

இபோக்: மலேசியாவில் நடந்து வரும் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வரும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் களத்தில் உள்ளன. முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, கொரியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்று பாகிஸ்தானுடன் மோதியது.
வழக்கம் போல் ஆக்ரோஷமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் 4வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது வகாஸ் கோல் அடித்தது. ஆனால் அவர்களின் உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை.
அடுத்த நிமிடத்திலேயே இந்தியா ருபிந்தர் பால் சிங் பதில் கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 9வது நிமிடத்தில் இந்தியா இன்னொரு கோல் போட்டு அசத்தியது.
மன்தீப்சிங் இலக்கை நோக்கி அடித்த பந்தை பாகிஸ்தான் கோல் கீப்பர் இம்ரான் ஷா தடுத்தார். இதனால் திரும்பி வந்த பந்தை மற்றொரு இந்திய வீரர் ஆகாஷ்தீப்சிங் கோல் வலைக்குள் திணித்தார். இதன் மூலம் இந்தியா முதல் பாதியில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிற்பாதியில் ஆட்டம் மேலும் விறுவிறுப்பானது. 56வது நிமிடத்தில் மன்தீப்சிங் இந்தியாவின் 3வது கோலை அடித்தார். பதிலடி கொடுக்க தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானின் பெரும்பாலான முயற்சிகளுக்கு இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முட்டுக்கட்டை போட்டார். அவர்களின் நிறைய வாய்ப்புகளை அவர் தவிடுபொடியாக்கினார். 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீணடித்தது.
##~~## |