Published:Updated:

எட்டு முறை தலைவர்!

எட்டு முறை தலைவர்!

எட்டு முறை தலைவர்!

எட்டு முறை தலைவர்!

Published:Updated:
##~##

துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ராஜாக்காபட்டி கிராமத்தில், தொடர்ந்து எட்டாவது முறையாகப் பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார், 85 வயதான மாயாண்டித் தேவர். லட்சங்களைச் செலவழித்தும் இரண்டாவது முறையாகக் கூட தலைவராக முடியாமல் போகிறவர்கள் மத்தியில், இவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு செல்வாக்கு?

 அந்த ஊரைச் சேர்ந்த பெரியவரான இளசு ஒச்சத் தேவரிடம் கேட்டோம். 'மாயாண்டித் தேவர் அந்தக் காலத்துலேயே அஞ்சாப்பு வரைக்கும் படிச்சவரு. முத்துராமலிங்கத் தேவர் எங்க போனாலும் அவர் கூடவே போனதால, ஊருக்குள்ள இவருக்குப் பெரிய பேரு. 1957-ல மத்திய சர்க்கார் பஞ்சாயத்து போர்டைக் கொண்டுவந்துச்சு. அப்ப எங்க சுத்துப்பட்டி கிராமம் எல்லாம் மானூத்து பஞ்சாயத்துலதான் இருந்தது. நிலக்கோட்டையில இருந்து வந்த பஞ்சாயத்து போர்டு அதிகாரிங்க கை தூக்கு முறையில தேர்தல் நடத்து னாங்க. அப்பதான் முதல்முறையா பஞ்சாயத்து மெம் பர் ஆனாரு மாயாண்டித் தேவரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எட்டு முறை தலைவர்!

அடுத்த தேர்தல் 1960-ல வந்தப்ப, ராஜாக்காபட்டி தனிப் பஞ்சாயத்தா மாறிடுச்சு. அந்தத் தேர்தல்ல 34 வயசேயான மாயாண்டித் தேவரு ராஜாக் காபட்டி, பாறைபட்டி கிராமத்து மக்க ளோட ஆதரவோட பிரெஸிடென்ட் ஆனாரு. அதுக்கப்புறம் 1965, 70, 86, 96, 2001, 2006, 2011னு தொடர்ந்து எட்டு தடவை பஞ்சாயத்து தலைவர் ஆகியிருக் காரு. இடையில எம்.ஜி.ஆர். காலத்துல ரெண்டு தடவை பஞ்சாயத்து தேர்தல் நடத்தலை. அப்படி நடத்தியிருந்தாலும் அவர்தான் ஜெயிச்சிருப்பாரு. இதுக்குக் காரணம், ஊருக்குள்ளே படிச்ச மனுசன் கிறது ஒண்ணு. ஊர்ப் பிரச்னையில யாராவது காரசாரமாப் பேசிட்டாக்கூட கோவிச்சுக்காம, பிரச்னையைத் தீர்க்குற வழியைத் தேடுவாரு. ஓட்டை டி.வி.எஸ். 50 வெச்சிருக்கிறவங்ககூட ஒரே எலெக் ஷன்ல பிளசர் வாங்கிடுறாங்க. ஆனா, எட்டு தடவை ஜெயிச்சும் இன்னிக்கு வரைக்கும் அவிய்ங்க சீயான் (தாத்தா) கட்டிய பழைய ஓட்டு வீட்டில்தான் வசிக்காரு. உண்மையிலேயே தங்கமான மனுஷன்' என்றார் பெருமையுடன்.

மாயாண்டித் தேவரோ, 'நான் படிச்ச காலத்துல ராஜாக்காபட்டியில மட்டும்தான் பள்ளிக்கூடம் இருந்துச்சு. முதல் தடவைபிரெஸி டென்ட் ஆனதுமே, பாறைபட்டியில பள்ளிக் கூடம் தொடங்கிவெச்சேன். ஆதிதிராவிட மக்களுக்குக் காலனி வீடு கட்டிக் கொடுக்கிற துக்காக எங்க பூர்வீக இடம் மூணு ஏக்கரைக் கொடுத்தோம். அதனால, அந்த மக்கள் இப்ப வும் எனக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க. 'தப்புப் பண்ண மாட்டாரு. யாருக்கும் இடைஞ்சல் பண்ண மாட்டாரு’னு ஊர் மக்கள் எம்மேல நம்பிக்கை வெச்சிருக்காங்க. அதை இன்னிக்கு வரைக்கும் காப்பாத்திட்டு இருக்கேன். அஞ்சு வீட்டுக்கு ஒரு தண்ணீர்க் குழாய், பத்து வீட்டுக்கு ஒரு தெரு விளக்கு, சிமென்ட் ரோடுனு அடிப்படை வசதி எல்லாம் செஞ்சாச்சு. இந்த ஊருக்கு கல்யாண மண்டபம் ஒண்ணு கட்டிக்குடுக்கணுங்கிறது என் ஆசை.

ஒரு விஷயத்தைச் சொல்லணும் தம்பி. முன்னாடி தேர்தல் நேரத்துல வெத்தலைப் பாக்கு, டீத் தண்ணி, பீடிச் செலவுதான் ஆகும். இந்தத் தேர்தல்ல, நான் யார் வீட்டுக்கும் ஓட்டுக் கேட்டுப் போகலை. ஆனாலும் செலவு லட்சத்தைத் தாண்டிருச்சு. 'பக்கத்து ஊர்ல எல் லாம் ஓட்டுக்கு அவ்வளவு குடுக்காக, இவ் வளவு குடுக்காக’ன்னு சொல்லி, என் பிள்ளைங்க கிட்ட ஜனங்க கேட்டு வாங்கிட்டுப் போயிருக் காங்க. நாடு போற போக்கை நினைச்சா ரொம்பக்  கவலையா இருக்கு தம்பி!' என்றார் பெரியவர்.

- கே.கே.மகேஷ், படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

எட்டு முறை தலைவர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism