Published:Updated:

"பிட்டா அடிக்கிறீங்க.. இப்போ அடிங்கடா பாக்கலாம்!" - நாடு முழுவதும் இணையத்துக்கு தடை! எங்கே?

"பிட்டா அடிக்கிறீங்க.. இப்போ அடிங்கடா பாக்கலாம்!" - நாடு முழுவதும் இணையத்துக்கு தடை! எங்கே?
"பிட்டா அடிக்கிறீங்க.. இப்போ அடிங்கடா பாக்கலாம்!" - நாடு முழுவதும் இணையத்துக்கு தடை! எங்கே?

இன்றைக்குத் தகவல் தொழில்நுட்பம்தான் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத இளம் தலைமுறையிரே இங்கே மிகக் குறைவு.  இந்த இணையத்தால் பல நன்மைகள் இருந்தாலும் கூட சில சமயங்களில் சிக்கல்களும் ஏற்படலாம். அப்படி மாணவர்களால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கக் கொஞ்சம் விநோதமான முடிவை முயற்சி செய்து பார்த்திருக்கிறது அல்ஜீரிய அரசாங்கம்.

பிட் அடிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா பாஸ் ?

அல்ஜீரியாவில் எப்படியோ... பிட் அடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு நம்மூரில் இருக்கும் 80'ஸ் கிட்ஸ்களையும் 90' ஸ் கிட்ஸ்களையும் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஆனால், இன்றைய 20'ஸ் கிட்ஸ்கள் கொடுத்து வைத்தவர்கள் ஒரு புத்தகத்தைக் கூட வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்து பிட் அடிப்பதை சிம்பிளாக முடித்து விடுகிறார்கள்.

எக்ஸாம் ஹாலுக்குள் எப்படியாவது ஒரு ஸ்மார்ட்போனை கொண்டுபோய் விட்டால் ஏ பிளஸ் கிரேடு கூட வாங்கி விடலாம். இது தவிர ப்ளூடூத் போன்ற வேறு சில விஷயங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்கள். எல்லாருமே  தேர்வில் முறைகேடுகளைச் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். அந்த எண்ணிக்கை கொஞ்சமாக இருக்கும் வரை யாருமே பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் அந்த எண்ணிக்கை அதிகமாகும் போது கொஞ்சம் சிக்கல்தான். அப்படி ஒரு நிலைமையைச் சரி செய்வதற்குத்தான் அல்ஜீரிய அரசாங்கம் கொஞ்சம் விநோதமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

தினமும் ரெண்டு மணி நேரம் இன்டர்நெட் கட் 

எதனால் இந்த முடிவு ? - என்று கேட்டால் எல்லாம் பிட் அடிப்பதைத் தடுக்கத்தான் என்று பொறுப்பாகப் பதில் சொல்கிறது அல்ஜீரியா அரசு. கடந்த 20-ம் தேதி முதல் இன்று வரை (25 ஜூன்)  மொபைல் மற்றும் தரை வழி இணைய இணைப்பு இரண்டையுமே காலையில் தேர்வு நடைபெறும் இரண்டு மணி நேரம் மட்டும் முற்றிலுமாக நிறுத்த அரசு முடிவு செய்திருந்தது.

இந்தத் தகவலை அல்ஜீரியாவின் கல்வித் துறை அமைச்சரான நவ்ரியா பென்கபிரிட் (Nouria Benghabrit) சில நாள்களுக்கு முன்னால் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே இந்த உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருந்தது இணைய இணைப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இது போன்ற முயற்சியின் மூலமாகத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறது அரசு. இணையத்தைப் பயன்படுத்தும் சிறிய கருவிகள் கூட முறைகேடுகளுக்கு உதவலாம் என்பதால் இந்த முயற்சி பலனளிக்கும் என்கிறது அரசு.

எதற்காக இந்தத் திடீர் முடிவு

கடந்த 2016-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. அதன் பின்னர் நாடு முழுவதும் பகிரப்பட்டது. எனவே, கடந்த வருடம் தேர்வு சமயத்தில் சமூக வலைதளங்கள் மட்டும் முடக்கப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் சரியான பலனைத் தராத காரணத்தால் ஒட்டுமொத்தமாக இணையத்தை முடக்கும்  திட்டத்தை இந்த முறை செயல்படுத்தியிருக்கிறது. ``உயர்நிலைப்பள்ளி மற்றும் டிப்ளோமா தேர்வுகள் எந்த வித குழப்பங்களும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக அரசிடமிருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என அந்த நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான Algérie Telecom தெரிவித்திருக்கிறது.

இது தவிர 2000 தேர்வு மையங்களில் மொபைல் ஜாமர்கள், மெட்டல் டிடக்டர்கள், மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஒரு நாடு தனது ஒட்டுமொத்த இணையத்தையும் முடக்கும் முயற்சியை அல்ஜீரியாவுக்கு முன்பே சில நாடுகள் செயல்படுத்தி விட்டன. கடந்த 2014 ஆகஸ்ட்டில் உஸ்பெகிஸ்தான் அரசு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடாகச் செயல்படுவதைத் தடுப்பதற்காக ஐந்து மணி நேரம் இணையத்தை நிறுத்தியது. இராக்கும் 2016-ல் இது போல செய்தது. குஜராத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது கடந்த 2016-ம் வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு தேர்வு சமயத்தின் போது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மொபைல் இணையம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.