Published:Updated:

பட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி, முதலீடு, வரிச் சலுகை...

பட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி,  முதலீடு, வரிச் சலுகை...
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி, முதலீடு, வரிச் சலுகை...

சாதகங்களும், பாதகங்களும்!சோ.கார்த்திகேயன்

பட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி, முதலீடு, வரிச் சலுகை...

சாதகங்களும், பாதகங்களும்!சோ.கார்த்திகேயன்

Published:Updated:
பட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி,  முதலீடு, வரிச் சலுகை...
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி, முதலீடு, வரிச் சலுகை...
பட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி,  முதலீடு, வரிச் சலுகை...

நாணயம் விகடன், சுப்ரீம் ஃபர்னிச்சர் நிறுவனத்துடன் இணைந்து ‘பட்ஜெட் 2017 சாதகமா, பாதகமா’ என்னும் தலைப்பில் சென்னையில் ஒரு விரிவான அலசல் கருத்தரங்கத்தை நடத்தியது.

 சப்போர்ட் கிடைக்கவில்லை

இந்த விமர்சனக் கூட்டத்தில், 2017-18-க்கான பட்ஜெட், தொழில் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்டா என்பது குறித்து சிறு தொழில்முனைவரும், சிஐஐ-ன் தமிழ்நாடு கன்வீனருமான கே.பி.கோபால் பேசினார்.

“பட்ஜெட்டுக்கு முன்பு நடந்த விஷயங்களாலும், பட்ஜெட்டுக்குப்பிறகு நடக்க இருக்கும் விஷயங்களாலும் இந்த பட்ஜெட்டை, ஒரு ஸ்பெஷல் பட்ஜெட் என்று சொல்லலாம்.

பண மதிப்பு நீக்கத்தால் பல கஷ்டங்கள் ஏற்பட்டது. தொழில் நிறுவனங்கள், குறிப்பாகச் சிறிய நிறுவனங்கள் பணத் தட்டுப்பாடு பிரச்னையால் பெரிதும் பாதிப்படைந்தன. பண மதிப்பு நீக்கத்தினை அடுத்து பட்ஜெட்டில் எந்த மாதிரியானஅறிவிப்புகள் வரும் என்பதைப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தொழில் துறைக்குப் பெரிய சப்போர்ட் எதுவும் கிடைக்க வில்லை.

ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் வங்கிகளில் அதிக அளவில் பணம் குவிந்ததால், என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கின்றனர்.  இதனால் வட்டி விகிதம் குறையும். இது நிறுவனங்களுக்கு நல்ல விஷயம்.

 பெரிய மாற்றமில்லை


பல ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) ஜீரோவிலிருந்து ப்ளஸ், மைனஸ் எனப் பல நாட்களாக மோசமான நிலையிலேயே இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் இரண்டு, மூன்று ஏரியாக்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உள்கட்டமைப்புகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது நடக்குமா, நடக்காதா என்பது வேறு விஷயம்.

ஜிஎஸ்டி-யில் பல மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த பட்ஜெட்டில், எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை” என்றார்.

 துக்ளக் திட்டங்கள்

இந்த பட்ஜெட் முதலீட்டுக்கு உதவும் பட்ஜெட்டா என்பது குறித்து ஐதாட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஷியாம் சேகர் பேசினார்.

“பட்ஜெட்டுக்கும், பங்குச் சந்தைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏனெனில் பட்ஜெட், பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறது. பொருளாதாரம் சார்ந்ததாக இல்லை.

என்னைப் பொறுத்தவரை, ஒரு பட்ஜெட்டில் மோசமாக ஏதாவது செய்கிறார்களா என்றுதான் பார்ப்பேன். ஏனெனில் பட்ஜெட்டில் துக்ளக் திட்டங்கள் பல இடம்பெறும். அந்தத் திட்டங்களினால் எந்த நன்மையும் நடக்காது.

கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட், இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து வருவதாகவே இருக்கிறது. ஆட்சியாளர்கள் அதைத் தயங்காமல் செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பொருளாதாரத்தை சிறப்பாகவே அழித்து வருகின்றனர்.

1991 முதல் 2017 வரை இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி விகிதம் 7.2%, 7.6% என உள்ளது. இந்த ஆண்டு மறுபடியும் இறங்கும். எந்த அளவுக்கு இறங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

முக்கியமான ஒரு விஷயம், இன்றுவரை இந்திய பங்குச் சந்தை, வெளிநாட்டுப் பணத்தை நம்பித்தான் உள்ளது. ஏனெனில், இந்தியாவில் இருப்பவர்கள் பங்குச் சந்தையில் ஏதாவது முதலீடு மேற்கொண்டால், குறுகிய கால மூலதன ஆதாய வரி என பலதரப்பட்ட பிரச்னைகள் இருப்பதால், முதலீடு செய்யவே தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகையால் வீட்டிலேயே பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்களே தவிர, பங்குச் சந்தையில் முதலீடு மேற்கொள்வதில்லை. எனவே, வெளிநாட்டினர்தான் பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தைக் கொட்டுகின்றனர்.

 டாப் - டவுன் இன்வெஸ்டிங்

இஸ்லாமிய நாடுகளில் புதிதாக வருமான வரி விதிக்கப்படுகிறது. வரியே இல்லாத நாடுகளில்கூட வரி விதிக்கப்படுகிறது. இன்று அமெரிக்காவைப் பார்க்கும்போது, பலருக்கும் கோபம் வரலாம். ஆனால், அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.

கடந்த 14 மாதங்களில் இந்திய முதலீட்டாளர்கள் பெருவாரியாக ஸ்மால் கேப், மிட் கேப்  நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். சந்தையில், இப்போது டாப் - டவுன் இன்வெஸ்டிங்குக்கு ஒரு வாய்ப்பு வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, ஒரு மார்க்கெட் சைக்கிள் என்பது 8 ஆண்டுகள். இதில் 6 ஆண்டுகள் சந்தை கீழே விழுந்துதான் இருக்கும். ஆனால், இரண்டே ஆண்டுகளில், அந்த 6 வருடங்கள் தரவேண்டிய லாபத்தை சந்தை வழங்கிவிடும். ஒரு வருடத்தில் மிதமான லாபம் கொடுக்கும். அதற்கு அடுத்த வருடம் வேகமாக முன்னேறும். சந்தையில், இந்த ஆண்டு மிதமான லாபம் தரும் ஆண்டாக இருக்கும். அடுத்த ஆண்டு மேக்ரோ டேட்டா மற்றும் பணவீக்கம் திருப்திகரமாக இருந்தால், நிச்சயமாக மார்க்கெட் மேல் நோக்கிச் செல்லும்” என்றார்.

 வரியைக் குறைக்க மனமில்லை

இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் குறித்து சார்ட்டட் அக்கவுன்டன்ட் எஸ்.சதீஷ்குமார் பேசினார். 

“இதுவரை ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என  அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த வலியுறுத்தி வந்தோம். ஆனால், இதை எந்த நிதி அமைச்சரும் செய்யவில்லை. இப்போது பத்து சதவிகிதத்தில் இருந்து ஐந்து சதவிகிதம் மட்டுமே வரி குறைக்கப்பட்டு உள்ளது.  இதற்குமுன் ரூ.5,000 தள்ளுபடி என இருந்தது; இப்போது அதை ரூ.2,500 என மாற்றியுள்ளனர். இதை செய்யாமலேயே இருந்திருக்கலாம்.

வருமான வரி வரம்பைப் பொறுத்தவரை, 10%, 20% மற்றும் 30% என உள்ளது. ஆனால், நடுவில் பல சதவிகிதங்கள், பல நம்பர்கள் இருக்கின்றன. இந்த நம்பர்கள் எல்லாம் யாருக்குமே ஞாபகம் இருப்பதில்லை. 13% அல்லது 18% எனப் போடலாம்; எனினும், போடுவதில்லை. ஆனால், சேவை வரி வசூலிக்கும்போது மட்டும் 5%, 8%, 12%, 12.36%, 15% என வசூலிக்கப்பட்டது. இப்போது 18 சதவிகிதமாக அதிகரிக்கத் திட்டமிட்டு வருகின்றனர். அதே சமயம், இவர்களுக்கு வருமான வரி வரம்பை மட்டும் குறைப்பதற்கு மனம் வருவதில்லை.

 கண் துடைப்பு நாடகம்

மறைமுக வரியில், நின்றால் காசு, உட்கார்ந்தால் காசு, சாப்பிடப் போனால் காசு, கல்யாணம் பண்ணினாலும் காசு என்று வசூலிக்கின்றனர். ஒரு நடுத்தரக் குடும்பத்தினர் கஷ்டப்பட்டு கல்யாணம் செய்கின்றனர். ஆனால், அதற்கும், திருமண மண்டப வாடகைக்கு வரி விதிக்கப் படுகிறது. ஆனால்,  கோடி கோடியாக சம்பாதிக்கும் மண்டபத்தின் உரிமையாளருக்கு வரி விதிப்பதில்லை. கல்யாணம் நடத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து வரி வசூலிக்கின்றனர்.

இந்த பட்ஜெட்டைப் பொறுத்தவரை, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வெறும் கண் துடைப்பு நாடகமே. வெறும் பேப்பரை வைத்து எதுவுமே சொல்ல முடியாது. வருமானத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து வரி விதிக்காமல், சொத்தையும் அடிப்படையாக வைத்து வரி விதிக்க வேண்டும். வரிக் கட்டுபவர்களை, தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடாது; வரிக் கட்டாமல் பல பேர் இருக்கின்றனர்; அவர்களுக்கும் வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த பட்ஜெட் பற்றி நிபுணர்கள் பேசி முடித்தவுடன் வாசகர்கள், தங்களுக்கு இருந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் மறக்காமல் கேட்டனர். அதற்கான விளக்கத்தை நிபுணர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். பட்ஜெட்டைப் பற்றி நன்கு  தெரிந்து கொண்டோம் என்று பாராட்டினார்கள் வாசகர்கள்!   

படங்கள்:  தி.குமரகுருபரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!