Published:Updated:

என் ஊர்!

கிணறு விளையாட்டு மைதானம்... டீக்கடை அரசியல் பள்ளி!

என் ஊர்!

கிணறு விளையாட்டு மைதானம்... டீக்கடை அரசியல் பள்ளி!

Published:Updated:
##~##

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான ராமமூர்த்தி, தன் ஊரான அரியலூர் திருக்கை குறித்த நினைவுகளில் நீந்தி மகிழ்கிறார்...

 ''விழுப்புரம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் அரியலூர் திருக்கை. விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் இறங்கி, ஒரு கி.மீ. உள்ளே நடந்துபோக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கள் ஊரில் இருந்து ஆறேழு கி.மீ. தூரம் உள்ள பெருச்சானூரில்தான் படித்தேன். அப்போது நடந்தேதான் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அதனால் காலையில் ஆறரை மணிக்கே பள்ளிக்குக் கிளம்பிவிடுவோம்.

என் ஊர்!

ஊரில் விவசாயம்தான் பிரதானம். மணிலா, கரும்பு, நெல் போன்றவற்றைப் பயிரிடுவார்கள். அப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டு பிரபலம் கிடையாது. குளத்திலும் ஏரியிலும் குதித்து விளையாடுவதுதான் எங்களுக்குத் தெரிந்த விளையாட்டு.

எங்கள் ஊர் நீர்நிலைகள்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம். நீச்சல் தெரியாமல் கிணற்றில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, நீரில் முழ்கிவிட்டேன். சித்தப்பாதான் என்னைக் காப்பாற்றினார். குண்டடித்தல், கோட்டியடித்தல் போன்ற விளையாட்டுக்களில் எங்கள் பையன்கள் கில்லாடிகள்.

என் ஊர்!

ஆடி மாதம் அய்யனார் திருவிழா தெருக் கூத்துதான் எங்கள் ஊரின் ஒரே பொழுது போக்கு. விடிய விடிய தெருக்கூத்து பார்ப்ப தற்காக ஆண்டு முழுவதும் காத்திருப்போம். எங்கள் ஊரில் திரையரங்குகள் கிடையாது. டூரிங் டாக்கீஸ்கூட பக்கத்துக் கிராமத்தில்தான்.  இளவட்டங்கள் பக்கத்து ஊர்களுக்குச் சென்று சினிமா பார்த்துவிட்டு வருவோம்.

சினிமா பார்க்கும் நாளில் ஏதோ சுற்றுலாவுக் குத் தயாராகும் மனநிலையில்தான் இருப்போம். ஊரில் திரையரங்கு இல்லாததால் நான் ஏழாவது படிக்கும்போதுதான் முதன் முதலில் சினிமா பார்த்தேன். ஜெமினி கணேசன் - சாவித்ரி நடித்த 'குணசுந்தரி’ படம்.

நான் எட்டாவது படிக்கும் வரை எங்கள் ஊரில் மின்சாரம் கிடையாது. சிம்னி விளக்கில்தான் வீட்டு வேலைகள் செய்வது, படிப்பது எல்லாமே. பத்திரிகைகளை ஆர்வ மாகப் படிப்பேன்.

ஊரில் இரண்டு தேநீர்க் கடைகள். அங்கே காலையில் தவறாமல் ஆஜராகி செய்தித்தாளை முழுக்க வாசித்து முடித்தால்தான் அந்த நாள் விடியும். அந்த வாசிப்புதான் எனக்குள் அரசியல் ஆர்வத்தை உண்டாக்கியது. பின்னாளில் நான் தீவிர அரசியலில் ஈடுபட்டு இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு அந்த இரண்டு தேநீர்க் கடைகள்தான் காரணம்.  

எங்கள் ஊரில் தீண்டாமை நோய் கொடூரமாக இருந்தது. இப்போது சற்றே தேவலாம் என்றாலும், நிலைமையில் பெரிய மாற்றம் என்று சொல்ல முடியாது.

நான் தலித் அல்லாத சாதியில் பிறந்தவன். பல ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை காலமானபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்த தலித்துகள் உட்காராமல் நின்றுகொண்டே இருந்தனர். அவர்களை நான் அமரச் சொன்னபோது, அவர்கள் சொன்ன பதில் இது. 'நீங்க கம்யூனிஸ்ட். அதனால் எங்களைச் சரிசமமா நினைச்சு உட்காரச் சொல்வீங்க. உபசரிப்பீங்க. நாளைக்கு நீங்க ஊருக்குப் போயிடுவீங்க. அப்புறம் உங்க சொந்தக்காரங்க 'எங்களுக்குச் சமமா உட்காருவியா நீ?’னு எங்களை உதைப்பாங்க!’ இதுதான் இன்றும் நிலைமை. இதை மாற்ற இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது.

என் ஊர்!

அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டதால் என் சகோதரர் மட்டுமே இப்போது ஊரில் இருக்கிறார். நான் படிப்பதற்காகவும், அரசியலில் ஈடுபடுவதற்காகவும்  பல ஊர்களுக்கு மாறி மாறிச் சென்றுகொண்டு இருந் தாலும், மாதம் ஒரு முறையாவது ஊருக்குச் சென்று நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்துவிட்டு வருவது வழக்கம்.  அப்போது எல்லாம் என்னை நானே புதுப்பித்துக்கொள்வதுபோன்ற உணர்வு!''

- கவின் மலர், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism