Published:Updated:

போலியோ, நிமோனியா மட்டுமல்ல...நிறவெறியையும் வென்றவள் - வில்மா ருடோல்ஃப்!

போலியோ, நிமோனியா மட்டுமல்ல...நிறவெறியையும் வென்றவள் - வில்மா ருடோல்ஃப்!
போலியோ, நிமோனியா மட்டுமல்ல...நிறவெறியையும் வென்றவள் - வில்மா ருடோல்ஃப்!

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணம், கிளார்க்ஸ்வில் 1940ம் ஆண்டு, ஜூன் மாதம் 23-ம் நாள் வெறும் இரண்டு கிலோ எடை உள்ள குறைப்பிரசவக் குழந்தையாகப் பிறந்தார் வில்மா. அவருடைய அப்பா `எட்’ இரண்டு திருமணங்களின் மூலமாக மொத்தம் இருபத்தியிரண்டு குழந்தைகள் பெற்றவர். இதில் இருபதாவது குழந்தையாகப் பிறந்தார் வில்மா. அப்பா ரயில்வேயில் சுமை தூக்குபவராக வேலை செய்தார். அம்மா வோகிளார்க்ஸ்வில்லில் வீடுகளில் சிறிய சிறிய வேலைகள் செய்துவந்தார்.

வீட்டில் வறுமை ஒரு பக்கம் இருக்க, சிறுவயதிலேயே நிமோனியா காய்ச்சலுக்கு ஆளானார் வில்மா. நான்கு வயதில் கடுமையான போலியோ காய்ச்சல் அவரைத் தாக்கியது. அதனால் இடது கால் மற்றும் பாதம் அதனால் செயலிழந்துபோனது. எட்டுவயதுவரை செயற்கை உபகரணங்களின் உதவியோடு நடந்தார் வில்மா. அப்போது அவர்கள் வாழ்ந்த பகுதியில் கறுப்பின மக்களுக்குப் போதுமான அளவு மருத்துவ வசதிகள் இல்லை என்பதால், அவர்களின் வீட்டிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கறுப்பின மக்களுக்கான மேஹர்ரி மருத்துவக் கல்லூரியில் வில்மாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சில நாள்கள் வீட்டிலேயே குடும்பத்தினர் கவனித்துக் கொண்டார்கள். பன்னிரண்டு வயதில் வில்மா உபகரணங்களின் உதவி எதுவும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு நடக்க ஆரம்பித்தது எல்லாம் மாயாஜாலம். அவருடைய உயர்நிலைப் பள்ளியில் தன்னுடைய சகோதரியைப் போல கூடைப்பந்து விளையாட்டிலும், தடகளப் போட்டிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவரின் அசாத்தியத் திறமையை முதலில் கண்டுபிடித்தது பயிற்சியாளர் எட் டெம்பிள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய வில்மா, வெறும் பதினாறு வயதில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார்!.

1956 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4*100 தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். அப்போது பள்ளி மாணவியாக இருந்த வில்மா, அந்தப் பதக்கத்தினை தன்னுடைய நண்பர்களிடம் காட்டினார். ``அடுத்த முறை ரோம் நகரத்தில் நடைபெறும் போட்டியில் நிச்சயமாகத் தங்கப் பதக்கம் வெல்வேன்" என்றும் கூறினார்.

ஆனால், அவர் வாங்கியது ஒரு பதக்கம் அல்ல, பல பதக்கங்கள்! இடையில் 1958ம் ஆண்டு ஒரு மகளுக்குத் தாயாகவும் ஆனார் வில்மா. இடையில் இருந்த இந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு தேசியச் சாதனைகள் புரிந்த வில்மா, ஆவலோடு ரோம் நகரத்துக்குப் பயணப்பட்டார்.

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தங்கப் பதக்கங்கள்! நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தினை வெறும் பதினோரு நொடிகளில் நிறைவு செய்து, தங்கப்பதக்கம் பெற்றார் வில்மா. 1936 ம் ஆண்டு ஹெலன் ஸ்டீபனிற்குப் பிறகு தங்கப் பதக்கம் பெற்ற அமெரிக்கப் பெண்ணாக ஆனார் வில்மா. இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தினை வெறும் இருபத்திநான்கு நொடிகளில் கடந்து அதிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.

மூன்றாவது, நானூறு மீட்டர் தொடர் ஓட்டம். செப்டம்பர் 7, 1960. நாற்பத்துமூன்று டிகிரி செல்சியஸில் ரோம் நகரம் தகித்துக்கொண்டிருந்தது. தன்னுடைய சகாக்களான மார்த்தா ஹட்சன், லுசின்டா வில்லியம்ஸ் மற்றும் பார்பரா ஜோன்ஸ் ஆகியோருடன் இணைந்து மூன்றாவது தங்கப்பதக்கத்தினையும்கைப்பற்றினார் வில்மா.

ஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வாங்கிய முதல் அமெரிக்க கறுப்பினப் பெண் மட்டுமல்ல அவர், முதல் அமெரிக்கப் பெண்ணும் அவர்தான்!

போராடி வென்ற மூன்று சாதனைகளையும் அவர் சமர்ப்பணம் செய்தது, 1936 ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கங்கள் வென்ற தடகள வீரர் ஜெஸ்சி ஓவன்ஸிற்கு!

ஜெஸ்சி ஓவன்ஸ்?

கடுமையான நிறவெறி தாண்டவமாடிய நேரத்தில்1936 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பெர்லினில் நடைபெற்றது. சர்வாதிகாரி ஹிட்லர், ஜெர்மன் வீரர்கள் அனைத்திலும் பங்குபெற்று வெற்றி பெறுவார்கள் என்ற இறுமாப்பில், ஜெர்மன் நாட்டு வீரர்களைத் தவிர யாருடனும் கைகுலுக்காமல் சென்றுவிட்டார். அந்த இனவெறிக்கு ஜெஸ்சி ஓவன்ஸ் கொடுத்த பதிலடி, நான்கு தங்கப்பதக்கங்கள்!

ஆல்பர்ட் ஸ்ப்ரீ என்பவர் எழுதிய குறிப்பில், ``காட்டில் வாழ்ந்த அந்த இனத்தின் மக்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியடையவில்லை. எனவே முழுதாகப் பரிணாம வளர்ச்சியடைந்த வெள்ளையர் இன விளையாட்டு வீரர்களின் உடலமைப்பும், இவர்களின் உடலமைப்பும் வெவ்வேறாக உள்ளதால் இவர்களை எதிர்காலத்தில் விளையாட்டிலே அனுமதிக்கக் கூடாது” என்று ஹிட்லர் கூறியதாகப் பதிவுசெய்துள்ளார்.

நான்கு தங்கப் பதக்கங்கள் வென்ற ஜெஸ்சி ஓவன்சினை மரியாதை நிமித்தமாகக்கூட முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் எஃ டி ஆர் ரூஸ்வெல்ட் சந்திக்கவில்லை. பதக்கம் வென்று திரும்பியபிறகு கூட அவரால் நிம்மதியான வாழ்க்கை வாழமுடியவில்லை. குதிரைகளுடன் பந்தய ஓட்டம் நடத்தி பணம் சம்பாதித்தார். சின்ன சின்ன வேலைகள் செய்தார். இந்த நிறவெறிக்கும், ரணத்துக்கும், அதனை மீறிய மகத்தான சாதனைகளுக்கும் சொந்தக்காரரான அதே ஜெஸ்சி ஓவன்சிற்குத்தான் வில்மா தன்னுடைய பதக்கங்களைச் சமர்ப்பணம் செய்தார்!

வில்மாவின் சாதனை, உலகெங்கும் உள்ள விளையாட்டு வீராங்கனைகளையும், கறுப்பினப் பெண்களையும் பெரும் எழுச்சிக்கு ஆளாக்கியது. அவர் நாடு திரும்பிய அக்டோபர் நான்காம் நாள், அவருடைய சொந்த ஊரான கிளார்க்ஸ்வில்லில் `வில்மா வருகை’தினமாகப் பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

புகழின் உச்சியில் இருக்கும்போதே வில்மா விளையாட்டுத்துறையிலிருந்து தன்னுடைய இருபத்தி இரண்டாம் வயதில் ஓய்வு பெற்றார், பின்னர் சிறிது காலம் ஆசிரியையாகவும், சமூக ஆர்வலராகவும் பணியாற்றிய அவர், 1984 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு வர்ணனையாளராகவும் பணியாற்றினார்.

ஆனால், காலம் அவரை வெகுகாலம் வாழவிடவில்லை. 1994 ம் ஆண்டு ஜூலை மாதம், அவருடைய மூளையையும் தொண்டையையும் புற்றுநோய் பாதித்தது தெரியவந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் பன்னிரண்டாம் நாள் அவர் இம்மண்ணை விட்டுப்பிரிந்தார்.

செல்லமாக The skeeter என்று கூப்பிடும் அளவுக்கு வில்மா வேகமானவர். சிறு காயங்களுக்கும் தோல்விகளுக்கும் துவண்டுவிடும் பலருக்கும், போலியோ பாதிக்கப்பட்ட காலுடனும், வறுமையுடனும் போராடி வென்ற வில்மா ருடால்ப் நம்பிக்கையின் பெருஞ்சுடர்த்தீ!