FA பக்கங்கள்
Published:Updated:

வேதாளர் - 81

வேதாளர் - 81
பிரீமியம் ஸ்டோரி
News
வேதாளர் - 81

கிங் விஸ்வா

வேதாளர் - 81

லகின் முதல் ஸ்பெஷல் காஸ்ட்யூம் அணிந்த காமிக்ஸ் ஹீரோ யார்?

தினமும் 10 கோடி வாசகர்கள் படித்த காமிக்ஸ் எது?

உலகில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட காமிக்ஸ் ஹீரோ யார்?

வேதாளர் - 81


அவர்தான், வேதாளர் (The Phantom). இவர் அறிமுகமானது, 1936 பிப்ரவரி 17-ம் தேதி.  இவரை உருவாக்கியவர், லீ ஃபாக் என்ற அமெரிக்க எழுத்தாளர்.

ஸ்பைடர் மேன், பேட் மேன், அயர்ன் மேன் எனப் பல முகமூடி ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடி, வேதாளர். ஆனால், இவருக்கு சிறப்புச் சக்திகளோ, சிறப்பு வாகனங்களோ கிடையாது. புத்தியும் பலமும்தான் இவருடைய  சூப்பர் பவர். ‘ஹீரோ’ என்ற குதிரையும் ‘டெவில்’ என்ற மலை ஓநாயும் வேதாளரின் சாகசத்தில் துணைபுரியும் தோழர்கள். ‘ஜூம்பா’ என்ற யானையும், ‘கேட்டீனா’ என்ற பெண் சிங்கமும் உண்டு. உலகின் பல்வேறு பகுதிகளைக் கண்டுபிடித்த கடல் பயணிகளின் காலகட்டத்தில்தான் இந்த வேதாளரின் சாகசப் பயணமும் தொடங்குகிறது.

வேதாளர் - 81

கொலம்பஸ் உடன் பணிபுரிந்த ஒருவரின் மகன், வாக்கர். ஒரு கடல் பயணத்தில், கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் தப்பிப் பிழைக்கும் இவரை, ஆப்பிரிக்க பாந்தர் இனத்தவர் காப்பாற்றுகின்றனர். அநீதியையும் கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவதாகத்  தந்தையைக் கொன்றவனின் மண்டையோட்டின் மீது சபதம் செய்கிறார் வாக்கர். பாந்தர் இனத்தவரையும் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கிறார். ஆழ நெடுங்காட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சியால் மறைக்கப்பட்ட கபால குகைக்கு (மண்டை ஓட்டு மாளிகை) அழைத்துச்செல்லும் பாந்தர்கள், வாக்கரையே தலைவராக ஏற்றுக்கொள்கின்றனர்.

வேதாளர் - 81

வெளியுலகைப் பொறுத்தவரையில் வேதாளர்,  சாகாவரம் பெற்றவர். 400 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். ஆனால், ஒரு வேதாளர் இறந்ததும், அவரை ரகசியமாகப் புதைத்துவிட்டு அவருடைய வாரிசு அடுத்த வேதாளராக சாகசம் புரிவார். இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் 21-வது வேதாளர்.

வேதாளரின் வலது கை விரலில் மண்டையோட்டு சின்னம்கொண்ட மோதிரம் இருக்கும். இதைக்கொண்டு ஒருவரைக் குத்தினால், அவரது முகத்தில் என்றுமே அழியாத சின்னமாக பதிந்துவிடும். இடது கை விரலில் இருப்பது, அனைவரும் மதிக்கும் நற்சின்னம். இது எங்கே இருக்கிறதோ, அங்கே வேதாளர் இருக்கிறார்; அந்த இடம் அவரது பாதுகாப்பில் உள்ளது என்று பொருள்.

வேதாளர் - 811964-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானார். முகமூடி, மாயாவி என பல பெயர்களில் அழைக்கப்பட்ட வேதாளர், பல்வேறு காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் மகிழ்வித்தார்.

1943 மற்றும் 1956-ம் ஆண்டுகளில் வேதாளரின் சாகசங்கள் தொலைக்காட்சித் தொடராக வெளியானது. 1996-ம் ஆண்டு ‘டைட்டானிக்’ வில்லன், பில்லி ஜேன் வேதாளராக நடித்த திரைப்படம் வெளியானது. கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் வடிவிலும் பல தொடர்கள் வந்துள்ளன. இந்தியாவில் தொண்ணூறுகளில் வேதாளரின் இன்ஸ்பிரேஷனில் ‘பேதாள் பக்‌ஷி' என்ற தொடர் இந்தியில் வெளியானது.

வேதாளர் - 81

இதுவரையில் 21 வேதாளர்களும் ஆண்களாகவே இருக்க, தற்போதைய வேதாளரான கிட்டின் மகள் ஹெலாய்ஸ், ஒரு பெண் வேதாளராக சாகசம் புரிய ஆரம்பித்து உள்ளார். இந்தப் புதிய தொடர் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் வேதாளரின் கதைகள் தலைமுறை தலைமுறையாக ஆர்வத்துடன் படிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அவரின் கதைகளில் சொல்லப்படும் நற்பண்புகள். நன்மை எப்போதுமே வெல்லும் என்பதற்கான உதாரணமாக 81 ஆண்டுகளாக திகழ்பவர்தான் வேதாளர்.

ஹேப்பி பர்த் டே, வேதாளரே!