FA பக்கங்கள்
Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - நீண்ட மூக்கு முதலை

அழிய விடல் ஆகாது பாப்பா! - நீண்ட மூக்கு முதலை
பிரீமியம் ஸ்டோரி
News
அழிய விடல் ஆகாது பாப்பா! - நீண்ட மூக்கு முதலை

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - நீண்ட மூக்கு முதலை

ன்புள்ள நண்பர்களே...

நான்தான் நீண்ட மூக்கு முதலை எனும் காரியல் (Gharial) எழுதுகிறேன். ஒருவேளை இந்தக் கடிதம் எங்கள் இனம் வெளியிடும் கடைசிப் பதிவாக இருக்கலாம். எங்களது நீண்ட மூக்கும் அதன் முனைக் குமிழியும் ஒரு குடிநீர் குவளையை நினைவுபடுத்தும். வடமொழியில் குடிநீர் குவளையின் மூக்கு, காரா (Ghara) என்று அழைக்கப்படுகிறது. அதனால், எங்கள் பெயர் ‘காரியல்’ என்றானது.

சிந்து நதியில்தான் நாங்கள் தோன்றினோம். உலகின் நல்ல நீரில் வசிக்கும் நான்கு முதலை இனங்களில் ஒன்று, இந்தியாவில் வாழும் பிரம்மபுத்திரா நதி முதலைகளான நாங்கள். பிரம்மபுத்திரா நதியில் மட்டுமா... ஒரு காலத்தில் புனித நதி கங்கை முதல் புராண நதி காவிரி வரையில் நாங்கள் பல்கிப் பெருகி இருந்தோம். எங்கள் சிறப்பைப் பாடாத புராணங்கள் இல்லை. சிவபுராணம், ராமாயணத்தின் குகன் படலம் மற்றும் மகாபாரதத்தின் வன வாழ்க்கை பகுதியிலும் நாங்கள் சொல்லப்பட்டோம்.

அழிய விடல் ஆகாது பாப்பா! - நீண்ட மூக்கு முதலை

எங்களது தனிச்சிறப்பான மூக்கு, எங்களை மற்ற எல்லா வகை முதலைகளிடம் இருந்தும் வேறுபடுத்திக் காட்டும். கரையில் கிடக்கும்போது பெரும்பொழுது வாயைப் பிளந்து மூச்சை உள்ளே இழுப்போம். எவ்வளவு நேரம் இப்படி இருக்கிறோமோ, அவ்வளவு நேரம் எங்களால் தண்ணீருக்கு அடியிலும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருக்க முடியும். எங்கள் தாடை 110 பற்களால் ஆனது. ஓடும் ஆறுகளே எங்கள் இருப்பிடம்.

ஒரே இடத்தில் வாழ்ந்தது அபூர்வம். பல மைல்கள் நீந்துவோம். நீண்ட நதிகளில் அவ்வப்போது கரையில் சூரிய குளியல் போட்டபடி நாங்கள் வாழ்ந்தோம். மீன்கள்தான் பிரதான உணவு. பதின்மூன்று வயது அடையும்போது காரா (Ghara) எனும் குமிழ் எங்கள் மூக்கு நுனியில் வளரத் தொடங்குகிறது.

எங்களுக்கு நேர்ந்த வரலாற்றுக் கொடுமை வேறு எந்த விலங்கினத்துக்கும் நேர்ந்தது கிடையாது. எங்கள் பிரத்யேக தோல், பலவிதமான பொருள்களைச் செய்ய உதவுகிறது. அவற்றின் விலை மிக அதிகம். அதுமட்டுமல்ல, இந்த நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்கள் எங்களது இறைச்சியை மிகவும் விரும்பி உண்டார்கள். எங்களை வேட்டையாடுவது கடினம் என்பதால், நாங்கள் மனிதர்களை உண்டுவிடுவோம் என்று புரளியைப் பரப்பினார்கள். நாங்கள் மனிதர்களை உண்பது கிடையாது. மீன்களைத் தவிர, நீர் எலிகள், சில வகை பறவைகள்... இவையே எங்கள் உணவு. இரையை அப்படியே விழுங்கிச் சாப்பிடும் முறையைப் பெற்ற எங்களால் உருவில் பெரியவர்களான மனிதர்களை விழுங்க முடியாது.
ஏற்கெனவே ஆறுகள் வேகமாக அழிந்தன. எங்களைக் கண்டாலே கொல்லுகிற அளவுக்கு மனிதரிடம் மரண பயத்தைத் தூண்டிவிட்டார்கள். விலங்குகளின் தோல்களை விற்கும் வணிகர்களுக்கு எங்களால் கொள்ளை லாபம். மாமிச விரும்பிகளுக்கோ சில நிமிட ருசியான உணவு. இப்படிப் பல முனைகளில் சூழப்பட்டோம்.

நண்பா... இன்று இந்தியா முழுவதும் எங்களில் சுமார் 40 குடும்பங்களே இங்கொன்றும் அங்கொன்றுமாக மிச்சம் இருக்கிறோம். ஆறுகளின் தூய்மையாளர்களான நாங்கள் அழிந்தால் ஆறுகளும் அழியும். ஆறுகளைக் காப்பாற்றுங்கள் நண்பர்களே. நன்னீர் முதலைகளைப் பிடித்து அழிப்பதை நிறுத்திட உதவுங்கள். இயற்கையை அதன் போக்கில் விட்டுவிடுதலே நல்லது. எங்களது இனம் குறித்த அநீதியான பொய்களை நிறுத்தவும் நீங்கள் உதவ வேண்டும். ஏனெனில், நாங்கள் சிலர் மட்டுமே இன்று இருக்கிறோம். எங்களை முற்றிலும் அழிந்துவிடாதவாறு உங்கள் சந்ததிதான் காக்க வேண்டும்.

உங்களை நம்பி வாழும் நீண்ட மூக்கு முதலை