Published:Updated:

நாடி பார்த்து உணவை நாடு!

நாடி பார்த்து உணவை நாடு!

##~##

'உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதை நடைமுறையில் நிரூபித்துவருகிறது புதுவையில் உள்ள 'எனர்ஜி ஹோம்’. முழுக்கவே இயற்கை உணவுகளைக்கொண்ட உணவகம்!

 உணவகத்தின் உரிமையாளர் எஸ்.எஸ் மாணிக்கத்திடம் பேசினேன். ''ஆறாப்புக்கு மேல படிப்பு ஏறலை. மளிகைக்கடை வியாபாரம் ஆரம்பிச்சு நல்லாத்தான் போய்ட்டு இருந்தது. ஆனா, ஓடியாடுற வேலை இல்லைங்கவும் உடல் உழைப்பு இல்லாம கொழுப்பு சேர்ந்து ஏகத் துக்கும் வெயிட் போட்டுட்டேன். அடுத்தடுத்த வருஷங்களில மூல நோய், சர்க்கரை, மஞ்சள் காமாலைனு வரிசையா வியாதிகள். டாக்டர் சொன்ன மருந்துகளைச் சாப்பிட்டும் குணமாகலை. ஒரு நண்பர் மூலமா கொல்லிமலையில இருக்குற சுவாமி பரமானந்தாவைப் போய்ப் பார்த்தேன். 25 நாட்கள் விரதம் இருந்து அவரோட இயற்கை வைத்திய உணவைச் சாப்பிட்டு மீண்டும் புதுச்சேரி வந்தேன். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன.

மத்தவங்களுக்குக் கதை சொல்லிச் சொல்லியே ஆர்வம் அதிகரிச்சு, நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட நானே ஒரு இயற்கை மருத்துவரா மாறிட்டேன். உலகம் முழுக்க வித விதமான உணவுகளுக்கு உணவகங்கள் இருக்கும் போது, பல நல்ல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும் இயற்கை உணவுக்குனு தனியா ஒரு உணவகம் இல்லைனு வருத்தமா இருந்துச்சு அதான் இந்த 'எனர்ஜி ஹோம்’ ஆரம்பிச் சேன்!  

நாடி பார்த்து உணவை நாடு!

700 வகையான உணவு வகைகள் இங்கே பரிமாறப்படுது. இந்த இயற்கை உணவுகளில் எண்ணெய், புளி, மிளகாய்ப் பொடி, பால், சர்க்கரை, மசாலானு எதுவும் சேர்க்க மாட்டோம். முழுக்க முழுக்கக் காய்கறி வகைகள், பழ வகைகள் மட்டும்தான். 10 வருஷமாச்சு இந்த உணவகம் ஆரம்பிச்சு. 150 வகையான ஜூஸ், 75 வகையான இட்லிகள், 60 வகை யான தோசைகள், 25 வகையான வடை கள், 10 வகையான பொங்கல், 7 வகையான புட்டுகள்னு ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகள். இது தவிர, மதிய உணவுக்கு நூறுக்கும் மேற்பட்ட வகைகள். காய்கறிகள், கீரை, பயறு, தானியங்கள், மருத்துவக் குணம் வாய்ந்த இலைகளைக்கொண்டு இந்த உணவு களைத் தயாரிக்கிறோம்.  

நாடி பார்த்து உணவை நாடு!

காலையில வெறும் வயித்துல தண்ணி மட்டும் குடிச்சிட்டு இங்கே வந்தா, இலவசமா நாடி பார்த்து அவர்களின் உடல் நிலை மற்றும் பிரச்னைக்கேற்ற  சரியான உணவைப் பரிந்துரைப்போம். இதேபோல ஒரு உணவகத்தை ஆரம்பிக்கப் பலரும் வெளியூர்களுக்குக் கூப்பிட்டாங்க. ஆனா, புதுச்சேரியை விட்டுப் போக எனக்கு மனசில்லை!'' என்கிறார் இந்த 'மருத்துவ’ மாணிக்கம்.

- நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்

அடுத்த கட்டுரைக்கு