வர்!

(ஒரு அமைச்சர் ரெண்டு அமைச்சர்னா பரவாயில்ல துணை முதலமைச்சர் வர அந்த அம்மா பேர தப்பா சொன்னா..? பாவம்யா அவுங்க!)

எடப்பாடி பழனிசாமி

விகடனுக்கு கொடுத்த வீடியோ பேட்டியில், ``மன அமைதிக்கு புத்தகம் படிப்பேன்... படிச்சா மன அமைதி, நல்ல கருத்துகள்லாம் கிடைக்கும்"னு சொன்னார் முதலமைச்சர். `கடைசியா என்ன புத்தகம் படிச்சிங்க'னு கேட்டதுக்கு "கடைசியா படிச்ச புத்தகம் வந்து வந்து..."னு இழுவைய போட்டவரு கடைசி வரையும் பதிலே சொல்லலையே. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடையில 'கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்'னு முதலமைச்சர் சொன்னது அல்டிமேட் வைரல்.

ஜெயக்குமார்

பத்திரிகையாளர்கள் முன்ன பேசுறப்போலாம் தன்னை ஒரு மாஸ் ஹீரோனு நினைச்சுகிட்டு பழமொழிகள, பன்ச் டயலாக்கா மாத்தி தப்பு தப்பா பேசுறதுதான் மீன்வளத்துறை அமைச்சரோட வாடிக்கை. இது பத்தாதுன்னு மீம் கிரியேட்டர்களை வம்பிழுத்தது வேறு கதை. பத்திரிகையாளர் சந்திப்புல அவர் பேசினதுக்கு `யூடியூப்பர்ஸ்' கொடுத்த ரிவிட்டுகள்ல சில...

`பொது மக்கள் யாரும் மீம்ஸ் போடறதில்ல...' - அப்ப மீம்ஸ் போட்ற நாங்கள்லாம் வேற கிரகத்துல இருந்தா வந்தோம்!

'வேல வெட்டி இல்லாத கும்பல்தான் மீம்ஸ் போடறாங்க...' - அப்ப வேல போட்டுக் கொடுங்க, அரசாங்கம்தானே வேல போட்டுக் கொடுக்கணும்!

என்று பதில் மீம்ஸ் போட்டு நம் மீன்வளத்துறை அமைச்சரை வறுத்தெடுத்துவிட்டனர்.

மீம் கிரியேட்டர்கள் கோட்டா முடிஞ்சதுக்கு அப்புறம், நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவுல பேசின மாண்புமிகு துணைமுதல்வர், ``மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் சிறந்த நகைச்சுவை மாபெரும் நடிகர் டி.ஜெயக்குமார் அவர்களே"னு மேலும் கடுப்பேத்துனது செம ஹைலைட்!

ராஜேந்திர பாலாஜி

பா.ஜ.க-வின் `பினாமி'யாகத்தான் தமிழக அரசு செயல்பட்டுகிட்டிருக்குனு ஊரே சொல்லிட்டிருந்த நேரத்துல "நம்ம யாருக்கும் பயப்பட தேவையில்ல... ஓபாமா வந்தாலும் சரி 'ட்ரம்மே' (ட்ரம்ப்) வந்தாலும் சரி... மோடி இருக்காரு நமக்கு"னு மேடையில 'மைண்ட் வாய்ஸ்'னு நினைச்சு வெளிப்படையா பேசிட்டாரு பால்வளத்துறை அமைச்சர்.

எஸ்.பி.வேலுமணி

சென்னையில நவம்பர் மாதம் பெய்த மழையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை பத்தி செய்தியாளர்கள்கிட்ட பேசினப்ப, விடாம கேள்வி கேட்டுக்கிட்டுருந்தாங்க. இதுல கடுப்பான நம் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, "அமெரிக்கா, லண்டனைவிட சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது"னு உணர்ச்சிவசப்பட்டு சொல்லி, மழைக்காலத்தில வறண்டு போயிருந்த நம் மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல 'கன்டென்ட்' கொடுத்தார்.

சசிகலா 

`நம் அம்மாவுக்கு கழகம்தான் வாழ்க்கை, ஆனால் எனக்கோ அம்மாதான் வாழ்க்கை' என்று சொல்லிவிட்டு சசிகலா அழுதபோது... பார்த்துக்கொண்டிருந்த மக்களால் அழமுடியவில்லை!

சிறைக்குப் போறதுக்கு முன்ன ஜெயலலிதா நினைவிடத்துல சத்தியம் செய்றேன்னு ஓங்கி அடிச்சு தரையை உடைக்க முயற்சி செஞ்சது, சிறையிலிருந்தே ஷாப்பிங் போயிட்டு வந்ததுனு சோஷியல் மீடியாவையே ஒரு 'பெரிய' ரவுண்டு வந்தாங்க 'சின்ன'அம்மா.

விஜய பாஸ்கர்

சமீபத்துல பேசுன சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், "இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது... இந்திரா காந்தி அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது"னு தப்பா சொன்னத அவரே ரெண்டு தடவை கவிதை நடையில் சொல்லி வீடியோ எடிட்டர்களின் 'ரிபீட் மோட்' வேலைய குறைச்சுட்டாரு. இதுக்கு முன்னாடி பெண் பத்திரிகையாளர் கேள்வி கேட்டப்போ, "நீங்க அழகா இருக்கீங்க... உங்க கண்ணாடி நல்லாருக்கு மா..."னு 'அலைபாயுதே' மாதவன் ஸ்டைலில் சொல்லி 'ஆயுத எழுத்து' மாதவனாக மண்டையைச் சொறிந்து, பின்பு வைரலானது தனிக்கதை.

அ.தி.மு.க அமைச்சர்கள் எப்பவுமே இப்படியா... இல்ல இப்பதான் இப்படியானு தெரியல. ஆனா ஒண்ணு, இவங்க ஆட்சியில இருக்குற வர நலத்திட்டங்கள் வருதோ இல்லையோ நல்ல என்டெர்டெயின்மென்ட் நிச்சயம் வரும். இந்த லிஸ்ட்ல ஏதாவது விட்டுப்போயிருந்தா கமென்ட்ல சொல்லுங்க மக்களே!

அடுத்த கட்டுரைக்கு